முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா?
கடவுள் முருகன் வடக்கே பிறந்தாரா? அல்லது தெற்கே பிறந்தாரா? என்கிற விஷயமானது மிகவும் சர்ச்சைக்குரிய, பரபரப்பான விவாதங்கள் நடக்கின்றன. இது சம்பந்தமாக
தெலுங்குப்படத்தயாரிப்பாளரின் ட்விட் செய்தியைப் பார்த்தேன். நான் அடிப்படையிலேயே
முருகபக்தன்தான். அதனால், என்னைப்போன்றவர்களுக்கும் இது ஒரு சோதனைதான். தமிழகத்தில்
ஏற்கனவே 2017-18 காலகட்டத்தில் முருகக்கடவுள் மீது
பாடப்பட்ட ’கந்த சஷ்டி கவசம்’ நூலைப்பற்றி ’கருப்பர் கூட்டம்’ எனும் குழுவினரால்
மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கப்ப்பட்டது. அது சம்பந்தமாக அவர்கள் சிறைக்குக்
கூட அனுப்பப்பட்டனர். பொதுவாக ஒவ்வொரு
மதத்தினரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால், அவரவர் மதத்தின் மேல் பக்தியும், மற்ற மதங்களின் மீது மரியாதையும் இருக்க வேண்டும். ’பக்தி’
என்பது கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான ’பந்தம்’. இது அதீதமான
உணவுப்பூர்வமாகும். இது தனி மனிதரிடம் அல்லது குழுவாகவோ கூட இருக்கலாம். ஒரு
குழுவாக இருப்பதுவே மதம் எனப்படுகிறது. ஒருவர் தானே ஒரு கடவுளை உருவகப்படுத்தி, அதன் பெயரைக்கூட வெளிப்படுத்தாமல் ஒரு கோயிலையும் எழுப்பி, அதில் அவர் மட்டுமே வழிபாடு செய்து வந்தாரென்றால் அது
அவருடைய தனியுரிமையும், விருப்பமுமாகும். அதையே குழுவாக
இணைந்து ஒரு ஊரே வழிபட்டால், அதுவே மதமாகும்.
பிரபலமாகும் வழிபாடுகள்:
தமிழ்நாட்டில் முருக பெருமானே பிரதானமான கடவுளாக
விளங்குகிறார். நாம் வரலாற்று ரீதியாக பன்னெடுங்காலமாகவே அவர்
வழிபடப்படுகிறார். இன்றைக்கு நாம்
வழிபடக்கூடிய பல கடவுளர்களை நாம் சங்க இலக்கியங்களில் காணமுடியாது. அதற்கும்
முற்பட்ட தொல்காப்பியத்திலும் காண முடியாது. மேலும், அதற்கும் முற்பட்ட செவிவழிச் செய்திகளிலும் காணமுடிவதில்லை.
ஆனால், நமது முருகக் கடவுள் எல்லா
காலங்களிலும் மக்களால் வழிபடப்பட்டிருக்கிறார். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என
தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான
திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்றவற்றிலும்
முருகனுக்கான குறிப்புகள் அதிகமாகக்கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள்
மற்ற கடவுளர்களுக்கு மிகவும் குறைவு. நம் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும்
ஒவ்வொரு கடவுளர் இருக்கின்றனர். ஷீரடி சாய்பாபா இன்று பரவலாக அனைவராலும்
வணங்கப்படுகிறார். அவர் காலம் மிக சமீபத்தையது. அவர் எங்கு பிறந்தார்? எப்படி வாழ்ந்தார்? என்பதற்கான செய்திகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிலும் அவர்
பிரபலமாக வணங்கப்படுவதால் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என யாரும் கூறிவிட
முடியாது. திருப்பதி கோயில் மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறது. அந்தத் திருப்பதி
கோயிலுக்கும் போட்டியாக இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலும், திருச்செந்தூர் முருகன் கோயிலும் விளங்குகின்றன. எந்த ஒரு
கடவுளின் மீதும் மக்களுக்கு திடீரென பக்தி கூடுகிறது?; பக்தி குறைகிறது?
என யாராலும் கணிக்க முடியாது. ஒரு
காலத்தில் ‘திருமோகூர்’ பெருமாள் கோயிலுக்குச் சென்றால் அங்கே அர்ச்சகர் ஒருவர்
மட்டுமே இருப்பார். அவரே விளக்குகளை எரியவிட்டு, சுவாமிக்கு அவரே ஆரத்தி காண்பித்து, தீர்த்தம், ஜடாரி சேவைகளை வழங்குவார். ஆனால்
இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது?
