Tuesday, September 1, 2026

87.கிருஷ்ண தரிசனம் 4 (பகவத்கீதை)

 

கிருஷ்ண தரிசனம் 4 (பகவத்கீதை)

பகவத்கீதையில் தொடர்ந்து நாம் simplification, அதாவது ஒரு பெரிய மாயம், மந்திரம் என்பதுபோல் இல்லாமல் பகவத்கீதையை மாணவர்களுடைய, இளைஞர், இளைஞிகளுடைய வாழ்வியலில் அதை எப்படி பயன்படுத்தலாம்? அதில் என்ன இருக்கிறது?” என்பன போன்ற உள்ளார்ந்த கருத்துகளை எடுத்துக்கொள்வதற்காகவே. ஏனென்றால் பகவத்கீதையானது எல்லோரும் சிலாகித்துப் பேசுகின்ற விஷயம்தான்! நாம் அதைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதை படிப்பதற்கான வயது இல்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் அவர்களது 20 முதல் 30 வயது வரையிலான காலகட்டமானது மிக முக்கியமான காலகட்டம்.

இது வயது முதிர்ந்தவர்களுக்கு ஞானம் தருவதோ, முக்தி தருவதோ இதன் நோக்கமல்ல. பகவத்கீதையில் இருக்கும் விஷயங்களை நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எப்படி பயன் படுத்தலாம்? என்பதை காணவிழைவது மட்டுமே இந்த பகுதியின் நோக்கம். மேலும், என்னுடைய நோக்கம் மிக முக்கியமான 20 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு, பகவத்கீதையில் நான் புரிந்துகொண்ட நல்ல விஷயங்களை பகிர்வதே நோக்கமாகும்.

கடந்த பகுதியில் அத்தியாயம் 2- இல் 2;26 வரை பார்த்தோம். அதில்ஆத்மா, ஆத்மாவின் குணாதிசயங்கள்ஆகியவற்றைப் பற்றியும், ”ஆத்மா என்றால் கண்களால் காணமுடியாது, அழிக்க முடியாது, வெட்ட முடியாது, நனைக்க முடியாதுஎன்றெல்லாம் ஸ்ரீ கிருஷ்ண பராமாத்மா நிறைய விளக்கம் தந்திருப்பார்.

அடுத்து அர்ஜுனனை போரில் ஈடுபடுத்த வேண்டும். ஏனென்றால் அர்ஜுனர் கிருஷ்ணபரமாத்மாவின் நண்பர். பாண்டவர்கள் தரப்பில் மிக முக்கியமான வீரன் அர்ஜுனன். அப்படிப்பட்டவர் மனத்தளர்ச்சி மற்றும் குழப்பத்தின் காரணமாகபோர் செய்யமாட்டேன்என்கிறார். தெளிவான சிந்தனையில்லை. தெளிவாக சிந்தித்தால் மனத்தளர்ச்சியும் , குழப்பமும் நீங்கிவிடும் என்பதுதான் கிருஷ்ணபரமாத்மா போதித்த பகவத்கீதையின் முழுமையான சாரம்சம்.

இப்போது நாம் ஸ்லோகம் 28 முதல் 37 வரை பார்க்க இருக்கிறோம். இதுபோல 10 முதல் 15 ஸ்லோகஙள் வரை பார்ப்பதன் நோக்கமும் கூட மிகவும் ஆழமாகப் போகக்கூடாது. அதேவேளையில் நமக்குத் தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வதற்காகவும் செய்கிறோம்.

