கிருஷ்ண தரிசனம் -3 (பகவத் கீதை)
நாம் தொடர்ந்து பகவத் கீதையின் சாராம்சங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். முதலில் அத்தியாயம் 1 அறிமுகம், அதைத்தொடர்ந்து அதே அத்தியாயத்தின் அம்சங்களைப் பர்த்தோம். பின் அத்தியாயம் 2 இல் முதல் பகுதியில் பொதுவான அம்சங்களைப் பார்த்தோம். அதில் மொத்தம் 71
(76?) ஸ்லோகங்கள். அதில் 10 ஸ்லோகங்களைப் பற்றி பார்த்தோம். அதில் இரண்டு மூன்று விஷயங்களை விவாதிக்க வேண்டும். திருக்குறளுக்கு
உரை சொல்வதுபோல் பகவத்கீதையை அணுக முடிவதில்லை. ஒரு குறளுக்கு ஒரு உரை என்பதுபோல் பகவத்கீதையில் சொல்லிவிட முடியாது. சில நேரங்களில் மீண்டும் திரும்பி வந்து செல்ல வேண்டியிருக்கும்.
மொத்தம் 18 அத்தியாயங்களையும் முழுமையாகப் பார்ப்பது என்பதே ஒரு சாதனைதான். அதற்கான பயணத்தின் போது, தொடர்ச்சி விட்டுப்போகலாம் என்கிற விஷயமும் இருக்கிறது. அதுமட்டுமின்றி இது பகவத்கீதையில் உள்ளதா? என்கிற கேள்வியும் எழக்கூடும். பகவத்கீதையையொட்டிய
ஒலிபெயர்ப்பு (Transliteration), மொழிபெயர்ப்பு (Translation),
கொஞ்சம் கருத்துகள் பற்றிய விவாதங்கள் இவர்றுடன் மேலும் சில விவாதங்களை மீதமுள்ள கருத்துகளை பின்னர் தொடர்ந்து பார்க்கலாம்.
குறிப்பாக கடந்தமுறை இரண்டு விஷயங்களை நான் சொல்ல நினைத்தேன். இரண்டாவது அத்தியாயத்தை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஒரு புன்னகையோடு ஆரம்பிப்பார். அதை மந்தகாசப்புன்னகை, மந்திரப்புன்னகை
என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இதற்கு உதாரணமாக பக்தகோடிகள் சந்தேக்க்கேள்விகள்
கேட்கும்போது, ஒரு புன்னகையைத் தவழவிட்டு அதன்பின்னரே பதில் கூறுவார்கள் என்றேன். இது தத்துவவியலில் உள்ள ஒரு சிறப்பம்சம். நானே இதை பலரிடம் நேரில் பார்த்திருக்கிறேன். இதில் ஆரம்பப்புள்ளி கிருஷ்ண பரமாத்மாவாகும் (2:09) அளவிற்கு எனக்கு ஒரு சிந்தனை அல்லது யோசனை உண்டு. ஆகவே அந்தப்புன்னகையின்
உள்ளர்த்தமென்ன என்பது ஒரு விவாதப்பொருள்!
இரண்டாவதாக குறிப்பாக இந்த இரண்டாவது அத்தியாயத்தில், நான் உன்னைச் சரணடைகிறேன். நீ எனக்கு சரியான தர்மத்தைக்காட்டு”
என்று அர்ஜுனன் இங்குதான் கேட்கிறார். நீங்கள் உங்கள் வீட்டுக்குழந்தைகளிடமோ அல்லது நட்பு வட்டங்களிலேயோ பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்னதான் பேச முயற்சித்தாலும்,
அவர்கள் நீங்கள் பேசுவதை அவர்கள் முழுமையாக கேட்கிறார்களா என்ன? அவர்கள் கேட்டுக்கொள்ளக்கூடிய மனோநிலை அவர்களுக்கு இருந்தால்தான் அது நடக்கும்!
