Tuesday, August 11, 2026

53. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை வரலாறு

 

                       பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

                                        குருபூஜை வரலாறு

இன்றைய காலத்தில் அரசியல், சமூகம் சார்ந்த பெரியோர்களின் பிறந்தநாளாக கொண்டாடத்தொடங்கி விட்டனர். ஆனால், குருபூஜை என்றால் என்ன? அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் வழியில், ஒருவரின் மரணத்திற்குப்பின் ஒரு பெரிய பள்ளம் தோண்டி, அதில், மண், உப்பு உள்ளிட்ட பலவற்றையும் கொட்டிப் பரப்பி, அதன்மீது இறந்தவரை அந்தக்குழிக்குள் அமர்ந்த நிலையில் வைத்து, மீண்டும் பல்வேறு பொருட்களைக்கொட்டி மூடி பின் அதன் மீது ஒரு பெரிய சமாதியானது கட்டி எழுப்பப்படும். அதாவது ’ஜீவசமாதி’ என்பதன் குறியீடு போல! இதுவே வள்ளலார் முறை. அந்த முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலியை செலுத்துவகையில் ஒரு பூஜை மேற்கொள்ளவேண்டும். இப்படி ஒரு மதிப்பிற்குரியவர் இறந்தபின் அவரை வழிகாட்டியாக, குருவாக ஏற்று பூஜை நடத்துதலே‘குருபூஜை’ என்று அழைக்கப்படும். எனக்குத்தெரிந்தவரை என் சிறுவயதின் முதற்கொண்டு இந்த குருபூஜை என்பது ‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்’ அவர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால், மிகச்சமீபகாலமாக அவரைபோன்று அடக்கம் செய்யப்படாதவர்களுக்கும் ‘குருபூஜை’ செய்து, அது மிகவும் பிரபலமாக்கப்பட்டதன் எதிரொலியாக அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் ‘குருபூஜ’ என்னும் வார்த்தையை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