கடந்த பதிவில் ஆத்மாவிற்கு பிறப்புமில்லை; இறப்புமில்லை என்று கூறியிருந்ததைக் கண்டோம். ”ஒருவேளை பிறப்பும் இறப்பும் இருப்பதாக இருந்தாலும் கூட, அதில் என்ன பரிகாரம் காணமுடியும்?” என்று ஸ்ரீ கிருஷ்ணர் கேட்கிறார். பிறந்தவர்கள் அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும். யாரும் இறக்காமலிருப்பதில்லை. மரணம் நிரந்தரம். பிறகு ஏன் வருத்தப்படுகிறாய். அவர்களை (எதிரிகளான கெளரவர்கள்) நீ கொல்லாமல் விட்டாலும், வேறுயாரோ கொல்லத்தான் போகிறார்கள். இந்த போரில் இல்லாவிட்டாலும் அடுத்த போரில் சாகத்தான் போகிறார்கள். அது விதியின் விளையாட்டு. அதில் உனக்கென்ன தெரியப்போகிறது? நீ ஏன் பிரபஞ்சத்தின் மனசட்சிக்குள் போகிறாய்? (3:35) (universe conscience)  அது என்ன செய்யப்போகிறது? என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இப்போதெல்லாம் பலரும் தான் என்ன செய்திருக்கிறோம்? என கர்மாஎன்னவென தேடிக்கண்டு பிடிக்கும் அளவிற்குச் செல்கிறார்கள்!

கடந்த பிறவியிலிருந்து என்ன வந்தது? இந்த பிறவியில் என்ன கொண்டு போகப் போகிறோம்? அடுத்த பிறவியின்போது கோரிக்கைவிடுத்து வாங்கிக் கொள்ளலாம்என்று ஒரு சுவாமிஜி கூறியதைக் கேட்டேன். உண்மையில் அப்படியெல்லாம் நாம் எதையும் செய்துவிட முடியாது. பிரபஞ்சத்தின் மனசாட்சிக்குள் நுழையவும் முடியாது.

பரிகாரம் காணமுடியாத விஷயங்களுக்காக.. அதாவது பிறப்பு, இறப்பிற்கு இடைப்பட்ட வாழ்க்கையில் இதற்கு யாரிடத்திலும் பதிலே கிடையாது. ஆகவே எதற்காக அதைப்பற்றி கவலைகொள்கிறாய்? மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரின்ங்களையும் அவற்றின் ஆரம்பநிலையையும், இறுதிநிலையையும் காணமுடிவதில்லை. எல்லோருமே இடையில் வந்து போகிறார்கள்.”என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

(விஞ்ஞான ரீதியில் மதிப்பீடு சம்பந்தமான கோட்பாட்டின் (Evaluation Theory) ஆரம்பநிலையைப் பார்த்தால் இவ்வுலகத்தில் எதுவுமே இருக்காது. ஒரு 5 பில்லியன் ஆண்டுகளுக்கும் முன் உருவாகி, சுமார் 3 பில்லியன் ஆண்டுகள் வரையிலும் இங்கு எதுவுமே இருக்கவில்லை. அதற்குப்பின் 1 அல்லது 2 பில்லியன் ஆண்டுகள் முதல் சிறு சிறு உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன. ஒரு கட்டத்தில் உயிர்கள் அனைத்தும் தங்களின் அடுத்த நிலைக்கு பரிணாம வளர்ச்சி அடைந்தன. இன்னும் 2 பில்லியன் ஆண்டுகள் கடந்தபின்னர் தட்பவெப்ப நிலை, அழுத்தம் போன்ற காரணங்களால் இங்கே இந்த உயிரினங்கள் இல்லாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆக ஆரம்பநிலையிலும் இல்லை. இறுதியிலும் இல்லை. இவை இடைப்பட்ட காலத்தில் வந்துசெல்பவை என்கிற ரீதியிலும், மதிப்பீடு சம்பந்தமான கோட்பாட்டின் அடிப்படையிலும் புரிந்து கொள்ளலாம்.)