ஒரு ஜென் கதை இருக்கிறது. அந்த கதையில் ஒரு சுவாமிஜியிடம் சென்ற ஒருவன் அறிவுரை கூறுமாறு கேட்பான். முதலில் அவர் ஏதும் கூற மாட்டார். அவன் அடுத்து இரண்டு, மூன்று அவரிடம் சென்று கேட்பான். அப்போதும் அவர் ஏதும் கூறமாட்டார். நான்காவது முறை அவன் சென்ற போது, அந்த குரு அவன் எதிரே ஒரு கோப்பையில் முழுவதும் தேநீரை ஊற்றி வைத்து, அதில் மேலும் தேநீரை ஊற்றுமாறு கூறுவார். உடனே அவன், ‘அப்படி நான் ஊற்றினால் தேநீர் கீழே சிந்தி வீணாகி விடுமே”என்பான். அதற்கு அவர், ’உனக்கு நான் அறிவுரை கூறுவதுகூட அப்படித்தான்”என்பார் குரு. அவன் ஏற்கனவே முழுமையாகத்தான்
இருக்கிறான். அவன் கேட்டுக்கொள்ளும் மனோநிலையில் இல்லை. இதுபோலத்தான் நாம் நம் குழந்தைகளிடம் சொல்வதாகட்டும், வகுப்பறையில் ஆசிரியர் மாணவ, மாணவியருக்கு சொல்வதாகட்டும் அவை எல்லாமே இதே வகையில்தான் அமைந்திருக்கின்றன! அவரவர் கடமையை அவரவர் முடித்துவிட்டுப்போவது போல் இருக்கும்.
சரி. இதை எப்படி வேறுபடுத்தி பார்ப்பது?
பகவத்கீதையில் முக்கியமான ஒரு இடம் இது. ஒரு குருவிற்கும் சிஷ்யனுக்கும் இடையே இருக்கும் உறவு.
ஒரு டீச்சர் தன்னிடம் படிக்கும் மாணவ,மாணவியரை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? இந்த காலத்தில் பள்ளிகளில் அட்மிஷன் போடுவதுபோல், அதாவது இந்த காலத்திலும் பி.ஹெச்.டி படிப்பிற்கு தங்கள் மாணவர்களைத்
தேர்ந்தெடுக்கும் வழக்கம் பேராசியர்களிடத்தில் இருந்து வருகிறது.
அந்த காலத்திலும் இதே போல் ஒரு குருவானவர் தன் மாணவனைத் (சிஷ்யனை) தேர்ந்தெடுக்கும்
வழக்கம் இருந்திருக்கிறது.
அவருக்கு திருப்தியளிக்காத
சிஷ்யனை “நீ சரிபட்டு வரமட்டாய்”என திருப்பி அனுப்பும் வழக்கமும் உண்டு. அதில்தான் நிறைய பிரச்சினைகளும் இருந்தன.
”உன்னைச் சரணடைந்தேன்” என அர்ஜுனர் சரணாகதி அடைந்ததும் தான் பீஜமந்திரத்தின்
மூலம் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா பேச ஆரம்பிக்கிறார். இனிமேல் தான் கூறுவதை அர்ஜுனர் கேட்பார் என்று கருதுகிறார். பகவத்கீதையில் இது போன்ற அம்சங்கள் தொடரும் சின்னச்சின்ன வாதங்களில் வார்த்தைகளாய் வரும். ஆன்மீகத்தைப்பொறுத்தவரை இதையே ”தீட்சை பெறுதல்” என்று அழைக்கிறோம். ”தீட்சை பெறுதல்” என்றால் குருவானவர் தன்னுடைய தெய்வீக சக்தியை தன் சிஷ்யருக்கு தந்துசெல்வதுபோல்
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனல் அது அப்படி அல்ல. இந்த செயல்முறையானது அவர்கள் மனதில் இருக்கக்கூடிய ஆசார, அனுஷ்டானங்கள்,
வழிமுறைகள், பயிற்சி போன்றவை. முதலில் இவை அனைத்தும் வருமா? வராதா? என்பது தெரியாது. ஞானம்(Enlightment) கிடைக்கப்பெறுமா?
