நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா?
வருமான வரி கட்டும் தன் நண்பரின் எண்ண ஓட்டத்தைக்குறித்து
ட்விட்டர் வலைதளத்தில் ஒருவர் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அதில் தன் நண்பர் ஆண்டுக்கு
35 இலட்சம் சம்பளம் பெறுவதாகவும், அதற்கு தோரயமாக 10 இலட்சம் வரை (30%) வருமான வரி
கட்டுவதாகவும், இது சராசரி கணக்கீட்டின்படி ஒரு ஆண்டில் 4 மாதங்கள் வரை வரி கட்டுவதற்காகவே
உழைப்பதாகவும் வேதனையோடு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து உண்மையா? என்றால், உண்மைதான்.
இதுவே வணிகம் செய்பவர்கள் சுமார் நான்கு மாதங்களில் ஈட்டும் இலாப வருவாயை வருமான வரியாகக்
கட்ட வேண்டியுள்ளது. சுமார் 1000 கோடி சம்பாதித்தால் அதிலிருந்து 300 கோடியை வருமான
வரித்துறைக்குச் செலுத்த வேண்டி வரும். மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் தங்கள் வருமானத்தை
மறைத்துக்காட்ட வாய்ப்புகள் இல்லை. ஆனால், வணிகம் செய்பவர்கள் தங்கள் வருமானத்தை மறைப்பதற்கு
வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றைக் கண்காணித்து முறைப்படுத்தவே வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி
போன்ற துறைகள் இயங்குகின்றன. இத்தகைய கட்டமைப்புகள் மற்றும் வருவாய் ஆகியவற்றைக் கொண்டுதான்
அரசாங்கம் நடத்தப்படுகிறது.
உலகளவிலான ஒப்பீட்டின்படி இந்தியாவில் வரிவிகிதம் சற்று கூடுதலாக
இருக்கத்தான் செய்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் எது தெரியுமா? சுமார் 140 கோடி
மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் சுமார் 8 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி கட்டுகிறார்கள்!
வேலை செய்யும் மக்கள் தொகை என கணக்கிட்டால் குறைந்தபட்சம் 80- 90 கோடி மக்கள் இந்த
வரம்பில் இருக்கக்கூடும். இவர்களில் 10 இலட்சம் வரையிலான வருமானம் உள்ள மக்கள் சுமார்
20-25 கோடி மக்கள் இருக்க வேண்டும். ஆனால், இங்கே 8 கோடி மக்கள்தான் வருமான வரி வரம்பில்
வருகிறார்கள். அதிலும் 5 கோடி மக்கள் தொகையினருக்கு ஆண்டு வருவாய் 12 இலட்சத்திற்கும்
குறைவாக வருகிறது. ஆகவே, அவர்களும் வரி கட்டுவோர் வரம்பிற்குள் வருவதில்லை. இத்தகைய
சூழலில் வரிவிகிதத்தை இப்போது இருப்பதைவிட குறைக்க அரசாங்கத்திற்கு வழியேயில்லை. முறையாக
வரிசெலுத்துவோர் அவர்களைப் போல் வரிகட்டாதவர்களின் வரியையும் சேர்த்து கட்ட வேண்டிய
நிலைக்குச் செல்வதால் இயல்பாக வரி விகிதாச்சாரம் கூடுதலாகவே இருக்கும். உண்மையில் இது
நமக்கு சவாலான விஷயம்தான். பொதுவாக வளரும் நாடுகளில் நம்முடைய வரி விகிதாச்சாரமே இருந்து
வருகிறது. ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் மிக அரிதாக நம்மைக்காட்டிலும் சற்று குறைவாக
இருக்கிறது. அங்கு சுமார் 25% என்கிற அளவில் நேரிடையான வரிவரம்பு இருக்கிறது. அன்றாடம்