அவ்வளவு பெரிய கோயிலுக்குள் நாம்
நிற்பதற்கு இடமேயில்லை! மக்களின் பக்தியானது கடல் அலை போல மாறி மாறி
வந்துகொண்டேயிருக்கும்.
முருகனைப்பற்றிய சர்ச்சைக்குரிய
தெலுங்குத் திரைப்படம் குறித்துப் பார்த்தோமானல், அதன் இயக்குனர் என்ன சொல்கிறார்?: ‘"Born in the North. Forged in the Heartland.
Worshipped in the South and belonging to the universe" எனக் கூறியிருக்கிறார். அவர்
கூறியதில் கடைசி வரியை நானே மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்கிறேன். இனி வரும்
காலங்களில் முருகன் என்பவர் இந்த பிரபஞ்சத்தை ஆளுவார். முருகக்கடவுளின்
குணாதிசயத்தின் அடிப்படையிலேயே இதைக் கூறுகிறேன். இவ்வுலகிற்கு ஆன்மீகம்
சம்பந்தமான வருங்காலத்தேவை அவரிடம் மட்டுமே உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட
நம்பிக்கை.
முருகனின்
பிறப்பு குறித்த கோட்பாடு:
முருகனைப்பற்றிய தற்போதைய தமிழக
சர்ச்சை என்னவென்றால், ‘முருகன் நம்முடைய கடவுள்.
அவருக்காக ஆறுபடை வீடுகள் இங்கே உள்ளன.’ என்கிற நம்பிக்கை வேரூன்றியுள்ளது. சங்கப்
புலவர் நக்கீரரின் ’திருமுருகாற்றுப்படை’ நூலின் செய்திப்படி தமிழகத்தின்
மதுரைக்கு அருகிலுள்ள ‘அழகர் மலை’ மேலே அமைந்துள்ள ‘பழமுதிர்ச் சோலை’ தலத்தில்தான்
முருகன் தோன்றியதாக ஐதீகம். (அதேவேளையில் முருகன் தோன்றியது வடதமிழகத்தில் உள்ள
‘பழமுதிர்ச் சோலை’யில்தான் என்று முருக பக்தர்களிடையே விவாதங்கள் நடந்து
வருகின்றன!) அழகர்மலையில் உள்ள பழமுதிர்ச்சோலைப் பகுதியில் ‘சரவணப்பொய்கை’ எனும்
ஏரியில் பிறந்ததாகச் சொல்கின்றனர். இந்த கட்டம்வரை ஏதும் பிரச்சினையில்லை.
இதிகாசப்படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு நெருப்புப்பொறிகள் தோன்றி, அந்த ஏரியில் இருக்கும் ஆறு தாமரை மலர்கள் மீது விழுகின்றன.
அவை ஆறு குழந்தைகளாக பிறக்கின்றன. அவ்வாறு பிறந்த அந்த ஆறு குழந்தைகளைப் பராமரிக்க
ஆறு கார்த்திகைப்பெண்களை சிவனின் மனைவி பார்வதி நியமிக்கிறார். அதன்பின் அந்தப்
பெண்கள் வளர்க்கும் ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக பார்வதித்தாயார் இணைக்கிறார்.
ஸ்டெம்செல்
தொழில்நுட்பம்:
ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறப்பு சாத்தியமா? யாராவது நம்புவார்களா? ஆனால், இன்று அம்மா இல்லாமலே குழந்தைகள்
பிறக்கின்றன. எங்கோ ஒரு விஷயத்தை எடுத்து, வேறெங்கேயோ பதியம்போட்டு ஒரு குழந்தை பிறக்கிறது.