தெய்வீகம் (Divinity) கைகூடப்பெறுமா?
என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், ”தகுதியான நிலையை அடைந்தபின்பே ஒருவனுக்கு தீட்சை வழங்க வேண்டும். மற்றவர்களுக்கு தீட்சை தரக்கூடாது” என்கிற கோட்பாடு உண்டு. ஏனென்றால் தீட்சை பெற்றவர்களுக்கு
ஒரு கட்டுப்பாடு வந்துவிடும். அதை அவன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு அவன் தொடர்ந்து கடைப்பிடித்தால்
தன்னை அவன் அந்த மடத்தினுடைய அல்லது அந்த குருபரம்பரையினுடைய வரிசைக்கு உயரிய நிலைக்கு உரியவராவதற்கோ (Claim) அதன் பலன்களை அனுபவிப்பதற்கோ
(Privilege) தகுதியடையலாம். இந்த அம்சங்களே “தீட்சை” என்பதில் இடம்பெறுகின்றன.
இதுவுமே ”சரணாகதி தத்துவத்தின்” ஒரு கூறுதான். அதாவது “”நான் கேட்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் கூறுங்கள்” என்கிற பொருள்படும். பகவத்கீதையும் இந்தா அடிப்படையில்தான் ஆரம்பிக்கிறது.
(பகவத்கீதைக்கு நிறைய
மொழிபெயர்ப்புகள், எளிமைபடுத்தப்பட்ட நூல்கள் என
எவ்வளவோ உள்ளன. அதை
நீங்களும் எளிதாக படித்துவிட முடியும். ஆனால், என்னுடைய குறிக்கோள் என்னவென்றால் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களையும் தமிழில், என்னுடைய அனுபவங்களையும் சொல்ல
வேண்டும் என்பதுதானே தவிர
வேறொன்றுமில்லை. )
தொடர்ந்து நாம் பார்க்கவிருக்கும் விஷயங்கள் தத்துவம் சம்பந்தமானது.
சுவாரஸ்யம் சற்று வறட்சியாகவே இருக்கும். ஆனல் எனக்குப் பிடித்திருக்கிறது!
”இவ்வளவு கூறுகிறீர்களே..
நீங்கள் பகவத்கீதையின் கருத்துகளை பின்பற்றுகிறீர்களா?” என்றும், அவற்றை உணர்வுப்பூர்வமாக
அனுபவித்து விட்டீர்களா?” என்று சிலர் கேட்கக்கூடும்!
நம் ஆன்மீகத்தில்
“அறிதல் மற்றும் உணர்தல்” என்கிற இரண்டு விஷயங்கள் உண்டு.
”அறிதல்” என்பது நம் புலன்களால் தெரிந்து கொள்வது.
”உணர்தல்” என்பது உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைவது. அறிந்தவற்றில் உள்ளார்ந்து இருப்பது. அவ்வாறு இருக்கிறோமா? இல்லையா? என்பது அவரவர் மட்டுமே அறிவர்!
(இந்த செயல்பாடு சம்பந்தமாக பரிசோதனையை எனக்கென நான்
செய்துகொள்வதில்லை. எனக்குத்தெரிந்தவற்றை மட்டுமே நான்
கூறுகிறேன். அதில்
உணர்தல் இருக்கிறதா? இல்லையா? என்பது நீங்கள் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்கமுடியும். அது
நான் சார்ந்த விஷயமாக இருக்காது!)
தன்னை அர்ஜுனர் சரணடந்துவிட்டார். அந்தச்சூழலில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பணி என்ன? அர்ஜுனரை போருக்கு தயார்ப்படுத்துவதே. அவருக்கு பலவிதமாக தைரியம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
முதலில் ‘மரணம்”குறித்த பயத்திலிருந்து அர்ஜுனரை மீட்டெடுக்க வேண்டும்!
அடுத்து “இவர்களையெல்லாம் கொன்றுவிடுவேனே..”என்கிற குற்ற உணர்விலிருந்து அர்ஜுனரை வெளியே கொண்டுவர வேண்டும்!