எல்லா உயிர்களுமே நடுவில் வந்து செல்பவைதானே! இதற்கு ஏன் கவலைப்படுகிறாய்?, உன்னுடைய சுயதர்மம் (கடமை) என்ன?” என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சனாதனம் பற்றிய விவாதங்கள் இப்போது நிறைய நடக்கின்றன. ஒவ்வொருவார் வாழ்விலும் சுயதர்மம் எனப்படும் கடமை ஒன்று உள்ளது. இது ஒவ்வொரு சமுதாய அளவிலும், குழுக்களிலும் உள்ளது. அது என்ன அந்த சுயதர்மம்?

ஒரு நியாயமான போரின்போது வெற்றியோ, தோல்வியோ அதைவிட ஒரு சிறப்பு ஷத்ரியனுக்கு இல்லை! அதுவே ஷத்ரியனின் சுயதர்மம்! அப்படிப்பட்ட கடமையை உதறிவிட்டு, எதேச்சையாக (தற்செயல்) நிகழும்போர் அதாவது இந்த போருக்கான காரணம் நீயல்ல (அர்ஜுனன்) நானும் (ஸ்ரீ கிருஷ்ணர்) கிடையாது. உண்மையில் சொல்லப்போனால் கெளரவர்களும் அல்ல. உன்னால்தான் இந்தபோர் வந்துவிட்டதோ என்கிற சஞ்சலம் தேவையில்லை. எந்த ஒரு போராக இருந்தாலும் அது நியாயமாக இருக்கும்பட்சத்தில் அது வீரனுக்கு அழகு. ஆகவே வீரனாகிய நீ உன் கடமையிலிருந்து தவறிவிடாதே.” என்று கூறும் ஸ்ரீ கிருஷ்ணர், ஒருவேளை கடமையைச் செய்யத்தவறினால் என்னவெல்லாம் ஆகும்? என்பதையும் விவரிக்கிறார்.

அர்ஜுனனைப் பார்த்துகண்டிப்பாக உன் கீர்த்தி (புகழ்) போகும். உன்னை மிகப்பெரிய வீரனாக கருதிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் நீ பயந்து பின்வாங்கிவிட்டதாக கூறுவார்கள். ”வில்லுக்கு விஜயன்என யாரெல்லாம் உன்னைப் புகழ்கிறார்களோ அவர்கள் நாளையே உன்னை இகழ்ந்து பேசுவார்கள்.” என்கிறார்.

மேலும்மனிதவாழ்வில் யாராக இருந்தாலும் எப்பொழுதுமே புகழ்ந்து கொண்டிருப்பதில்லை. இந்த உலகத்தில் எல்லோராலும் புகழப்பட்டவர் களுமில்லை. அதேபோல் இகழப்பட்டவர்களுமில்லை. சிலபேர் புகழ்ந்து கொண்டேயிருப்பர். சிலருக்கு இகழ்ச்சி வந்துகொண்டேயிருக்கும்.

புகழ்ந்த ஒருவரே நம்மை இகழ்வதுதான் அதிக மனவலி தரக்கூடிய விஷயமாகும். இதைத்தான் இவ்விடத்தில் கிருஷ்ணபரமாத்மா குறிப்பிடுகிறார். மேலும் அப்படி ஒன்று நிகழ்ந்தால் சிறப்புகள் வாய்ந்த பெரியோர்களுக்கு மரணத்தை விட கொடுமையானதாகும். இரண்டாவது புகழ்ந்த ஒருவரே இகழ்கிறார் என்றால் எதிரிகள் என்ன சொல்வர்? பலவிதமான அவதூறுகளையும்  அள்ளி வீசுவர். நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் நீ போர்புரியாமல் இருந்துவிட்டாய் என்றா கூறப்போகிறார்கள்?” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

நான் அடிக்கடி ஒரு விஷயத்தைக் கூறுவதுண்டு. உணர்வுப்பூர்வமாக உங்களை யாருக்குப் பிடிக்கிறதோ அவர் உங்களை புகழ்ந்து கொண்டிருப்பார். நீங்கள் வெற்றி பெற்றால் புகழ்வார்கள். தோல்வியடைந்தாலும் கூட உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

ஆனால், உங்களைப் பிடிக்காதவர்கள் நீங்கள் வெற்றியடைந்தால் வருத்தப்படுவார்கள். தோற்றுவிட்டால் சந்தோஷம் அடைவார்கள்.  

