காதல் திருமணத்தை பதிவு செய்ய
இனி பெற்றோரின் அனுமதி வேண்டுமா ?
குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இனி அனைத்து திருமணங்களையும்
சட்டப்பூர்வமாகப் பதிவு செய்வதற்கு பெற்றோரின் அனுமதி கட்டாயம் வேண்டுமென்கிற நடைமுரை வந்துள்ளது. பொதுவாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு
நடைபெறும் திருமணங்களில் பிரச்சினைகள் இருப்பதில்லை.
ஆனாலும், விதிவிலக்காக திருமணத்திற்கு அனுமதி தரும் விஷயத்தில் ஒரு சில குடும்பங்களில் தந்தையும் தாயும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதில்லை.
அதிலும் இழுபறிகள் இருப்பதுண்டு. காதல் திருமணங்களும் பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெறத்தான் செய்கின்றன. சதவீத அடிப்படையில் சற்று குறைவாக இருக்கக்கூடும். இந்த முறைகளில்லாமல் தாய்-தந்தைக்குத் தெரியாமலேயே பதிவுத்திருமணம் செய்யப்படுகின்றன.
இது சரியா? தவறா? என்பது அலசிப்பார்க்க வேண்டிய விஷயமாகும். குஜராத் மாநிலம் இது சம்பந்தமாக எடுத்துள்ள முயற்சியை ஒருவகையில் நான் பாராட்டுகிறேன்.
பொதுவாக 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போதும் பெற்றோர் அனுமதி தேவையா? என்பதில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. ஒருவர் மேஜர் வயதை எட்டிவிட்டார் என்பதற்கான அளவீடானது நாட்டுக்கு நாடு சற்று வித்தியாசப்படுகிறது. ஒரு சிலநாடுகளில் 14 வயதே கூட ’மேஜர்’ வயது என்றும் இருக்கிறது. இதேபோல்தான் குற்றவியல் சார்ந்த சம்பவங்களுக்கும்
இருக்கின்றன. நம் நாட்டைப்பொறுத்தவரையில் திருமணத்திற்கு தகுதி வயதை 18 என தீர்மானிக்கப்பட்டு
இன்று நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த வயதில்தான் பிள்ளைகள் கல்லூரியில் முதல் ஆண்டு படிப்பில் சேர்கிறார்கள்.
+ 2 படிக்கும் போது இருக்கக்கூடிய உலக ஞானத்திற்கும் மறு ஆண்டே கல்லூரியில் படிக்கும்போது இருக்கின்ற உலக ஞானத்திற்கும் எத்தகைய பெரும் மாற்றம் விளைந்துவிடப் போகிறது? பெரும்பாலும் 40 அல்லது 50 வயதைத்தொட்டவர்களேகூட தங்களுக்கு கிடைக்கும் பல்வேறு அனுபவங்களைக் கொண்டு, ‘இதுநாள் வரை நாம் புரிந்து கொண்டவை இவ்வளவுதானா?’ என்றும், ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன். உலகம் புரிஞ்சிக்கிட்டேன்’ என ரஜினியின் திரைப்படப்பாடலை
நினைவுபடுத்திக்கொண்டு த்த்துவார்த்தமாக
யோசிக்கிறார்கள். உண்மை இப்படி இருக்க, நம் கலாச்சாரத்தில் திருமணம் என்பது ’ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று போற்றுகிறோம். அது வெறுமனே திருமணம், காமம், குழந்தை என்பதோடு முடிவதில்லை. திருமணத்திற்குப் பின் அந்த ஆணும், பெண்ணும் சமூகத்தின் முக்கிய அங்கத்தினராகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள், குழந்தையை சிறந்த முரையில் வளர்த்து ஆளாக்குவது உள்ளிட்ட பெரும் பொறுப்புகளை சுமந்தாக வேண்டும். ஒருவேளை ஏதோ ஒரு மனக்கசப்பினால் அவர்கள் அந்த கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டால், குழந்தையின் வாழ்வும் இக்கட்டில் தள்ளப்படுகிறது.
பெரும்பாலும் அத்தகைய குழந்தைகள் எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகிறார்கள்.
தாயையோ அல்லது தந்தையையோ பிரிந்த குழந்தைகள் எத்தகைய மனவலியில் வேதனைப்படுகிறார்கள்
என்பதை சமூக அவலத்தை உற்று நோக்குபவர்களுக்கு
நன்கு தெரியும்.