பகவத்கீதையின் கட்டமைப்பு எப்படி இருக்கிறதென்றால், அதன் “நோக்கம்” அர்ஜுனரை போருக்குத் தயார்படுத்துவது.
இடையிடையே தத்துவம்
(Philosophy) வரும். அவற்றினுள் ஏதாவது ஒரு யோசனை (Concept)
மிளிரும். இவை மகாபாரதத்தின் இந்தப்பகுதியில்
வருகின்றன. இதுதவிர மற்ற கீதைகள், வேத உபநிஷதங்கள் உள்ளன.
அத்தியாயம் 2- இல் “ஆத்மா” என்கிறோம். இது உபநிஷத்தில் இருப்பது தான். உபநிஷத்தை”வேதத்தின் சாரம்” என்று கூறுகிறோம். ஏனென்றால் வேதத்தில் பரவிநிறைந்துள்ள
விஷயங்கள் அனைத்தும் யோசனைகளாக, விவாதங்களாக உபநிஷத்தில் வருகின்றன. அந்த விவாதங்கள் கூட ஒரு கட்டத்தில் நின்றுவிடுகின்றன.
இந்த சாராம்சங்கள் உபநிஷத்திலிருந்து பகவத்கீதைக்கு வந்ததா? பகவத்கீதையிலிருந்து
உபநிதங்களுக்கு வந்ததா? என்பதெல்லாம் காலத்துடன் தொடர்புடைய கூறுகள். (இதனை கடவுள்தான் வழங்கியிருக்கலாம் என்று
கருதுகிறோம் என்றால், இந்த
அளவிற்கு உயரிய
தத்துவங்களை மிகச்சாதாரண மனிதர்கள் கூறியிருக்க முடியாது என்கிற அடிப்படையில்தான். இதுகூட கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான். இப்பொழுதெல்லாம் “சனாதனதர்மம்” சம்பந்தமான விவாதங்கள் நிறைய
நடைபெற்று வருகின்றன. அதைப்பற்றி அதற்கான காலகட்டம் வரும்போது நாம்
விவாதிக்கலாம். இப்போதைக்கு நம்
தரம்ம் என்ன
கூறியிருக்கிறது என்று
பார்க்கலாம்.)
இரண்டாவது அத்தியாயத்தில் பகுதி 2- இல் 1 ஆம் ஸ்லோகத்திலிருந்து 25 ஆவது ஸ்லோகம் வரையிலும் என்ன நடந்திருக்கிறது
என்று பார்த்தால், ஆத்மாவைப்பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. அதில் கிருஷ்ன பரமாத்மா அர்ஜுனரைப்பார்த்து, “நீ அதிகமாகப் புலம்புகிறாய்.
இறந்தவர்களைப்பற்றியோ, இருப்பவர்களைப்பற்றியோ அறிவாளிகள் ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள். நீ ஏதோ பண்டிதர் போலும் பேசுகிறாய். யாருக்காகவெல்லாம் துக்கப்படக்கூடாதோ
அவர்களுக்கவெல்லாம் நீ துக்கப்படுகிறாய்.” என்கிறார்.
மேலே கூறப்பட்டுள்ளதைப்பற்றி நாம் என்ன புரிந்துகொள்கிறோம்? இறந்தவர்களைப்பற்றி
கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் போனவர்கள் மீள்வதில்லை. கவியரசு கண்ணதாசன் கூறியதைப்போல்
“அந்தக்கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது!” என்பது சரி. ஆனால் இருப்பவர்களைப் பற்றியும் கவலைப்படக்கூடாதென்றால் அது விவாததிற்குரிய விஷயமாகும். இதை தத்துவார்த்தமாக
பின்னர் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
”துக்கப்பட தேவையில்லாதாவர்களுக்காக துக்கப்படுகிறாய்.
