Wednesday, September 2, 2026

89.கிருஷ்ண தரிசனம் – 6 (பகவத்கீதை)

 

கிருஷ்ண தரிசனம் – 6 (பகவத்கீதை)

 

          (பகவத்கீதையில் நாம் ஒவ்வொரு அத்தியாயமாக பார்த்து வருகிறோம். இதில் பயணித்தபடியே நிறைய குறிப்புகளை எடுக்கலாம். பிறகு அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம். பகவத்கீதை என்பது ஒரு கடல். இதில் இறங்கி மூழ்கி உங்களுக்கான முத்தை நீங்களே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நான் எடுத்துக் கொடுக்க முடியாது. இந்த பயிற்சியில் நானும் உங்களுடனே இருக்கிறேன். ”இது பெரிய ஆன்மீகத் தலைப்பாயிற்றே.. ஞானிகளும், முனிவர்களும்தானே பேசுவர்! பெரும்பாலும் இதைப்பேசுபவர்கள் குட்ம்ப வாழ்க்கையில் இல்லாமல் ஞான வாழ்க்கையிலும், துறவு வாழ்க்கையிலும் இருப்பவர்களாயிற்றே! இதை நம்மைப்போன்றவர்கள் பேசினால் சரியாக வருமா?” என எனது கல்லூரி நண்பர்கள் மற்றும் நான் பணியில் இருந்தபோது பழகியவர்கள் பலரும் என்னிடம் கேட்டார்கள். அதற்கு, பகவத்கீதையில் நான் சொல்லப்போவது அதன் பொழிப்புரை கிடையாது. சங்கர பாஷ்யம், ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யம் போல நான் அதிகாரம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை. பகவத்கீதையில் நான் புரிந்து கொண்ட விஷயங்களை தமிழில் இளையதலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதே எனது முன்னெடுப்பாகும். எனது வட இந்திய நண்பர்கள் பகவத்கீதையைப் பற்றி ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள் என்று கூறினார்கள். தமிழில் செய்துமுடித்துவிட்டு ஆங்கிலத்தில் பதிவுசெய்யலாம் என்கிற எண்ணம் உள்ளது. ஏனெனில் தமிழ் தாய்மொழி என்பதால் சிந்தனைத்தெளிவு சிறப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கை. மெலும், நான் அதிகமாக சைவசித்தாந்தத்தைப் பயன்படுத்துவதால் தமிழ்வார்த்தைகளின் வளத்தை நான் அதிகமாக பயன்படுத்துவேன். இதனாலும்கூட பகவத் கீதையைப்பற்றி தமிழில் பேசுவது எளிதாக உள்ளது)

 

          பகவத்கீதையில் அத்தியாயம் 2- இல்கடமையைச் செய் பலனை எதிர்பாராதேஎனும் 47–வது வாசகத்தைப் பற்றி கண்டோம். அந்த வாசகம் மிக மிக முக்கியமானதும், சுவாராஸ்யம் மிகுந்ததும் ஆகும்.

          அந்த வாசகத்தில் மூன்று விஷயங்களை கிருஷ்ணபரமாத்மா குறிப்பிடுகிறார்.

1.                 கடமையின் மீதுதான் உனக்கு உரிமையுள்ளது. அதனால் விளையும் பயன் மீது உரிமை இல்லை”. அதாவது கடமையைச் செய்துமுடிக்க(Action) உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் பலனை அனுபவிக்க (Reaction) உனக்கு உரிமையில்லை. அதனால்கடமையை செய். பலனை எதிர்பாராதேஎன்று எளிமையாக கூறுகிறார்.

