கிருஷ்ண தரிசனம் -1 (பகவத்கீதை)
ஒரு ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான ஆவணமாக இருந்தாலும்
இன்றைக்கும் புதுமையாக, புனிதமாக
மக்களோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. இது குறித்து மகிழ்ச்சி அடைய, படிக்க வேண்டிய, பின்பற்றவேண்டியவை மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
பொதுவாக பகவத்கீதையைப்பற்றி பேசுபவர்கள் சந்நியாசிகளாக
இருப்பார்கள். மேலும் சமூகத்திற்கு ”தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளர்களாக” தங்களை
முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், நான் சராசரியான சமூக அக்கறையில் சாமானியர்களுக்கு, ஒரு மாணவனுக்கு சொல்வதுபோல்தான் சொல்கிறேன்.
அந்த வகையில் பகவத்கீதையில் இப்போது எடுத்துக்கொள்வது முதல்
அத்தியாயம். இதில் மொத்தம் 47
ஸ்லோகங்கள் உள்ளன.
திருதிராஷ்டிரன் – சஞ்சயன்
உரையாடல்:
மகாபாரதப்போரின்
ஆரம்பப்புள்ளிதான் பகவத்கீதையின் தொடக்கம்.
கெளரவர்களின் தலைவரான
திருதிராஷ்டிர மன்னன் பார்வை இழந்தவர். அவர் மகாபாரதப்போரைக் காண வேண்டுமென்று
ஆசைப்படுகிறார். அதனால் தனது ஆலோசகரும், தேரோட்டியும், வியாச முனிவரின் சீடருமான சஞ்சயனிடம் தனது ஆசையைத்
தெரிவிக்கிறார். சஞ்சயனுக்கு “தெய்வீகப்பார்வை (திவ்ய திருஷ்டி)” அதாவது இன்றைய
காலகட்டத்தில் அலைபேசி காணொலி வழியாக (Mobile video call) பேசுகிறோமே, அதுபோல் தூரத்தில் நிகழக்கூடிய சம்பவங்களை தான் இருந்த
இடத்திலேயே காணக்கூடிய விசேஷ சக்தி உண்டு. அந்த சக்தியைக் கொண்டுதான் அவர்
மகாபாரதப்போரை கவனிக்கிறார். அப்படி தான் பார்த்ததை மன்னர் திருதிராஷ்டிரனுனுக்குச்
சொல்கிறார்.
அப்போது முதல் கேள்வியை, அதாவது ”போர்க்களத்தில் என்ன நடக்கிறது?” என திருதிராஷ்டிரன் கேட்கிறார்.
சஞ்சயன் போரை காட்சியாக
காண்கிறார்.
துரியோதனன் – துரோணர்
காட்சி:
அந்தக் காட்சியில்
துரியோதனன், துரோணரிடம்
கேட்கிறார்:
”பாண்டவர்கள் படையில்
யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? பாண்டவர்களின்
படை எப்படி உள்ளது? பாண்டவர்களின்
படைத்தலைவன் திருஷ்டத்யும்னனின் பாராக்கிரமம் என்னென்ன?” என்றெல்லாம் பாண்டவர்களின் படையைப்பற்றியும், அர்ஜனன் முதல் இறுதியில் உள்ளவர்கள் வரையிலும் துரியோதனன்
பட்டியலிட்டுப் பார்க்கிறார்.
அடுத்ததாக பாண்டவர்கள்
படையை விட எண்ணிக்கையில் பன்மடங்கு உள்ள தனது கெளரவர்களின் படையைப்பற்றியும், பேசுகிறார். நமது”கெளரவர் தரப்பு படையை பிதாமகன் பீஷ்மர்
கட்டிக்காக்கிறார். அவரின் பராக்கிரம் பெரிது. அவர் குரு பரம்பரையில் மிகவும்
மூத்தவர். அவரைக்காத்து நிற்பது நமது முதற்கடமை” என்று தன்னைச்
சுற்றியிருப்பவர்களுக்கு உத்தரவிடுகிறார்.
துரியோதனன் கூறியது இவ்வளவுதான். இவ்விடத்தில் நாம் ஒன்றை கூர்ந்து கவனிக்க
வேண்டும். துரியோதனன் முதலில் பாண்டவர் படைகளைப் பற்றி கேட்டுவிட்டு, அதைவிட பன்மடங்கு பெரியது கெளரவர் தரப்பு படை என மிகுந்த
நம்பிக்கையுடன் துரோணரிடம் கூறுகிறார்.
பொதுவாக”போர்” என்றால்
ஒருவித கவலையும் பதட்டமும் குடிகொண்டிருக்கும். ஏனென்றால், இது பரீட்சை அல்ல. பரீட்சை என்றால் வெற்றிபெறுவோமா? தோல்வியுறுவோமா? என்கிற பயம் இன்றைக்கு அதிகமாக உள்ளது. பரீட்சைக்கே
இப்படியென்றால், மிக முக்கியமான ஒரு
போரில் ”நாம் முன்னிலைக்கு வருவோமா? இல்லையா?” என்கிற
கவலையும்,
பதட்டமும் எவ்வளவு அதிகம் இருந்திருக்கும்! அதனை
மகாவீர்ர்கள் கடந்திருக்கிறார்களா? கடந்தார்கள் என்றால் எப்படிக் கடந்தார்கள்?! இது போன்ற காட்சிகளை நாம்
மகாபாரதத்தில் அதிகம் காண்கிறோம். பகவத்கீதையிலும் மிக முக்கியமான காட்சி
அது.
