Monday, August 17, 2026

69.’முருகனைப்பற்றிய சர்ச்சைகள்!’ (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -2)

 

                     ’முருகனைப்பற்றிய சர்ச்சைகள்!’

(முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -2)


சீமானின் நிலைபாடு:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்’ சீமான் அவர்கள் ‘முருகன் என்பவர் தமிழ்மண்ணில் பிறந்து இங்கேயே வளர்ந்தவர்’ என்கிற நிலைப்பாடு கொண்டுள்ளார். ‘முருகன் என் முப்பாட்டன்’ என்று முழங்குகிறார். நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு கோயில் கட்டுவதில்லையா? அவர்களுக்கு சிலைவைத்து தெய்வமாக வணங்குவதில்லையா? அதுபோலவே ’முருகன் முப்பாட்டன்’ என்கிறார் சீமான்.

சிறு,பெருந்தெய்வங்கள் வழிபாடு:

இந்துமதத்தின் வழிபாடுகளில் இரண்டு விதமான வழிபாடுகள் உள்ளன. முதலாவதாக ’The great tradition’, இரண்டாவது ‘The little tradition’ ஆகும்.  The great tradition’ என்பது நம் வேதங்களில், இராமாயணம், மகாபாரதம், குமார சம்பவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுளர்கள். இந்திரன் எங்கே பிறந்தார் என்றால் யாருக்கும் தெரியாது. ஏஎனென்றால் அவர் தேவலோகத்தில் இருப்பபவர். சரி.. தேவலோகம் எங்கிருக்கிறது என்றால் அதுவும் தெரியாது. மகாரஷ்டிரத்தில் மிகவும் பிரபலமான கடவுள் விநாயகர். ஆனால், அவர் எங்கே பிறந்தார் என யாருக்கும் தெரியாது. மேற்கு வங்கத்தின் மிகவும் பிரபலமான கடவுள் ‘சக்திதேவி- (காளி)’. அவர் பிறந்ததும் எங்கே எனத்தெரியாது. ஏனென்றால் அவை (The Little Tradition- சிறு தேவதைகள் வழிபாடு) அல்ல. ஆனால், தமிழ்நாட்டில் ஐயனார், கருப்பசாமி போன்ற தெய்வங்கள் எல்லாம் சிறு தேவதைகள் வழிபாடு (Little Tradition) இவர்கள் வேதங்களில் கூறப்பட்டவர்கள் அல்ல., உபநிஷதங்களில், Mythology போன்ற எதிலும் இருக்க மாட்டார்கள். ஒருசில இடங்களில் எல்லைச்சாமிகள் என்பன போன்ற குறிப்புகள் வரலாமே தவிர ஐயனார் வரலாறு, கருப்பசாமி வரலாறு என பிரத்யேகமான குறிப்புகள் இல்லை. இதேபோல் சப்த கன்னியர் வழிபாடு போன்ற பல்வேறு சிறுதேவதைகளின் வழிபாடு எல்லாமே நம் மண் சார்ந்த, மரபு சார்ந்த,  குலதெய்வ வழிபாடுகளாகும். இவை போன்ற தெய்வங்களுக்கு வேத, உபநிஷதங்களின் அரவணைப்போ, தத்துவவியல் சார்ந்த அரவணைப்போ இருப்பதில்லை. அப்படியானால், இவர்கள் எவ்வாறு தோன்றினர்? இவர்கள் யாவரும் இம்மண்ணிலே தோன்றினர். இம்மண்ணிலேயே கலந்தவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு தெய்வீக வாழ்க்கையாக அமைத்துக்கொண்டனர். அதனால்தான் இதுபோன்ற சிறுதேவதைகளை ‘முன்னோர் வழிபாடு’ என்று கூறுகிறோம். பெரும்பாலான சமூகவியல், வரலாற்று ஆய்வுகள் இப்படித்தான் வரையறுக்கின்றன.  இதையே சீமான் அவர்கள் முன்னெடுப்பு செய்து, ’ஐயனார், கருப்பசாமி, சப்த கன்னியர் போன்றோருடன் முருக்க்கடவுள் கூட எங்கள் முன்னோர்தான்’ என்கிற கருத்தை முன்வைக்கிறார்.

