சொந்த பந்தங்களை அனுசரித்து போங்க!
பெரிய கஷ்டங்களை தவிர்க்கலாம்?
ஒரு மின்பொறியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அது மிகவும் முற்றிய நிலையில், அவர் சார்ந்த ஒட்டுமொத்தக் குடும்பமே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்கிற செய்தியைக் காண நேர்ந்தது. தனது வாக்குமூலத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இது மனதை மிகவும் வலிக்கச்செய்தது. மரணம் என்பது நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு ஜனனமுமே மரணத்தில்தான் முடியும். இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே. அந்த மின்பொறியாளரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த்த் தம்பதிக்கு ஒரே ஒரு குழந்தை. ஒரு நிலையில் தன் மனைவியை இனியும் காப்பாற்ற முடியாது என்பதை அவர் உணர்கிறார். புற்றுநோய் என்பது உணவு, தோய்மையற்ற நீர், காற்று, சுற்றுச்சூழல், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் கெமிக்கல் கலவை போன்ற பலவகைக் காரணிகளால் உண்டாகிறது. அந்த நோய் பாதிப்பிற்கு ஆளான குடும்பத்தில், குறிப்பாக நோய் பாதிப்பு ஏற்பட்டவருக்கு, ‘இனிமேல் நாம் என்ன வாழ்ந்துவிடப்போகிறோம்?’ என்கிற எண்ணம் மேலோங்கி விடுகிறது. ஆத்மார்த்தமாக வாழும் தம்பதியருக்கிடையே ’நீ இல்லாவிட்டால் நான் இனி எப்படி வாழ்வேன்?’ என நிலவும் உணர்வுத் தீவிரம், நோயின் தாக்கத்தால் தன் மனைவி அனுபவிக்கும் வேதனையைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாமை, ’என்னால் இவர்களும் அவஸ்தைப்படுகிறார்களே’ என நோயாளி எண்ணுவது, ’மேலும் ’இந்த நோயிலிருந்து விடுபட முடியாத நிலையில் எவ்வாறு காலம் தள்ளப்போகிறோம்?’ என்கிற விரக்தி எல்லாம் சேர்ந்து வாட்டுகின்றன. மரணத்திற்கும் நோய்களுக்கும் இடையிலான நிறைய விஷயங்களைத் தவிர்ப்பதற்காகதான் மனித நாகரீகம் பல விஷயங்களைச் செய்திருக்கிறது. தவிர்க்க இயலாத நிலையில் இதுபோன்ற துர்மரணங்கள் நிகழ்ந்துவிட்டால் அதனால் ஏற்படும் வேதனை, சோகம் ஆகியவற்றிலிருந்து மீள, 16 நாட்களாவது ஒரு குழுவாக சேர்ந்து, ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து, மெல்ல மெல்ல மீண்டுவரும் வழிமுறையை நம் கலாச்சாரம் மேற்கொள்கிறது. நான் கூறிய அந்த மின்பொறியாளர் விஷயத்தில் அந்த தம்பதிக்கு ஒரே ஒரு பெண்குழந்தை. தான் ஒருவரே இனி குழந்தையை வளர்த்து ஆளாக்கப்போகிறோம்? என்கிற விரக்தி நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு செய்திகள் இதுபோன்ற குழு மரணங்களைக் கண்டு வருகிறோம். உதாரணமாக தங்களுடைய பெண் தங்களை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், அதைத்தாங்கிக்கொள்ள முடியாமல், அப்பெண்ணின் பெற்றோர் ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளல், தாங்கமுடியாத