சமூக வலைதளத்தில் பயங்கரம்
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நாம் நிறையவே பேசுகிறோம். அந்த கருத்துகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லாமற்போனால்,
நிறைய விமர்சனங்கள் வருகின்றன. நாகரீகமற்ற அணுகுமுறை, கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகள் என, கொடூரமான சித்தரிப்புகளைக் காணவேண்டியுள்ளது. இது பற்றி என்னைப் போன்றவர்கள் வருத்தப்படுவது
இருக்கட்டும்.
ஆனால்.. இந்த செய்தி யார்வரைக்கும் எட்டியுள்ளது என்றால், நீதித்துறையில் உயரிய இடத்தில் இருந்த
இந்தியாவின் உச்சமன்ற தலைமை நீதிபதியான திரு.சந்திர சூட் அவர்கள் வரை. மும்பையில் ஜமன்லால்
பஜாஜ் விருது வழங்கும் விழாவில் பேசும்போது திரு.சந்திர சூட் சொன்ன வார்த்தைகள், “சமூக வலைதளங்களில் ஏற்பட்ட வளர்ச்சியால் உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது”. நீங்கள் ஒரு கருத்தியல் பற்றி மட்டும் பரந்த அறிவோடு, பண்போடு விவாதிக்கும்போது,
எவ்விதமான சிக்கலும் ஏற்படாது. ஆனால்.. அந்த கருத்தியலைத்தாண்டி, உங்களின் சொந்த ஈகோவும், அதற்கு எதிரான சிந்தனை இருக்கக் கூடியவர்களின் ஈகோவும் மோதினால், சில தவறான வார்த்தைகளை பிரயோகம் செய்கிறபோது விவாதிக்க வந்த கருப்பொருளை, கருத்தியலை, வாதிக்க வேண்டிய பிரச்சினையை விட்டுவிடுவார்கள். ஆனால்.. அவங்க கூறிய கடும் வார்த்தையினால்,“என்னைப் பார்த்து ஒருவன் இந்த வார்த்தையை சொல்லிட்டானே..”என்று மனதிற்குள் வன்மம் புகுந்துவிடும்.
வன்மத்தை வார்த்தைகளாகக் கொட்டும்போது, நம் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள்.
எல்லாம் போலியான அடையாளங்களில்தான் (Fake I.D) உலாவுகிறார்கள்.
தங்கள் கமெண்ட்ஸ்களையும்
அவ்வாறே பதிவு செய்கிறார்கள்.
இந்த சமூகத்தின் முன் நாம் என்ன மாதிரியான பிம்பத்தை உருவாக்கப் போகிறோம்? தமிழ்நாடு என்றால்
எவ்வகையான பிம்பம்? நான், நீங்கள் என எல்லாரும் சேர்ந்து உருவாக்குவதுதான் தமிழ்நாட்டின் பிம்பம். எந்த அளவிற்கு நாம் பொறுப்பேற்கிறோம்? ஒரு கருத்தியலுக்கு மாற்றாக எப்படி இன்னொரு கருத்தியலைத் தரப்போகிறோம்?
ஜனநாயகத்தில் எந்த ஒரு கருத்தியல் மீதும் இன்னொரு கருத்தியல் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியாது. ஒரு நாள் முதலாளித்துவம் இருக்கலாம். இன்னொருநாள் பொதுவுடமை இருக்கலாம். ஒரு மதத்தின் கருத்தியல் நன்றாக இருக்கலாம். ஒரு பொதுவான கருத்து மேலோங்கி இருக்கலாம். வளர்ச்சி வரலாம். தேர்தலுக்குத் தேர்தல் கருத்தியல் மாறிக்கொண்டேயிருக்கலாம். ஆகவே, சமூக வலைதளங்களில் நம்முடைய பதிவுகள் கெளரவமாக இருக்க வேண்டும் என்பதை கடமையாக கொள்ள வேண்டும். நாட்டின் உச்சநீதிபதி சொல்லும் அளவிற்கு வைத்துக் கொள்ளக்கூடாது.
இந்த இடத்தில் நீதிபதி சந்திரசூட் அவர்கள் சொல்லும் விஷயங்கள் முக்கியமானது: ”சுதந்திரத்திற்குப்
பிறகான இந்தியாவின் பயணம் மிக மிக தனித்துவமானது.
