கிருஷ்ண தரிசனம் – 2 பகவத்கீதை
1 ஆவது அத்தியாயத்தில் மகாபாரதப்போர் தொடங்கும் முன் அர்ஜுனன் இருதரப்பு படைகளுக்கும் நடுவே தேரை நிறுத்தச்சொல்கிறார். எதிர் தரப்பையும்
பார்த்தபின் மனச்சோர்வு, பதட்டம், குழப்பம் அர்ஜுனனுக்கு ஏற்படுகிறது.
பாண்டவர்களுக்கும் துரியோதனனுக்கும்
இடையில் ஏற்பட்ட பகை சாதாரணமானதல்ல.
அவர்கள் பிறந்தது முதற்கொண்டு இருக்கிறது. சூதாட்டத்தில் ஏமாற்றி, திரெளபதியை அவமானப்படுத்தி,
காட்டுக்கு அனுப்பி, பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்
வந்து, அப்போதும் நாட்டை திருப்பிக் கொடுக்காமல் போனதால் போர் புரிந்துதான் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்கிற ஒரு வெறியில் போர்க்களத்திற்கு வந்தபின்பு தன் எதிரே இருப்பவர்களைப் பார்த்தபின் “ஐயோ.. துரியோதனன் எனக்கு அண்ணனாகத் தெரிகிறான்.
துரோணரும், பீஷ்மரும் ஆச்சாராரியர்களாகத் தெரிகின்றனர்.”
என அர்ஜுனன் சொன்னதை “மனச்சோர்வு, பதட்டம், குழப்பம்,” என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?
எல்லாம் தெரிந்த, 20 ஆண்டுகளாக நடக்கும் ஒரு விஷயத்தை, அது ஏதோ அப்போதுதான் ஏற்பட்ட நிகழ்வுபோல கருதிக்கொண்டு அர்ஜூனன் குழப்பத்தில் ஆழ்ந்து போகிறார். அது மட்டுமில்லாமல் அந்த குழப்பமானது மாவீரன் என்கிற பிம்பத்துடன் விளங்கும் அர்ஜுனின் உடம்பிலிருந்து மனதிற்கு நுழைந்ததால் தனக்குரிய வில்லையும் அம்பையும் கீழே போட்டு விடுகிறார். ஏன் அவ்வாறு கீழே போட்டார்?” என்பதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்.
அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ண பரமாத்மா, “அர்ஜுனா உனக்கு ஏன் இந்த மனச்சோர்வு?” என்று கேட்கிறார். அர்ஜுனனின் எந்த ஒரு காரணத்தையும் கிருஷ்ண பரமாத்மா தன் கருத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை.
‘சொந்தக்காரர்களைக்
கொல்லலாமா? அது பாவமா? புண்ணியமா? அவர்கள்தான் (கெளரவர்கள்) நரகத்திற்குப் போகிறார்கள். நாம் ஏன் போக வேண்டும்? நாட்டையும், நகரத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம்?” என்றெல்லாம் அர்ஜுனன் கொண்ட குழப்பங்களுக்கு பதிலே சொல்லாமல், “உனக்கு இருப்பது மனச்சோர்வு, பதற்றம் மற்றும் குழப்பம்” என்பதே கிருஷ்ணனின் நிலைப்பாடு.
இரண்டாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் அவைகுறித்து மிகவும் வருந்துகிறார். இரண்டாவது அத்தியாயம் எப்படி ஆரம்பிக்கிறது என்றால், இதில் மொத்தம் 72 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இது மிகவும் பெரிய அத்தியாயமாகும். இதில் 3, 4
ஏரியாக்கள் உள்ளன. நான் ஏற்கனவே கூறியபடி, இது பல திசைகளிலும் பயணிக்கிறது. பலரும் பல்வேறு விதமாகப் பேசியுள்ளனர். அதிகமாக சாதுக்கள் பேசியுள்ளனர்.
நான் “சாது”கிடையாது. எப்படி திருக்குறளில் உள்ள 1330
குறள்களிலும் நமக்குத் தேவையான குறள்களை எடுத்துக்கொள்வதில்லையா? அதுபோல்தான். (ஒற்றன் என்கிற குறளையோ, அரசன்
என்கிற குறளையோ நான்
படித்து என்ன
செய்யப்போகிறேன்? ஆகவே
நமக்கு எந்த
குறள் தேவைப்படுகிறதோ அல்லது எந்தக் குறள்
இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான விஷயங்களை எடுத்துக்கொண்டு பேசுகிறோமோ, அதுபோல் பகவத்
கீதையிலிருந்து நமக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பேசுகிறேன். அத்துடன் முழுக்கதையையும் சொல்லி விடுகிறேன்.)