2000- மாவது ஆண்டில் குடும்பநல கோர்ட்டுகள் 2 மட்டுமே இருந்தன. ஆனால், இன்று
(2026) அதன் எண்ணிக்கை 10 என்கிற அளவை எட்டிவிட்டது. மக்கள் தொகைப்பெருக்கம் 20% சதவீதம் மட்டுமே. ஆனால், கோர்ட்டுகளின் எண்ணிக்கை 200%
சதவீதத்தை எட்டி விட்டது. அப்படியானால்,
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு
நிகழும் திருமணங்கள் எதற்குமே ‘விவாகரத்து’ நடக்கவில்லையா? என்றால், எவ்வளவோ பார்த்துப்பார்த்து
நடத்தியும் கூட அவற்றிலும் விவாகரத்து நடக்கத்தான் செய்கின்றன. ’பத்து பொருத்தங்களும் பார்த்து காதல் செய்யுங்கள்’ என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். அதை பலரும் தவறாகப் புரிந்துகொண்டனர். ஒருவருக்கொருவர்
முகத்தைப்பார்த்து பிடித்தல், குணாதிசயங்களைப் பார்த்து பிடித்தல், ஒரு ஆண்மகன் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளைப்பார்த்து
பிடித்தல் என பிடித்தலின் ஆரம்ப நிலையில் மூன்று ‘டிக்மார்க்’ தந்து காதலைத் தொடங்குகிறார்கள்.
இப்படியெல்லாம் காதல் வருமா? என்றால், நிச்சயம் வரும் என்பதே பதில். ஏனெனில் அது ஒரு இயற்கையான உந்துதல் உணர்வு. ஒரு ஆணும் பெண்ணும் தாங்கள் காதலிக்க முடிவு செய்துவிட்டால், ‘நாங்கள் இருவரும் காதலிக்கத்தொடங்கிவிட்டோம். இதை இனி யாரும் தடுக்கக்கூடாது. அப்படி தடுக்க முயற்சித்தால் உண்மையான காதலையே அழிப்பதாகும்’ என்கிற ரீதியில் செயல்படுகிறார்கள். மிக இளம் வயதில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான்.ஆனால், அவரவர்கட்கு மனம், அறிவு முதிர்ச்சி வரும்பொழுது அவர்களின் கண்ணோட்டம் மாறுகிறது. ஆகவே காதலர்கள் தங்கள் இருவரைப்பற்றி மட்டும் யோசித்து முடிவெடுப்பதுடன், இது சமூகத்திற்கு, அவரவர் குடும்பத்திற்கு என பலவகையிலும் ஏதுவாக இருக்குமா? என்று பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் குடும்பம் என்பது மிகச்சிறந்த அமைப்பு. அது
அமைந்தவுடன் அவர்களின் வாழ்க்கைத்தொடர்ச்சியில் இவை அனைத்தையும் சேர்த்துதான் அவர்கள் இழுத்துச்செல்லப் போகிறார்கள்.
சசிக்குமார் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில்
காதலர்கள் தங்கள் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் சென்னையில்
சொந்த வீடு வாங்கும் அளவிற்கு வளர்ந்து விடுகிறார்கள். அப்போது துக்கம் நடந்து விடுகிறது.
அவர்களுக்காக இரு தரப்பிலிருந்தும் யாரும் வர மாட்டார்கள். அது போன்ற நிலை ஏற்படக்கூடாது
என்று கூறுகிறேன். மனித இனத்தில் காதல் என்கிற
உணர்வு தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தாங்கள் இருக்கும்
நிலைவேறு. அவர்களே கணவன் மனைவியாக வாழ்வது வேறு நிலை. காதல் திருமணமோ, பெற்றோர்களால்
நிச்சயிக்கப்பட்ட திருமணமோ திருமணம் என்பது நடந்து விட்டால், அந்த ஆணும், பெண்ணும்
புறவழிச்சாலையில் பயணிப்பதுபோல் பயணிக்கத்தொடங்கி விடுவர். இந்த இரண்டுவகை திருமணத்திலும்
எவ்வித வேறுபாடு இருக்கப்போவதில்லை. ஏதோ ஒரு காரணத்தினால் காதலர்களாகிய உங்களுக்குள்
பிடித்திருந்தாலும், மற்ற விஷயங்கள் ஒத்துப்போகாது எனில் அதை விட்டுத்தள்ளுங்கள் என்கிறேன்.
