6.புகழா? மரியாதையா?
எல்லாருக்கும் பிடித்த ஒரு நடிகர் விஜயகாந்த். மதுரைக்காரர்,
மண் மணம் மாறாமல் அந்த பண்புகளைகளையெல்லாம் கொண்டிருந்தவர்.
”விஜயகாந்த்: இங்க இவ்வளவு பேரு இருக்கீங்க. இங்கே நாலு பேரு வந்தா ஒருவேளை சோறு போடமாட்டீங்க?”
என்று கேட்டார்.
அவருடைய மரணத்தில் நாம் பார்த்த ஒரு விஷயம் ’புகழ்’. ஏகப்பட்ட மக்கள்! இன்றைக்கு அவர் ஒரு டாப் ஸ்டார் கிடையாது. அரசியலில் முதல்வர் கிடையாது. ஒரு மந்திரியும் கிடையாது. கடந்த ஐந்தாறு ஆண்டுகள் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், இறுதிச்சடங்கு நடந்த இடத்திற்கு நானும் சென்றிருந்தேன். பக்கத்தில் போகும்போது உணர்ச்சிப்பெருக்கினை பெருவாரியாக பார்த்தேன். ஒரு நடிகராக பலரின் மனதையும் தொட்டிருந்ததாகவே கருதுகிறேன். ஒரு அரசியல்வாதியாகவும்
பல விஷயங்களைச் செய்ய முயற்சித்தார் என்றும் பார்த்தோம். அரசியலில் வெற்றிகள் வரலாம். தோல்விகள் வரலாம். ஒரு பதவி வருவதால் வெற்றியும், ஒரு பதவி போவதால் தோல்வியும் கிடையாது. ஆனால்.. மக்கள் மனதில் எந்த இடத்தில் இருந்தோம் என்பதுதான் மிக
முக்கியம். இதில் இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’மரியாதை மற்றும் புகழ்’. இந்த வார்த்தைகளை நாம் கலந்து பயன்படுத்துகிறோம். ஒரு மனுஷன் ஒரு இடத்துக்கு வரும்போது அந்த சபையே எழுந்து நின்றால்.. அது ‘மரியாதை’. அதே மனிதர் அந்த சபையை விட்டு வெளியேறியவுடன் அவரைப்பற்றி என்ன பேசுகிறார்களோ அது ’புகழ்’. இது சபைக்கு வந்தாலும் சரி. இந்த உலகத்துக்கு வந்தாலும் சரி. இந்த உலகத்திலிருந்து
போகும்போது அவருக்கு கடைசியாகா கிடைக்கப்போவது புகழ்தான். மரியாதை என்பது நாம் ஒரு இடத்துல இருக்கிறபோது,
வருகிறபோது, ஒரு இடத்துல நிற்கும்போது வருவது ஆகும். புகழ் என்பது நாம் அந்த இடத்திலிருந்து போனபின்பும், அந்த ஊரிலிருந்து போனபின்பும், அந்த காலேஜுலிருந்து போனபின்பும், அந்த கம்பெனியிலேருந்து
போனபின்பும், ஏன் இந்த உலகத்திலிருந்தே
போனபின்பும், அவரைப்பற்றி எங்கே, என்ன பேசுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதாவது ஒரு மனிதன் ஓரிடத்தில் இல்லாதபோது அவரைப்பற்றி உயர்த்திப்பேசுவதுதான் புகழ். அதனால்தான் வள்ளுவர், “இசை எனும் எச்சம்” என பகழைப்பற்றி குறிப்பிடுகிறார்.
”இசை” என்றால் புகழ். ”எச்சம்” என்றால், மனித வாழ்க்கையில் எச்சமாயிருப்பது (மிஞ்சியிருப்பது). எச்சம் என்பது இன்றைய காலத்தில் வேறு வகையான பயன்பாட்டிற்கு இருக்கிறது. ஆக, மனித வாழ்க்கையில் மிச்சம் என்பது “புகழ்” மட்டுமே. வள்ளுவர் சொல்கிறார்..
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழலலால்
பொன்றாது நிற்பதொன் றில்” (குறள்:
233)
இந்த உலகத்தில் ’உயர்ந்த பொருள்’ என ஒன்று இருந்தால், நிலையான பொருள் இருந்தால், அது புகழ் ஒன்றுமட்டுமே என்பதுதான் இந்த குறளின் விளக்கம். மனிதன் மரியாதையை நோக்கி உழைக்க வேண்டுமா? புகழை நோக்கி உழைக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த தருணத்துல அந்தகைய புகழை வெற்றிகரமாக சம்பாதித்த விஜயகாந்த் அவர்களை பாராட்டுவதுடன்,
அவரது மறைவிற்கு ஆழந்த இரங்கலையும் மரியாதையையும் செலுத்துகிறேன்.
சிலருடைய வாழ்வில் மட்டும், அவர்கள் வாழும் காலத்தில்
மரியாதை, புகழ் இரண்டுமே இருக்கும். வாழும்போது மரியாதை. போகும்போது புகழ். எம்.ஜி.ஆர், கலைஞர் போன்றோரை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். சிலருக்கு அவர்கள் வாழும்போது மிகப்பெரிய மரியாதை இருக்கும். ஆனால், அவர்கள் மறைவிற்குப் பின் புகழ் இருக்காது. சர்வதேச அளவில் சில தலைவர்களை நாம் குறிப்பிடலாம்.
உங்களுக்குத் தெரிந்த ”ஹிட்லர்” போன்று நிறைய பேரை கூறமுடியும். தமிழ்நாட்டு அரசியலில் அதுபோன்றவர்களை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை.
சிலருக்கு அவர்கள் வாழும்காலத்தில்
மரியாதை குறைவாக இருக்கும். ஆனால் அவர்கள் போகும்போது அவர்களின் புகழ் நிறைய தெரியும். மரியாதை குறைவாக இருக்கலாம். நான் ’அவமரியாதையைக்’ குறிப்பிடவில்லை. இந்த புகழுக்கு உரிய மரியாதை. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அரசியலில் எம்.ஜி.ஆர். போல ஜெயித்திருந்தால்?… நடிகராக அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் இருந்தது. அரசியல்வாதியாக அவருக்கு அமையவில்லை. ஆனால்.. புகழ்? எல்லாவற்றையும் கடந்து நல்ல உயரத்திற்கு புகழை மக்கள் தந்திருக்கிறார்கள். ஆகவே, என்னைப் பொறுத்தவரைக்கும்
மரியாதையை நோக்கியே போகாமல், மரியாதையைப் பற்றியே கவலைப்படாமல்,
புகழுக்காக மட்டும் கவலைப்பட்டு உழைக்க வேண்டுமென்பதுதான் வள்ளுவனின் வாக்கு. இசை என்னும் எச்சத்தை நோக்கி நகருவோம்.
------------------------------------------------------------
No comments:
Post a Comment