அத்தியாயம் 2-இல் உள்ள 72 ஸ்லோகங்களை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் 36 ஸ்லோகங்கள் அர்ஜுனனுக்கு,
”ஆத்மாவைப்பற்றி” கிருஷ்ண பரமாத்மா கூறும் அடிப்படையான விஷயங்கள் வருகின்றன. ”யோகம்” என்பதும் வருகிறது. அதனால்தான் இது ”சாங்கிய யோகம்” என்று சொல்லப்படுகிறது.
இதில் கிருஷ்ண பரமாத்மா பேசும்போது, “மேன்மக்களுக்கு வரக்கூடாத விஷயங்கள் உன்னிடத்தில் எப்படி வந்தது? பொருந்தாதது, அனைவரும் இகழ்ந்து பேசக்கூடியது.
பேடித்தனம் என்று விமர்சிக்கக்கூடிய விஷயம். இப்படிப்பட்ட அனைத்தும் உனக்குள் எப்படி வந்தது? அதுவும் போர்க்களத்திற்கு வந்து சேர்ந்தபிறகு!” என்று கேட்கிறார்.
சூதாட்டத்தில் தோற்று, நாட்டை இழந்து, பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்தபின், முதலில் யார் போரை அறிவித்தது? அர்ஜுனன்தானே!.. ”பதினான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன”என்று அம்பை விட்டது அர்ஜுனன்.
அதற்கும்கூட “நீ பதினான்கு ஆண்டுகளை நிரைவு செய்யவில்லை. ஒருநாஅள் முன்னதாகவே வெளியே வந்துவிட்டாய். அதனால் மீண்டும் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும்” என்று துரியோதனன் சொல்கிறான்.
‘அவ்வளவு அவசர அவசரமாக வந்த நீ.. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இப்படி தளர்ந்து நிற்கிறாயே!’என்று கிருஷ்ண பரமாத்மா கேட்கிறார்.
அதற்கு அர்ஜுனன் பீஷ்மர் பிதாமகன். துரோணாச்சாரியார் குரு. அவர்கள் போர்க்களத்தில் முன்னே நிற்கிறார்கள்.
அவர்கள்தான் போரில் தலைமை தாங்குகிறார்கள்.
அப்படிப்பட்ட அவர்களை நான் எப்படிக் கொல்வேன்?” என்கிறார் அர்ஜுனன்.
“ஆமாம். அதெல்லாம் வேண்டாம்.”என்று கிருஷ்ண பரமாத்மா கூறவேயில்லை. இந்த இடத்தில்தான் பகவத்கீதை நம்மோடு தொடர்பு உடையதாகிறது. பீஷ்மரையும், துரோணாச்சாரியரையும்
கொல்லலாமா? வேண்டாமா? என்பதற்கு பதில் கூறியிருந்தால், குறிப்பிட்ட அம்சத்துடன் (specific fact) நின்றிருக்கும். பகவத்கீதை தத்துவமாக வடிவம் பெற்றிருக்காது. அதையெல்லாம் தாண்டி பொதுவாகச் செல்லும்போதுதான் அது தத்துவமாக மாறுகிறது.
”எனக்கே ஒரு குழப்பமாயிருக்கிறது. மனக்கவலை இருக்கிறது. எனக்கு பதட்டமாகவும் இருக்கிறது. ஆகவே நான் உன்னைச் சரணடைகிறேன்”என்கிறார் அர்ஜுனன்.
இவ்விடத்தில் ஒரு முக்கியமான ஒரு வார்த்தையைக் கவனிக்க வேண்டும். அதாவது ”உன்னைச் சரணடைகிறேன்” என்று பாடல்களைக் கேட்டிருக்கலாம். ”நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா?” ”நீ சொல்றதை நான் கேட்க வேண்டுமா?”, “பாஸ் என்ன பெரிய இவரா?”என்பதுபோன்ற ஈகோவைப் பார்த்திருக்கிறோம். அந்த ஈகோவால்தான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன என்று எல்லோருக்குமே தெரியும். ஆகவே அப்படிப்பட்ட ஈகோவை ஒரு கட்டத்தில் சரணடைய வைப்பதன் மூலம் உங்களுக்குத்தேவையான விடை கிடைக்கலாம். இதுதான் ஆன்மீகத்தில் உள்ள புரிதல்! ஏனென்றால், சரணடையாமல் எதற்கும் ஒரு தீர்வு கிட்டாது.