துரியோதனன் பேசி
முடித்தவுடன், அதையெல்லாம்
பாராட்டும் விதமாகவும், போர்க்களத்தில்
வீர்ர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சங்குகளின் முழக்கம், பேரிகைகளின் முழக்கம் விண்ணைப் பிளக்கின்றன.
(இது ஒருபுறம் முடிய, சஞ்சயன் தொடர்ந்து போர்க்களக் காட்சியை பார்த்துக்
கொண்டிருக்க, அங்கே காட்சி
மாறுகிறது.)
கிருஷ்ணர்- அர்ஜுனர்:
மாறிய காட்சியின்படி
கிருஷ்ண பரமாத்மாவிடம் அர்ஜுனர்:
“கிருஷ்ணா.. நீ தேரை
ஓட்டி இரு படைகளுக்கும் நடுவில் நிறுத்து. நான் இருதரப்பையும் காண வேண்டும்.
”துன்மத்த துரியோதனன்” என்று சொல்லப்படக்கூடிய அளவிற்கு துரியோதனன் ஒரு தவறான
நபர். இப்படிப்பட்டவரின் ஆசையை நிறைவேற்றித்தர, அவருக்காக போரிடுவதற்கு யார், யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்? என அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்கிறார்.
(மேற்கண்ட காட்சிகள்
அனைத்தும் 20 ஸ்லோகங்களில்
சொல்லப்பட்டுள்ளன. அர்ஜுனர் கிருஷ்ணரிடம் பேசுவது 20 –ஆவது ஸ்லோகமாகும்.)
அர்ஜுனர் அப்படி
கேட்டுக்கொண்டதும், அவர்
கூறியபடியே கிருஷ்ணரும் தேரைச் செலுத்தி, இருதரப்பு படைகளுக்கும் நடுவே நிறுத்துகிறார். அர்ஜுனனைப்
பார்த்து,
“அர்ஜுனா.. இதோ பார்.. கெளரவர்களின்
படையை…” என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
அந்த நொடிவரை அர்ஜுனர் ஒரு
போர் வீரனுக்கே உரிய துடிப்பு, ஆர்ப்பரிப்பு
மற்றும் துரியோதனனுக்காக யாரெல்லாம் போரிட வந்துள்ளனர் என்பதைக்காணும் ஆவலுடன்
மட்டுமே இருக்கிறார்.
ஆனால், தேர் களத்தின் நடுவே நிறுத்தப்பட்டு, கெளரவர்கள் தரப்பைப் பார்த்ததும், அந்த நொடிவரை தனக்கு எதிரிகளாகத் தெரிந்த அவர்கள் அனைவரும், தனது இரத்தபந்த சொந்தங்களாக அர்ஜுனர் கண்களுக்குத் தெரிகின்றனர்.
அவ்வாறு கண்டதும், உணர்ச்சி
மேலிட”இவர்கள் அனைவரும் என் இரத்தபந்த சொந்தங்கள் அல்லவா?” என மனம் வெதும்புகிறார் அர்ஜுனர்.
அவர்கள் எப்படிப்பட்ட
சொந்தக்காரர்கள்? அர்ஜுனர்
உள்ளிட்ட பாண்டவர்களிடமிருந்து அவர்களின் நாட்டை அபகரித்து, மனைவி திரெளபதியை மோசமான வகையில் அவமானப்படுத்தி, 13 ஆண்டுகள் வனவாசம், 1 ஆண்டு அஞ்ஞாத வாசம் என அனுப்பியவர்கள். அவையெல்லாம் நடந்து
முடிந்தபின்னர் மீண்டும் அவர்களின் நாட்டைப் பெறுவதற்கான முயற்சில்
கிருஷ்ணபரமாத்மா தூது சென்றபோது, ”ஐந்து
ஊர்களைக்கூட தரமாட்டோம். வேண்டுமானால், எங்களுடன் போரிட்டு வென்று எடுத்துக்கொள்ளுங்கள்” என்று
ஆணவத்துடன் பேசி அனுப்பியது கெளரவர்களான துரியோதனன் தரப்பு. அப்படிப்பட்டவர்களைக்
கண்டபின்,
அதுவும் சமாதான முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்று, வேறு வழியில்லாமல் போர்க்களம் வரை வந்தபின்பு அர்ஜுனர் சொல்கிறார்.
மகாபாரதப்போர் –
பெயர்க்காரணம்:
பாண்டவர்களுக்கும்
கெளரவர்களுக்கும் இடையிலான பிரச்சினையில் அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டால்
பரவாயில்லை. ஆனால், பாண்டவர்களுக்கு
ஆதரவாக பல லட்சம் பேர், கெளரவர்கள்
தரப்பிற்கு ஆதரவாக பல லட்சம் பேர் என இருதரப்பிற்கும் போர்க்களத்தில் அணிவகுத்து
இருக்கின்றனர். அவர்கள் ஏதோ ஒருவகையில், அதாவது தாங்களே நேரிடையாக போரில் பங்கேற்பது, தங்களின் நாட்டின் படைபலத்தை அனுப்பி உதவுவது அல்லது பல
லட்சம் போர்வீர்ர்களுக்குத் தேவையான உணவு வழங்குவது உள்ளிட்ட இன்னும் பலவகையான
உதவிகளைச் செய்வதற்காக திரண்டு பரந்திருந்தனர். அந்த போர நடைபெற்ற இடம் என்னவோ, இன்றைய டில்லிக்கு அருகிலுள்ள “அஸ்தினாபுரம்”. ஆனாலும், அன்றைய அகண்ட பாரதநாடு முழுக்க அரசாட்சி செய்து கொண்டிருந்த
பெரும்பான்மையான பேரரசர்கள் முதல் சிற்றரசர்கள் வரை அனைவரும் அந்தப் போரில்
பங்கேற்றனர். அவர்கள் அத்தனைபேர்களையும் இங்கே குறிப்பிட்டால், அந்த பட்டியல் மிக மிக நீளமாகும். அந்த அளவிற்கு பலரும்
ஒருங்கிணைந்து இருதரப்பினர் சார்பிலும் பங்கேற்றனர். மிகப்பெரும் அணிகளாக
போரிட்டனர். இதனாலேயே பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்குமான அந்தப் போரானது
“மகாபாரதப்போர்” என்று அழைக்கப்படுகிறது.
