நாய்கள்' மனிதர்களோடு இணைந்த
வரலாறு தெரியுமா?
’நாய்கள் வளர்க்க எழுத்துத் தேர்வு’- இப்படி ஒரு செய்தியைக் கண்டேன். பொதுவாக ’நாய்’ என்றாலே அதை பெயர் சொல்லி அழைக்கும் உணர்ச்சிகரமான மக்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் குரைக்கும்போது, கடிக்கும்போது பிரச்சினைகள் வருவதாக பொது இடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் தீவிர விவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. நாய்கள் குறித்து பலருக்கு செல்லம் கொஞ்சும் மனோபாவமும், சிலருக்கு அச்சமும் இருக்கிறது. இதனுடைய தொடர்ச்சியாக இப்பொழுது ’ஜெர்மனியில் நாய் வளர்ப்பது எப்படி?’ குறித்து எழுத்துத் தேர்வு வைக்கப்படும் செய்தி அறியப்படுகிறது. மேற்கூறிய வாதத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தேர்வு என்றாலே நமக்கு சற்று பயம் இருப்பது சகஜம்தான். அதிலும் இந்தத்தேர்விலும் பிராக்டிகல் மற்றும் தியரி ஆகிய இரண்டு தேர்வு முறைகளுமே உண்டாம்! சரி.. விஷயத்திற்கு வருவோம். மனித வாழ்வியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் நாய்கள் எப்படி மனிதகுல வரலாற்றில் இதுநாள்வரை பயணித்து வந்திருக்கிறது? என்று நாம் பின்னோக்கிப் பார்த்தால், மனிதர்கள் வேட்டையாடுதல் மற்றும் பழங்கள் ஆகியவற்றிற்காக இந்த நாயினம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மண்ணுக்கு மண் நாய்களின் பல்வேறு இனங்கள்தான் மாறுபட்டிருக்கின்றன. உலகளாவிய அளவில் இதேநிலைதான் நிலவியிருக்கிறது. ஓநாய், நரி போன்றவையும் வேட்டையாடுவதில் கில்லாடிகள்தான் என்றாலும், நாய்கள் எப்படி இவற்றிலிருந்து வேறுபடுகின்றன? ஓநாய், நரி ஆகியன சில நேரங்களில் மனிதர்களுடன் ஒத்துழைத்த போதிலும், அது நீடித்தவையாக இல்லை. நாய்களின் முக்கிய சிறப்பம்சங்களில் முதலாவதாக ஏதோ ஒன்றை வேட்டையாடுவதற்காக நாய்களை ஏவினால், அந்த வேலையைக் கச்சிதமாக செய்துமுடித்து, அதை ஏவியவரிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அதன்பின் அவர் என்ன தருகிறாரோ அதைப் பெற்றுக்கொள்ளும் குணம் உடையவை. தனக்கான கட்டணத்தை அதுவே முடிவு செய்துகொள்ளாது! இரண்டாவது தன் ’எஜமானர் இவர்தான்’ என எண்ணி ஒருமுறை முடிவு செய்துவிட்டால், அதன் பின் தன்னுடைய இறப்பு வரை ஒருபோதும் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வதில்லை! அவற்றிற்கு ஆயுள் மிகவும் குறுகிய காலம்தான். அவற்றின் மொத்த ஆயுட்காலமே 10 முதல் 15 ஆண்டுகளுக்குள்தான். ஒருவேளை தன் எஜமானர் இறந்துவிட்டால் அதை அறிந்ததுமே சாப்பிடாமல், கொள்ளாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றன. இதனால், பல நேரங்களில் அவை இறந்துவிடுகின்றன. மனவியலில் நாய்களும் நம்மைப்போலவேதான்! அதீதமான உணர்வுடையவை. அவற்றின் மன ஓட்டம் சில நேரங்களில் அவற்றை மட்டுமின்றி அவற்றின் எஜமானரையும் பாதிக்கின்றன. ஐரோப்பா கண்ட்த்திலுள்ள நாடுகளில் பெரும்பாலான வீடுகளில் நிச்சயம் நாய்கள் இருக்கின்றன. அந்த குடும்பத்தின் பெற்றோரை விட்டு அவர்களின் குழந்தைகள் சுமார் 15 வயதில் சுயமாக வாழத் தொடங்கிவிட்டால், தனித்து விடப்படும் அவர்களுக்கு நாய்களே பாசம் தருவது, பாதுகாப்புத் தருவது, தங்களாலான சிறு சிறு உதவிகள் செய்வது போன்றவற்றால் ஒன்றின் விடுகின்றன. அநேகமாக நம் நாட்டிலும் இன்று அத்தகைய வாழ்க்கை முறியை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம். ஆக, நாய்கள் பாரம்பரியமாக நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும்போதும் சரி.. மனித வாழ்க்கை அதி நவீனத்திற்கு மாறி வரும் இப்போதையச் சூழலிலும் சரி… மனித இனத்திற்கு நாய்களின் பங்களிப்பும் தேவையும் அதிகமாகி வருகிறது! மிகவும் குறிப்பாக உணர்வு பகிர்மானத்தில் நாய்கள் அத்தியாவசியமாகிவிட்டன. ஒருபுறம் நாய்களால் தொல்லை என்கிற கோணமும், மறுபுறம் அவற்றிற்காக உணர்வுப்பூர்வமாக வாதிடுவது என விவாதங்கள் தொடர்ந்து நடக்கத்தான் போகின்றன! ஜெர்மனியில் நாய் வளர்ப்பு குறித்து எப்படி எழுத்துத் தேர்வு நடக்கின்றனவோ அதேபோல் நம் நாட்டிலும் கூட வரக்கூடும்! இதில் நாம் என்ன புரிந்து கொள்கிறோமென்றால், நிச்சயமாக நாய் என்பது நமக்கு உணர்வுப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மற்றவர்களின் தனியுரிமைக்குள் ஆதிக்கம் செலுத்தாத, பாதிப்பு தராதவகையில் வகையில் இருக்க வேண்டும். ஒரு நாய்க்கு தன்னுடைய எஜமானரைப் பிடிக்கும். அந்த எஜமானர் யாரையெல்லாம், எவற்றையெல்லாம் பின் தொடர்கிறாரோ அவையனைத்தும் அனைத்துமே அதற்கும் பிடித்தமானவையாகும். ஆனால், வெளிநபர் எவரையும் அது தன்னுடைய எஜமானராக ஏற்காது. இவையனைத்தையும் நாமும் பின்பற்றி, மற்றவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் நம் உணர்வுகளையும் பேணுவோம்.
-----------------------------------------------------------
No comments:
Post a Comment