பண்டிதர்கள் போல் சாதக, பாதாகங்களைப்பற்றி
பேசிக்கொண்டிருக்கிறாய். உனது வேலை இதுவல்ல. நீ பண்டிதர் அல்ல. ஒரு போர் வீரன். இந்த இடத்தில் நீ வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொள்ள வேண்டும்.’ என்று கூறிவிட்டு, மேலும் ”இறந்தவர்கள், இருப்பவர்கள் பற்றி வேறுபடுத்திப்பார்த்தால் ‘ஆத்மா’ஒன்றே வித்தியாசமாகும்.
உடம்பு என்பது ஒரு கட்டத்தில் அழிந்து விடுகிறது. ஆனால், ஆத்மா ஒருபோதும் அழிவதில்லை. ஆக, இறந்தவர்களின் ஆத்மா இருக்கிறது. இருப்பவர்களுக்கும் ஆத்மா இருக்கிறது. இறந்தவர்களுக்கு
உடம்பு இல்லை. இருப்பவர்களுக்கு உடம்பு இருக்கிறது” என்கிற கருத்தினைத்தான் அடுத்துவரும் சில ஸ்லோகங்களில் விளக்குகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
எப்படி விளக்குகிறார்?
உடம்பானது எப்படி இளமை, வாலிபம், முதுமை என பருவங்களைக் கடந்து போகிறதோ அதேபோல் ஆத்மாவும் ஒவ்வொரு பருவங்களைக்கடந்து
போகிறது. அதன் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு உடம்பை எடுத்துக் கொள்கிறது. அந்த பருவம் முடிந்தவுடன் இன்னொரு உடம்பை எடுத்துக் கொள்கிறது. இந்த பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இத்தகைய தொடர்ப்பயணத்தில் நிலையானது ”ஆத்மா.” நீயும் நானும் ஒருபோதும் இல்லாமல் போனதில்லை. காரணம், நம் ஆத்மா இருந்துகொண்டே இருக்கிறது. இப்படிக்கூறுவதன்
மூலம் ஆத்மா என்றும் நிலையானது என்கிற தத்துவத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நிலைநிறுத்துகிறார்.
நம் எல்லோருக்குமே மரணத்தைப் பற்றிய பயம் உண்டு. பயத்தின் அளவுகளில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கக்கூடும்.
மரணத்தைப்பற்றிய பயமேஎ இல்லாமல் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் ஏற்கனவே கடவுளாகவே விளங்குகிறான் என்றுதான் பொருள். மரணத்தைப்பற்றிய பயம் எப்போது விலகும்? என்றால் உடல்தானே அழியப்போகிறது? நீ ஆத்மாவாக இருக்கத்தானே செய்வாய்! காரணம் உன் ஆத்மா என்பதுதானே நீ! உடம்பு என்பது நீயல்ல.”என்கிறார்.
(”ஆத்மாவே மூலம்” என்பதுதான் இந்துமதத்தின் ஆதிமூலமான தர்க்கமாகும். ஆத்மாவே பாவ,புண்ணியங்கள், மறுபிறப்பு நம்பிக்கை போன்ற
விஷயங்களுக்கு பொறுப்பேற்கிறது. உடம்பு ஒருபோதும் இவற்றை சுமப்பதில்லை. தன்
மறுபிறப்பின்போது ஆத்மாவே மீண்டும் அவற்றை சுமக்கிறது. இதுவே
இந்துமதத்தின் ஆழமான
நம்பிக்கை.
இது சரியா? தவறா? என்பதையெல்லாம் நாம்
பின்னர் விவாதிக்கலாம்.)
ஆத்மா அழியாது என்பதனால், இறந்தாலும்கூட துரியோதனன் அழியப் போவதில்லை. நீ கொல்லப்போவது அவனுடைய உடம்பை மட்டுமே. துரியோதனன் இறக்கப்போகிறான்.
அவ்வாறு இறந்தபின் அவன் தற்போதைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார்போல் அனுபவிக்கப்போகிறான்! அதற்காக நீ ஏன் கவலைப்படுகிறாய்?” என்கிறார் கேட்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
அடுத்ததாக ஒரு துக்கம் வருகிறது. அந்த துக்கத்தின் மூலம் எத்த்னையோ பிரச்சினைகள் வருகின்றன. சுகமும் துக்கமும் குளிருக்கும் வெப்பத்திற்கும்
ஒப்பானவை. நாம் அதிக குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இல்லாத ஒரு சரிசமமான நிலையில் இவையிரண்டையும் அனுபவிக்க ஆசைப்படுகிறோம்.