இதில்தான் The Concept of predetermination (முன்னறிவிப்பு) வருகிறது. ஜோதிடம் பார்ப்பவர்கள்இன்னன்ன கிரகங்கள் இந்தந்த கட்டங்கள் இப்படி இருக்கின்றன.. இந்தந்த கிரகங்கள் இப்படி இருக்கின்றன. நட்சத்திரங்கள் இப்படி இருக்கின்றன. இருக்கின்றன.. இது உங்கள் லக்னம். உங்கள் ராசிக்குரியவன் 9 ஆம் இடத்தில் இருக்கிறான். லக்னத்திற்குரியவன் 7 ஆம் இடத்தில் இருக்கிறான். இவன் இங்கிருந்து 7 ஆம் பார்வையாக பார்க்கிறான். 10 ஆம் பார்வையாக பார்க்கிறான். கோச்சாரத்தில் சனி இங்கே இருங்கே இருக்கிறான். அஷ்டமத்தில் இருக்கிறான்இப்படி எல்லாமே Determined என்றால் சுதந்திரம் எங்கே இருக்கிறது?

ரமண மகரிஷி அவர்கள் எடுத்துக்கொண்டதுகூட pre-determined தான். ஏற்கனவே எல்லாம் எழுதப்பட்டதுதான். அவை என்ன என்பதை நாம் தேட முயற்சிக்கிறோம். அதில் எவ்வளவு ஜெயிக்கிறீர்களோ அந்த அளவிற்கு மகிழ்ச்சி அடையுங்கள். எல்லாமே predetermined தான். அவையவை அந்தந்த வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் என்பதே.

இந்துமதத்தில் நிறைய விவாதங்கள் உண்டு. The Concept of predetermination –க்கு எதிராக the concept of free will இருக்கிறது. உங்களுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு. உங்கள் செயல்பாடுகளில் (Action) எல்லா சுதந்திரமும் இருக்கிறது. அதன் எதிர்வினை (Reaction) எங்கே என்றால், உங்கள் செயல்பாடுகள் எங்கே சென்று சேருகின்றனவோ அங்கிருந்துதான் வருகிறது.

இந்து மதத்தை நம்புகிறவர்களுக்கு அது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று, வினையில் சேர்ந்து, அந்த வினையிலிருந்து எதிர்வினையாகி திரும்பி வரப்போகிறது. அந்த பலன்கள் நல்லதாகவோ அல்லது கெட்ட்தாகவோ இருக்கலாம். ”முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, வினை விதைத்தவன் வினை அறுப்பான்என்பன போன்ற பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆக எதை நாம் செய்கிறோமோ அதுவே நமக்கு திரும்பக்கிடைக்கிறது என்கிற கோட்பாடுதான் .

 

இது எல்லா மதங்களிலும், கலாச்சாரங்களிலும் இருக்கக்கூடிய நம்பிக்கைதான். நல்லது செய்வதை நாம்தர்மம்என்கிறோம். நல்லது செய்தால் நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நாம் நம்புவதன் காரணம், நாம் செய்கின்ற நல்லதை உள்ளப் பூர்வமாக மதிப்பீடு செய்து, எதிர்வினை ஆற்றுவதற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதுவே தரக்கட்டுப்பாடு செய்கிறது என்று நம்புகிறார்கள். இதுதான் the concept of free will. The Concept of predetermination –இல் வினை (Action) எதிர்வினை (Reaction) ஆகிய இரண்டுமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை ஆகும். The concept of free will –இல் வினை ஆற்றுவதற்கு சுதந்திரம் உண்டு. ஆனால், எதிர்வினை ஆற்ற சுதந்திரம் கிடையாது. பகவத்கீதையைப் பொறுத்தவரை the concept of free will –இன் கீழ் வருகிறது. காரியம் ஆற்ற உரிமை உண்டு. ஆனால் அதற்கான பலனை கோரக்கூடிய உரிமை ஒருபோதும் இல்லை.

நான் நல்லதுதான் செய்கிறேன். ஆனால் நடப்பதெல்லாம் கெட்டதாகவே நடக்கின்றனஎன்று சிலர் அங்கலாய்த்துக் கொள்வதுண்டு. இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கலாமே தவிர, நிச்சயமாக நல்லது நட்ந்தே தீரும் என்பதற்கு உத்திரவாதமில்லை. இந்த குழப்பத்தினால்தான்கர்மயோகத்தில்கர்மங்கள் செயது வினைப்பயன்களாக மாறி ஆத்மாவுடன் பயணித்து, அடுத்தடுத்தப் பிறவியிலும் தொடரும் என்று நம்பப்படுகிறது.

