Tuesday, August 11, 2026

48.குடும்பத்தோடு தற்கொலை நடப்பதற்கான காரணம் என்ன?

 

                குடும்பத்தோடு தற்கொலை                   நடப்பதற்கான காரணம் என்ன?


இன்றைய நாளிதழ்களில் தொடர்ந்துகுடும்பத்துடன் தற்கொலைசெய்திகள் அதிகமாக வெளியாகின்றன. இது அனைவருக்கும் அதிகளவு மனவலி தரக்கூடியதாகும். சமீபத்தில் வட்டிக்கொடுமையால் நாமக்கல்லில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட கணவன்மனைவி ஆகியோர் குடும்பத்துடன் தற்கொலை, மேலும் தொழில் நஷ்டத்தினால் தற்கொலை, இன்னும் ஒரே குடும்பத்தின் ஏழெட்டு உறுப்பினர்கள் தற்கொலை என்றெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டன. நாளிதழ்களில் அவை சார்ந்த புகைப்படங்கள் வெளிவருவதைப் பார்க்கும்போது, அதிகபட்ச ஆற்றாமை உணர்வு நமக்குள் மேலிடுகிறது. ஒரு தொழிலில் கணவனோ அல்லது மனைவியோ பெரும் இழப்பை சந்தித்திருக்கக்கூடும். அந்த இழப்பை அவர்கள் யாராவது ஒருவரேனும் சரிகட்ட முடியாதுஎன்கிற அவசியம் எங்கிருந்து வருகிறது? பல்வேறு காரணங்களுக்காக தனிநபர் தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனாலும், ஒரு குடும்பமே கூட்டாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏன் ஏற்படுகிறது? பெரியவர்களுக்கு ஏற்படும் இக்கட்டான நிலையின்போது, குழந்தைகளையும் சேர்த்து தற்கொலை செய்ய வைக்கும் மனோபாவம் ஏன்? காரணம், தங்களுக்குப் பிறகு நம் குழந்தைகள் நிராதரவான நிலைக்கு ஆட்படுவார்கள், அவர்களின் வாழ்க்கை அவலத்திற்கு ஆளாகிவிடும் என்கிற சிந்தனை வருவதால்தான் பெரியவர்கள் கனத்த மனதுடன் அத்தகைய முடிவினை எடுக்கிறார்கள். கணவனோ, மனைவியோ அவர்களின் இருதரப்பின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் யார்மீதும் நம்பிக்கையற்றுப் போகும் நிலையில் வந்துவிடுகிறது. இது அவ்வப்போது ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது என்றாலும், தற்காலத்தில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் நிகழ்கின்றன என்றே கருத வேண்டியுள்ளது. இந்தப்பிரச்சினையை முடிவிற்குக்கொண்டுவர அக்காலத்தைய சமுதாயம் ஒரு முடிவெடுத்திருந்தது. ’பாவைக்கூத்து’என்கிற ஒரு கூத்துவகை கிராமங்கள் தோறும் திருவிழாக்களின்போது நடித்துக்காட்டப் பெற்றது. அதில் பிரபலமாக விளங்கிய பல்வேறு அந்தக்கூத்துக்கலையில் ‘நல்லதங்காள்’ என்றொரு கதை நடத்தப்படும். ‘நல்லதங்காள்’ கதையில் அவளுக்கு நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் ஏழு குழந்தைகள். இவள் அரச குடும்பத்தின் வம்சாவழியைச்சேர்ந்தவள். இது சிவகங்கைப்பகுதியை மையமாகக் கொண்ட நாட்டுப்புற கதை இது. நல்லதங்காளின் அண்ணன் ஜமீன் அந்தஸ்துடன் ஆட்சி செய்துவந்தார். நல்லதங்காளின் புகுந்தவீடு செல்வத்தை இழந்து, வ்வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. ஆகவேஎ செய்வதறியாமல் தவித்த நல்லதங்காள் தன் குழந்தைகளின் பசியைப்போக்கி அவர்களை வாழ்விக்கும்பொருட்டு, அதற்கான உதவிகேட்டு தன் அண்ணனை சந்திக்க வந்தாள். அவள் வந்த நேரத்தில் அவளுடைய ந்ணன் வேட்டையாடுவதற்காக தொலைதூரம் போயிருந்தார். உறவுக்கார்ர்கள் வகையில் எவருமே