Tuesday, August 18, 2026

71.’முருகனைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியது எவை?’ (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -4)

 

முருகனைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியது எவை?’

(முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -4)


 

முருகனும் விவசாயமும்:         

இந்திய மரபுவழி கலாச்சாரத்தின்படி முருகன் என்னும் கடவுள் சிவபெருமானின் மகனாக அறியப்படுகிறார். சிவன் வட இந்தியாவின் இமயமலைவாசியாக அறியப்படுவதால் அவருக்குப் பிறந்ததாக கூறப்படும் முருக கடவுள் தமிழ்த்தலைவன் என்பதில் சிக்கல் வந்துவிடும் என்று சீமான் போன்றோர் கருதுகின்றனர். முன்னாளில் என் பாட்டியிடம் நான் கேட்ட கதை ஒன்றைக் கூறுகிறேன். அந்தக்கதையில் முருகன் ஒரு மாபெரும் வீரன். தமிழ் மண்ணில் முதன்முதலில் விவசாயத்தைத் தொடங்கும்போது தமிழர்களுக்கு 3 சவால்கள் முன் நின்றன. முதலில் யானை, பாம்பு மற்றும் மயில் ஆகியவையே அந்த சவால்கள். யானை விவசாயப்பயிர்களுக்கிடையே புகுந்தால் எல்லாவற்றையும் நாசம் செய்துவிடும். காடுகளுக்குள் யானைகள் மரங்களை, பிற செடி,கொடிகளை ஒடித்துப்போட்டால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை. ஆனால், மனிதன் அரும்பாடுபட்டு உழைத்து விளைவிக்கும் விவசாயப்பயிர்களை நாசம் செய்துவிட்டால் அதன் சேதாரத்தை எப்படித் தாங்குவது? இதுகுறித்து சங்க இலக்கியப்பாடல் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அடுத்ததாக பாம்புகள். ஆசிய கண்டத்திலேயே அதிக அளவிலான பாம்புகள் வாழிடம் எதுவென்றால் அது நம் இந்தியாதான். பாம்பின் பெயராலேயே ஒரு மாநிலம் இருக்கிறது. அதுதான் நாகலாந்து! மகாபாரதக்காவியம் முழுமையுமே நாகங்களை மனிதர்கள் எதிர்கொண்டனர் என்பதுதான்! கர்ண மாவீரனின் நாகாஸ்திரம் கூட அதன் பின்னணியில் தான் அமைந்தது. ’உன் ஏரியாவா? அல்லது என் ஏரியாவா?’ என்கிற போட்டி மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் இடையே நிலவியது. நம் தமிழ்க்கலாச்சாரத்தில் நாகத்தை ‘நல்லபாம்பு’ என்று அழைக்கிறோம். மேலும் அதனை நட்புடன் எதிர்கொள்கிறோம். அடுத்த்தாக மயில். பார்வைக்கு மயில் அழகுதான். ஆனால், அந்த மயில் நம் விவசாய விளைபொருட்களை எந்தளவிற்கு நாசம் செய்யும் என்பது விவசாயிகளுக்குத்தான் தெரியும். உதாரனத்திற்கு மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, நன்கு செழித்து வளர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலத்திற்கு வரும் மயிலானது அந்த மக்காச்சோளத்தின் அடிபாகத்திலிருந்து மெல்ல மெல்ல தன் கால்களால் அழுத்திக்கொண்டே முன்னேறும். அந்த பயிர் வளைந்து கொடுக்கும் தன்மையுடன்  இருக்கும். ஆகையால் பயிரின் உச்சியில் விளைந்திருக்கும் சோளக்கதிர் தரையில் படும்வரை மயில் அழுத்திக்கொண்டே வரும். சோளக்கதிர் தரையைத் தொட்டவுடன்  அப்படி அழுத்திக்கொண்டே சோளத்தின் மேலுள்ள நார்ப்பட்டைகளுக்கு சேதம் செய்யாமலேயே அந்த சோளக்கதிர் மணிகளை மட்டும் ஒன்றுவிடாமல் கொத்தித்தின்றுவிடும். அதன் பின் தன் கால்களை நகர்த்தும். இப்போது அந்தப் பயிரானது பழையபடி மேலே நிமிர்ந்துவிடும். அதாவது மயில் சேதம் விளைவித்ததே யாருக்கும் தெரியாத வகையில் இருக்கும்! ஆக, விவசாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இநத மூன்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகுந்த திமை முருகனுக்கு இருந்தது. யானை வந்துவிட்டால் ஈட்டியை எறிவதைவிட ஒரு வேலை வீசுவது காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும். காரணம் வேலின் மேல்பகுதியின் கனமும் வடிவமைப்பும் அப்படி! அது இலக்கை நோக்கி துல்லியமாகப் பாய்ந்து யானையைச் சாய்த்துவிடும். இத்தகைய நுட்பத்தைக் கையாண்டது முருகனே என நம்பப்படுகிறது. இதனால் யானைகள் வேலைப்பார்த்தவுடன் தான் தப்பித்தால் போதுமென பின்வாங்கின. அதனால் யானைகள் கட்டுக்குள் வந்தன. அடுத்து பாம்பு மற்றும் மயில். இப்படி மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு சவாலாக இருந்தவைகளைக் கட்டுப்படுத்தி தன்னுடனேயே வைத்துக்கொண்டவர் முருகன். இப்படியெல்லாம் நம்பிக்கையோடு காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் முருகன் வடக்கில்தான் பிறந்தார் என்பதை ஒத்துக்கொண்டால் நம் தமிழ் மரபின் மாண்புகள் சரியும்.