ஒருவரின் தற்போதைய வாழ்க்கையை தீவிரமாக வெளிப்படுத்தி செல்வாக்கு செலுத்தும் கடந்த கால கர்மாவின் பகுதியான கருதப்படும்பிராரதப்த கர்மா”,

கடந்த பிறவிகளில் சேமிக்கப்பட்ட கர்மா எனக் கருதப்படும்சஞ்சித கர்மாபோன்றவைஇருப்புநிலை அறிக்கைபோல கூட்டல், கழித்தலாக வருகின்றன என்று சொல்வதற்கான காரணம் இதிலிருந்துதான் வருகின்றது. இதைக்கூறுவதோடு நில்லாமல்வினைப்பயனை உண்டாக்காதே. கடமையைச் செய்.. பலனை எதிர்பார்க்காதேஎன்கிறார்.

அடுத்துபலனை எதிர்பார்க்காமல் கடமை ஏன் செய்ய வேண்டும்?”என கைவிட்டு விடக்கூடாதென்றுதான்நீ வேலை செய்யாமல் இருக்காதேகிருஷ்ண பரமாத்மாவாகிய எனக்கே வேலை இல்லை. ஆனால் நான் இயங்கிக்கொண்டேதான் இருக்கின்றேன். ஆகையால் நீயும் இயங்கித்தான் ஆக வேண்டும். நீ இயங்கவில்லை என்றாலும் உன் குணம் உன்னை இழுத்துக்கொண்டுதான் செல்லும்என்று வேறொரு இடத்தில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். இதையெல்லாம் புத்தியோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார் ஏனென்றால்இதுபோல் நடந்துகொண்டால்தான் உன் புத்தி நிலையாக இருக்கும். பலனை எதிர்பார்த்தால் புத்தி நிலையாக இருக்காதுஎன்று விளக்கம் தருகிறார்.

அதேநேரம் நீ எந்தளவிற்கு கடமையைச் சரிவரச் செய்கின்றாயோ அதற்கேற்ப 100% பலன் உனக்கு வந்து சேர்ந்து விடும்என்று புத்தியோகத்தின் ஆரம்பத்திலேயே கூறி விட்டார். இதை நாம்தெய்வீகத்தின் உத்திரவாதமாகஎடுத்துக் கொள்கிறோம். இதை நிரூபிக்க முடியாது. இது வாழ்வியலின் விதியோ அல்லது இயற்பியல் விதியோ அல்ல. இதெல்லாம் கடவுள் கூறியதாக நம்பினால்தான் உண்டு. இதுவேஆத்ம பிரமாணம்”. இது நம்பிக்கையைத்தவிர வேறொன்றுமில்லை.

புத்தியோகத்தின் ஆரம்பத்திலேயேபலன் வந்து சேரும்என்பதை தீவிரமாக எடுத்துக் கொண்டு பயிற்சி எய்தால் புத்தியோகத்தில் நிலைபெறலாம். அப்படி நிலைபெற்றால் வினைப்பயன் சேராது.

ஏன் சேராது?