சங்ககாலத் தெய்வங்கள்:

சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திணைகள் அதாவது நிலங்களின் வகைப்பாடுகளில் குறிஞ்சித்திணையும் ஒன்று. இந்ததிணையின் கடவுள் யார்? ’குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று சொல்லப்படக்கூடிய முருகன். இதில், முருகன் என்பது தமிழ்ச்சொல். குமரன், ஸ்கந்தன், கார்த்திகேயன் என்று முருகனைக் குறிப்பிடக்கூடிய பிற பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத வார்த்தைகள். வேலன் என்கிற பெயர் தமிழ்ச்சொல். ’வேலைத் தாங்கியவன் வேலன்’ என்பர். இதனால்தான் குறிஞ்சித்திணை மரபில் ‘வேலன் வெறியாட்டம்’ என்று உண்டு. இந்த வெறியாட்டத்திற்கு ‘சேவல்’, ‘ஆடு’ ஆகியன பலியாகக் கொடுக்கப்படுகின்றன.  வெறியாட்டம் ஆடி, குறி சொல்லிவிட்டு, அசைவ உணவை உட்கொள்வர். அப்படியென்றால் குறிஞ்சித்திணை முருகனும், இப்போது வழிபாடு செய்யப்படக்கூடிய முருகனும் ஒருவர்தானா? என்கிற கேள்வி பிறந்துவிடுகிறது. தமிழ்மண்ணின் பிற திணைகளான காடு சார்ந்த முல்லை நிலத்திற்க்கு திருமால், வயல் சார்ந்த மருதநிலத்திற்கு இந்திரன், கடல் சார்ந்த நெய்தல் நிலத்திற்கு வருணன், இதர நான்கு திணைகளும் திரிந்த (வறண்ட) பாலை நிலத்திற்கு கொற்றவை என தெய்வங்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். நம் சங்க்கால வாழ்வியல், இலக்கியக்கூறுகளின்படி மேற்குறிப்பிட்ட தெய்வங்கள் நம் மரபில் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றனர். ரிக்வேத்த்தில் அடிக்கடி குறிப்பிடப்படும் தெய்வாங்கள் ருத்ரன், இந்திரன், வருணன் ஆகியோர். அதன்பின் வருணன் முக்கியத்துவத்துடன் இந்து பாரம்பரிய மரபில் பிற்காலத்தில் குறிப்பிடப்படவில்லை. இன்று அந்தக்கடவுளைப்பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருகாலத்தில் ’வருணன் மேய பெருமணல் உலகம்’ என வருணன் சிறப்பிக்கப்பட்டார். ’வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ அதாவது, ’வேந்தன்மேய’ என்றால் அரசன். இதற்கடுத்து இந்திரன் வந்துவிடுகிறார். ‘மாயோன் மேய காடுரை உலகம்’ அதாவது திருமால். மாயங்களை அதிகமாகச் செய்யக்கூடியவர் என்பதால் திருமாலை ’மாயோன்’ என்று நாம் பொருள் பொதிந்து வழங்குகிறோம். ஆனால், தமிழில் அந்தகாலகட்டத்திலேயே மாயோன் என்று சொல்லப்படுகிறது. இன்றும் தமிழகத்தில் உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் ‘மாயன், சிறுமாயன், பெருமாயன், மாயக்கா’ மாயாண்டி எனக்குறிப்பிடப்படும் பெயர்கள் எல்லாமே திருமாலை குறிப்பிடும் பெயர்களே. இந்த மாயோனை நாம் தொடர்புபடுத்தி விடுகிறோம். மாயோனுக்கு கோயிலகள் பெருவாரியாகக் காணப்படுவதில்லை. அவர் பெருமாள் கடவுளுடன் ஐக்கியமாகிவிட்டார். முற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் தொடர்ந்து 20 நாள்கள் கொண்டாடக்கூடிய விழாவாக ‘இந்திரவிழா’ மிகவும் பிரபலம்! தமிழர்களால் அதிக நாள்கள் கொண்டாடப்பட்ட விழாவென்றால் அது ‘இந்திரவிழாதான்’. சிலப்பதிகாரத்தில் கோவல- மாதவி மனஸ்தாபம் ஏற்பட்டதெல்லாம் இந்திரவிழாவின்போதுதான்! ஆக வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திரக்கடவுள் தமிழர்களுக்கும் கடவுளாக விளங்குகிறார். வருணன் என்கிற கடவுள் நெய்தலுக்காக என்பது  தொல்காப்பியத்தில் உள்ளது. மருதத்தில் இந்திரன் என்கிற பெயருடைய கடவுள் விளங்குகிறார். இவர்கள் இருவருமே வேதத்திலும் ஒரே சமகாலத்தில் குறிக்கப்படுகின்றனர். ஆனால், இவை உண்மையில் அவர்களைத்தான் குறிக்கிறதா? அல்லது வெவ்வேறு இருவரைக் குறிக்கின்றனவா? என்கிற கேள்வி நம்முன் தொக்கி நிற்கிறது. ஆனால், காலப்போக்கில் இந்திரன், வருணன் போன்றோருக்கு பெருங்கோயில்கள் எழுப்பப்படவில்லை.  இவை கொற்றவை’ எனப்படும் காளிவழிபாட்டுடன் கலந்து விட்டன.

