கிருஷ்ண தரிசனம் – 9 (பகவத்கீதை)
மனம் ஒருமுகப்பட்ட ஒருவனின் அடையாளம் என்ன?
புத்தி விழிப்புற்ற நிலையில் அவன் எப்படி பேசுவான்?
எப்படி இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்?
புத்தியோகம் வாய்க்கப்பெற்றவனை
எப்படி அடையாளம் காண்பது?
அர்ஜுனரின் இந்த கேள்விகளுக்கு கிருஷ்ண பரமாத்மா பல இடங்களில் பதிலுரைக்கிறார்.
முதலில் அவர் சொல்வது, “தன்னில் திருப்தி கொண்டவன்”என்னும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
“எப்போது ஒருவன் தன்னாலே, தன்னில் திருப்தி கொண்டு அதன்மூலம் தன் மனதின் எல்லா ஆசைகளையும் விட்டொழிக்கிறானோ அப்போது அவன் புத்தியோகி என கருதப்படுகிறான்.”
அர்ஜுனரின் கேள்விக்கு புத்தியோகத்திற்குப்பிறகு கிருஷ்ண பரமாத்மா கூறிய முதல் பதில் இதுதான்.
இதில் முக்கியமான வார்த்தையான ”தன்னாலே, தன்னில் திருப்தி கொண்டு”என்பதற்கு என்ன அர்த்தமெனில் உலகத்தில் ஒருவனுக்கு அவனைச்சுற்றி என்ன நடந்தாலும் அவன் மேலேயே அவனுக்கு கிடைக்கும் திருப்தியாகும்.
பூங்காக்களில் காலை 11 மணிக்கே சிலபேர் அவர்களைச் சுற்றி என்ன நடந்தாலும், என்ன சத்தம் கேட்டாலும் பூங்காவில் இருக்கும் பெஞ்சின் மேல் கைகளால் தலைக்கு முட்டுகொடுத்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்தபடி தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பான்.
இப்படி இருப்பவன் கிருஷ்ண பரமாத்மா சொல்லும் புத்தியோகத்தின்
அடிப்படையிலா செய்கிறான்?
அப்படிப்பட்டவனுக்கு
படிப்பதற்கு பகவத்கீதை தேவையே இல்லை. அவனுக்கு ஒரு குவாட்டர் மதுபானமே போதுமானது!
தன்னிலே திருப்தி கொள்வது என்பது உயர்ந்த நிலையிலான ஒருவகை திருப்தி. இதனை சுயநலமான நோக்கத்துடன் ஒப்பிடக் கூடாது. அதாவது சுயநலமாக இருப்பவர்கள் இந்த உலகத்தில் எது எப்படி நடக்கிறதோ இல்லையோ ”எனக்கு, என்னுடைய தேவைகள் பூர்த்தியாக வேண்டும். எனக்கு என் சாப்பாடு! எனக்கு என் இடம்! எவன் வாழ்ந்தால் என்ன? எவன் செத்தால் என்ன?” என்று வாழ்வது ஒரு வகையான motive (நோக்கம்). Motive
என்பது நமக்கு ஆக வேண்டிய காரியங்களை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது!
தன்னில் திருப்தி என்பது orientation(நோக்குநிலை). எது நடநதாலும் ஏற்றுக்கொள்வது. அதிருப்தி கொள்ளாமலிருப்பது. அதிருப்தி கொள்ளவில்லை என்றால் திருப்தியாகிவிட்ட்து என்று பொருள்.
இந்த திருப்தி; அதிருப்தி எல்லாம் புறச்சூழல்களில்
இருந்து விடுபட்டு, உள்புறமாக நடப்பது.”எதையும் தாங்கும் இதயம்”என அறிஞர் கூறினாரே.. அந்த வகையான திருப்தி அதுதான்!
”சரி. ஓகே. நானும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் எதையும் தாங்கும் இதயத்துடன் வந்துவிட்டேன்!” என்று கூறமுடியுமா என்றால் கூறவே முடியாது.
மனதின் சிந்தனைகளை, கோஷத்தை, நோக்குநிலை ஆகிய அனைத்தையும் அவரவர் செயல்பாடுகளிலிருந்து, எண்ணங்களிலிருந்து அணுவணுவாகத்தான் மாற்ற வேண்டியுள்ளது. இப்படி மெல்ல மெல்ல மாற்றித்தான் உயர்நிலைக்குப் போக வேண்டியுள்ளது.
“பீஷ்மரைப் பார்..
துரோணரைப்பார்..அவர்களெல்லாம் இப்படித் தான் இருக்கிறார்கள்” என கிருஷ்ண பரமாத்மா யாரையும் அடையாளப்படுத்தவில்லை. அவர் வெறும் பண்புநலன்களை மட்டும்தான் சுருக்கமாக கோடிட்டுக் காட்டுகிறார்.
------------------------------
No comments:
Post a Comment