ஒரு நல்ல விஷயத்தை செய்ய வேண்டும் என்று எண்ணி அதைச் செய்கின்றோம். ஆனால், கெட்ட விஷயமே நடக்கிறது. ஒரு கெட்ட விஷயத்தைச் செய்கிறோம். ஆனால் நல்ல விஷயம் நடந்து விட்டது. ”அந்த கெட்டதிற்கு பலன் வந்துவிடுமோ?” என்று யோசித்துக் கொண்டிருப்போம்.  அல்லது நல்ல விஷயத்தை செய்து விட்டோம். ஆனால் நல்ல பலன் வரவில்லை. அது எப்போது வந்துசேரும்?” என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். ”கடந்த முறை பேருந்தை தவற விட்டுவிட்டோம். இந்தமுறை பேருந்து வருமா? என காத்துக்கொண்டிருப்போம்.” எதிர்பார்ப்பு (Antiecipate)  சிந்தித்தல் (contemplate)  perciate  இவற்றில் நிறைய குழப்பங்கள் வந்துவிடுகின்றன. இத்தகைய நிலைப்பாடு செயலை கெடுக்கின்றன. எந்த ஒரு செயலையும் நல்லமுறையில் செய்ய முடியவில்லை. சுதந்திரமாக செய்ய முடியவில்லை. ஏன் இப்படி நிகழ்கிறது? புத்தி குழம்பி விடுவதாலேதான் நிகழ்கிறது! அதுவும் சாதாரனமாக குழம்புவதில்லை. யாராவது நான்குபேர் சொல்கின்றனர்! இதைதான் அடுத்துவரும் ஸ்லோகத்தில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.

ஒரு உதாரணத்திற்குநான் ஐ..எஸ்ஸிற்கு படிக்கப் போகிறேன்என்றால்நீயெல்லாம் எப்படி பாஸாகப்போறே?, இவ்வள்வு மார்க் எடுத்தவனே பாஸாகவில்லை! நீ மட்டும் எப்படி?” என்பார்கள்.  

மேலும், ..எஸ்ஸிற்கான தேர்வில் முதன்முறை தோல்வி அடைந்து விட்டால், “நான்தான் ஏற்கனவே கூறினேனே.. நீ ஒரு ஞானசூன்யம். நீயெல்லாம் ஏன் அதை படிக்கப்போனாய்?” என்பார்கள்.

இவற்றை போன்றுகேட்டவை, கேட்பது,  ஆகியவற்றிலிருந்து விலகியிரு. அவற்றால் மனதைக் குழப்பிக் கொள்ளாதே. உன் கடமையில் (கடமை) மட்டும் கண்ணாயிரு. அதை நோக்கிமட்டுமே பயணம் செய். அதன்மூலம் கண்டிப்பாக பலன் கிட்டும். அது எப்படி வருமென்று தெரியாது. ஆனால் நிச்சயம் வந்தே தீரும். இத்தகைய உத்திரவாதத்தை தருவதுதான் புத்தியோகம்.”என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

கடமையைச் செய். பலனை எதிர்பாராதேஎன்பதில் கூடமூன்று நிலைகள் குறிப்பிடப்படுகின்றன.

1.                 கடமையைச் செய். பலனை எதிர்பாராதே

2.                 கடமையை எதிர்பாராமல் இருப்பதுடன் அதை உருவாக்கவும் முயற்சிக்காதே. வினைப்பயனை உண்டாக்காதே.

3.                 ஒருவேளை பலன் வந்து சேர்ந்தாலும் இது இப்படித்தான் (புண்ணியம் செய்ததால்) வந்து சேர்ந்தது என்று உனக்கு நீயே கருதிக்கொள்ளாதே. அடுத்து உன் கடமையை நிறைவேற்ற அது பயனுள்ளதாக இருக்குமென்றால் அதில் தொடர்ந்து செல்.  மேலும் இந்த பலனைப்பற்றி யாராவது கூறினாலும்கூட, நீ அதன் மீது ஈர்ப்பு கொண்டு அதைக் கேட்காதே.

ஆக, ”பலனை எதிர்பார்க்காதே, பலனை சேர்க்காதே, பலனை கருதிக் கொள்ளாதே,   பலனைப்பற்றி எவராவது கூறினாலும் அதைக் கேட்காதேஎன்று பட்டியலிட்டு, “நீ கடமையை மட்டும் செய்என்கிறார். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.