 என்னைப்பொறுத்தவரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை ஒரு அரசியலாளர் என்பதையும்விட அவரை ‘ஞானி’ என்கிற  நிலையிலும், தெய்வாம்சம் பொருந்திய மாமனிதராகவும் போற்றுகிறேன். என்னுடைய கிராமத்திற்கும் ’பசும்பொன்’ கிராமத்திற்கும் சுமார் 8 கிலோ மீட்டருக்குள்தான் இர்க்கும். என் சிறுவயதில் பல சந்தர்ப்பங்களில் அவருடை சமாதியைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதியன்று அவரது குருபூஜைக்காக சுமார் 10 லட்சம் பேர் பசும்பொன் கிராமத்திற்கு வருகிறார்கள். அதற்கும் ஒரு சில தின்ங்களுக்கும் முன்வரை அந்த கிராமம் மிகவும் அமைதியாக இருக்கும். அவ்வளவாக ஆள்நடமாட்டம் இருக்காது. ஐயா அவர்களின் குருபூஜையன்று தமிழக முதலமைச்சர் முதல் ஆளுங்கட்சி, பெருவாரியான எதிர்கட்சிகள், தேவர்சமுதாய இயக்கங்கள், அவர் மீது அபிமானம் கொண்டிருக்கும் பிற சமுதாய அங்கத்தினர்கள் என பாலின பேதமின்றி அனைவரும் பசும்பொன்னிற்கு வருகைதந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்துவர். இப்படி நாடே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு அல்லோலகப்படும் அந்த பசும்பொன் கிராம்மானது குருபூஜைக்குப்பின் மீண்டும் அமைதவழும் தன் இயல்பான நிலைக்குத் திரும்பிவிடும். திருநெல்வேலியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ‘வல்லநாடு சித்தர்’. அவர் வள்ளலாரைப் பின்பற்றியவர். வள்ளலார் அவர்களின் காலத்திற்குப்பின் அவர்வழிவந்த சீடர்கள், அபிமானிகள் ஆங்காங்கே வள்ளலாரின் கோட்பாடுகளை முனெடுக்கும் இயக்கங்களை நிறுவியனர். அப்படி நிறுவியவர்களில் ஒருவர்தான் ’வல்லநாடு சித்தர்’. அப்படிப்பட்ட அவர் பசும்பொன்னாருக்கு ஆன்மீக ரீதியில் பக்கபலமாக இருந்து வந்தார். இன்னும் சொல்லப்போனால் பசும்பொன்னாரைப்பார்த்து, ‘உங்களுக்கு அரசியல்பாதை தேவையில்லை’ என்றே கூறியவர்! அந்தளவிற்கு பசும்பொன் ஐயா அவர்களைப்பற்றி  நன்கறிந்த, அபிமானம் கொண்ட வல்லநாடு சித்தர் அவர்கள்தான் பசும்பொன் ஐயா அவர்கள் இறைவனடி சேர்ந்ததும், அவர் பூதவுடலுக்கு சடங்குகள் செய்வித்து, சமாதி வைக்கும் பணியை, வள்ளலார் நெறிப்படி மேற்கொண்டவர். இதனால்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு ‘குருபூஜை’ செய்யும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. வல்லநாடு சித்தர் அவர்கள் 1981 –இல் ஜீவசமாதி ஆனார். அதுநாள்வரை அவர் தொடர்ந்து பல்லாண்டுகள் பசும்பொன்னார் அவர்களின் ‘குரு பூஜையை’ முன்னின்று நடத்தியிருக்கிறார்.  வள்ளலார் வழிமுறையில் ஜீவசமாதி வைக்கப்படும்பொழுது நிறைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். குருபூஜையின் போது, ஜீவசமாதியை மலர்களால் அலங்கரிப்பது,  கோமாதா, குதிரை, யானை போன்றவற்றை வலம்வரச்செய்வது என பல விஷயங்களைக் கடைபிடிப்பதுண்டு. (ஜைன மதமானது ’செலவுகளைக் குறைக்க வேண்டும்’ என்கிற நோக்கில் உண்டானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அவர்களின் சடங்கு முறைகளே மிகவும் அதிகமாக செலவழிக்கக்கூடிய வழிமுறையாக உள்ளது. ஜெயினர்கள் தீபாவளியன்று மிகக்குறைந்த விலையில் ’பென்ஸ்’கார் வாங்குவதாக செய்திகளைக் கண்டிருப்பீர்கள். இதேபோல்தான் வள்ளலார் வாழ்வியல் வழிமுறைகளும்! அவருடைய மார்க்கம் மிக எளிமையானது, சிக்கனமானது. ஆனால், அவருக்குப்பின் அவருடைய வழிமுறைகளும் மிகவும் செலவுகள் விரிவடைந்ததாக மாறிப்போயின!) 

   பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் முக்கியக்கொள்கை ‘தேசியமும் தெய்வீகமும்’. அவர் மிகப்பெரிய முருகபக்தர். ஸ்ரீ பாம்பன் சுவாமிகளைப் பற்றியெல்லாம் அதிகளவில் பேசியுள்ளார். தத்துவவிசாரங்களில் அடியாழம் கண்டவராவார். அரசியல் விஷயங்கள் பரபரப்பாக இல்லாத நேரங்களில் பெரும்பகுதியை ஆன்மீகச்சிந்தனையிலேயே கழித்தவர். ஆன்மீகப்பெரியோர்கள் பலரையும் போன்று சமயம், தத்துவம் போன்றவற்றில் சொற்பொழிவாற்றக்கூடிய வல்லமையும், விஷயஞானமும் கொண்டவராக இருந்திருக்கிறார். முருகனின் உத்தரவைக்கேட்காமல் எதையும் செய்வதில்லை என்கிற அளவிற்கு தீவிர முருக பக்தர். இதனாலேயே ‘தேசியமும் தெய்வீகமும்’ என்கிற தன் கொள்கையில் உறுதிப்பாடாக நிலைத்து நின்றிருக்கிறார். அவருடைய காலகட்டத்தை ஆய்வுசெய்தால், அவர் தன் தொகுதிப்பக்கமே செல்லாமல் 1951, 1956 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் அவர் காலத்தில்தான் ‘பார்வார்டு பிளாக்’ கட்சிக்கு அதிக அளவிலான (15 பேர்) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கின்றனர். பார்வார்டு பிளாக் கட்சியானது காங்கிரஸிற்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அக்கட்சியை முழுமையாக முன்னெடுத்தவர் முத்துராமலிங்க தேவர் அவர்கள். தான் ஒரு ஆன்மீகவாதி என்பதனாலும், தமிழகத்தைச் சேர்ந்தவரென்பதாலும் தமிழ்க்கடவுளாக வணங்கப்படும் முருகனை மனதில் கொண்டு, ‘தேசியமும் தெய்வீகமும்’ என்று தன் கோட்பாட்டினை வரையறுத்தார். (ஆனால் நேதாஜி அவர்கள் தெய்வீகத்தை தன் கோட்பாட்டில் இணைத்திருக்க மாட்டார்). 