சுகமாக இருந்தால் மகிழ்ச்சி; துக்கமிருந்தால்
வருத்தம். ஆனால் இவையிரண்டும் மாறி மாறித்தான் வரப்போகின்றன.
குளிரும் வெப்பமும் உலகின் எல்லா பொருட்களையும் பாதிக்கின்றன.
மரக்கட்டைகளை, பாறைகளைப் பாருங்கள். அவை வளிமண்டலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு குளிரில் சுருங்கியோ; வெப்பத்தில் விரியவோ செய்கின்றன. இதேபோல் சுகம் மற்றும் துக்க உணர்வுகள் மனித உடலை பாதிக்கின்றன.
ஆனாலும் இது தற்காலிகாமானதே!
“இந்த சுகங்களையும், துக்கங்களையும் தாங்கிக்கொள்ள பழக வேண்டும் நீ.. சுகம் கிடைத்தபோது கொண்டாடினாய். துக்கம் வரும்போது மட்டும் ஏன் கவலையால் வாடுகிறாய்? ஐயோ நான் கொல்ல வேண்டுமா? என ஏன் யோசிக்கிறாய்?
நாம் அண்ணன் தம்பிகளாயிற்றே.. என ஏன் தயங்குகிறாய்?”
என்பது இரண்டாவது தத்துவம். சுகங்களையும் துக்கங்களையும் சமமாக பாவிக்க வேண்டும். குளிரையும் வெப்பத்தையும் பொருட்கள் கடந்து போகின்றனவோ அதேபோல் மனிதன் சுகத்தையும் துக்கத்தையும் கடந்துபோனால்தான்
அவன் ”விவேகி”. அப்படிப்பட்டவனே ‘மரணமில்லா பெருவாழ்வு வாழக்கூடியவன்”என அடுத்தடுத்து வரவிருக்கும் ஸ்லோகங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
உடல் அழியக்கூடியது.
ஆத்மா அழியாதது. அது என்றென்றும் நிலைத்து இருக்கக்கூடியது!
நிலைத்து நிற்க்க்கூடியதென்றால் அது எப்படி பிறக்க முடியும்? அதற்கு பிறப்புமில்லை. இறப்புமில்லை.
அது நிரந்தரமானது.
நிரந்தரமானதென்றால் என்ன அர்த்தம்? நமக்கும் முன்னரே இருந்தது! ஆக பழமையானது. நிரந்தரமானது என்றாகிறது. அதை ஆக்க முடியாது. அழிக்கவும் முடியாதது. நமக்குப்பிறகும்
இருக்கப்போகிறது என்று அர்த்தம். சரி.. அது எங்கிருக்கிறது?
என்று கேட்டால், அது கண்களால் காணவே முடியாது. உன் சிந்தனைக்கு எட்டாதது” என்று ஆத்மாவைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் விவரிக்கிறார்.
(இந்த
இடத்தில்தான் நாம்
விஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு வெளியேறுகிறோம். ஏற்கனவே கூறிய
அனைத்துமே விஞ்ஞானத்தில் உள்ளது. இன்றைய வ்ஞ்ஞானக்கூற்றின்படி “சக்தி” (Energy) என்கிற ஒன்றை
[you cannot create or
you cannot destroy] ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. இது
விஞ்ஞானத்தின் நியதி. Energy will be transformed from one part of the
energy mode to another mode. ஆத்மாவை ஒரு
சக்தி(Energy) என்கிற வகையில் பார்த்தோமானால் ஆத்மாவைப்பற்றி இதுவரை கூறப்பட்டவை அனைத்துமே விவரிக்கப்பட்டுவிடும். ஆனால் ”கண்களால் காணமுடியாது. சிந்தனைக்கு எட்டாதது” என்கிற விளக்கம் மட்டும் ஆன்மீகத்தின் பக்கம் அதாவது விஞ்ஞானத்தின் பக்கமிருந்து மெய்ஞானத்தின் பக்கம் அணிவகுக்கிறது.