அப்படிப்பட்ட பெண்ணிற்கு surrogacy
mother என்று
பெயர். ஆனால், இதே விஷயத்தை ஐம்பது
ஆண்டுகளுக்கும் முன்னர் யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால், ஒரு குழந்தை பிறப்பதற்கு பெண்ணே தேவைப்படாமல் போகலாம்! ஆக, முருகக்கடவுளின் பிறப்பு பற்றிய விஷயமானது தொன்மையான
காலத்திலேயே இன்றைய அறிவியல் உலகிற்கு இணையாக உள்ளது!. அறிவியலில் ‘ஸ்டெம் செல்’ என்கிற கூற்று இன்று
நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது ஒரு செல்லிலிருந்து செக்ஸுவலாக இல்லாமல் இன்னொரு செல்லை
உருவாக்குவது. இதுவே ஸ்டெம் செல். உடலின் சக்தி அதில் உள்ளது. இந்த செல்லானது
மகப்பேறு ஆனபின் குழந்தையின் தொப்புள் கொடியில் செழுமையான அளவில் கிடைக்கும். நம்
முன்னோர்கள் அதை எடுத்து அரைத்து தாயத்திற்குள் வைத்து அந்தக்குழந்தையின்
கழுத்திலேயே கட்டிவிடுவார்கள். ஒருவேளை அந்தக்குழந்தைக்கோ அல்லது அக்குழந்தையின்
மரபணு சார்ந்த குடும்பத்திற்கோ உடல் நோய் ஏதாவது வந்துவிட்டால், அந்த தாயத்திற்குள் இருக்கும் அந்த செல் துகளை அரைத்து
மருந்தாக உட்கொள்வர். அதனால், நோயிலிருந்து விடுபடுவர்.
இப்படிப்பட்ட சிகிச்சை முறையில் ஒருவர் உடல்நலம் தேறவில்லை எனில், ’அவர் இனி பிழைக்க மாட்டார்’ என்பதே அக்காலத்தைய
மருத்துவத்துறையின் கணக்கு! இன்று அறிவியல்படி அதே ஸ்டெம் செல்லைத்தான் நாம்
பயன்படுத்தி வருகிறோம். ஏனென்றால் ஸ்டெம் செல்லை எப்போது வேண்டுமென்றாலும் வேறு
செல்லின் சேர்க்கையின்றி தனியாக நாம் வளர்க்க முடியும். இப்படி நாம் வளர்ப்பதன்
மூலம் மனித ஈரலையோ, நுரையீரலையோ உருவாக்க முடியும்.
இந்தத் தொழில்நுட்பமானது தற்போதைய நிலையில் ஆரம்பகட்டத்தில் உள்ளது. வெற்றிகரமாக
சாத்தியப்பட இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். இந்த ஸ்டெம் செல் தொழில்நுட்பமே முருக
பெருமானின் பிறப்பை ஒத்திருக்கும். தாய் இல்லாமலே முருக பெருமான்
பிரந்திருக்கிறார். சிவபெருமானின் நெற்றியிலிருந்து ஏன் ஆறு பொறிகள் தோன்றின? சாதரண நேரத்தில் ஏன் அவ்வாறு போகவில்லை? என கேள்வி வரும்போது அதற்கு Mythology நிறைய பதில்களைக் கொடுத்திருக்கின்றன. சிவபெருமான் ஏன்
தியானத்தில் இருந்தார்? அவர் காமனை எரிப்பதற்காகத்தான் தன்
கண்களைத் திறந்தார். அப்படியானால், ஏன் காமனை ஏன் எரிக்க வேண்டும்? காமன் ஏன் சிவபெருமானின் நேருக்கு நேர் நின்று
கொண்டிருந்தார்? அந்நேரத்தில் பார்வதிதேவி என்ன
செய்துகொண்டிருந்தார்? போன்ற எல்லாவற்றிற்கும்
விளக்கங்கள் அவற்றில் உள்ளன. இந்த Mythology
யின்படி நடந்தவையெல்லாம் சரியென்றே
வைத்துக்கொண்டாலும், இது பூமிக்கு வரும்போது எங்கு
வந்தது? இதுதான் பிரச்சினைக்குரிய விஷயம்.
அதாவது முருகன் பிறந்தது இமயமலையிலா?
அல்லது பழமுதிர்ச்சோலையிலா? இப்படித்தான் போகிறது.