இந்த இரண்டுவிதமான விகிதாச்சாரங்கள் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும்.

மேலேசொன்ன இரண்டுவிதமான தரப்புகளைத்தாண்டி இன்னொரு கூட்டமும் உண்டு. அவர்கள் யார்? எதைச் சொன்னார்களோ? அதைவைத்து தங்கள் போக்கில் செயல்படுவார்கள்.

ஆதரவளிப்பவர்கள் 30% எதிர்ப்பவர்கள் 30% நடுநிலைகள் 40% என்று வைத்துக்கொள்ளலாம். பல நேரங்களில் நபர்கள் மற்றும் சூழலுக்குத் தகுந்தார் போல் மேற்கூறிய விகிதாச்சாரங்களில் சிறுசிறு மாறுபாடுகள் இருக்கலாம். எது எப்படியாயினும் இந்த மூன்றுவிதமான விகிதாசாரங்கள் இல்லாமல் எந்த மனிதரும் இருக்க முடியாது!

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தையே தட்டித்தூக்கி வந்தாலும்கூட, அந்த வெற்றியாளரைப்பார்த்து அவரைப்பிடிக்காத நபர், “உங்களால் இவ்வளவு தான் வேகமெடுத்து ஓட முடியுமா?”என்று கேட்கக்கூடிய யாரோ ஒருவர் இருக்கத்தான் செய்வார்! இதனால்தான் சுகம், துக்கத்தை சமநிலையில் பாவிக்க வேண்டுமென்று பகவத்கீதையில் சொல்லப்படுகிறது.

ஆக, முதலாவதாகபிறப்பிற்கும் இறப்பிற்கும் பரிகாரம் காண முடியாது. அடுத்ததாக எல்லா உயிரினங்களும் வந்துபோகக்கூடியவையே. மூன்றாவதாக போர் வீரன் என்கிற பொருளில் அழைக்கப்படும் ஷத்ரியன் தன் கடமையிலிருந்து வழுவிவிடக்கூடாது. (ஷத்ரிய, வைசிய, பிராமண, சூத்திரன் என்கிற வர்ணாசிரம் சம்பந்தமான குழப்பங்கள் நிறைய உண்டு. இது பற்றிய விளக்கத்தை பின்னர் காணலாம்.) அப்படி வழுவினால் பெரியவர்கள் இகழ்வார்கள்என்றெல்லாம் கூறுகிறார் கிருஷ்ணபரமாத்மா!

அத்தியாயம் 2 –இல் 37 மற்றும் 38 ஆவது ஸ்லோகங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் சிவில் சர்வீஸ் தேர்விற்காக படிப்பவர்கள், பெரிய விளையாட்டு வீர்ர்கள் மற்றும் போருக்கு ஆயத்தமாவோர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கிருஷ்ணர் கூறிய, “வென்றால் நாடு. இறந்தால் சொர்க்கம்என்பதையே!

அர்ஜுனரைப் பார்த்துமன உறுதியோடும், தைரியத்தோடும் போருக்கு ஆயத்தமாகுஎன்பார். (மிகப்பெரிய முயற்சியில் ஈடுபடுவோர் அனைவருமே இதனைப் படித்து நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.) மேலும், இதனால் உனக்கு குழப்பம் வராது. நடக்கவிருக்கும் போரானது சரியா? தவறா? என்று யோசிக்காமல், சுகதுக்கங்களையும், லாபநஷ்டங்களை சமமாக பாவித்து போரில் பங்கேற்பாய். இதனால் உனக்கு ஒரு பாவமும் வரப்போவது இல்லை.”என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. ஏன் அவற்றை சமமாக வைக்கச்சொல்கிறார் என்றால் அந்த காரியம் அவ்வளவு எளிதானதல்ல. இது ஒருவிதமான பயிற்சியே. இதில் யார் மிகச்சரியான நபர் என்பதைக் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அவையெல்லாம் அவரவருக்குத் தெரியும். இதில் பலநிலைகள் உள்ளன. ஆயிரம் நிலைகள் இருக்கின்றன என்று வைத்துக் கொண்டால், அனைவருமே பூஜ்ஜியத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். இதை பயிற்சி செய்துகொண்டே வரச்சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். பகவத்கீதையில் இரண்டு, மூன்று இடங்களில் இது வலியுறுத்தப்படுகிறது. இதுபோன்று சமமாக நோக்குவதில் பயிற்சி மேற்கொண்டால் கர்மாவினால் வரக்கூடிய பிணைப்பு (Bonding) அவர்களை அண்டாது.