அளவிற்கு தொழிலில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தால், இன் வாழமுடியாது என குடும்பத்தோடு தற்கொலை போன்றவை நடக்கின்றன. ஆனால், சுமார் 10 ஆண்டுகளுக்கும் முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிதினும் அரிதாகத்தான் இருந்தன. இதற்கு என்ன காரணம்? நம் சமுதாயத்தில் வேதனைகளை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து ஆறுதல்தேடவோ, ஏதேனும் ஒரு வகையில் ஆதரவளிக்கவோ ஆளில்லாமல் போய்விட்டது. சுமார் இருநூறுபேர்கொண்ட கூட்டுக்குடும்பங்கள், பங்காளிகள், மைத்துனர்கள் மட்டுமின்றி பொதுவாகவும் அவர்களுக்கிடையே ’வலசல்’ என்கிற தனித்தனி கூட்டம் என பிணைப்போடு வாழ்ந்த நம் கிராமங்களில் கூட காலம் மாறிப்போய் சிறு குடும்பமாக தனித்தனியே வாழுகின்ற நிலை வந்துவிட்டது. இது மட்டுமின்றி சிறு குடும்பமாக வாழ்பவர்களும்கூட தனிதனியே என்றாகி விட்டனர். இதனால் தங்கள் வேதனையைப் பகிர்ந்து கொள்ள, சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள வாய்ப்புகள் அருகி விட்டன. இதனால் தொடர்புகள் இல்லாமல் போவதால் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகவே நான் கருதுகிறேன். இனி மீண்டும் கூட்டுக்குடும்பக்கலாச்சாரம் வாழ்வியல் முறை சாத்தியமாகுமா? என்றால், அது சாத்தியமாவது சற்று கடினமான விஷயம்தான். மேற்கத்தியக் கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டால் தோராயமாக 1800 ஆண்டுகளிலில்தான் நியூக்ளியர் குடும்பங்கள் உருவாகத்தொடங்கின. அதுவரையிலும், அவர்களும் நம் முன்னோர்களின் வாழ்வியல் போல் கூட்டம், கூட்டமாகத்தான் வாழ்ந்து வந்தனர். அங்கே விவசாயம் சார்ந்த வாழ்க்கைமுறை இருந்தபோது அது சாத்தியமாக இருந்தது. தொழிற்புரட்சி ஏற்பட்டு, தொழிற்சாலைகள் பெருகத்தொடங்கிய நிலையில் தனித்தனி நபர்களுக்கு தேவை அதிகமாகின. மேலும், அதில் வருமானமும் கணிசமாக வரத்தொடங்கியதால் தங்கள் கூட்டத்திலிருந்து விலகி தனியான குடும்பங்களை அமைத்துக்கொள்ளத் தொடங்கினர். இதுவே முதல் மாற்றம். இரண்டாவதாக வந்த மாற்றமானது முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது நிகழ்ந்தது. இதன் பின் நகர்புறங்கள் பெருகி விரிவடையத்தொடங்கின. உணர்வுப்பூர்வமான, தலைசிறந்த சமுதாயக்கட்டமைப்பிற்கு புகழ்பெற்ற ஜப்பான் தேசத்தில்கூட நகர்புறங்களில் இந்த பிரச்சினைகள் இருக்கும். அதன் கிராமப்புறங்களில் அதுபோல் இருக்காது. ஆனால், நம் நகர்புறங்களை ஜப்பான் நகர்புறங்களுடன் ஒப்பிடுகையில் அவை எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் உணர்வுகளையும், சட்ட விதிமுறைகளையும் ஒருசேர முறையாக பின்பற்றுகிறார்கள். ஆனால் நாம் இவையிரண்டையும் முறையாகப் பின்பற்றுவதில்லை.