பாடல் மூலம் முருகஞானம்:

பின்னணிப்பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன் அவர்கள் பாடிய முருகன் பாடல், ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’.. என்று தொடங்கும். அதைக்கேட்டு எனக்கு சிறுவயதில் கோபம் கலந்த சந்தேகம் எழும். அதாவது, ’முருகனைப்பற்றி பாடும்போது அதென்ன ‘கற்பனை என்றாலும்’ என்று பாடுவது? காலம் செல்லச்செல்ல அறிவுசார் கேள்விகளுக்கு விடைகாண முயன்றபோது, அந்தப்பாடலை எழுதிய கவிஞர் வாலிக்கு உண்மையில் ’முருகன்’ என்பவன் கற்பனைதானோ? எனத் தோன்றியிருக்கலாம். அப்போது தன் குழப்பத்திற்கு விடைகாணூம் முயற்சியில் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்..’ என்று தனக்குத்தானே ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்துவிட்டார் போலும்! என்று முடிவிற்கு வந்தேன். முருகனைப்பற்றிய சமீபத்தைய சர்ச்சைகளுக்கு நடுவில் என்னுடைய நிலைப்பாடும்கூட கவிஞர் வாலியைப்போன்றுதான். அதாவது முருகன் வடக்கில் பிறந்திருந்தாலும், தமிழ்மண்ணில் பிறந்திருந்தாலும் என் கடவுள் முருகன் என்பதில் மாற்றமில்லை. இதுவே அந்தப்பாடல் மூலம் நாம் பெறுகின்ற ஞானம்!  இவ்வளவிற்குப்பிறகும் முருகன் எங்கு பிறந்தார்? என்று கேட்பது ஒரு பிரச்சினையா? என்றால், இதற்கு என்ன சொல்வது? சரி.. ஐயப்ப சுவாமி விஷயத்திற்கு வருவோம். அவர் எங்கு பிறந்தார்? இன்றைய கேரளமாநிலத்தில் உள்ள ’பந்தளம்’ என்று கூறப்படுகிறது. ஐயப்பன் ‘தத்வமஸி’ எனும் மந்திரத்தை அடிப்படையாக்க் கொண்டுள்ளவர். அதன் பொருள் ‘நீயே கடவுள்’ என்பதாகும். ’இந்த ஐயப்பன் நம் இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கிறாரா?’ என்ற கேள்விக்கு ’ஆம்! இடம் பெற்றிருக்கிறார்’ என்பதே பதில்.