பிற மதத்தவரின் பார்வை:

சேயோனாகிய முருகனின் புகழ்பாட ‘திருமுருகாற்றுப்படை’ நூலைப்போல் மாயோனாகிய திருமாலின் பகழ்பாட பிரத்யேகமான நூல்கள் ஏதும் இல்லை. ஆனால், முருகனுக்கு மட்டும் திருமுருகாற்றுப்படை போல அதன்பின் பல நூல்கள் பிறந்துள்ளன. அவர்மட்டும் தனித்துவத்துடன் தமிழர்களில் மரபில் தொடர்கிறார். மதம் சார்ந்த விஷயங்களினுள்ளே நுழைந்து  சிறு விஷயத்தைப் பற்றிக் கூறினாலும், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் ’இவர்கள் மாற்றி மாற்றிச் சொல்கின்றனர். இவர்களிடம் நிறைய கதைகள்தான் உள்ளன, நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கின்றன’ என ஊதிப்பெரிதாக்கி, சீரியஸாக கையாண்டு வெளிப்படுத்துகிறார்கள். இதனால்தான், இந்துமதம் மட்டும் ஏதோ பலவீனமாக இருப்பதுபோலவும், பிற மதங்கள் அனைத்தும் பலமாக இருப்பதுபோலவ் உம் ஒரு பார்வை நிலவுகிறது. பட்டிமன்ற, ஆன்மீகப் பேச்சாளர் திரு.சுகிசிவம் கூறுவது என்னவென்றால், வட இந்தியாவில் இருப்பவர் கார்த்திகேயன். ஆனால், இங்கே ஏற்கனவே இருக்கும் முருகக்கடவுள் என்பவருக்கு பூஜை செய்வதற்கு நியமிக்கப்பட்டவர்கள் அல்லது உரிமையைக் கோரி பெற்றவர்கள்தான் முருகனை சுப்ரமணியன் என்றெல்லாம் கூறி, முருகனையும் கார்ர்த்திகேயனையும் ஒன்றாக்கி, இந்த சமூகத்தை குழப்பிவிட்டார்கள் என்று தன் கருத்தை முன்வைத்தார். ’முருகன் என்பவர் இந்த மண்ணின் கடவுள். அவருடன் Mythology கடவுளை இங்கே கலந்து விட்டார்கள்’ என்று கூறியிருந்தார். ஆனால், இதற்கு ஆதாரம் வேண்டுமல்லவா? அதை அவரால் காட்ட முடியாது. இதுபோல் எந்த மதத்தின் நம்பிக்கைகளுக்குள் சென்றாலும் இது போன்ற நிறைய விஷயங்கள் இருக்கத்தான் செய்யும் என்பதே என் கருத்து!

(தொடரும்)

--------------------------------------------------------

 

No comments:

Post a Comment

70.ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும் (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -3)

                 ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும் ( முருகன் எங்கு பிறந்தார் வடக்கா ? தெற்கா ? ( பகுதி - 3)             பொதுவாகவேஎ எல்ல...