தமிழகத்தின் சார்பிலும்
மகாபாரதப்போரில் பங்களிப்பு செய்த ஒரு பாண்டிய மன்னனைப் பற்றிய குறிப்புகள் உண்டு.
அவர் பெயர் “சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்” என்பதாகும். இம்மன்னன்
மகாபாரதப்போர் நிகழ்ந்தபோது அங்கிருந்த படைப் பிரிவினருக்கு உணவு வழங்கியவன் என்று
சங்ககால புறநானூற்றுப் பாடலில் குறிப்பு உண்டு.
அர்ஜுனரின் மனச்சோர்வு:
ஒரு பிரமாண்டமான போரில், “என் சொந்தபந்தங்களுடன் போரிட வேண்டியிருக்கிறதே..”என்கிற
மனக்கிலேசம் அர்ஜுனனுக்கு வந்தது.
” எப்படி என்னுடைய
இரத்த சொந்தபந்தங்களுடன் போரிட்டு, அவர்களைக் கொல்வேன்? மூன்று லோகங்களும் கிடைத்தால் கூட எனக்கு அவற்றைப்
பெற்றுக்கொள்ள தோன்றாது. அப்படிப்பட்ட நான் வெறும் அரச சுகபோக வாழ்விற்காக, என் சொந்தபந்தங்களைக் கொல்வது? கெளரவர் களுக்குத்தான் சகோதரத் துரோகம், தர்மத்தை அழித்தல், தவறான வழிகளின் மூலம் அரசைப் பறித்துக்கொள்ளுதல் போன்ற
எதுவும் அவர்களுக்கு குற்றமாகத் தெரியாமல் போகலாம். ஆனால், அவை அனைத்துமே மகாபாவம் என்று நன்கு உணர்ந்த நான்
அவர்களைப்போல நடந்து கொள்ளலாமா? ஒருவேளை
அவர்கள் என்னை கொன்றுவிட்டுச் சென்றால்கூட தவறில்லை. ஆனால், அவர்களையெல்லாம் கொன்றுவிட்டு, அந்த ராஜ்ஜியத்தை எடுத்துக் கொண்டு நான் என்ன
செய்யப்போகிறேன்?” என்றெல்லாம்
கேள்விகளை முன் வைக்கிறார். மேலும் ஒருவேளை ஒரே குலத்திற்குள் போர் மூண்டு, குலநாசம் ஏற்படும். குலநாசத்தால் அதர்மம் பெருகும். அதர்மம்
பெருகினால் பெண்களின் கற்பு பறிபோகும். அதனால் வர்ணக்கலப்பு (வர்ண சங்கரா)
உண்டாகும்.” என்கிறார் அர்ஜுனர்.
(சமூகம் சார்ந்த
ஆய்வினை உடனுக்குடன் அவசரகதியில்
செய்வதால் சில குழப்பங்கள் வரும். ”திராவிடம், சமூகநீதி, பார்த்தீர்களா
இப்படித்தான் இந்துமதம்! அது ஜாதியைக் கொண்டுவர முயற்சிக்கிறது..” என்றெல்லாம் ஒரு
உணர்வும்,
விமர்சனங்களும் உண்டு. இந்த இடத்தில் நான் சற்று
வித்தியாசப் படுகிறேன். அதாவது, வர்ணாசிரமத்தை
இந்துமதம் சொல்லியிருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. அது ஒரு காகிதத்தில்
இருக்கக்கூடிய, தத்துவார்த்தமாக
இருகின்ற விஷயமே தவிர, நடைமுறையில்
(ground
level) அது உண்மையல்ல. அது எப்படி
நடைமுறைப்படுத்தப்பட்டது? அதனால்
என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டன? அதற்கும் இந்துமத்த்திற்கும் என்ன சம்பந்தம்? அதற்கும் நமது கலாச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்? அதை எப்படி மாற்றலாம்? என்பதையெல்லாம் இதேபகுதியில் நாம் பின்னர் காண்போம்.)
ஆக, நாம் இப்போதைக்கு புரிந்துகொள்ள வேண்டியது, அதாவது குலநாசம், தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குதல், பெண்களின் கற்புநிலைக்கு பங்கம், அதனால் வர்ணக்கலப்பு ஏற்படும். இவற்றால் குலதர்ம நாசம், ஜாதிய தர்மங்கள் அழிந்துபோகுதல் ஏற்படும். மேலும், அப்படி ஏற்பட்டால் அவ்வாறு செய்பவர்கள் நரகத்திற்குத்தான்
செல்வார்கள் என்று கேள்விப்பட்டேன்” என்கிற ஒரு சமன்பாட்டை அர்ஜுனர் சொல்கிறார்.
இந்த சமன்பாட்டை எல்லோருமே பல இடங்களில் பேசுகிறார்கள்.