இமயமலையும்
சிவனும்:
சிவபெருமானும் இமயமலைவாசிதான். ஆனால், இதுசம்பந்தமாக உத்தரகாண்ட் மாநிலமோ ஹிமாச்சல பிரதேசமோ, அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம் போன்ற மாநிலங்கள் இன்னும் சண்டை போடவில்லை. அவை
எல்லாமே இமயமலைப் பிரதேசம்தானே!? ஏன் அப்படி? அவர்களுக்குள் ஒரு பொதுவான ஏற்பு இருக்கிறது. இமயமலை
முழுமையுமே சிவனுக்குச் சொந்தம். அதேபோல பார்வதி. ’பர்வதம்’ என்றால் மலை. மலையின்
மகள்தான் பார்வதி. ஆகவே, சிவனுக்கும் பார்வதிக்கும்
முழுமையாகச் சொந்தமானது என்று கருதப்படுகிறது. இந்த எண்ண ஓட்டம் தமிழர்களுக்கு மட்டும்
ஏன் இருக்கவில்லை? ’பழமுதிர்ச்சோலையில்தான் முருகன்
பிறந்தார்’ என்று கூறுகிறார்கள்? ஏன் அவ்வாறு கூறுகிறார்கள்? ஏனென்றால், பழமுதிர்ச்சோலை என்பது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்படுகிறது. நக்கீரர் தன்
திருமுருகாற்றுப்படையில் அதுபற்றி கூறியிருக்கிறார். பழமுதிர்ச் சோலையில் முருகன்
ஏன் பிறக்க வேண்டும்? இங்கே நாம் சிங்கமுகன், தாரகாசுரன் போன்ற அசுரர்களைக் குறிப்பிடுகின்றோம்? இவர்களை அழிப்பதற்காகவே முருகன் பிறப்பெடுக்கிறார். இந்துமத
சித்தாந்தத்தின்படி விஷ்ணுதான் (திருமால்) அவதாரமெடுப்பார். சிவன் திருவிளையாடல்
செய்வதுடன் சரி. குழந்தையாகப்பிறந்து,
வளர்ந்து, பிறப்பின் கடமையைச் செய்துவிட்டு தன் அவதாரத்தை
முடித்துக்கொள்பவர் விஷ்ணு. இன்னொரு தெய்வம் அம்பாள் (அம்மன்). சிவன் எடுக்க
வேண்டிய அவதாரத்தை முருகனை எடுக்க வைத்தார்? இதுபோன்ற குறுக்குக் கேள்விகள் வரும்! ஆக, ஐதீகப்படி அசுரனை வதம் செய்ய, ’சிக்கல்’ திருத்தலத்தில் பார்வதிதேவி தன் மகன் முருகனுக்கு
வேல் ஒன்றை வழங்குகிறார். இன்றும் வழங்கும் நாளில் சிக்கல் சிங்காரவேலனுக்கு
வியர்வை பெருக்கெடுக்கிறது. தன் தாய் வழங்கிய வேலினால் திருசெந்தூரில் வைத்து
சூரனை வதம் செய்து வெல்கிறார். தான் வென்றதன் பயனை தேவர்களின் தலைவரான
இந்திரனுக்கு (தேவேந்திரன்) அளிக்கிறார். அக்காலத்தைய மரபுப்படி வெற்றியை
ஈட்டித்தந்தவருக்கு பெண் கொடுக்கும் வழக்கமுண்டு. அதன்படி இந்திரனின் மகளான
தேவயானியை (தெய்வயானை) முருகனுக்கு திருப்பரங்குன்றத்தில் வைத்து மணம் முடித்து
வைக்கின்றனர். இதன்பின் முருகன் திருத்தணியில் வேட்டுவக்குலப் பெண்ணான வள்ளியை
திருமணம் செய்து கொள்கிறார். (தேவயானியும், வள்ளியில் அவர்களின் முற்பிறப்பில் சகோதரிகளாவர். அப்போது
முருகனை மணம்முடிக்க அவர்கள் தவம் இருந்தனர். ஆனால், அப்போது முருகன் பிரம்மச்சாரி அவதாரமாக இருந்ததனால் அந்த
சகோதரிகளை மணம் செய்து கொள்ளவில்லை. இந்த
சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா,
ஜெயலலிதா நடித்த ‘கந்தன் கருணை’
திரைப்படம் வெளிவந்து வெற்றிநடை போட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தில் மானிட
வாழ்க்கையை போன்ற உணர்வுகளைப்பிரதிபலித்து காட்சிகளை நன்கு விவரித்து அமைத்திருப்பார்கள்.
வட
இந்திய முருகன்:
வட இந்தியாவில் இருக்கும்
இமயமலையில் தாய்தந்தையர் தனக்கு ஞானப்பழம் தனக்கு தரவில்லையே என ஆத்திரப்பட்டு, தன் குடும்பத்துடன் சண்டை போட்டுவிட்டு, தமிழகத்தின் பழனிமலைக்கு முருகன் ஆண்டிக்கோலத்தில்
வந்துவிடுகிறார். இது நம் வழக்கத்தில் பேசப்படுகிறது. நமது முருகனின் ’அறுபடை
வீடு’ சம்பந்தமான எந்தக்கதையோ, கருத்தியலோ வட இந்தியாவுடன்
தொடர்பு கிடையாது. வட இந்தியாவைப் பொறுத்தவரையில் காளிதாசர் இயற்றிய ‘குமார
சம்பவம்’ நூலில் சிவனின் மகனாக கார்த்திகேயன் (முருகன்) சித்தரிக்கப்படுகிறார்.
