தமிழ்நாட்டை இலவசத்தை நோக்கி கொண்டு் சென்றது எந்த ஆட்சி ?
நம் நாட்டில் குடிமக்களுக்கு அரசாங்கத்தால் இலவசங்கள் வழங்கப்படுவது இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் இலவசத்திற்கு வாய்ப்பில்லை. காரணம், இந்திய அரசமைப்பின்படி, மத்திய அரசிற்கு எவ்விதமான வழிவகையும் செய்யப்பட்டிருக்கவில்லை. ஆகவே டெல்லியிலிருந்து இவ்வாறு செய்ய முடியாது. அவர்கள் அந்தந்த மாநில அரசின் மூலமாகத்தான் செய்ய முடியும். அப்படியென்றால், விவசாயிகளுக்கான ஆதார நிதி என்கிற பெயரில் விவசாயிகளுக்கு நேரிடையாக பணப்பட்டுவா செய்யப்படுகிறதே? என்று கேட்கலாம். உண்மையில் யாரோ ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தால் இந்த விஷயம் மத்திய அரசிற்கு சவாலாக அமையக்கூடும். மத்திய அரசின் நிதி சம்பந்தமான நிலைப்பாடு என்னவென்றால், பல்வேறு மூலங்களால் மாநிலங்களிலிருந்து பெறப்படும் நிதியை அவர்கள் எவ்வளவு வைத்துக்கொள்கிறார்கள்? மாநிலங்களுக்கு எப்படி பிரித்துத் தருகிறார்கள்? என்பதே முக்கியப்பணியாகும். எடுத்துக்காட்டாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது) எடுத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தினை மாநில அரசுகள் செயல்படுத்தும்போது ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை மத்திய அரசின் சார்பில் பங்களிப்பாக செய்யலாம். ஆனால், திட்டத்தை நேரிடையாக நடைமுறைப்படுத்த முடியாது. அடுத்ததாக விவசாயக் கடன், கல்விக்கான கடன் என தரப்படுகின்றன. ஒரு புதிய அரசு பொறுப்பேற்கும் போது அந்தக் கடன்களை தள்ளுபடி செய்து விடுகின்றன. இது எப்படி சாத்தியமாகும்>? பெரும்பாலும் இவை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களாகும். இந்த கடன்களை மக்களுக்கு வழங்கும் முன்னர் இதற்கான இறையாண்மை உத்திரவாதம் (சோவெரின் கியாரண்டி - Sovereign Guarantee) ஒன்றினை மத்திய அரசாங்கம் ஏற்கனவே அந்தந்த வங்கிகளுக்கு வழங்கியிருக்கும். இதனால், குறிப்பாக விவசாயிகளோ அல்லது கல்விக்கடன் பெற்ற மாணவ, மாணவியரோ அதை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால் ’அவற்றை தானே அந்தந்த வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்துவதாக’ அறிவிக்கலாம். அதில் ஏற்படும் இழப்பை அரசாங்கம் அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு அந்தத் தொகையை வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தும். ஆக, தங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘கடனைத் தள்ளுபடி செய்கிறோம்’ என மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதும்கூட ஒருவகையில் மறைமுகமாக இலவசத்தை தருவது போல்தான். அரசாங்கத்தால் இலவசம் தரப்படுவது சரியா? தவறா? என்றால், அது பெரிய அளவில் கலந்துரையாடப்பட வேண்டிய விஷயமாகும். கடந்தகால ஆந்திரபிரதேச வரலாற்றில் தெலுங்குதேசம் கட்சியைத் தொடங்கிய என்.டி.ஆர் அவர்கள் (என்.டி.ராமாராவ்) தனது கட்சி வெற்றி பெற்றால் 2 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவதாக 1981 –ஆண்டு அறிவித்தார். அதே வாக்குறுதியை கடந்த 2006-இல் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அப்படியானால், தமிழகத்திலும், ஆந்திரத்திலும் 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக நம் மக்கள் 2 கிலோ அரிசியை பெற்றுதான் வாழவேண்டிய நிலையில்தான் இருந்தார்களா? என்கிற கேள்வி எழுவது நியாயம்தானே? இந்த அறிவிப்பானது தேர்தலில் ‘ஹீரோ’ என முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் வருணித்தார். இது தேர்தல் முடிவினை புரட்டிப் போட்டது என்னவோ உண்மைதான். ’இரண்டு ரூபாய்க்கெல்லாம் அரிசி தர முடியாது’ என பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் திட்டவட்டமாகக் கூறினர். அப்போது தமிழகத்திலும் அதே விவாதம் எழுந்தது. அதற்கு ப.சிதம்பரம் அவர்கள், ‘ஏன் முடியாது? நான் மத்திய நிதி அமைச்சராகச் சொல்கிறேன். நிச்சயம் தர முடியும்’ என்று உறுதிபடுத்தினார். தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்தது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அப்போதும் பாராளுமன்றத்தில், ‘ஐயா.. தமிழ்நாட்டிற்கு 2 ரூபாய்க்கு அரிசி தர முடியும் என்று கூறினீர்களே.. இப்போது நீங்களே மத்திய நிதியமைச்சராக உள்ளீர்கள். அப்படியானால் அதே திட்டத்தை ஏன் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தலாமே? என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு திரு.ப.