(ஒரு தேசத்திற்குத்
துரோகி,
தமிழ்மொழிக்குத் துரோகி, இந்தமாதிரியான விஷயங்களுக்கு நம் மக்கள் எப்பொழுதுமே ஒரு
முக்கியத்துவம் தருவர். வேறு எதற்காகவும், யாரையும் மன்னித்தாலும்கூட இந்த இரண்டையும் ஒருபோதும்
மன்னிக்க மாட்டார்கள். நமது நாட்டின் “இஸ்ரோ” விஞ்ஞானி ஒருவர்மீது ஒரு தவறான
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பின்
அவர் அதிலிருந்து குற்றமற்றவர் என்று நிரூபணமாகி வெளிவந்துவிட்டார். அந்த
விஞ்ஞானியின் மீது பொய்யான குற்றம் சுமத்தியவர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, தற்போது நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. இது சம்பந்தமாக
ஒரு திரைப்படம்கூட வெளியானது. ஏன் அவர்களுக்கு அந்த விஷயம் குற்றமாகத் தோன்றுகிறது? தேசத்திற்கு துரோகம் செய்துவிட்டோமோ என்கிற சந்தேகத்தை
மக்கள் மத்தியில் விதைத்ததன் மூலம், அதனால் அந்த விஞ்ஞானி கூனிக்குறுகினார். ஆனால், அந்த குற்றச்சாட்டிற்கு எதிராகப் போராடி, தான் கூற்றமற்றவன் என நிரூபித்தார். இது மற்ற
விஷயங்களைப்போல் அல்ல. இங்குதான் நம் சொந்த மக்களின் குலதர்மத்திற்கு எதிராக
ஒருபோதும் செயல்பட்டதில்லை என அவரால் விளக்கப்பட்டது.)
இதையெல்லாம் சொல்லிவிட்டு
அர்ஜுனர் மேலும்,”எனக்கு
நாக்கு வறள்கிறது. கைகள் வெலவெலக்கின்றன. உடல் எரிவதுபோல் உள்ளது. ஆகவே பாவத்தைத் தரக்கூடிய
இந்த போர் எனக்குத் தேவையில்லை.”என்று கூறிவிட்டு தனது வில்லையும், அம்பையும் கீழே போட்டுவிடுகிறார்.
இத்துடன் பகவத்கீதையின்
முதல் அத்தியாயம் அதாவது 47-ஆவது
ஸ்லோகத்துடன் நிறைவடைகிறது.
போர்க்களத்தின் நடுவில்
வந்துநின்று, கெளரவர்களையும்
பார்த்தவிதம், அர்ஜுனருக்குள்
ஏற்பட்ட உணர்ச்சிக்கொதிப்பினால் வில்லையும், அம்பையும் கீழே போட்டுவிடுகிறார்.
அடுத்த அத்தியாயத்தில்
அர்ஜுனரைப்பார்த்த கிருஷ்ண பரமாத்மா, ”எழுந்திரு” என்கிறார். அதாவது அர்ஜுனர் ”கீழே அமர்ந்து
விட்டார்” என்று பொருள். இதிலிருந்து மாவீரன் அர்ஜுனனைப் பற்றி நாம் என்ன புரிந்து
கொள்ளலாம்?
”கிரிக்கெட்”
விளையாட்டில் பேட்ஸ்மேன் (Batsman) தன் கையிலிருக்கும் பேட்டை (Bat) நழுவவிட்டு விட்டால், அதை ஒரு அவமானகரமான செயலாக கருதுவர்.
”ஷட்டில்காக்” (shuttlecock)
விளையாட்டில் தான் அடித்த வேகத்தில் தன் கையில்
வைத்திருக்கும் ராக்கெட்டானது (racket) உடைந்துவிட்டாலோ அல்லது அது வெளியே போய் விழுந்துவிட்டாலோ
அந்த வீர்ருக்கு ஒரு குற்ற உணர்வு (guilt) மேலிடும்.
இப்படியிருக்க,“வில்லுக்கு விஜயன்” என்று புகழ்பெற்ற அர்ஜுனரோ… அதற்கான
பயிற்சிகளில் தேர்ந்து, நடக்க
இருப்பது ”போர்” என்று தெரிந்தும், போர்க்களத்தில் சம்பந்தமில்லாத ஒரு காரணத்திற்காக
வில்லையும், அம்பையும் கீழே
போட்டுவிடுவது எதனால்? என்பதுதான்
பகவத்கீதையின் ஆத்மார்த்தமான மேற்கோள்.
அர்ஜுனரின் அந்த செயலுக்கு
கிருஷ்ண பரமாத்மா தருகின்ற பதில். கிருஷ்ணரை “பரமாத்மா” என்றதும், பிற மதத்தவர்கள், பிற நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஏன் எனக் கேட்கக்கூடும்.
கிருஷ்ணரை நான்
பரமாத்மாவாக நோக்குவதால், எனக்கு
அவர் கிருஷ்ண பரமாத்மா!
நீங்கள் அவரை வெறும்
கிருஷ்ணராகப் பார்க்கலாம்!
அவரையே கண்ணனாகக் காணலாம்!
ஒரு குருவாகக் காணலாம்!
உங்களில் ஒரு சக மனிதனாகப்
பார்க்கலாம்!
இப்படி எந்த கோணத்திலும்
காணலாம்! ஆனாலும் அவர் சொன்ன விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம். அது அவரவரின்
தனிப்பட்ட விருப்பம்!
அர்ஜுனர் தனது வில்லையும்
அம்பையும் கீழே போட்டது எதனால்? என்பதைக்கேட்க, ”ஏன் இந்த மனச்சோர்வு?” என்று கிருஷ்ண பரமாத்மா கேட்கிறார்.