”திருமந்திரம்”
அருளிய திருமூலர் குறிப்பிடும் மூன்று மலங்களாகிய ”ஆணவம், கன்மம், மாயை” என்பவற்றில், ஆணவமானது “சரணடைதல்” என்கிற அணுகுமுறையால் மட்டுமே நீக்கப்படக்கூடியது.
அர்ஜுனன் தன்னுடய கவலை, பதட்டம், குழப்பம் பற்றிக்கூறியதும்,
கிருஷ்ண பரமாத்மா மெல்லிய மந்தகாசப் புன்னகை புரிகிறார். அந்தப்புன்னகையை விளக்க வேண்டுமானால், “எதையும் அறிந்தும், அறியாதது போன்ற பாவனை” என்று கூறலாம். இத்தகைய பாவனையை இன்றைய சந்நியாசிகள் பலரும்கூட பின்பற்றுகிறார்கள். சத்சங்கங்களில் யாராவது ஒரு பக்தர், சாமியாரைப்பார்த்து
ஏதாவது கேள்வி கேட்டால், அதற்கு அவர்கள் எடுத்த எடுப்பில் பதில் கூற மாட்டார்கள். மெலிதான ஒரு புன்னகையைத் தவழவிட்ட பின்னரே அதற்கு பதில் கூறுவார்கள். இதுபோன்ற வெளிப்பாடுகளை பகவதீதையின் தொடர்ச்சியாகத்தான்
நான் பார்க்கிறேன்.
கேள்வி கேட்கும் பக்தரிடம், அந்த சாமியார் ‘ஓ.. இதுதான் கேள்வியா? சரி..எனக்குப் புரிந்து விட்டது. நான் பதில் அளிக்கிறேன்”என்று பொருள் கொள்வது போல் அந்தப்புன்னகை இருக்கும். (இது எந்த
அளவிற்கு சரி? எந்தளவிற்கு தவறு? என்பவற்றை ஒருபுறம் கிருஷ்ண பரமாத்வாவிடமும், மறுபுறம் சுவாமிகளிடமும் விட்டுவிடுவோம்.)
அர்ஜுனர் சரணடைந்தபின்,
அவருக்கு பதில் கூறும்விதமாக கிருஷ்ண பரமாத்மா பேசுவதிலிருந்துதான்
பகவத்கீதையின் உபதேசம் உண்மையில் ஆரம்பிக்கிறது.
முதன் முதலில் சொல்லப்படும் மந்திரத்தை பீஜ மந்திரம் என்று சொல்கிறார்கள்.
ஏன் அவ்வாறு சொல்கிறார்களென்றால், பகவத்கீதையில் விஷயக்களி உலடக்கி ஆங்காங்கே சில ஸ்லோகங்களும் மந்திரங்களும் மிகவும் முக்கியம் என்று சொல்வதுண்டு. அந்த பீஜமந்திரத்தில்
மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.
முதலாவதாக ”பண்டிதர் போல பேசுகிறாய்” என்கிறார் ஸ்ரீ கிருஷ்ன பரமாத்மா. பண்டிதர் போல் என்றால் ”ஒரு விஷயத்தின் இடது, வலது மற்றும் மீண்டும் பின்பக்கம் என எல்லாவற்றையும் அலசி ஆராய்கிறாய். ஆனால், அதை எதற்குச் செய்கிறாய் என தெரியாமலேயே செய்கிறாய். பண்டிதர்களுக்கு
நிறைய விஷய ஞானம் இருக்கும். ஆனால் எதையும் முடிவாகச் சொல்ல மாட்டார்கள். அவர்களும் உன்னைப்போலவே ஒரு விஷயத்தின் இடது, வலது மற்றும் மீண்டும் பின்பக்கம் என எல்லாவற்றையும் அலசி ஆராய்வார்கள்.
அனைத்துப்பக்கங்களிலுமுள்ள நன்மை தீமைகளை ஆராய்வார்கள்.
ஆனால் ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள்.
அதே போல் நீயும் முடிவெடுக்காமல்
இருக்கிறாய். ஆகவே நீ என்ன செய்யப்போகிறாய்?”
இரண்டாவதாக “துக்கப்படக்கூடாதவர்களுக்காக நீ துக்கப்படுகிறாய்” என்று கூறிவிட்டு, துரியோதனன், அவனைச்சார்ந்தவர்கள், பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட இருபது நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு,
”அவர்களெல்லாம் அதிகமான பாவங்களைச் செய்திருக்கின்றனர். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாகவே இருந்தாலும் ஒரு மிகப்பெரிய அதர்மம் நிகழ்ந்தபோது வேடிக்கை மட்டுமே பார்த்தவர்கள்.