உலகம் முழுவதும் பிரிவினைவாதம் காட்டுத்தீப்போல்
பரவிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் வலது, இடது என பிரிந்து கிடக்கிறது. ”மையம்” என்கிற ஒன்று உள்ளது. ஆனால், எல்லோரும் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் மையத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் வலதும் இடதுமாகவே இருக்கிறார்கள்!’’
அக்காலத்தில்”இடது” என இருந்த பிரிவு வேறு. இப்போது இருக்கும் பிரிவு வேறு. அதேபோல், “வலது” என அந்த காலத்தில் சொல்லப்பட்ட பிரிவு
வேறு. ஆனால், பிரிவு என்பது உண்மையாக இருக்கின்றன. ரொம்ப குறிப்பாக அவரு சொல்லியிருப்பது என்னவெனில், “எந்த கருத்துகளையும்
ஆராய்ந்து அறியாமல் மேலோட்டமாக பார்க்கும் இளைஞர்களின் மனப்பான்மை, மேலும் சமூகங்களுக்கிடையே
சகிப்புத்தன்மை இல்லாதது”. இந்த இரண்டு விஷயங்களுமே முக்கியமானவை. மேலோட்டமாக பார்க்கும் இளைஞர்களின் பார்வை, சமூகங்களுக்கிடையே
சகிப்புத்தன்மை இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் தமிழ்நாட்டிற்கு ஆந்திராவைப் பிடிக்காது. தமிழ்நாட்டிற்கு
கர்நாடகாவைப் பிடிக்காது. கர்நாடகாவுக்கு கேரளாவைப் பிடிக்காது. வட இந்தியாவிற்கு தென் இந்தியாவைப் பிடிக்காது. தென்னிந்தியாவில் ராஜஸ்தான் ஒரு குழு. பீகார் ஒரு குழு. இந்த மாதிரியான ஒரு பொதுமைப்படுத்தல் உண்டு. பொதுமையான மாநிலங்களுக்குள்ளேயே ஒரு பிரிவினை உண்டு. அப்புறம் சமூகங்களுக்கிடையே
பிரிவினை உண்டு. இன்னும் கீழ் இறங்கிச் சென்று உதாரணமாகப் பார்த்தால், எங்கள் கிராமத்திற்கும் பக்கத்தில்
உள்ள கிராமத்திற்கும் பிடித்துக்கொள்ளாது. எங்கள் கிராமத்திற்குள்ளேயே எங்கள் தெருவிற்கும்ம் பக்கத்து தெருவுக்கும் பிடிக்காது. ஆக, சகிப்புத்தன்மை எல்லா இடங்களிலும் குறைந்திருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கையின் வேகம் அதிகரித்துவிட்டது. இந்த மாதிரியான சூழலில் இளைஞர்கள் ஒரு செய்தி வந்தவுடனே அதற்கு உடனே எதிர்வினை பண்ணாமல் அதைப்பற்றி முழுவதுமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால், தற்போது ஆராய்ந்து பார்க்காமல் ஒரு எதிர்வினையாற்றுகிறார்கள். பிறகு ”நான் அப்படி இல்லை” என்கிறார்கள்.
ஆக, இளைஞர்கள் மேலோட்டமாக பார்க்காமல் நிதானமாக, கொஞ்சம் ஆராய்ந்து, வன்முறை இல்லாமல் செயல்படவேண்டும். வன்முறையின் வழிநடந்து ஒருபோதும் ஜெயித்துவிட முடியாது. வன்முறை, பிரச்சினை செய்வது, அடிதடியில் ஈடுபடுவது போன்ற காரியங்களைச் செய்பவர்கள் எவருமே சட்டத்தின்
பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. சட்டம் தன்னுடைய
கடமையை செய்யத்தான் போகிறது. ஆனால்.. பாதிக்கப்படப் போவது நாம்தான்.