பிடிவாதம் காட்டி உங்கள் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஒரு திரைப்படத்தில்
பல போராட்டங்களுக்குப்பின்னர் காதலர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அனைவரும் பார்வையாளர்களாக
கைதட்டக்கூடும். ஆனால், தாய், தகப்பனாக, இன்னபிற உறவுமுறையினராக ஒருவரும் கைதட்ட மாட்டார்கள்.
அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கே. போராடி வெல்லும் காதலர்கள் நல்ல நிலைக்கு வந்துவிட்டால்
எனக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் அத்தகைய முயற்சியை இளைஞர், இளைஞிகள் எடுக்க வேண்டாம் என்றே
கூறுவேன். இதனால் பத்து பொருத்தங்களும் பார்த்தபின் காதலியுங்கள் என்று நான் ஏற்கனவே
கூறியிருந்தேன். இப்படி பல்வேறு சிக்கல்கள், திருமணம் சார்ந்த முடிவெடுப்பதில் சிறிய
வயதில் நல்ல மனத்தெளிவு கிடைக்காது என்பதால்தான்
அரசாங்கம் திருமணத்திற்கான வயது வரம்பை 21 வயது என் நிர்ணயித்திருக்கிறது.
21 வயதிற்கு மேற்பட்டால் அவர்கள் தங்கள் கல்லூரிப்படிப்பினை முடித்திருப்பார்கள். வெளியுலகம்
புரிய ஆரம்பிக்கும். வேலைவாய்ப்பு, சுய சம்பாத்தியம்
போன்ற விஷயங்கள் குறித்தும், வாழ்க்கையின் நிதர்சனமான உண்மைகள் குறித்தும் அறிந்துகொள்ளத்தொடங்குவர்.
காதலுக்கு எதிராக என்னென்ன வகையான பிரச்சினைகள் வரக்கூடும்? ஏழை-பணக்காரன், மாநில வேறுபாட்டு
பிரச்சினை, ஜாதிப்பிரச்சினை மற்றும் வேறு மதம் போன்ற பிரச்சினைகள் வரலாம். மதவிஷயத்தில்
முக்கியப்பிரச்சினை எதுவென்றால், கலாச்சாரம் மாறுகிறது. அதிலும் கூட ஆங்காங்கு ஒரு
சில குடும்பங்கள் வெற்றிகரமாக வாழத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவை அபூர்வமானது. விதிவிலக்கானவை.
ஆகவேதான் இளம் வயதினருக்கு மன மற்றும் அறிவு முதிர்ச்சி வரும்வரை அவர்களின் தாய் தந்தையர்
முடிவெடுக்கட்டும் என்று அரசாங்கம் கருதுகிறது. என்னைப்பொறுத்தவரை 25 வயதிற்கு மேற்பட்ட
தம்பதியினருக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாகக் கருதுகிறேன். காதலிப்பதோ, திருமணம்
செய்வதோ பெரிய சாதனை அல்ல. திருமணத்திற்குப்பின் மனமொத்த தம்பதியினராய் வாழ்வதே சாதனை.
எவ்வகை திருமணம் செய்தவராக இருப்பினும் அவர்கள் தங்கள் இல்லறத்தை பூஜ்ஜியத்திலிருந்துதான்
தொடங்குகிறார்கள். நம் தமிழ் மரபில் ‘ஆசை அறுபதுநாள். மோகம் முப்பதுநாள்’ என்றார்கள்.
’ஒருவரைப்பார்த்து பிடிக்கிறது’ என்பது காதல் திருமணத்திலும் பெற்றோரால் நிச்சயிக்கப்படும்
திருமணத்திலும் ஒன்றேதான். இடைப்பட்ட சில விஷயங்கள் காதலில் நேரிடையாகவும், நிச்சயிக்கப்படுவதில்
குடும்பத்தாரால் வெளிப்படுத்தப்படுகின்றன. நான் இது சம்பந்தமான சிக்கல்களில் தவித்து
விவாகரத்து வரைச் சென்ர பலரையும் பார்த்திருக்கிறேன். ஆனால், நாம் எச்சரிக்கும்போது
அவர்கள் கேட்பதில்லை. காரணம் ஹார்மோன்களின் அதிவேகமான செயல்பாடுகள் அப்படி!
--------------------------------------------------------
No comments:
Post a Comment