ஆகையால் அவர்கள் அனைவருமே தண்டனைக்குரியவர்களே.. அதனால் அவர்களை எண்ணி நீ துக்கப்படத் தேவையில்லாதவர்களுக்காக நீ துக்கப்பட தேவையில்லை”என்பது கிருஷ்ண பரமாத்மாவின் கருத்தாகும்.
அதன் மூலம் நமக்கும்கூட “யாருக்காக நீங்கள் துக்கப்பட வேண்டுமோ அவர்களுக்காக மட்டும் துக்கப்படுங்கள்.
அவ்வாறு இல்லாமல், நீங்கள் துக்கப்படுகின்ற
அளவிற்கு தகுதியற்ற நபர்களுக்காக துக்கப்பட்டால் நீங்கள் துன்பத்தையே அடைவீர்கள்” என கிருஷ்ணபரமாத்மா அறிவு புகட்டுகிறார்.
மூன்றாவதாக மிகவும் சுவாரஸ்யமான மேற்கோள் வருகிறது. அது தத்துவார்த்தமானது. அதன்படி ”இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தவர்களைப் பற்றியும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப்பற்றியும் அறிவுள்ளவர்கள் கவலைப்பட மாட்டார்கள்” என்கிறார். பிறகு அறிவுள்ளவர்கள் யாரைப்பற்றி கவலைப்படுவார்கள்? அவர்கள் மனிதர்களைவிட நடந்துகொண்டிருக்கும், நடக்கவிருக்கும்
காரியங்களைப்பற்றியே கவலைப்படுவார்கள்.
ஏனென்றால் வந்தவர்கள் எல்லோருமே சென்று கொண்டிருப்பார்கள். ”ஆத்மா” என்பது இன்று ஒன்றாக இருக்கும். நாளை வேறு எதுவாகவோ இருக்கலாம். ஆகவே என்ன காரியங்கள் நிகழ்ந்தேறுகின்றன? தர்மம் எப்படி நிலைநாட்டப்படுகிறது? என்பதே முக்கியம்.”
இவையே அந்த மிக முக்கியமான பீஜ மந்திரங்களின் அடிப்படை உண்மையாகும். (அவற்றிற்குள் ஏகப்பட்ட தத்துவார்த்த சாராம்சங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை நாம்
பின்னர் மேலும் அலசிப்பார்க்கலாம்.)
மேலே கூறப்பட்ட மூன்று பீஜ மந்திரங்களின் மூலம் அர்ஜுனரை கிருஷ்ண பரமாத்மா சமாதானம் செய்யப்பார்க்கிறார். அந்த மூன்றையும் தனித்தனியாக நாம் இப்போது பார்க்கப்போவதில்லை. முதலில் அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆத்மா(ஆன்மா)பற்றி முதன்முதலில் பேசுகிறார். ”ஆத்மாவை அழிக்க முடியாது; எரிக்க முடியாது; நனைக்க முடியாது. ஆத்மா அனைத்தையும் கடந்தது. நீ அழிக்க இருப்பவர்கள் அனைவருமே ஒரு ஆத்மா சேர்ந்தவர்களே! ஆக, ஆத்மாவை அழிக்க முடியாதபோது, துரியோதனைக் கொன்றாலும் அவன் ஆத்மாவைக் கொல்லமுடியாதே!
பிறகு ஏன் வருத்தப்படுகிறாய்? உன் கடமை என்ன? துரியோதனனைத்தான் அழிக்க வேண்டும்.
அவன் ஆத்மாவையா அழிக்கப் போகிறாய்? அவன் செய்கின்ற காரியங்களை அழிக்கப்போகிறாய்!
துரியோதனனைக் கொல்வதால் அவனது ஆத்மா தன்வழியே போகப்போகிறது.
அது பாவமல்ல. அதைப்பற்றிய கவலையும் உனக்குத் தேவையில்லை. ஆகவே துரியோதனனை அழி. அதன்மூலம் அவனால் விளையக்கூடிய அதர்மங்களை அழி.” என்று கூறுவதன் மூலம் முதல்பகுதியாக ஆத்மாவைப்பற்றி
விளக்குகிறார். ஆத்மாவாப்பற்றி பதினாறு ஸ்லோகங்களில் வருகிறது.