சந்திரசூட் அவர்கள் கூறிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,
“பல தரப்பட்ட கலாச்சாரங்களை பின்பற்றக் கூடியவர்களையும் தாயுள்ளத்தோடு அணைத்துக் கொண்டதுதான் நம் இந்தியா. இந்திய அரசுகள், இவ்வாறு அரவணைத்துக் கொண்டு செல்வதால்தான் ஜனநாயகம் வெற்றிகரமாக நடைபோடுகிறது” என்கிறார். 1940 களில் ஆரம்பித்து, பல்வேறு நாடுகளின் ஜனநாயகங்களை அவர் ஒப்பீடு செய்கிறபோது; பாகிஸ்தானில் பெரும்பாலும் இராணுவ ஆட்சிதான் நடக்கிறது. அது ஜனநயகமா என்றால், நிச்சயமாக கிடையாது. இலங்கையில்
ஒரு புரட்சி,
வங்கதேசத்தில்
புரட்சி, நேபாளம் மிகச்சிறிய நாடு, அங்கே ”மக்களாட்சியே வேண்டாம். மன்னராட்சிதான் வேண்டும்” என்பதை வலியுறுத்தி பிரச்சினை நடக்கிறது. ஆக, இவ்வளவு பெரியதேசம், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், 550 மொழிகள்,
5000 க்கும் மேற்பட்ட சாதிக்குழுக்கள், மலைவாழ் இனங்கள், பலவிதமான அளவீடுகளில் வளர்ச்சி விகிதாச்சாரம் இருந்தாலும், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஒரு தாயைப்போல அரவணைத்துச் செல்வதால்தான் நம் தேசத்தின் ஜனநாயகம் தழைக்கிறது. ”இந்த அற்புதமான அமைப்பை சமூக வலைதளங்கள் கெடுத்துவிடக்கூடாது” என்பதைதான் அவர் சொல்கிறார்.
இரண்டாவதாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? மொபைல் போன்களின் எண்ணிக்கைகள் அதிகமாகிவிட்டன.
எல்லாருடைய கைகளிலும் 4G,
5G இருக்கின்றன. இந்த வளர்ச்சியை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நாம் தவறாக பயன்படுத்தினால் அதுவே நம் அழிவிற்கு வழிவகுக்கும். இங்கு கலாச்சாரச் சண்டை என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அணுசக்தி என்பது மிகப்பெரிய சக்தி. அந்த சக்தியை ஒரு தீவிரவாத அமைப்பின் கையில் தந்தால், அதை வைத்துக்கொண்டு அணுகுண்டு தயாரித்து யாரையெல்லாம் தீர்த்துக்கட்டலாம்
என்றுதான் திட்டம் போடும். ஒரு நல்ல தேசத்திடம் கொடுத்தால் அந்த அணுசக்தியைக் கொண்டு, ஆக்கப்பூர்வமாக அதை மின்சாரமாக மாற்றி மக்களுக்கு எப்படியெல்லாம் உதவமுடியும்
என்று திட்ட மிடும். ஒரே அணுசக்திதான்.
நாகரீகத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பமாக வருகிறது. ஆனால், பயன்பாடு கலாச்சாரத்தின் அடிப்படையில் போய்விடுகிறது. ஒரு கலாச்சாரம் அதைவத்து அழிவுதரும் வெடிகுண்டு செய்ய விழைகிறது. இன்னொரு கலாச்சாரமோ மின்சாரத்தை உற்பத்தி செய்து மக்களுக்கு சேவையாற்றுகிறது.
சமூக வலைதள வளர்ச்சியும் அதுபோன்ற ஒரு விஷயம்தான். இந்த வளர்ச்சியை இளைஞர்கள் முறையாக பயன்படுத்தி, எந்த விஷயத்தையும் மேலோட்டமாக அணுகாமல். உன்னிப்பாக கருத்துகளை படித்துப் பார்த்து அது குறித்து தங்கள்
கருத்துகளை கண்ணியம் குறையாத வார்த்தைகளைக் கொண்டு நாகரீகமாக பதிவு செய்யவேண்டும். இரண்டாவதாக பதிவு செய்யும் விஷயங்களையும் ஆக்கப்பூர்வமான விஷங்களாக செய்ய வேண்டும். மிக அவசர, அவசரமாக எதிர்வினையாற்றுதல், பரபரப்பாக்க வேண்டும் என்பதற்காக தவறான
விஷயங்களை இளைஞர்கள் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அந்த நாகரீக பயன்பாட்டை மின்சாரத்திற்கு
பயன்படுத்தாமல் ஒரு அணுகுண்டு தயாரித்தது போல் ஆகிவிடும். ஆக, இந்தியாவின் உச்சநீதி மன்றத்தின் நீதிபதி சந்திரசூட் கூறிய வார்த்தைகளை இளைஞர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
-------------------------------------------------------------
No comments:
Post a Comment