அதில் முருகன் தேவயானியை மணம் முடிப்பது மட்டும் இருக்கும். இன்றைய இளம் தலைமுறை
முருகனைப் பற்றி பின்வரும் கதையைத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் என்று
எண்ணுகிறேன்.
முருகனின்
தனிநாடு:
‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்பது நம்
இந்துமதத்தின் நம்பிக்கை. ஒருமுறை நாரதர்
ஒரு ஞானப்பழத்துடன் சிவ-பார்வதி தம்பதியைச் சந்தித்து, அவர்களிடம் வழங்குகிறார். ஆனால், ஒரே ஒரு நிபந்தனைதான். அதாவது அந்த ஞானப்பழத்தை வெட்டி பங்கிடாமல்
ஒருவரே சாப்பிட வேண்டும். அதுவே நற்பயன் தரும் என்று நாரதர் கூறுகிறார்.
அதைப்பெற்றுக்கொண்ட சிவனும் பார்வதியும் ‘நாம்தான் பெரியவர்களாயிற்றே.. நாம்
சாப்பிட்டு என்னவாகிடப் போகிறது?’ என்று எண்ணி, தங்கள் பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகன் ஆகிய இருவரில்
யாராவது ஒருவருக்குத் தந்துவிடலாம். அதிலும் ஒரு சிக்கல் வருகிறது. ’சீனியாரிட்டி
அடிப்படையில் நான் முருகனுக்கு அண்ணன். ஆகவே அந்தப்பழம் எனக்குத்தான்’ என விநாயகர்
வாதிடுகிறார். ஆனால், இளையவரான முருகனோ ’நான்
கடைக்குட்டி. ஆகவே, நானே செல்லப்பிள்ளை. அதனால், எனக்குத்தான் அந்தப் பழம் தரப்பட வேண்டும்’ என்கிறார்.
இருவரின் பிடிவாதத்தால் இருவருக்குமிடையே போட்டி நடத்தி, அப்போட்டியில் வெற்றி பெற்பவருக்கு பழத்தை பரிசாகத் தந்து
விடலாம் என பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். இங்கிருந்து புறப்பட்டுச் சென்று
இவ்வுலகை சுற்றிவிட்டு மீண்டும் யார் முதலில் வருகிறாரோ ’அவருக்கே ஞானப்பழம்’ என
முடிவு செய்கிறார்கள். இதைக் கேட்டவுடன் அந்த நொடியிலேயே வெறெந்த எதிர்கேள்வியும்
கேட்காமல், சட்டென தன் மயில் வாகனத்தில்
புறப்பட்டுச் சென்று விடுகிறார். அண்ணன் விநாயகரோ, ‘உலகம் என்றால் என்ன?’ என தன் சந்தேகத்தைக் கேட்கிறார். அவருக்கு பதில் சொல்ல
வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, ’ஒரு குழந்தைக்கு அம்மாவும்
அப்பாவுமே உலகம். இதுவே உண்மை’ என்று ஒரு தத்துவத்தை வளரும் தலைமுறைக்கு
பொருளாதாயமாக கூறினார்கள். ஆகவே, விநாயகர் தன் தாய் தந்தையரை
மூன்றுமுறை சுற்றிவந்து போட்டியில் வென்று, ஞானப்பழத்தை பெற்றுக்கொள்கிறார். அந்த கணத்திலேயே உலகைச்
சுற்றிவரச் சென்ற முருகன் வந்து சேருகிறார். தன் அண்ணன் ஞானப்பழத்தைப்
பெற்றுக்கொண்ட்து உட்பட நடந்தவை அனைத்தையும் அறிந்துகொள்கிறார். ஆகவே ஆவேசமடைந்து, ‘இனி எனக்கென்று ஒரு மலை.. எனக்கென்று மக்கள்.. எனக்கென்று
ஒரு நாடு.. எனக்கென்று ஒரு கொடி.. என்னை அங்கு வந்து சந்தியுங்கள்’ என்று கூறிச்
சென்றுவிடுகிறார். இந்த mythology
சம்பவத்தை நாம் தான்
கூறியிருக்கிறோம். ஆனால், பழனிமலை குறித்து சொல்லவேயில்லை!
(தொடரும்)
----------------------------------------------------------------
No comments:
Post a Comment