”ஆத்மாவின் இயல்பை நாம் “சக்தி” என்று பொருள் கொண்டால் அதை ஆயுதங்கள் வெட்டாது. நெருப்பு எரிக்காது. நீர் நனைக்காது. காற்று உலர்த்தாது.” என்று ஒரு ஸ்லோகத்தில் கூறும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, அடுத்த ஸ்லோகத்தில், அதே கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்.
(எதற்காக ஒரே
கருத்தை இரண்டுமுறை கூறியிருப்பார்? என்றால், உதாரணத்திற்கு ஆத்மாவை நெருப்புதான் எரிக்க வேண்டுமென்பதில்லை. காற்று தான்
உலர்த்த வேண்டுமென்பதில்லை. வேறு
எதுவும் கூட
அதைச்செய்து விட
முடியாதா? என்று
நாம் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக மீண்டும் நம்மில் பதியவைக்கிறார் என்றே
நான் கருதுகிறேன். இவை
அனைத்தையும் நாம்
இன்றைய விஞ்ஞானரீதியிலான கோணத்தில் ஆத்மா
என்பது ”Energy quotient or value of Energy (சக்திக்கான அளவுகோல் அல்லது சக்தியின் மதிப்பு) என்று
பொருள் கொள்ளலாம். இந்த
சூத்திரமானது விஞ்ஞாத்தில் அப்படியே பொருந்தும். ”காண முடியாது. சிந்தானைக்கு எட்டாது.”என்பவை மட்டுமே இந்த
வரையறைக்குள் வராதவை. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகூட (theory of relativity) பல குழப்பங்களுக்கு ஆட்பட்டிருக்கிறது. பலரும் அவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம் அல்லது முயற்சிப்பதில்லை. அந்த
அளவிற்கு அவை
கடினமான கோட்பாடு (tough theory) என்கிற பிம்பம் உள்ளது. அந்த
நேரத்தில் உட்கார்ந்து யோசிக்கவேண்டாம் என்பதற்காக கூறி
இருக்கலாம் என்றுதான் நான்
பார்க்கிறேன்.)
மனிதனின் அடையாளமே “ஆத்மா”. துரியோதனன், அர்ஜுனர், பீமன், துச்சாதனன் என ஒவ்வொருவரும் ஒரு ஆத்மா! நீ அவர்களைத்தான் கொல்லப்போகிறாய். அவர்களின் ஆத்மாவை அல்ல! ஆத்மா நிரந்தரமானது.
அவர்களின் உடம்பு அழிக்கப்படும்போது அவர்களின் ஆத்மா மீண்டும் வேறொரு பிறப்பெடுத்து தன் போக்கில் போகப்போகிறது. அதைப்பற்றிய கவலை உனக்கெதற்கு? அதேபோல் ஒருவேளை நீ போய்விட்டாலும்,
இன்னொரு உருவத்தை, ஏதோ ஒரு வடிவத்தை எடுத்துக்கொண்டு
இங்கேயேதான் இருக்கப்போகிறாய்.
இதை உண்மையாக நம்பக்கூடியவர்களுக்கு ”தான் ஒருபோதும் இறப்பதில்லை. உடல்தான் போய்விடுகிறது. ஆத்மா நிலைத்து நிற்கிறது”என்கிற புரிதல் இருப்பதால் அவர்களுக்கு மரணத்தைப்பற்றிய பயம் இருக்காது. இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன்னைச் சரணாகதியடைந்த அர்ஜுனருக்கும் கூற விழைகிறார்.
இரண்டாவதாக, இந்தப்பிறவியில்
அவன் செய்த பாவத்திற்கு, அதர்மத்திற்கு அவன் தண்டனை பெறப்போகிறான்! போரில் அவன் உயிர் துறக்கப்போகிறான். அதைப்பற்றிய குற்ற உணர்வு ஏதும் தேவையில்லை. அது கடமையாக எதிரே நிற்கிறது.