ஐயப்பனின் பிறப்பு:

ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் கிடைத்ததும் அதைப்பங்கிடும்போது விஷ்ணு மோகினியாக அவதாரமெடுக்கிறார். அவரை உண்மையில் பெண் தான் என்று நம்பிய தீய நோக்கம் கொண்ட அசுரர்கள் மோகினி வடிவத்தின் அழகில் மயங்கி தங்கள் நிலை மறந்தனர். ஆனால், தேவர்கள் அவ்வாறு மயங்கவில்லை. ஆகவே மோகினியாக வந்த விஷ்ணு தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைப் பங்கிட்டுத்தந்துவிட்டு அங்கிருந்து வெளியேறிச்சென்று தன் சுயத்தோற்றதில் (விஷ்ணு) சிவனை சந்திக்கிறார். நடந்த சம்பவங்களை சிவனிடம் விளக்குகிறார். அப்போது ‘சரி.. அதென்ன? அப்படிப்பட்ட அழகிய மோகினியின் தோற்றம்?’ என்று கேட்க, உடனே விஷ்ணு மீண்டும் அந்த மோகினியின் தோற்றமெடுக்கிறார். அந்த மோகினியின் அழகில் சிவபெருமான் காமத்தால் சொக்கிப்போகிறார். இருவரும் புணரும் நிலை உண்டாகிறது. இந்த இடத்தில்தான் அறிவியலுக்கு முரண்பாடான நிலை. (அதாவது, ஒரு ஆணும், ஆணும் புணர்ந்தால் குழந்தை பிறக்குமா? என்பதே அது!) தன் காமத்தின் உச்சத்தில் சிவனின் விந்து கீழே சிந்தினால், வேறுவகையான பெரும் விபரீதங்கள் நிகழக்கூடும் என்பதால், அதை பார்வதிதேவி தன் கையில் ஏந்துகிறார். அதை குழந்தையாக உருவமெடுக்கச் செய்கின்றார். அந்தக்குழந்தையே ’மணிகண்டன்’. அந்தக்குழந்தை பம்பை நதி ஓடும் காட்டிற்குள் ஒரு மரத்தடியில் வைக்கப்படுகிறது. அதுநாள்வரை தன் ராஜ்ஜியத்தினை தனக்குப்பிறகு ஆள, குழந்தையின்றி தவித்துவந்த பந்தளத்து ராஜா  அந்தக்குழந்தையைக் கண்டு மனம் மகிழ்ந்து, தன் அரண்மனைக்கு கொண்டுசென்று சீரும் சிறப்புமாக வளர்க்கிறார். ஆக Mythology என்று அறியப்பட்டாலும், அது இன்றைக்கும் இருக்கக்கூடிய பந்தள அரண்மனையுடன் நேரடித் தொடர்பினைக் காட்டுகிறது. இதேபோல்தான் முருகனுக்கும். ஏன் நாம் மூருகன் தமிழ்க்கடவுள் என்று கூறுகிறோம் என்றால், ஹிந்தி மொழியை உருவாக்கியவர்கள் மனிதர்கள். அதில் ஏதும் சந்தேகமில்லை. சிவனின் ‘உடுக்கை’ எனும் இசைக்கருவி அதிர, அதிரப்பிறந்ததுதான் சமஸ்கிருத மொழி! இதனால்தான் அம்மொழிக்கு ’மஹேஸ்வர சூத்ரா’ என்று ஒரு பெயருண்டு. அதற்குன் இணையான உயர்ந்த இடத்தில் தமிழுக்க்காக முருகனை வைத்துவிட்டோம். பிறகெப்படி அந்தப்பெருமையை இமயமலைக்கு விட்டுக்கொடுத்துவிடுவோம்?