அத்தியாவசியப்பொருட்களை வாங்குவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் எல்லோருமே மறைமுகமாக வரி
செலுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். மேலேகுறிப்பிட்ட பதிவின்படி, நான்கு மாத உழைப்பை
வருமான வரியாகச் செலுத்துவதுபோல், கூடுதலாக மேலும் 2 மாதங்கள் ஜி.எஸ்.டி வரியாக சுலுத்துவது
போலாகும். இபடி கூட்டிக்கழித்துப்பார்த்தால் ஒரு ஆண்டில் நமக்காக வேலைசெய்து வருமானம்
ஈட்டுவது ஒரு ஆண்டிற்கு 6 மாதங்கள் மட்டுமே! இதில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது
என்னவென்றால், “The tax is a cost of a civilization’. நமக்கும், நம் நாட்டின் பாதுகாப்பிற்காகவும்
இராணுவத்தை பராமரிக்க வேண்டும். நம் ஆரோக்கியத்திற்காக சுகாதரத்துறையினை செம்மையாக
நிர்வகிக்க வேண்டும். இன்னும் சாலைகள், பிற போக்குவரத்துத்துறைகள் போன்ற அனைத்து துறைகளுக்காகவும்
நாம் அரசாங்கத்திற்கு கூட்டாக செலுத்துகிறோம். வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக,
அதிகமாக வரிவிகிதாச்சாரம் நிச்சயம் குறையும். அதுபோன்ற நிலை வராத வரையில் வரி செலுத்துவோரின்
வருத்தங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
அடுத்த ஒரு முக்கிய சவால் என்னவெனில்,
வரி செலுத்துவோர் மத்தியில், ‘நாங்கள் இவ்வளவு வரி கட்டுகிறோம்.. ஆனால்… இதனால் எங்களுக்குப்
பயன் என்ன?’ என்கிற வருத்தம் நிலவுகிறது. உதாரணத்திற்கு தூய்மை பேணப்படாத இரயில் வசதி,
சரியில்லாத உணவு, அடிக்கடி மின்வெட்டு போன்று நல்ல, சுகாதாரமான, விரைவான, நிம்மதியான
மகிழ்ச்சி தரக்கூடிய எதுவுமே இங்கே கிடைப்பதில்லை’ போன்ற எண்ணற்ற அதேநேரம் நியாயமான
கேள்விகள் மக்கள் மனதில் தொடர்கின்றன. இதையெல்லாம் சரிவர நிர்வகிக்கும் அரசாங்கத்தைப்
பார்த்து மக்கள் கோபம் கொள்ளமாட்டார்கள். நாம் இன்னும் அத்தகைய நிலையை எட்டவில்லை என்று
தெளிவாகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? அரசுத்துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும்
நல்ல தரத்திற்க்கு மேம்படுத்த வேண்டும். இதை சாதித்துக்காட்டும் அரசாங்கமே சிறந்த அரசாங்கமாகக்
கருதப்படும். திருக்குறளில், ஒரு சாலைவழியே போவோர் வருவோரையெல்லாம் வழிப்பறிக்காரர்கள்
கையில் கம்புகளை வைத்துக்கொண்டு கையில் வைத்திருப்பதைக் கொடுத்துவிட்டுச் செல்லத்தான்
வேண்டும் என்று மிரட்டினால், அவர்களால் மிரட்டப்படுவோர் எல்லோரும் பயந்து நடுங்கி தங்களிடம்
இருப்பதைக் கொடுத்துவிட்டுச் செல்வர். அதுபோல் அரசாங்கம் வரி வசூலிப்பதில் இயல்பான
நட்புறவோடு மக்களை அணுகி வசூலிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். நம் நாட்டினிடத்தில்
நம் நியாயமான விஷயங்களை எதிர்பார்ப்பதில் தவறே இல்லை. அதேநேரம் நாட்டின் நலனூகாக நாம்
ஆண்டிற்கு நான்கு மாத வருவாயை வரியாக செலுத்துவதில் தவறில்லை என்பதே என் கருத்தாக உள்ளது.