அதுவரை சொல்லப்பட்ட 20 ஸ்லோகங்களிலும், ஏதாவது ஒரு இடத்திலாவது “எனக்கு மனச்சோர்வு
இருக்கிறது”என்று அர்ஜுனர் சொல்லியிருக்கிறாரா? இல்லை.
தன் உடல் அறிகுறிகளை, உள்ளத்தின் உணர்வுகளைச் சொல்கிறார். அவரிடமிருந்து
“சொந்தக்காரனை எப்படிக் கொல்வது?” என்கிற
கேள்வி மட்டுமே வெளிப்படுகிறது! ”எனது மனம் குழப்ப நிலையிருக்கிறது” என்று கூட
கூறியிருக்கிறார். ஆனால், ”மனம்
சோர்வாயிருக்கிறது” என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை.
”அரச சுகத்திற்காக
சொந்தக்காரர்களைக் கொல்லலாமா?”என்கிற
கேள்விக்கு பதில்கூற விழைந்தால், இன்றைய
காலத்திலும்கூட சொத்துக்காக கொலைகள் நடக்கின்றன. அது ”தர்மமா? என்றால் அதர்மம்தான்.”
”சொந்தக்காரர்களைக்
கொல்லலாமா?” – இதற்கு
கிருஷ்ண பரமாத்மா பதில் சொல்லியாக வேண்டும்.
அதையும்விட துரியோதனன்
போன்ற சொந்தக்காரர்களைக் கொல்வது சரியா? தவறா?
இதெல்லாம் உண்மையான
கேள்விகள்தான்.
சொந்தக்காரனைக் கொல்வதால்
குலநாசம் ஆகுமா? இல்லையா?
அதிலும் அந்த சொந்தக்காரனே
ஒரு கெட்டவனாக இருந்தால், எப்படி
குலநாசம் ஆகும்? குலத்திற்கு
நல்லதுதானே!
மகாபாரதத்தின் இறுதியில்
நிகழ்வதும் அதுதான்! இந்தக்கேள்விக்கும் கிருஷ்ண பரமாத்மா பதில் சொல்ல வேண்டும்.
ஆனால்,
இவைபோன்ற கேள்விகளுக்கு பதில் கூறாமல், கிருஷ்ண பரமாத்மா கேட்கும் முதல் கேள்வி: “ஒரு மாவீரனுக்கு
சற்றும் அழகில்லாத மனச்சோர்வு உன்னிடம் எப்படி வந்தது?” என்று கேட்டுவிட்டு, ”முதலில் எழுந்திரு.” என்கிறார்.
அர்ஜுனரின் உடல்
நடத்தைக்கும், அவர் மனத்தில்
மண்டியிருந்த இத்தனை கேள்விகளுக்கும்
உண்மையான காரணம் என்ன? அதற்கான
தேவை என்ன? அதுதான்
”மனச்சோர்வு!”
போர்முனையில் படைகளைப்
பார்த்த மாத்திரத்தில், எதிர்தரப்பை
நிச்சயம் கொன்று விடுவோமென்கிற நம்பிக்கை இருக்கிறது. ”அப்படி அவர்களைக் கொன்றபின்
அடையக்கூடிய ராஜ்ஜியத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன்?”என்கிற சிந்தனைமுறையாக இருக்கலாம். அதனாலேயே குழப்பம்
ஏற்பட்டு,
மனச்சோர்வு மேலிடுகிறது. மேலே சொல்லப்பட்ட அத்தனை
கேள்விகளும் அணிவகுத்து வருகின்றன. அவை அனைத்திற்கும் பதில் கூற முற்பட்டிருந்தால், அநேகமாக மகாபாரதப்போரே நடந்து முடிந்திருக்கும். கிருஷ்ண
பரமாத்மாவின் நோக்கம் அதுவல்ல.
அவர்கேட்ட நுணுக்கமான
கேள்வி: “உனக்கு மனச்சோர்வு எதனால் வந்தது?” என்றுதான்! அர்ஜுனருக்கு ஏற்பட்ட மனச்சோர்வை முற்றிலும்
போக்க முற்பட்டதற்கான பதிலே, அடுத்துவரும்
17 அத்தியாயங்களும்!
அர்ஜுனரின்
“மனச்சோர்விற்கான தீர்வினை” பலவிதமான கோணங்களில், பலவிதமான பரிணாமங்களில் கிருஷ்ண பரமாத்மா தொடரும்
அத்தியாயங்களில் எடுத்துரைக்கிறார். நாம் எதிர்பார்ப்பது போல் மிக அழகாக, ஒருங்கிணைக்கப்பட்ட வரிகளாக இல்லை. ஏனென்றால், சுமார் 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்மொழியாக மட்டுமே வந்திருப்பதால், பல சுலோகங்கள் ஆங்காங்கு இடம்மாறி அமைந்திருக்கலாம்.
பகவத்கீதை சில நேரத்தில் தன் போக்கில் ஒருபக்கம் சென்றுவிட்டு, மீண்டும் திரும்பும்.
அர்ஜுனருக்கு மனச்சோர்வு
இருந்தது. அதனை கிருஷ்ண பரமாத்மா சீர் செய்தார். இது நடந்தது சுமார் அரைமணி
நேரம்தான். அதன்பின் போர் தொடங்கிவிடுகிறது. கடைசியில் ஒருவழியாக வெற்றி
பெற்றுவிடுகிறார். சரி.. ”இதெல்லாம் நமக்கெதற்கு?”என்று கேட்கலாம்.
என் சொந்த அனுபவம்:
இன்றைக்கும் தேர்வு
எழுதச்செல்லும் மாணவ, மாணவியரைப்
பார்க்கிறோம். ஐ.ஏ.எஸ், ஐ.ஐ.எம், மருத்துவத்துறை, +2 என எந்தவிதமான தேர்வாக இருக்கட்டும். தேர்வு
எழுதச்செல்லும் அன்றையதினம் காலையில் இரண்டு விதமான எதிர்வினையைக் காணலாம்.