தனிநபர் உளவியலிலிருந்து சமூக உளவியலானது
சற்று வேறுபட்டதாகும். தனிநபர் உளவியலுக்கான
சிகிச்சையின்போது சம்பந்தப்பட்ட நபர்களை தனியே சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடுகிறார்கள். சமூக உளவியலில் ஒட்டுமொத்த சமுதாயம், குலம், குடும்பங்கள் என அனைத்தும் உள்ளடங்கும். இது சம்பந்தமாக நாம் இன்னும் பிரத்யேகமான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. அந்த மின்பொறியாளரின் மனைவிக்கு மருத்துவரின் சிகிச்சையும், கடவுளின் அருளும் நிறைந்திருந்தால்ம்
அவர்கள் பிஐத்துக்கொள்ள வழியிருந்திருக்கலாம். ஒருவேளை அந்த மனைவி இறந்திருந்தால், அவர்களின் குழந்தையும், கணவரும் வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பர். அந்த குழந்தையும் வளர்ந்து ஆளாகி, திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கையைத்
தொடர்ந்திருக்கும். அந்தக் குழந்தைக்கு தன் தாயைப்பற்றிய
வாழ்க்கைச் சுவடு தகவலாகக் கிடைத்திருக்கும். அந்தக் கணவர் ஒரு அரசாங்கப் பணி செய்யும்
ஒரு மின்பொறியாளர். அவருக்கு பாதுகாப்பான
வாழ்க்கைக்கு ஆதாரம் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பான நிலை இருந்தும் அவர்களின் உணர்வு சார்ந்த
நிலையானது
’இந்த உலகமே நமக்கு
வேண்டாம்’
எண்ணவைக்கும் நிலைக்கு அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள
வைத்திருக்கிறது. அவர்களுடைய உறவுகள் சார்ந்த ஆத்மார்த்தமான
உணர்வின் உறுதுணை தேவையாயிருந்திருக்கலாம். நெற்பயிர் உள்ளிட்ட எவ்விதமான விவசாயமாக
இருப்பினும்,
கிணறு, ஏரி, ஆறு ஆகியவற்றின் மூலம் நீரைப்பாய்ச்சி
செய்யலாம். பயிர்கள் நன்கு செழித்து வளரத்தான் செய்யும். ஆனாலும், லேசான மழைப்பொழிவு கிடைத்துவிட்டால்
போதும். அதன் சிறப்பே அலாதியானது. காரணம், பிற முறைகளினால் பாய்ச்சப்படும் நீரானது
வேருக்கு மட்டும் பாய்கிறது. ஆனால், மழை மேலிருந்து பொழிவதால் பயிர் முழுமைக்கும், அதன் 360 டிகிரியும் குளிர்ச்சி அடைகிறது. அதனால் பயிர்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதுபோலத்தான் சமூகத்தின் அன்பும் அரவணைப்பும்! அதாவது, விமானப்பணிப்பெண்கள் விமானத்தில் பயணிப்போரை
அதீத மதிப்பு கொடுத்து நன்கு உபசரிப்பர். அவர்களின் உபசரிப்பெல்லாம் பம்புசெட் மூலம் பாய்ச்சப்படும் நீர்போல! உறவுகள், நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெறும் அன்பும்
அரவணைப்பும்,
பாதுகாப்பு உணர்வும் மழை நீர்போல! ஆக இந்த இரண்டாம் வகை அரவணைப்பே சமூகத்தை
என்றென்றும் ஆரோக்கியமாக, உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடிய விஷயமாகும். இன்றைய காலகட்டத்தில் சமூகத்திற்குத்தேவையான ’மழை’ பொய்த்துப்போய்விட்டது. காலத்தின் கட்டாயத்தால் நாம் வெறும்
பம்புசெட் மூலமாக மட்டுமே விளைவித்து வருகிறோம். மழைப்பொழிவைத் தரவேண்டியது அரசின் வேலை. ஆனால், தனிநபர்கள் செய்யக்கூடியது பம்புசெட்
மூலம் நீர் பாய்ச்சுவதுபோல். தமிழிலும் ஆங்கிலத்திலும் முறையே சுயநலம், Slefish என்கிற வார்த்தையானது பழங்காலந்தொட்டே
புழக்கத்திலுள்ளது. ஒருகாலத்தில் ஒரு
வீட்டிற்கு
10, 15 குழந்தைகள்
இருந்தனர்.