இரண்டாவதாக, “ஒருவேளை ஆத்மாவிற்கு அழிவு உண்டென்றே வைத்துக்கொள். மனிதன் பிறந்தான். இறக்கப்போகிறான்
என்றே வைத்துக் கொள். எந்த மனிதன் பிறந்தாலும் அதர்மம் செய்துவிட்டு ஏன் ஒருவன் இறக்காமல் இருக்க வேண்டும்? எப்படி அவன் வாழ வேண்டுமென ஆசைப்படுகிறாய்?
இங்கே பிறப்பிற்கும்,
இறப்பிற்குமான புரிதல் யாருக்கும் இல்லை. பரிகாரம் கிட்டாத ஒரு விஷயத்திற்கு நீ ஏன் பரிகாரம் தேட முற்படுகிறாய்? ஆக, ஆத்மாவிற்கு அழிவில்லை. அந்த ஆத்மாவிற்குரியவனின்
அதர்மங்களைத்தான் அழிக்கப்போகிறாய்.
ஆகவே போர் புரி. எல்லாவற்றிற்கும்
அழிவு உண்டு என்று எடுத்துக்கொண்டால்கூட அதர்மமான காரியங்களை அழித்துவிட வேஎண்டியதுதானே… பரிகாரம் யாரும் கண்டுபிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாதே.”
என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா.
மூன்றாவதாக, “நான் கூறிய முதல் இரண்டையுமே விட்டு விடு. உன் கடமை என்ன? நீ ஒரு ஷத்ரியன். இந்த போருக்கான சூழல் நீ ஆசைப்பட்டதனால் உருவாகவில்லை. தானாக வந்துவிட்டது! இந்தச்சூழலில் போர் புரிவது உன் கடமை. அந்தக்கடமையிலிருந்து நீ தவறினால் உனக்கு என்னென்ன அவமானங்கள்?” என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஆத்மாவையும் அதன் இயல்பைப்பற்றி நன்குணர்ந்து,
உடல் அழிவைப்பற்றி கவலைகொள்ளாமல் நீ போர் புரிய வேண்டும். இவை ஒரு ஷத்ரியனின் கடமை என்றும் வலியுறுத்துகிறார். (ஷத்ரியன் என்றதும் வர்ணாசிரமக்கொள்கை என்கிற வாதம்
முன்வைக்கப்படும். அதைப்பற்றி விரிவாக விவாதிக்க நான்
எப்போதும் தயாராக உள்ளேன். கிருஷ்ணர் கூறியதாக சொல்லப்பட்ட அனைத்துமே, அவரேதான் கூறினாரா? என்று
நமக்கு நிச்சயமாகத் தெரியாது. அவரால் கூறப்பட்டதாக அறியப்படும் நல்ல
விஷயங்களை நமது
பொது அறிவினால், பகுத்தறிவினால் எடுத்துக்கொள்கிறோம். அப்படி எடுத்துக்கொள்ள எண்ணாமல் போராட
விரும்புவர்கள் போராடலாம். ”இல்லை. நீ
தரும் விளக்கம் தவறு
என்று வாதிட்டாலும் அதை
அப்படியே வைத்துக்கொள்ளலாம். எல்லோருக்கும் எல்லாவிதமான கருத்துகளும் இருக்கிறது”)
கடமைகள் என்னென்ன? கடமைகளிலிருந்து தவறலாமா? ” போன்ற மூன்று விஷயங்களே 36 ஸ்லோகங்களில் வரப்போகின்றன. அவை அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம்.
(அடுத்து நாம்
மேலே கூறப்பட்ட ஆத்மாவின் இயல்புகள், உடல், கடமை
ஆகிய மூன்றைப்பற்றியும் தனித்தனியே விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம். அவற்றை முடித்துவிட்டு, அத்தியாயம் 2 இல் இருந்து “சாங்கிய யோகம்” பற்றி
காணலாம். அத்தியாயம் 2 என்பது இவ்வகையில்தான் முடியப்போகின்றது. தத்துவார்த்தம் என்பது சற்று
கரடுமுரடாக அல்லது வறட்சியாக இருப்பதுபோல் தோன்றலாம். அவற்றின் இடையிடையே சில
விஷயங்களை இணைத்து பேசும்போது அதில்
சுவை மேம்படும். எதுவாக இருப்பினும் அடுத்தமுறை இவற்றைப்பற்றிய விளக்கத்தைத் தந்தபின் மேலும் தொடரலாம். பீஜ
மந்திரங்களையும், வர்ணாசிரம தர்மம் என்பதையும் பட்டியலில் வைத்திருக்கிறேன்)
No comments:
Post a Comment