சிதம்பரம் அவர்கள் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்தது. ’ரூ.2 ற்கு அரிசியைத் தர சாத்தியமா?’ என்று கேட்டனர். அதற்கு,’சாத்தியம்’ என்று பதில் கூறினேன். அத்திட்டம் ‘வேண்டுமா?’ என்று கேட்டிருந்தால் ‘வேண்டாம்’ என்றே கூறியிருப்பேன்’ என்று பதிலளித்தார்! இந்த வரிகள் பாராளுமன்ற குறிப்புகளில் அப்படியே பதிவாகியுள்ளது. அவர் கூறியதுபோல் இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் அதைச் செய்ய முடியாது. அந்தந்த மாநில அரசுகளின் மூலமாக செயல்படுத்தியிருக்கலாம். ஆக,இது தேர்தல் வாக்குறுதிக்காக ஒன்றைக்கூறியது நிரூபணமாகிறது. உண்மையில் இலவசத்திட்டமானது ஒருசாராருக்கு தேவைப்படுகிறது! தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியின்போது வழங்கப்பட்ட இலவச சீருடை, இலவச செருப்பு ஆகியவ்வ அனைத்து மாணவ, மாணவியருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. ஆக, ஏதோ ஒரு தேவை இருக்கிறது. அதேநேரம் அது தேவைப்படுகிற அளவிற்கு மக்களை வைத்திருப்பதே இந்த ஆட்சிகள்! ’எங்களால் ஆன வகையில் செய்தோம். ஆனால், அவர்கள் முன்னேறவில்லை’ என்று ஒதுங்கிவிட முடியாது. எவருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதேவேளையில் பன்னெடுங்காலமாகவே இலவசங்களே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது என்றால், நாம் தவறான முறையில்தான் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற்றே பொருள் கொள்ள முடியும். ஒருவேளை இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட பேரிடர்களின்போது மக்களுக்கு இலவசமாக உதவிசெய்தால் அது வரவேற்கப்படக்கூடியதே. ஆனால், ஃபிரிட்ஜ், வாஜிங் மிஷின், டேபிள் ஃபேன் தருவது போன்ற இலவசங்கள் தருவது ஏற்புடையதல்ல. எதை தருவதாகச் சொன்னால் மக்கள் மதிமயங்கி வாக்களிப்பார்களோ அதையே அரசியல் கட்சிகள் வாக்குற்றுதிகளாக அளித்தனர். ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் மக்களும் சிந்திக்கவில்லை. கட்சிகளும் சிந்திக்கவில்லை. பொதுவாக மக்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகளே. அரசு அதிகாரிகள் அல்லர். அரசு அதிகாரிகளான விஏஒ, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் போன்றோரை விட அரசியல் கட்சிசார்ந்த ஒன்றியச் செயலாளர், கிளைச் செயலாளர் போன்றோர் மக்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பர். ஒரு ஆர்.ஐ. என்பவர் கலெக்டரிடம் மக்கள் பிரச்சினையைக் கூறிக் கொண்டிருக்க மாட்டார். அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கும் நபர்களே கலெக்டர், எம்.எல்.ஏ, எம்.பி போன்றோரிடம் மக்கள் பிரச்சினயைக் கூறி தீர்வுக்கான வழிமுறையையும் விளக்குவர். அந்த அரசியல்வாதிகள் பெர்ரும்போக்கான தேர்தல் வாக்குறுதிகளால் மக்களிடம் வாக்குகளைப் பெற்று விட முடியுமா? என்று கருதுகிறார்கள். இதனாலேயே மக்கள் அனுபவித்துவரும் பிரச்சினைகளின் வீரியம் அவர்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு சம்பந்தமாக மக்களை அணுகியபோது அவர்கள் கூறியதெல்லாம் மழைநீர் வடிகால் சரியில்லை, சாலைகளில் கழிவு நீர்ப்பெருக்கு, கொசுக்களின் தொல்லை ஆகியவற்றைப் பற்றியே. இதே பிரச்சினையைத் தான் கடந்த கால தேர்தல்களின்போதும் கூறினார்கள்! இவைதான் மக்களின் உண்மையான தேவை! அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் பலன் சுமார் பத்தாண்டு காலத்திற்குப் பின்னரே உணரப்பட்டது. ஆனாலும், தேசத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல அதுவே பெரிதும் துணை செய்கிறது. ஆனால், அவர்கள் (பிஜேபி) அந்த திட்டத்தை தொடங்கியபின் வந்த தேர்தலில் பிஜேபி வெல்லவில்லை! இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கிறோம்? நீண்டகால அடிப்படையில் பயனளிக்கக்கூடிய தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், சாலைவசதிகள், நிரந்தர வேலைவாய்ப்புகள், சுகாதார மேம்பாடு போன்ற தொலைநோக்குத் திட்டங்களுடன் வருபவர்களுக்கு மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். வளர்ந்த நாடுகள் என்றால் அங்கே மக்கள் அரசாங்க வேலையைவிட தனியார் துறையில் அதிக வருமானம் ஈட்டுவர். அது போன்றதொரு நிலையை இங்கேயும் உருவாக்க வேண்டும். புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களில் குறிப்பிட்ட நடிகையின் கவர்ச்சி நடனம் உண்டு என விளம்பரப்படுத்துவது போன்றுதான் அரசியல் கட்சிகளின் தேர்தல்கால அறிக்கையும்!
---------------------------------------------------------------
No comments:
Post a Comment