ஒரு உதாரணத்திற்கு, நம் எல்லோருக்கும் காபி குடிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். ஓட்டலுக்குச்சென்று குடிப்பதற்கு காபியை ஆர்டர் செய்கிறோம். காபி வந்தபின் குடித்து முடித்து விட்டுகாபியின் சூடு இன்னும் சற்று கூடுதலாக இருந்திருக்கலாம். இனிப்பு கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். காட்டம் (Strong) கூடுதலாகி விட்டதுஎன்று இத்தனை விமர்சனம் செய்கிறோம்!

அதேவேளையில் நம்முடன் காபி அருந்திய நம் நண்பரோ.. ”எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லையே! எல்லாம் சரியாகத்தானே இருந்தது! உண்மையில் காபி சூப்பர்என்கிறார்.

ஒரே காபிக்கு இரண்டுவிதமான விமர்சனம் எப்படி வந்தது? காரணம்.. காபி அருந்திய நம்முடைய தீர்ப்பும் அல்லது கணிப்பும் (Judgement Level) நிச்சயமாக வேறு வேறுதான். இந்தவிதமான முரண்பாடு எங்கிருந்து வருகின்றன?

நாம் காபிக்கான ஆர்டரைக் கொடுத்ததுமேகாபி இப்படித்தான் இருக்க வேண்டும்என்கிறபலன்என்பதைப்பற்றிய எதிர்பார்ப்பு சிந்தனையில் தோன்றிவிடுகிறது. இது சிந்தனையின் சராசரியான இயல்பாகும்.

பகவத்கீதை இல்லாததை சொல்வது கிடையாது. நம்மிடம் இருப்பதையே அது சொல்கிறது. நம் இயல்பைச் சுட்டிக் காட்டுகிறது. அதை மாற்றிக்கொண்டாலோ, கட்டுப்படுத்திக் கொண்டாலோ இந்த உலகத்தில் வெற்றி பெறலாம், மேலும் அர்த்தமுள்ள வாழ்க்கையில் நிம்மதியாக வாழலாம். அதிகபட்சமாக எவ்வளவு சாதிக்க முடியும் என்பதைக் கூறுவது தான் பகவத்கீதை.

காபிக்கான ஆர்டர் தரும்போதேஅது இப்படித்தான் இருக்கவேண்டும்என தீர்மானிக்கிறது. இது ஏற்கனவே இருக்கின்ற Material Experience (பொருள் அனுபவம்) –ஐக் கொண்டு தீர்மானிக்கிறது.

காபியின் சுவை நமக்கு பொருந்தவில்லை. ஆனால், நண்பருக்கு பொருந்திவிடுகிறது. நமக்கு அது பொருந்திவிட்டால் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. நண்பரிடத்தில் வெளிப்பாடு என்பதுசோகம்என்றாகிறது. இன்னும் ஒரு காபி குடிக்கலாமா? அல்லது சற்று நேரம் கழித்து குடிக்கலாமா? என்கிற ஒரு குழப்பம் வருகிறது.

ஆனால் காரியம் என்ன?

ஒரு காபி குடிக்கவேண்டும். அதன் மூலம் ஒரு தூண்டுதல் வேண்டும் இவைதான் எதிர்பார்ப்பு.  காபியின் சுவைகூட சற்று கூடுதலான பண்புத்தேவைகளே.

காபிக்கான எதிர்பார்ப்பு அனுமானத்தை (Atribute) சமச்சீராக்கியிருந்தாலோ, மட்டுப்படுத்தியிருந்தாலோ அல்லது இல்லாமலே செய்திருந்தால் எப்படிப்பட்ட காபி வந்திருந்தாலும் அதை ரசித்து, ருசித்துப் பருகிவிட்டு, அடுத்த வேலையைப்பார்க்க போயிருக்கலாம். ஆனால், மனமோ அப்படியெல்லாம் எளிதாக வேலைசெய்வதில்லை. மனம் ஒரு பணியின் (task) மீது உடனடியாக எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. (Mind creates expectation immediately on a task). ஒவ்வொரு பணியும் வரும்போதே ஏதாவது எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் ஏமாற்றம் அடைகிறது. அதுவே மகிழ்ச்சி, சோகம், கோபம், அகங்காரம், குரோதம், வெறுப்பு போன்ற எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். இவை எதுவாக இருந்தாலும் புத்தியை கலங்கடிக்கலாம். அப்படி கலங்கடிக்கப்படும் புத்தியினால் நடக்கும் செயல்களில் இருக்காது.