ஆனாலும், தங்கள் குழந்தைகள் மீது மட்டும் அன்பு
செலுத்துவதோடு நின்றுவிடாமல், அதை இன்னும் வெளியுலகிலும் பரந்துபட்டு இருக்கவேண்டும் என்பதை
நம் முன்னோர்கள் வலியுறுத்தினர். இதை எளிமையாகப் புரியவைக்கவே ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானாக வளரும்’ என்றெல்லாம் குறிப்பிட்டனர். ஆகா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும்
முன்னரிலிருந்தே பொதுநலத்துடன் வாழ்ந்தால்தான் உடலுக்கு நல்லது, மனதிற்கு நல்லது, ஒட்டுமொத்த
சமுதாயத்திற்கே நல்லது என்கிற எண்ணம் இம்மண்ணில் வேரூன்றியிருக்கிறது. அந்த காலத்தை
இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட்டுப்பாருங்கள். இருப்பதோ ஒரே ஒரு குழந்தை. தனது
அன்பைக்கொட்டுவதற்கு அதைத்தவிர வேறொருவரில்லை. தாய்-தந்தை இருவருமே அந்தக்
குழந்தைக்கு அதிக செல்லம் தருகிறார்கள். இதனாலேயே அந்தக் குழந்தை சரிவர
ஆளாவதில்லை. அடுத்ததாக எல்லா குழந்தைகளையுமே போட்டியாளர்களாக சமூகத்தில்
இறக்கிவிடுகிறோம். இப்படி ஒவ்வொருவரும் சுயநலமாக வாழ முற்படுவதால், ’அவர்கள் சுயநலமாகத்தான்
வாழ்கிறார்கள். நாமும் அப்படியே வாழுவோம்’ என மொத்த சமுதாயமுமே முடிவு
செய்துவிடுகிறது. 1980 களில் ஒரு குழந்தை சாலையில் தடுக்கி விழுந்துவிட்டால், எழுப்பிவிட, முதலுதவி செய்ய என, சட்டென நான்கைந்து பேர்
சூழ்ந்துவிடுவர். எந்த வீட்டிற்குப் போனாலும் சாப்பாடு பரிமாறுவர். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாகி விட்டது.
சமீபத்தில் பெங்களூருவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது.
சாலையில்போகும்போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துவிடுகிறார்.
உடன் வந்த அவருடைய மனைவி செய்வதறியாது பதற்றத்தில் தவிக்கிறார். ஆனால், இதைப்பற்றி எந்த அக்கறையுமின்றி
அந்த சாலை எப்பொழுதும் போல் அதே பரபரப்பில் இயங்கிக்கொண்டே இருக்கிறது! ஒரே குழந்தை
இருக்கின்ற குடும்பத்தில் அன்பையும், செல்லத்தையும் திகட்டத் திகட்ட தரும் பட்சத்தில் அதில் ஒரு பகுதிகூட
திரும்பிக் கிடைக்கவில்லை என்றால் எப்படிப்பட்ட வேதனை இருக்கும்? என்பதை என்பதை எண்ணிப் பாருங்கள்.
அந்த மின்பொறியாளர் குடும்பத்தில் அத்தகைய துயரமான முடிவை கணவர் எடுத்திருக்கிறார். ஆனாலும், இத்தகைய முடிவிற்கு ஆண்;பெண் என்கிற பேதமிருப்பதில்லை.