சுக,துக்கங்களையும், லாப,நஷ்டங்களையும் சமமாக எடுத்துக்கொண்டால் அது சுயநலமாக இல்லாமல் பொதுநலன் சார்ந்ததாகவும், பொதுக்காரியமாகவும் இருக்கும். பொதுவாக சுக,துக்கங்களும், லாப,நஷ்டங்களும் சொந்த காரணங்களிலும் காரியங்களிலும் வரும். பொதுக்காரியங்களில் வராது. ஆனால், நல்லெண்ணத்துடன் பொதுக்காரியங்களை நாம் செய்கின்றபோது, அது எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும் பாவமாகாது. ஸ்லோகம் 38 –இல் இதையே கிருஷ்ணபரமாத்மா கூறுகிறார். வென்றால் நாடு; இறந்தால் சொர்க்கம், மனௌறுதி, சுக,துக்கம்; லாப,நஷ்டம் ஆகிய அனைத்தையும் சமமாகப் பார்க்க வேண்டும். அப்படிச்செய்தால் மன உறுதி தானாக வரும். இதுவே கிருஷ்ண பரமாத்மாவால் பகரப்பட்டது. நாம் பெரும் பெரும் காரியங்களை ஆற்ற ஈடுபடுவதற்கும் முன் இந்த இரண்டு ஸ்லோகங்களை (37, 38) நினைவில் கொள்வது முக்கியமாகும்.

கர்மப்பிணைப்பினால் ஏற்படும் விளைவுகளால் வரக்கூடிய எதிர்வினை, நம்மைவிட்டுப் போவதில்லை. அது நம்முடனேயே இருந்துகொண்டு பிரச்சினைகளைத் தரப்போகிறதுஎன்று கருதுவதால்தான் நாம் நிறைய விஷயங்களை செய்வதேயில்லை. ”நாம் ஏன் அந்த பாவத்தைச் செய்ய வேண்டும்?” என்பதை வழக்குச்சொல்லாக வைத்துள்ளோம்.

பகவத்கீதை குறித்த நம் தொடர்பயணத்தில் அடுத்துகர்மப்பிணைப்புசம்பந்தமாக கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பதை காண்போம். பகவத்கீதையை எளியவகையில் எடுத்துக்கூறி நம் இளைஞர், இளைஞிகளுக்கு பயனுள்ள வகையில் கொண்டுசேர்ப்பதே எனது எளிய நோக்கம். பெரும்காரியங்கள் ஆற்றும்முன் நாம் இதுவரை கண்ட ஸ்லோகங்கள் 37, 38 நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை. பாரத நாட்டின் ஞானம் பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் தொடர்ந்து பேசுவோம்.

-------------------

 

No comments:

Post a Comment

88.கிருஷ்ண தரிசனம் – 5 (பகவத்கீதை)

  கிருஷ்ண தரிசனம் – 5  ( பகவத்கீதை ) பகவத்கீதையில் தொடர்ச்சியாக இதுவரை “ ஆத்மா , ஆத்மாவின் குணநலன்கள் ” ஆகியவற்றைக் கண்டோம் . இப்போது...