     எனக்குத் தெரிந்த வரலாற்றுக் குறிப்புகளின்படி, ஒருமுறை சட்டமன்றத்தில் காங்கிரஸிற்கு பெரும்பான்மை  இல்லையென்ற நிலை இருந்தது. அப்போது காங்கிரஸில் யார் முதல்வர்? என்கிற போட்டி காமராஜருக்கும் ராஜாஜி அவர்களுக்கும் இடையே நிலவியது. அப்போது 15 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த பார்வார்டு பிளாக் கட்சியின் முதன்முதலில் ஆதரவு கோரப்பட்டது. மந்திரி பதவிகள் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ’நாங்கள் உங்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்களே அடுத்து ஆட்சிக்கு வருவோம்’ என்று வலுவாக மறுத்திருக்கின்றனர். அதன்பின் அந்த இடைவெளியை ‘ராமசாமி படையாட்சி’ அவர்களின் காமன்வெல்த் கட்சிக்கு 6 பேர் மந்திரி பதவி வழங்கப்பட்டு காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி உறுதி செய்யப்பட்டது. இதேவேளையில் ஞானமார்க்கத்திலும் தொடர்ந்திருக்கிறார். முத்துராமலிங்க தேவர் அவரின் பங்களிப்பில் அவருடைய ஆயுட்காலம் வரையிலும் அவர் வழி நடத்திய கட்சியான பார்வார்டு பிளாக் கட்சி மிகவும் வலுவாகவே இருந்தது. 1955-இல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற இயக்கங்கள், கட்சிகளை மீண்டும் தங்களுடன் இணைப்பதற்காக முடிவெடுக்கிறார். அதன்படி பார்வார்டு பிளாக் கட்சியின் தேசியத் தலைவரையும் ஜவஹர்லால் நேரு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பினை ஏற்று பார்வார்டு கட்சி தன் தேசிய கவுன்ஸிலை ஒன்றுகூட்டி முடிவெடுத்து, காங்கிரஸுடன் இணைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதை அறிந்த முத்துராமலிங்க தேவர் அவர்கள் டெல்லிக்குச் சென்றார். காங்கிரஸ் கட்சியின் கோட்பாடு, அணுகுமுறை எதுவும் சரியில்லை என்றும், காங்கிரஸ் வேண்டாமென்று நேதாஜி தொடங்கிய இயக்கமான பார்வார்டு பிளாக் உயிர்ப்போடு இர்க்க வேண்டுமென்றும்’ என்று ஆணித்தரமாக வாதிட்டு, நாக்பூர் மற்றும் கொல்கத்தாவில் சிறப்புக்கூட்டங்கள் நடத்தி, காங்கிரஸில் இணைந்த பார்வார்டு கட்சியை மீண்டும் உயிர்ப்பித்து அதன் தேசிய துணைத்தலைவராக பொறுப்பேற்றார். அவருக்கென இருந்த அபிரிதமான மக்கள் செல்வாக்கினால் அவரால் ஆளுமையோடு செயலாற்ற முடிந்திருக்கிறது. எனக்குத் தெரிந்த வரையிலும் ஆன்மீகப்பணியாக எத்தனையோ முறை முருகபெருமானைப் பற்றி உரையாற்றியிருக்கிறார். மேலும் ஆன்மீகம் மற்றும் இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட முடியும். முதலாவதாக, திருநெல்வேலியில் ‘முருகன் திருக்கோவில்’ ஒன்று வேற்று மதத்தவர்களின் இடையூறினால், குடமுழுக்கு செய்ய முடியாமல் இருந்தது. தேவர் அவர்களுக்கு செய்தி சென்றடைந்ததும்,  தானே நேரில் களமிறங்கி அதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார். இரண்டாவதாக தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயப்பிரவேசம் செய்ய வைக்கும் போராட்டத்தினை முன்னெடுத்தவர் வைத்தியநாத ஐயர் அவர்கள். அவருக்கு உற்றதுணையாக, அவருக்கு தைரியமூட்டி, தன் சார்பில் நபர்களை அனுப்பிவைத்து அப்போராட்டம் வெற்றிபெற பெரிதும் ஒத்துழைத்தவர் தேவர் பெருமகனார். இதன்மூலம் பெரும் வன்முறை ஏதும் வெடித்துவிடாமல் அந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்திருக்கிறார். இப்படி தன்னுடைய சமுதாயத்தைக் கடந்து அனைத்து தரப்பினருக்கும் இருந்த சமுதாயப்பிரச்சினைகளை ஆளுமையுடன் தீர்த்து வைத்தவர் அவர். 