இதில் மனவலிமை மிகுந்தவர்; மனவலிமை குறைந்தவர் என்கிற கோணம்தான் அவசியம். இதை முன்னூட்டியே
அறிந்துகொள்ளமுடியுமா? என்றால்
’இல்லை’ என்றே கூறமுடியும். அந்தந்த இக்கட்டான தருணங்களில்தான் இதனை
அறிந்துகொள்ளமுடியும். இயற்கையாக பெண்களுக்கு மனவலிமை அதிகம் என்பது காலம் காலமாக
இருந்து வரும் நம்பிக்கை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அது ஒட்டுமொத்தமாக
பெண்மையின் மரபுவழி சார்ந்தது. உடலளவில் ஆண்களுக்கு 10000 ஆண்டுகளாகவே சிரமம்
அதிகம். ஆக, ஆண்கள் உடலளவில் அதிக பலம்
வாய்ந்தவர்களாகவும், பெண்கள்
மனவலிமையில் அதிகமானவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு தந்தைக்கும் அவருடைய
குழந்தைக்குமான பிணப்பானது மெல்லிய பெளதீகமும், கலாச்சாரமும் கலந்ததாகும். ஆனால்,
அதே பிணைப்பானது ஒரு தாய்க்கும் அவர் குழந்தைக்கும் பெளதீகமும், மரபணு சார்ந்த ஒன்றாகும். ஒரு சில நேரங்களில் இதை மாற்ற நினைப்பது மனித
இயல்பு. இவ்வகையில் ஒரு குடும்பத்தில் இத்தகைய அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்கான
சக்தி சமுதாயத்திற்குத்தான் உள்ளது. எமோஷனல் ப்ளஸ் என்பதை சமூகம் தர வேண்டும். இதுபோன்ற
நிலைவரும்போது ஏன் மறுமணம் கைகொடுக்காதா? என்றால்.. அதுவும் பரிசீலனைக்குட்பட்டதே. ஒரு காலத்தில் குழந்தை பெற்ற
பெண்ணொருவர் திடீரென இறந்துவிட்டால் அவளது தங்கையையே அவள் அக்காளின் கணவருக்கு
மறுதாரமாக திருமணம் செய்து வைப்பர். அதன் மிக முக்கிய நோக்கமானது அந்த குழந்தையைக்
கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்குவதற்குத்தான். அத்தகைய குடும்பங்களில் பல
பெண்கள் அசல் தாய்போன்றே வாழத்தொடங்கி விடுவர். ஒரு சிலர் மட்டும் இதற்கு
விதிவிலக்கு. ’சுவாமி ஐயப்பன்’ வரலாற்றில் கூட சுவீகாரம் எடுத்துக்கொண்டபின்
நல்லவிதமாகத்தான் வளர்த்து வந்தனர். அந்தத்தாய்க்கு ஒரு குழந்தை பிறந்தபின், ஒரு தீய எண்ணத்துடன் ஐயப்பனை
புலிப்பால் கொண்டுவரும்படி ஏவினாள் அந்தத் தாய்! ஒரு ஆண் தன் மனைவிமீது அதீதமான
காதல் கொண்டிருக்கும்போது அவன் மனைவி திடீரென இறந்துவிட்டால் அவனால் உடனடியாக அந்த
மனபாதிப்பில் இருந்து வெளிவர முடியாது. அக்காலத்தில் எமோஷனலை நிரப்புவதற்காக
சிந்தித்து செயல்பட்டனர். ஆனால், இன்று காலம் வெகுவாக மாறிவிட்டது. அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை
என்றாகிவிட்டது. ஆக, இது
சமுதாயத்தின் தோல்வியாகும். தனிப்பட்ட நபராக என்னசெய்யமுடியுமென்றால், இக்கட்டான தருணங்களில் நல்ல நெருங்கிய
நட்பு வட்டங்களில்,
ஆத்மார்த்தமான உறவுகளிடம் ’எனக்கு இருக்கும் பிரச்சினைகளால் என் சிந்தனை விபரீதமாக
யோசிக்கிறது. என்ன செய்யலாம்?’ என ஆலோசிக்க வேண்டும். இப்படி ஆலோசிக்கத்தொடங்கினாலே இந்த பிரச்சினை
தீர்ந்து விடும். இப்போதெல்லாம் இப்படி ஆலோசிக்கவும், யோசனை சொல்லவும், ஆறுதலைப் பகிரவும் நபர்கள்
இல்லாமற்போனது சோகமான விஷயமாகும். ஆகவே, நம்மைச் சுற்றி இப்படிப்பட்ட நபர்கள் தங்கள் குழப்பங்களுக்கு வடிகால்
தேடுகிறார்கள் என்றால், அப்படிப்பட்டவர்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தினாலே போதும். இது போன்ற
துயரச்சம்பவங்களைத் தடுக்க நம்மால் பங்களிப்பு செய்யமுடியும்.
---------------------------------------------------
No comments:
Post a Comment