அவற்றில் முதலாவதாக ஜுரம், வயிற்றுவலி, தலைவலி போன்ற உடல்நலன் சார்ந்த பிரச்சினைகள். இது போருக்குமுன்
அர்ஜுனரிடம் இருந்த்து. மற்றொன்று தேர்வெழுதச் செல்லாமல் தவிர்த்துவிடுவர்.
என்னைப்பற்றி நான் இப்போது
சொல்லப்போவதை நீங்கள் எந்த அளவிற்கு நம்புவீர்களோ தெரியாது! நான் முதன்முறையாக
ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக ப்ரிலிம்ஸ் பாஸ் செய்தபின், அதன்பிறகு நான்குமாத காலம் அரும்பாடுபட்டு படித்து பாஸ்
செய்திருந்தேன். அடுத்து மெயின்ஸிற்கான முதல் தேர்வை டெல்லி தேர்வு மையத்தில்
எழுதுவதற்கு, மிகவும்
பதட்டத்துடன்தான் சென்றேன். நாம் எவ்வளவுதான் படித்திருந்தாலும், முழுமையாகப் படித்துவிட முடியாது. ஏனெனில், அந்த பாடத்திட்டம் வடிவமைப்பு அப்படி இருக்கும். ஒரு
ஆட்டோவில் என் நண்பருடன் சென்றேன். ஆட்டோவில் ஏறிய மாத்திரத்தில், அவர் அம்மாவின் ஃபோட்டோவை எடுத்துப்பார்த்து அழத் தொடங்கி
விட்டார். எனக்கு “திக்”கென்று இருந்தது. காரணம், என் மனதிற்குள் அவர் அம்மா காலமாகி விட்டாரோ.. என சந்தேகம்
உண்டானது. என்னால் அவரின் நிலையை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, நான் சற்று தயங்கியபடியே, “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டேன்.
அப்போதுதான் அவர்
கூறினார்: “என் அம்மா காலமாகி பல ஆண்டுகள்ஆகி விட்டன. இருந்தாலும் இன்ன்றைக்கு
என்னவோ என் அம்மாவைப்பார்த்து அழவேண்டும் எனத் தோன்றியது.”
கேள்விகளின் பிறப்பிடம்:
மேற்கூறிய சம்பவமானது
அப்படியே பகவத்கீதையுடன் ஒத்துப்போகும். அதில் அர்ஜுனருக்கு என்ன குழப்பம்
மேலோங்கியதோ, அதே நிலைதான் என்
நண்பருக்கும்! காரணம்தான் ஏதோ ஒன்று. குழப்பம் எதிலிருந்து தொடங்குகிறது? தேர்வு பதட்டம்தான்! “தேர்வுக்காக நன்றாகப் படித்திருந்தால்
ஏன் பதட்டம் வரப்போகிறது?” நம்மவர்கள்
நினைத்துக்கொள்வார்கள். பாடங்களை முழுமையாகப் படித்திருந்தாலும் பதட்டம் வரலாம்.
நாம் எவ்வளவு படித்திருக்கிறோம்? படித்த்து
போதுமா?
நம்மைவிட பிறர் மிக நன்றாகப் படித்திருப்பார்களோ? ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால்.. அடுத்து என்ன
செய்யப்போகிறோம்? அடுத்ததாக
நமக்கு என்ன வாய்ப்பு? தொடர்ந்து
அடுத்தமுறையும் முயற்சிக்கலாமா? அல்லது
அதற்குள் வேறு ஏதாவது வேலை கிடைத்தால், அதற்குச் சென்றுவிடலாமா? வீட்டில் என்ன சொல்வார்களோ? மற்றவர்கள் என்ன கேட்பார்களோ? அவர்களுக்கெல்லாம் என்னவிதமான பதில் சொல்லலாம்? தேர்வு எழுதவே தொடங்கவில்லை. அதற்குள் வெற்றி பெறுவோமா? தோல்வி அடைவோமா? இத்தனை கேள்விகளும் எதிலிருந்து எழுகின்றன!
ஆனால் மகாபாரதப்போரே
தொடங்கவில்லை. யாரும் யாரையும் கொல்லவில்லை. அர்ஜுனருக்கு ராஜ்ஜியம்
வந்துசேரவில்லை. போரில் வெற்றிபெற்று ராஜ்ஜியம் கிடைக்கலாம். அதற்கு ஒருவேளை
கிருஷ்ண பரமாத்மாவின் பக்கதுணையால் ஓரளவு நம்பிக்கை இருந்திருக்கலாம். ஆனால், அரியணையைக் கைப்பற்றுவாரா? என்று தெரியாது. ஏனென்றால் உண்மையில் அர்ஜுனனைவிட பலம் பொருந்தியவர்
கர்ணன். திறமையினால் அர்ஜுனன் பலம் பொருந்தியவர். பெற்ற வரத்தினால் கர்ணன் பலம்
பொருந்தியவர். மேலும் கர்ணனிடம் “நாகஸ்திரம்” என்கிற பலம் வாய்ந்த ஆயுதம்
இருந்தது. அதன் தாகுதலிலிருந்து அர்ஜுனர் தப்பித்திருக்க முடியாது. அது கிருஷ்ணன்
பரமாத்மாவிற்கும் தெரிந்திருக்கலாம். அர்ஜுனனுக்கும் தெரிந்திருக்கலாம். ஆகவே
கூடுதல் சிறப்பு வாய்ந்தவர் கர்ணன். ஆகவே, ஒரு செயலை செய்வதற்கும் முன்னரே, ஒரு போர் தொடங்குவதற்கும் முன்னரே, பரீட்சைக்கும் முன்னரே அன்றையதினம் காலையிலேயே
“பரீட்சைக்குச் சென்றால் நாம் தோல்வியடைந்து விடுவோம்.” என்கிற உணர்வு இருக்கின்ற
அனைவருமே ”தலை வலிக்கிறது.. வயிற்று வலி, படித்ததெல்லாம் மறந்துவிடுகிறது”என்கிற மனோபாவம் அனைத்துமே
மனச்சோர்வின் அடையாளம் ஆகும்.