நல்லதங்காளையும், அவள் குழந்தைகளையும் ஆதரிக்க முன்வரவில்லை. நல்லதங்காள்  தான் அழிந்து போவதா? இல்லை குழந்தைகளை அழிப்பதா? அப்படியானால், முதலில் பசியால் குழந்தையை அழிக்கலாமா? என்றெல்லாம் யோசித்து, யோசித்து  செய்வதறியாது திகைத்தநிலையில் தான் வாழும்பொழுதே குழந்தைகளுக்கு வாழ் வழியில்லாமல் போயிற்றே.. ஒருவேளை தான் முந்தி இறந்துவிட்டால், குழந்தைகள் இன்னும் எப்படியெல்லாம் கஷ்டப்படுவார்களோ? என்று கதிகலங்கி முடிவில் தன் குழந்தைகள் அனைவரையும் அழித்துவிட்டு தானும் அழிந்து போவாள். பாவைக்கூத்தின் இறுதியில் சிவனும் பார்வதியும் அவளுக்கு முக்திகொடுப்பதுபோல முடிவடையும். வேட்டைக்குச் சென்றிருந்த அண்ணன் தன் தங்கைக்கும் அவளின் குழந்தைகளுக்கும் நேர்ந்த முடிவைக்கேட்டு ஆறாத்துயரத்துடன் ஓடோடிவந்து, துயரச்சம்பவத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான தன் மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வான். தன் தங்கை மீது கொண்ட பாசத்தாலும், அவளுக்கு தன் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டதே என்று தற்கொலை செய்துகொண்டதால், அவனும் தங்கை நல்லதங்காளும் நாட்டுப்புறக்கடவுளர்களாக வழிபடப்பட்டனர். இவ்வுலகில் தினந்தோறும் எத்தனை எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தபோதும், நல்லதங்காள் கதையை பாடும்பொருளாக நம் சமூகம் மாற்றியது என்றால், இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பதுபோல் குடும்பமாக தற்கொலை ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற அக்கறைதான். எங்காவது ஒரு பசிக்கொடுமை நேர்கிறதென்றால் அதைப்போக்குவதற்கும், ஒரு குடும்பமே வீழ்ந்துவிடக்கூடிய நிலையோ ஏற்பட்டால் அவர்களைக் கைதூக்கிவிட வேண்டும் என்கிற மனப்பாங்கும், ஒருவேளை தனிமனிதர் ‘தற்கொலை’ செய்துகொண்டாலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி காக்கவும், இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிலையைத் தவிர்க்கவும்தான் நல்லதங்காள் கதையை பாவைக்கூத்தின் மூலம் மேன்மையான கருத்தினை நம் முன்னோர்கள் ஆக்கித்தந்தார்கள். அதன் தாக்கம் இன்றளவும் அண்ணன் – தங்கை, அக்காள் – தம்பிகளுக்கிடையே நம் கிராமப்புறங்களில் உயிர்ப்போடு இருப்பதைக்காண்கிறேன். நகர்புறங்களில் உறவுமுறைகள் மிகவும் பலவீனப்பட்டுவிட்டதால் இது பெரும்பாலும் காணப்படுவதில்லை. கிராமப்புறங்களில் இத்தகைய பாந்தம் இன்னும் மேலும் மேலும் அதிகரிக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். இதுபோன்ற விஷயங்களில் அரசாங்கம் செய்வதற்கென ஏதுமில்லை. இது முழுமையாக சமுதாயம் சார்ந்த அம்சமாகும். குலம் என்று அழைக்கபடும் சாதிய கட்டமைப்புகளால் இதை செம்மை செய்து, இதுபோன்ற பரிதாபத்திற்குரிய மரணங்களைத் தடுக்க இயலும் என்று நான் கருதுகிறேன். 

-----------------------------------------------------------

No comments:

Post a Comment

67.வேட்புமனுவில் சொத்துக் கணக்கை மறைத்தால் என்னவாகும்?

                  வேட்புமனுவில் சொத்து க்  கணக்கை                          மறைத்தால் என்னவாகும் ?   தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள்...