‘நீதான் கொல்லப்போகிறாய்” என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவது, “அர்ஜுனர் என்கிற உடம்புதான் கொல்லப்போகிறது. அர்ஜுனரின் ஆத்மா அல்ல. ஆத்மா கொலையாளியுமில்லை.
அது கொல்லப்படுவதுமில்லை. இந்த உலகத்தில் இவையெல்லாம் உலகியல் நடைமுறை. உன் எதிரே இருக்கக்கூடிய கடமை. அந்த கடமையை செய்துமுடித்து சென்றுகொண்டேயிரு”
என்கிறார்.
அர்ஜுனரின் மரண பயத்தைப் போக்குவதற்காகவும், தான் இன்னொருவனைக் கொல்லப் போகிறோமே என்று தவிக்கும் அவரது குற்ற உணர்வை நீக்குவதற்காகவும் கிருஷ்ணர் கூறியவற்றில் இதுவரை எத்தனை தத்துவங்கள் பொதிந்துள்ளன?
ஆத்மா நிரந்தரமானது,
நிலைத்து நிற்பது! என்பது முதலாவது.
அடுத்து “சுகம் துக்கம் ஆகிய இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும்”என்பது.
மூன்றாவதாக ஆத்மாவானது “சக்தியின் அளவுகோல்” ஆகிய மூன்று தத்துவங்களைத்தான் கிருஷ்ண பரமாத்மா கூறிமுடிக்கிறார்.
இவற்றை உபநிஷதங்களின் தத்துவங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது நமக்கு ஓரளவு மெய்ஞானப்புரிதல்
உண்டாகிறது. போனா
2 ஆவது அத்தியாயத்தின் ஸ்லோகம் 25 முதல் 71 வரையுள்ளன. பகவத் கீதையின் போக்கிலேயே சென்று பார்த்தால், அர்ஜுனருக்கு தைரியமூட்டுவதற்கு கிருஷ்ணபரமாத்மா
கூறியது என்னெவென்று பார்த்தால், ”சரி.. நான் கூறிய ஆத்மா உள்ளிட்ட எதையும் நீ நம்பவில்லை. பிறப்பு இறப்பு என்பது ஆத்மாவிற்கும் உண்டு என்று நினைத்துக்கொண்டால்
ஏன் வருத்தப்பட போகிறாய்? அதையும் கூட ஒரு கடமையாய் செய்துவிட்டுப்போக
வேண்டியதுதானே! எப்படியானபோதிலும்
துரியோதனனுக்கு இறப்பு நிச்சயம். ஆகவே அதைப்பற்றியும்கூட
நீ கவலைப்படாதே.” என்று அடுத்த ஸ்லோகத்திலிருந்து தொடங்குகிறது.
அவற்றை இரண்டாம் அத்தியாயத்தின் 3 வது பகுதியில் பார்க்கலாம்.
ஏற்கனவே நான் கூறியதுபோல் சின்னச்சின்ன மாற்றங்களுடன் தொடர்ந்து செல்வேன். சில அத்தியாவசிய விவாதங்களை எடுத்துக்கொள்ளலாம். பிறவற்றை இறுதியில் காணலாம். இதில் சொல்லப்படும் கருத்துகளை பொதுவான மொழிப் பெயர்ப்பாகத்தான்
எடுத்துக்கொண்டுள்ளோம். இதில் ஒப்புதல்;ஒப்புதல் இல்லாமை, விவாதங்கள் ஆகியன உண்டு. பின்னர் கிடைக்கும் வாய்ப்பில் ஆத்மாவையோ, அதன் நிலைத்தன்மையையோ,
மறுபிறப்பையோ அல்லது பாவ,புண்ணியங்கள் பற்றியோ உள்ள தத்துவங்களை விரிவாக, தொடர்ந்து நமது பயணத்தில் காண்போம்.
No comments:
Post a Comment