இத்தகைய மனோநிலை
எல்லோருக்குமே வருமா? என்றால், ஒரு 40
அல்லது 50 சதவீதம் பேருக்கு வரலாம். இன்னும் ஒருசிலருக்கு கூதலாகவோ
அல்லது சற்று குறைவாகவோ வரலாம்.
மனமே பலம்:
மனிதர்களின் மிகப்பெரிய
பலம் “மனம்”. மிகப்பெரிய பலவீனமும் மனமே.
ஒரு சிங்கத்தின்
கடைசிக்காலம் எப்படி எனில், அதனுடைய
நகங்கள் சுருங்கிவிடும். அதன் பற்கள் பலவீனமாகி விடும். அவற்றைக் கொண்டு அதனால் எதையுமே
செய்ய முடியாது. ஏனெனில் சிங்கத்தின் முழுபலமும் அதன் நகங்களும், பற்களுமே. புலிக்கும்கூட அப்படித்தான். பொதுவாக குரூர
விலங்குகள் அனைத்திற்குமே இதுவே நியதி.
கருடனுக்கு மிகப்பெரிய
பலம் அதன் இறக்கைகளும் அலகும்தான். கருடன் தனது 40-ஆவது வயதில் தன் அலகை புதுப்பிக்கும். அதுவே அதன் பலம்
அலகுதான் என்பதால், அது
வலுவாக இருந்தால்தான் அதனால் அதிக ஆண்டுகள் உயிர் வாழ முடியும். அதனால் அது தன்னை
புதுப்பித்துக் கொள்கிறது. ஆனால் சிங்கத்திற்கோ அல்லது புலிக்கோ அத்தகைய
வாய்ப்பில்லை. அதனால் விரைவாக ஓட முடியாத, கைக்கு அகப்பட்ட இரைகளை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.
இறுதியில் தங்கள் வாழ்க்கையின் முடிவை எட்டுகின்றன.
அதுபோல் மனிதர்களின்
மிகப்பெரிய பலம் மனம் என்பதால், வயது
ஏற,
ஏற மனம் மெல்ல பலவீனமடைகிறது. ஆகவே மனதின் சோர்வை எப்படிப்
போக்குவது? அதனை எப்படி
பலப்படுத்துவது? என வழிகாட்டிய முதல்
வேதம்,
முதல் இலக்கியம், முதல் ஆவணம், மனிதகுலத்தின் முதல் உருவாக்கம் பகவத்கீதையே. அதனாலேயே ”அது
கடவுளால் பகிரப்பட்டது” என வியாசர் எடுத்திருக்கலாம் என எனக்கு ஒரு கருத்து உண்டு.
ஏனெனில் இதை வேறு யார் சொல்ல முடியும்? கடவுளால் மட்டுமே முடியும். ஏனென்றால் மனம் என்றால் என்ன? மனதிற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன? மனச்சோர்வு என்றால் என்ன? அதைப்போக்குவது எப்படி? என்பதைப் பற்றியெல்லாம் அடுத்து வரும் அத்தியாயங்களில்
கிருஷ்ண பரமாத்மா எடுத்துரைக்கிறார்.
தொடர்ந்து நாம் கிருஷ்ண
பரமாத்மாவுடன் அர்ஜுனராக பயணிப்போம். அந்த பயணத்தில் பகவத்கீதையிலிருந்து
எனக்குப்புரிந்த விஷயங்களைச் சொல்வேன். நான் சொல்வதெல்லாம் சரிதானா? என்று சாதிக்கமாட்டேன். எனக்கு சமஸ்கிருதத்தில் அனுபவம் கிடையாது.
அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை. இந்த பகவத்கீதை குறித்து ஆதிசங்கரின்
கருத்தாக்கம், ஸ்ரீ இராமானுஜரின்
கருத்தாக்கம், மகாகவி பாரதியின்
கருத்தாக்கம் ஆகியவற்றை பகிர்வேன். சமஸ்கிருதத்தில் இருந்து அவர்கள் கூறிய
கருத்துக்களை தமிழ்வழியாகவும், ஆங்கிலம்
வழியாகவும் நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்லப்போகிறேன். ஒருசில முக்கிய
கருத்துக்களை நேரிடையாக சமஸ்கிருதத்தில் இருந்து கையாளலாம். ஏனெனில் அதுவே மூலம்.
ஆனால்,
அதற்காகவே சமஸ்கிருத்த்தைப் படித்தே ஆக வேண்டும் என்கிற
கட்டாயமில்லை. மீண்டும் சொல்வதனால், substance is very
important, not form. Form is important for, to communicate with next person,
next generation. இதையே நான் பகவத்கீதையை
உங்களுக்கு சொல்லித்தருகிறேன் என்றால் சமஸ்கிருத ஸ்லோகங்கங்கள் மூலமாகவேதான்
சொல்லித்தர முடியும். ஆனால், நான்
பகவத்கீதையின் பொருளை மட்டும்தான் சொல்ல இருப்பதால் சமஸ்கிருதம் அவசியமில்லை.