1949 வரையிலும் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கமாக இருந்து, அறிஞர் அண்ணா தலைமையில் அதில் பிளவு ஏற்பட்டு, ’திராவிட முன்னேற்றக் கழகம்’ என தேர்தல்களத்தில் ஈடுபடும் ஒர் அரசியல் கட்சியாக பரிணாமம் பெற்றது. அப்போது அக்கட்சியின் சார்பில் வெளிவந்த கருத்துகள், அவர்கள் பேசிய பேச்சுகள் சில வரலாற்று ரீதியில் மிகவும் பிரசித்திப் பெற்றவை ஆகும். அவற்றில் ஒன்றுதான் திமுகவின் அப்போதைய தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் மதுரைப் பொதுக்கூட்டத்தில் அன்னை மீனாட்சியைப்பார்த்துப் கேட்ட கேள்வி, ‘மீனாட்சி.. ஏழைகள் குடிப்பதற்கு கஞ்சியில்லை. உனக்கெதற்கு வைரமூக்குத்தி?’ ஆண்டுக்கொரு முறை திருமணம் எதற்கு?  எந்த இடத்தில்  அண்ணா அவர்கள் மேடைபோட்டுப் பேசினாரோ, அதே இடத்தில் அடுத்த நாளிலேயே முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் அண்ணா அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் மேடை போட்டு எதிர்வினையாற்றிப் பேசினார். இதேபோன்ற பல சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், அன்றைய திராவிடக்கட்சியின் வேகத்திற்கு ஈடாகவில்லையோ என்றே நான் கருதுகிறேன். நிச்சயமாக தேவர் பெருமகனாரின் பின்னால் மக்கள் அணிவகுத்திருந்தனர். ஆனாலும், அவரின் கொள்கைக்குப்பின்னால் மக்கள் அணிவகுக்கவில்லை என்பதே உண்மை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், தேவர் அவர்கள் 1963-இல் ஜீவசமாதி ஆனார். 1967-இல் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் ஏறிவிட்டது! 1962 கண்ணதாசன் உள்ளே வருகிறார். அவரே 1971, 72 –இல் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் நூலை எழுதுகிறார். இவற்றையெல்லாம் தாண்டி திமுகவின் ஆட்சி தொடர்ந்தது! முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் அரசியலில் பெரும் பிம்பம் உடையவரென்றால், கண்ணதாசன் அவர்கள் இலக்கியத்தில் அப்படியே.  இவர்களெல்லாம் நாத்திகவாதத்திற்கு எதிராக தர்க்க ரீதியிலான தெளிவான, துல்லியமான பதிலடி தந்துகொண்டேதான் இருந்தனர்.  என்னதான் இந்து ஆன்மீகத்தில் அதீத பற்றுள்ளவராக இருந்த போதும், பிறமதங்களை அவர் வெறுக்கவில்லை. அவற்றிற்குரிய மரியாதையை ஒருபோதும் குறைத்துக்கொண்டதில்லை. அவர் ’ராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர். எஸ். எஸ்)’ இயக்கத்திற்கு ஆதரவாக இருந்ததில்லை என்றும், அவர் அதன் மீது மென்மைப்பார்வை கொண்டிருந்தார் என்றும் இரு வேறு கருத்துகள் உலவுகின்றன. என் பால்ய வயதில் எங்கள் கிராமப்புறங்களில் ‘இதோ..