ஒரு காரியத்தை வெறும் கடமையாக மட்டும் எண்ணி செயலாற்றினால் புத்தியானது கலங்கிவிடாமல், நிலைத் தன்மையுடன், விழிப்புணர்வுடன் இருக்கும். அப்படிப்பட்ட புத்தி யோகத்தில் விளங்கினால், ஆற்றக்கூடிய காரியங்களில் கவனம் மற்றும் திருப்தி இருக்கும். அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். மேலும் வினைப்பயன் வந்து சேராது. இதன் மூலம் மூன்று குணங்களையும், இருமைகளையும் கடந்து நிலைபெறலாம் என்பதே புத்தியோகத்தின் சாராம்சம். இதைச் சொல்வது மிகவும் எளிதுதான். ஞானிகளுக்கும், தத்துவங்களை விரும்பிப் படிப்பவர் களுக்கும், நமக்கும், இதனை புரிந்துகொள்ள முயற்சிப்பவர்களுக்கும், செயல்படுத்த என்ணுபவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இதனை உண்மையான ஞானிகள், சாதுக்கள், சுவாமிஜிக்கள் போன்றவர்கள் அனுபூதியினால் உணர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இதை நடைமுறைப் படுத்த முயற்சிப்பவர்கள் பல்வேறு நிலைகளில் இருப்பார்கள். பகவான் கிருஷ்ணபரமாத்மாவேநீ எந்த அளவிற்கு இதனைப் (புத்தியோகம்) பயிற்சி மேற்கொள்கிறாயோ அதற்கேர்ற நிலையினை அடைவாய்என்கிறார். யார்? யார்? எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் பகவானுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகும். ஆனால், இந்த முயற்சியை நம்பினால், உள்வாங்கினால்இப்படித்தான் நம் மனம் வேலை செய்கிறது! நாம் ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பார்க்கத்தானே செய்கிறோம்என ஒப்புக்கொள்வோம். நாம் அனைத்து விஷயங்களிலும் எதிர்பார்க்கத்தான் செய்கிறோம். எதிர்ப்பார்ப்பு இல்லையென்றால் மனம் வேலை செய்யாது. எதிர்பார்ப்பதில் உள்ள வேகம், எதிர்பார்க்கும் விஷயத்தினால் கிடைப்பதை எடுத்துக்கொள்ளும் பாங்கு ஆகியவர்றில் வேண்டுமானால் வித்தியாசமிருக்கக்கூடும்.

பசிக்கு சாப்பிட அமர்ந்தாயிற்று. ”சாப்பாடு சரியில்லைஎன அதை தூக்கி எறிவது, தட்டை தள்ளி வைப்பது, மிகவும் குறைவாக சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடுதல், முழுமையாக சாப்பிட்டுவிட்டு எழுதல், எவ்வளவுதான் மோசமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு அதை சமைத்தவர்களைப் பாராட்டுதல் என பலவகைப்பட்ட மனிதர்கள் உண்டு. இதேபோல் நாம் எந்த இட்த்தில்? எப்படி இருக்கின்றோம் என்பதை புரிந்துகொண்டு வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும். இதை ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவின் வாழ்த்தாகவும், என்னுடைய வாழ்த்தாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

---------------------------------------

 

 

 

 

No comments:

Post a Comment

93.கிருஷ்ண தரிசனம் -10 (பகவத்கீதை)

  கிருஷ்ண தரிசனம் -10 ( பகவத்கீதை )             அத்தியாயம் 2- இல் ஸ்லோகம் 56- இல் ” யருடைய மனம் துக்கத்தில் துவளுவதில்லையோ , சுகத...