Monday, August 24, 2026

75.The Ultimate Battle Parents Vs Kids Friends

 

The Ultimate Battle Parents Vs Kids Friends


            குழந்தைகளுக்கு 7 அல்லது 8 வயது வருவது முதல் அவர்களில் 20 அல்லது 22 வயது வரையிலும் அவர்களின் முக்கியமான பிரச்சினை ‘ஃப்ரெண்ட்ஷிப் (நட்பு)’ என்பதுதான். ஆன் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ எவராயினும் அவர்களின் 7 வயது பருவத்தில் நட்பை நம்பி வேறொருவர் வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். தங்கள் பெற்றோர்களைத் தாண்டி வேறெவரையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அதன்பின் பள்ளிக்குச் செல்லும்போது மெல்ல மெல்ல அவர்களின் நட்பு வட்டம் உருவாகும். இப்படி உருவாகும் நேரத்தில் அனைத்து பெற்றோர்களுமே உஷாராக ஆரம்பிக்கிறார்கள். தங்கள் குழந்தை யாரிடமெல்லாம் பேசவேண்டும், யாரையெல்லாம் விலக்கிவைக்க வேண்டுமென்று மற்ற குழந்தைகளைப் பற்றி விமர்சிக்கும் வகுப்பெடுக்கத்தொடங்கி விடுகிறார்கள். இங்குதான் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கருத்தியல் மோதல் தொடங்கி விடுகிறது. ஒரு குழந்தைக்கு அதன் நட்பு வட்டத்தில் உள்ள யாரையெல்லாம் பிடிக்கிறதோ அவர்கள் எரையும் அந்தக்குழந்தையின் பெற்றோருக்கு பிடிப்பதில்லை. அதேபோல் அந்த பெற்றோருக்குப் பிடித்தமான குழந்தைகளை அந்தக் குழந்தைக்குப் பிடிப்பதில்லை. சரி.. பெற்றோருக்கு ஏன் இத்தகைய மனோபாவம் இருக்கிறது என்று பார்த்தோமானால், அவர்களின் சுமார் 30 வயதிற்குள் அவர்கள் தங்களின் ’நண்பர்-நண்பி’ என ஆத்மார்த்தமாக நம்பி பழகிய பலராலும் சில கசப்பான அனுபவங்கள், அந்த நட்பு வட்டம் இழைத்த நம்பிக்கை துரோகங்கள் ஆகியவற்றால் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் அவர்களை அந்த நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. இதனால் பெற்றோருக்கு ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது. இதனாலேயே தன் நண்பர்-நண்பிகளால் தாங்கள் பட்ட துன்பங்கள், நம்பிக்கை துரோகங்கள், ஆகியன போல் தங்கள் குழந்தைகளும் அனுபவிக்கக்கூடாது என மனம் பதைக்கிறார்கள். ஒருவேளை தங்கள் குழந்தைகள் ஏதாவது குற்றங்குறைகளுடன் காணப்பட்டால் போதும், உடனே தங்கள் குழந்தைகளின் நட்புவட்டத்தை அலசிப்பார்த்து, பழியை யாராவது ஒரு குழந்தையின் மேல் சுமத்துவார்கள்!