மனச்சோர்வு ஒருசிலரை
தற்கொலை வரைக்கும் கொண்டு செல்கிறது என்பது உண்மை. எனது இனிய நண்பர் விஜயகுமாரை
இழந்தபின்தான் எனக்கு இது தோன்றியது.
மனச்சோர்வு வந்தவுடனே
எவரும் தற்கொலை செய்வதில்லை. ஆனால், அதுவே ஒரு நோயாக உருவெடுத்து, பல சிக்கல்களுக்கு ஆளாகித்தான் தற்கொலை வரை செல்கிறார்கள்
என்று உணர்கிறேன்.
பகவத்கீதை என்பது
மிகப்பெரிய ஆவணம். கடவுளால் சொல்லப்பட்ட்து. இதுபற்றி நாம் பேசலாமா? வேண்டாமா? எனது
இந்த 45 வயதில் பேசுவது முடியுமா? அல்லது 65
வயதில் பேசலாமா? என்றெல்லாம் நான்
பலமுறை யோசித்திருக்கிறேன்.
”பகவத்கீதையை மிகவயதான
காலத்தில் படிக்க வேண்டியது. சிறுவயதிலேயே அதைப்படித்தால் சாமியாராகி
விடவேண்டியதுதான்”என என் பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன். ஆனால், அது உண்மையைல்ல. சுமார் 15, 16 வயதிலோ, அதிகபட்சம்
20 வயதிற்குள்ளாகவோ படித்து முடித்துவிட வேண்டும் என்றுதான்
நான் கருதுகிறேன்.
நமது இந்திய மண்ணில்
தோன்றிய ஞானநூல் பகவத்கீதை. அதைப்பற்றி பலரும் அவரவர் கோணத்தில் பேசுகிறார்கள்.
இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இதுவரை
அதன் முழு சாராம்சத்தையும் எவருமே தந்ததாக நான் உணரவில்லை. இன்றைய நம் நடைமுறை
வாழ்க்கையுடன் இணைத்துச் சொல்ல விரும்புகிறேன். இம்முயற்சியில் ஏதேனும் தவறுகள்
தென்பட்டால் இறைவன் நிச்சயம் மன்னிப்பார். நீங்களும் அவ்வண்ணமே என்று நான்
நம்புகிறேன்.
அறிவும்; ஞானமும்:
அறிவு என்பது ஒவ்வொரு துறை
சார்ந்த ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலமோ பெறுவது. ஆனால், எந்தத்துறையில் ஒருவர் சிறந்த அறிவுடன் விளங்கினாலும், அவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.பி.எஸ்
போன்ற பொறுப்புகளில் இருப்பவர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் அனைவருமே யாரோ ஒரு
சாமியார் காலில் விழுகிறார்கள். சாமியார் என்ன படித்திருக்கிறார்? மெத்தப்படித்தவர்கள் தஙளின் அறிவைவிட, வேறு ஒன்றை நாடுகிறார்கள். அதை பயம் என்று கூறமுடியாது.
இமயமலைத்தொடர் பல்வேறு சிகரங்களைக் கொண்டது. அவற்றில் எவரெஸ்ட் போன்ற சிகரங்கள்
சற்று உயரமாக, தனித்துவமாக எழும்பி
இருக்கிறதோ.. அதுபோல், ஒவ்வொரு
துறை சார்ந்த அறிவிற்கும் பொதுவாக, எல்லாவற்றிற்கும் மேலாக, மேம்பட்ட அறிவுநிலை ஒன்று உண்டு. அதையே நமது
முன்னோர்கள்”ஞானம்” என்று சொல்லி
இருக்கிறார்கள்.
மெத்த அறிவின் மூலம் ஞானம்
வரலாம். அப்படி இல்லாமல், அதாவது
எந்த அடிப்படை படிப்பும் இல்லாமலேயே நேரிடையாக ஞானம் வரக் கூடும்.
புத்தபிரான் எங்கிருந்து
வந்தார்?
அவர் ஒரு நாட்டின் இளவரசர்!
பட்டினத்தார் எங்கிருந்து
வந்தார்?
அவர் கடல் கடந்து, லட்சங்களில் கோடிகளில் வணிகம் செய்தவர்! திடீரென அவருக்கு
ஞானம் ஏற்படுகிறது!
ஞானம் வந்துவிட்டாலே
சாமியாராக வேண்டுமென்கிற அவசியம் கிடையாது. அவருக்கு இருந்த சராசரியான
அறிவைத்தாண்டி ஒரு புரிதல் ஏற்படுகிறது. ”நான் உலகத்தைப் புரிந்து கொண்டேன்”
என்றார்.
ஆக, அறிவு
என்பது பொதுவாக நமது ஐந்தறிவின் மூலம் படிப்பதனால், கேட்பதனால், உணர்வதால், புரிந்து
கொள்வதால் வருகிற விஷயங்கள்! இவற்றைத்தாண்டிய ஞானம் என்கிற விஷயம் உள்ளது! அது
உணர்வால் மட்டுமே உண்டாகிறது. அது தியானம் போன்றவற்றால் கைகூடுகிறது!
பகவத்கீதை என்பது அறிவைத்தாண்டி மனத்துடன் பேசுவது. ஞானம்
சார்ந்து அமைகிறது. ஆகவே, இது
கடவுள்,
மாந்திரீகம், தாந்திரீகமோ அல்ல என்பதை நாம் பின்வரும் பகுதிகளில்
புரிந்து கொள்வோம்.
-------------------------
No comments:
Post a Comment