இந்த இட்த்தில்தான் தேவர் அமர்ந்து பேசிக்கொண்டிர்ந்தார். இங்கேதான் இன்ன காரியம் செய்தார். இன்னாரிடம் இன்னை, இன்ன சொன்னார்’ என்றெல்லாம் மக்கள் நினைவில் நிறுத்தி பேசிப்பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவர்களின் மனங்களில் நிலைத்தவர். மக்கள் செல்வாக்கு மிகுந்த முன்னாள் பிரதமர்கள், முன்னாள் முதல்வர்கள் சமாதிக்குக் கூட சுமார் 10 லட்சம் பேர் திரண்டு சென்று பூஜையில் கலந்து கொண்டதாக வரலாறு இல்லை. ஆனால், தேவர் அவர்களுக்கு இன்றளவும் அது நடக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் சமமாக வாழ்ந்தனர். உண்மையில் சொல்லப்போனால், அனைத்து சமுதாயத்தினர் இல்லங்களிலும் தேவர் அவர்களின் படத்தை மாட்டியிருந்தனர். அவர் வழி நடத்திய கட்சியில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. மிகப்பெரிய ஜமீனின் வாரிசாக, 18 கிராமங்களுக்குச் சொந்தக்கார்ராக இருந்த அவர் தன் சொத்துக்களை பல்வேறு சமுதாயத்தினருக்கும் உயில் எழுதி வைத்துள்ளார். ஆனாலும், காலம் செல்லச் செல்ல தேவரினத்தவர் அவரை அதிகமாகக் கொண்டாடக் கொண்டாட மற்ற சமுதாயத்தினர் மெல்ல பின்வாங்கிவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. இப்படித்தான் மாபெரும் தேசியத்தலைவராக விளங்கி தேசியத்தினை உயர்த்திப்பிடித்து முழங்கிய முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் ஒர் சாதியத்தலைவராக அவர் புகழ் சுருக்கப்பட்டுள்ளது. ’குற்றப்பரம்பரை’ என்கிற அவல முத்திரை அவர் பிறந்த சாதியின் மீது சட்டமாக குத்தப்பட்டபோது, அதற்கு எதிராக போராடியவர் என்பதைத்தவிர, அவர் தன் சாதிக்காக கல்வியிலோ, பொருளாதாரத்திலோ எதையும் பிரத்யேகமாக செய்திடவில்லை. ஒவ்வொரு ஆண்டு ‘குருபூஜை’யின் முதல்நாளில் அனைத்து சமுதாயத்தினரும் அவர் சமாதி அமைந்திருக்கும் ‘பசும்பொன்’ கிராமத்திற்குச் சென்று மொட்டையடித்துக்கொள்வது வழக்கமாயுள்ளது என்பதே உண்மை. பசும்பொன் கிராமத்தைத்தாண்டி வாழும் பிற சமுதாயத்தினர் அங்கு சேரும் கூட்டத்தைப் பார்த்து, மெல்ல மெல்ல ஒதுங்கிக்கொண்டனர். ஆக, மக்கள் செல்வாக்கு இன்றும் அவருக்கு அபிரிதமாக இருப்பதால், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் வருகையை தவறாமல் ஆண்டுதோறும் பதிவு செய்கின்றனர். என்னதான் இதில் அரசியல் கலப்பு தொடர்ந்தபோதும், தேவர் அவர்களின் மீது உணர்ச்சிமயமான பிடிப்பு கொண்ட மக்கள் அபிமானம் தலைமுறைகளைத்தாண்டியும் அவர் ஜீவசமாதியை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றது. எதுவாயினும் சரி, பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை ஒரு சாதியத்தலைவர் என்கிற கோணத்தில் பார்ப்பது மாபெரும் வரலாற்றுப்பிழை என்றே கொள்ள வேண்டியுள்ளது. 

-------------------------------------    

No comments:

Post a Comment

129. உள்ளாடையை ஊருக்கெல்லாம் காட்டுவதுதான் பெருமையா?

         உள்ளாடையை ஊருக்கெல்லாம்          காட்டுவதுதான் பெருமையா? பிரபலமான திரைப்பட நடிகர் திரு .’ காதல் ’ சுகுமார் அவர்கள் , ’ இன்ன...