தமிழ்ச்சங்கத்தலைவன் முருகன்:

நம் தமிழ்மொழிக்கு இதுவரை நான்கு தமிழ்ச்சங்கங்கள் இருந்தன. நான்காம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஐயா. பாண்டித்துரைத் தேவர். முதலாம் தமிழ்ச்சங்கத்தின் (தலைச்சங்கம்) தலைவர் இறைவன் சிவபெருமான். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முருகன். மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின்  தலைவர் புலவர் நக்கீரர் ஆவார். எது எப்படியாயினும் தமிழும் முருகனும் பிரித்துப்பார்க்க இயலாத நிலையில் உள்ள உயர்ந்த இட்த்தில் வைத்துள்ளோம். இப்படியிருக்க தீடீரென் மூன்றாம் நபர்கள் வந்து ‘முருகன் எங்களுடையவர்’ என்று கூறினால் என்னவாகும்? எப்படி ஏற்றுக்கொள்வது? ஏழாம் அறிவு திரைப்படத்தில் நம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற ’போதிதருமர்’ பற்றி வெளியிட்டிருப்பர். அது வரலாற்று உண்மையும் கூட! அந்த போதிதருமரை சீன மக்கள் ஏன் கொன்றனர்?  எனக்கு கிடைக்கப்பெற்ற அறிவும் ஞானமும் என்றும் என்னுடனே தங்கி விட வேண்டும்’ என்கிற நோக்கமே அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டியது. அவர் மீது அந்நாட்டு மக்கள் வைத்திருந்த அதீத பக்தியின் உச்சம் அது. அதுபோல ஏறத்தாழ 5000 ஆண்டுகளாக தமிழ் நிலத்தின், மொழியின் தலைவர் முருகன். அதை எப்படி தாரைவார்த்துக்கொடுக்க முடியும்? தமிழ் அடையாளம் என்பது இந்திய அடையாளத்திலிருந்து சற்றே மாறுபட்டது. தமிழ்மதம் என்பது இந்து மதத்திலிருந்து சற்றே மாறுபட்டது. இந்த ஒரு நூல்பிடிப்பில்தான் திராவிட சித்தாந்தம் இருக்கிறது. ஆனால், இந்த வேறுபாட்டின் நுட்பங்களைப்புரிந்து கொள்ளாமல் ’கடவுளே இல்லை’ என்கிற கோட்பாட்டை தூக்கிப்பிடிப்பதால் திராவிடம் வீழ்ந்தது.  நம் மரபு இன்றும் உயிர்ப்போடு இருப்பதற்குக்காரணம் தமிழ்மரபிற்கென ஒரு தனித்துவம் இருப்பதால்தான். அனைத்தும் சேர்ந்து இந்தியாவிற்கென ஒரு அடையாளம் இருப்பதுபோல், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்றவ்ற்றிற்கும் உள்ளன. வடக்கே விநாயகருக்கு சித்தி, புத்தி என இரு மனைவியராக சொல்லப்படுபவது ஒருவகை அறிவுசார் குறியீடு ஆகும். அவருக்கு அருகில் இரு மனைவியராக பெண் உருவங்கள் இருப்பதுபோல் இங்கு உள்ளன. ஆனால், நாம் ’லெஷ்மி சரஸ்வதி’ என்று வைத்துள்ளோம். ஆனால், அவர்கள் மனைவியரல்ல  ஆகவே இந்துமதம் என்பது ஒரு  மிகப்பெரிய நம்பிக்கை. இது உணர்வு சம்பந்தப்பட்ட்து. இதைப்பர்றி ஆராயும் போது அவர்கள் எவ்வளவு பெரிய பேரறிஞர்களாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையோடு அணுக வேண்டும்.  முருகனைப்பற்றிய தெலுங்குப்பட இயக்குனர் தனது ஆய்வினை தெளிவாகச் செய்யவேண்டும் என முடிவு செய்திருந்தால், முதலில் நம் தமிழ் மண்ணிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்திருந்தால் இங்கிருக்கும் மரபுகளை அவர் உணர்ந்திருப்பார். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல், “முருகன் வடக்கில் பிறந்தவர்” என்றால், அது தவறாகும்.

-------------------------------------------------

           

 

 

 

 

No comments:

Post a Comment

71.’முருகனைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியது எவை?’ (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -4)

  ’ முருகனைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியது எவை ?’ ( முருகன் எங்கு பிறந்தார் வடக்கா ? தெற்கா ? ( பகுதி - 4)   முருகனும் விவசாயமும்:  ...