குழந்தைகளின் உலகமோ தனிஉலகம்! அவர்களின் பத்துவயது வாக்கில் அவர்களுடைய சிந்தனை, மனம் ஆகியன புதியதான சூழலில் ஒரு வடிவமெடுக்கத் தொடங்குகிறது. அவர்களின் வயதொத்தக் குழந்தைகளை உள்ளடக்கிய குழு தேவையாகிறது. தாய்ப்பாசம், தந்தை பாசம், சகோதர, சகோதரி பாசம் போன்று தன் வயதொத்த பள்ளிக்குழந்தைகளிடத்தில் நட்பின் அடிப்படையில் இன்னொருவகை பாசத்தைத் தேடத் தொடங்குகின்றனர். அவ்வாறு அமையும்போது அதனை அவர்கள் வெகுவாக நம்புகின்றனர். அப்படி நம்பினால்தான் ஒரு குழுவாக ஊருவாகி, அவர்களால் அதனை அனுபவிக்க முடியும்.  கல்லூரிப் படிப்பு வரையிலும் இந்த பந்தம் தொடரத்தான் செய்யும். மது அருந்தத் தொடங்குதல், புகைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பஞ்சாயத்துகளுக்கு ஆட்பட வைக்கும் பிரச்சினைகளும் அங்கேதான் தொடங்குகின்றன. அவரவர் மனதிற்கு ஏற்றபடிதான் நட்பு வட்டமும் அமையும். இன்னன்னாருடன் ’பேசிப்பழகு’ என பெற்றோர் கூறினாலும், தன் மனதிற்கு ஒவ்வாத ஒருவருடன் பழக பிள்ளைகளின் மனம் ஒப்புக் கொள்வதில்லை. ஆக, இந்த வகையான போராட்டமான, சிக்கலான  நிலையை’ பெற்றோர்- குழந்தைகள்’ ஆகிய இருதரப்பினரும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.  குழந்தைகளுக்கு பிடித்தமான நட்பு வட்டம் அவசியம்தான். அதீல் உள்ள ’மிகவும் தீயவர்’ என கருதப்படும் நிலையில் இருக்கும் நபர்கள் (மது, புகை மற்றும் இன்னபிற பழக்கங்களால் தங்கள் குழந்தையைக் கெடுத்துவிடக்கூடிய பழக்கமுள்ளவர்) யாரென்று தனியே அடையாளப்படுத்த முடிந்தால், அந்த நபரைப்பற்றி நாசூக்காக எச்சரிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உங்கள் குழந்தைகள் தனிமைக்கு ஆளாகக்கூடும். மேலும், பெற்றோரின் 30 வயதில் பெற்ற மோசமான அனுபவங்கள் எல்லாம் குழந்தையின் சிறு வயதிலேயே தாக்கிவிடும். அப்படி ஆளாகும்பட்சத்தில் உணர்வின் உந்துதலால் மோசமான நபர்களை அந்தக் குழந்தைகள் நம்பிவிடக்கூடும். ஆகவே குழந்தைகள் சுயமாக, எச்சரிக்கை உணர்வுடன் வெளியுலகத்தை அணுக வேண்டும். அதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே தயாரிப்பு செய்துகொள்ள வேண்டும். இதேபோல் குழந்தைகளும் தங்களின் பெற்றோர் விடுக்கும் எச்சரிக்கையை, அறிவுரையை காதில் வாங்கிக்கொண்டு சுயமாக யோசிக்க வேண்டும். என்னுடைய பாலகப் பருவத்தின்போது, சொந்த கிராமத்தில் 10-15 ஆண்கள், 10 பெண்கள் என ஒரு பெரிய வட்டமே இருந்தது. அவர்கள் அனைவருமே எனக்கு உறவுக்காரர்கள்தான். அப்படி இருந்தும்கூட ஒரு சில ’குறைகள்’ இருக்கத்தான் செய்தன. அவர்கள் எல்லோரும் இப்போது 45 வயதில் இருப்பவர்கள். அதிலும், அந்த ஊரிலேயே வசித்துக்கொண்டிருப்பவர்களே. இருந்தும் இன்னமும் கூட ’அவன் நல்லவன்; இவன் கெட்டவன்’ என்கிற ரீதியில்தான் தங்களுக்குள் குறை சொல்லிக்கொள்கிறார்கள்!  இப்படியெல்லாம் நாட்டில் நிலைமை இருக்கிறபோது, நகர்புறத்தில் வெறும் நான்காண்டுகள் மட்டுமே பள்ளியில் ஒன்றாகப் படித்து, ஒருவர் நல்லவனாகவும், இன்னொருவர் கெட்டவனாகவும் முடியும்!? அதிலும் திடீரென ஒரு மாணவர் வேறுபள்ளிக்கு அல்லது வேறு ஊருக்குச் செல்ல நேரிடும். அதேபோல் வேறு புதிய மாணவர் இந்தப்பள்ளிக்கு வந்து புதிதாக சேரக்கூடும். ஆனால், பெற்றோரின் பார்வையில் தங்கள் குழந்தையைத் தவிர மற்ற எல்லாக்குழந்தைகளுமே, எப்போதுமே கெட்டவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஒரு குழுவாக, உணர்வோடு பார்க்கும்போது தன் நண்பர்கள் எல்லோருமே நல்லவர்களாகவே தெரிகிறார்கள். ஆகவே, இதை சுமுகமாக கையாள இரூதரப்பினருமே ஆயத்தமாகி, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு ஆரோக்கியமாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.

--------------------------------------------------------    

No comments:

Post a Comment

75.The Ultimate Battle Parents Vs Kids Friends

  The Ultimate Battle Parents Vs Kids Friends             குழந்தைகளுக்கு 7 அல்லது 8 வயது வருவது முதல் அவர்களில் 20 அல்லது 22 வயது வரையில...