கிருஷ்ண தரிசனம் – 8 (பகவத்கீதை)
பகவத்கீதையில் நாம் தொடர்ந்து அத்தியாயம் வாரியாக பார்த்து வருகிறோம். இரண்டாம் அத்தியாயமான புத்தியோகத்தில் 53 ஆவது ஸ்லோகம் வரை விரிவாக அலசினோம்.
அடுத்ததாக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் அர்ஜுனர் “மனம் ஒருமுகப்பட்ட ஒருவனின் அடையாளம் என்ன? புத்தி விழிப்புணர்வு ஏற்பட்டவன் எப்படி பேசுவான்? எப்படி இருப்பான்? எவ்வாறு நடந்து கொள்வான்?”என்கிற மூன்று விஷயங்களைக் கேட்கிறார்.
இதுவரைக் கடந்ததில் ”புத்தியோகம் என்றால் என்ன?” என்று விலாவாரியாக விளக்கினார். அர்ஜுனர் கேட்பது புத்தியோகத்தினால்
என்ன பயன்? என்றுதான். இதற்கு நேரிடையாக ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளாரா?
என்பது அடுத்து வரும் விளக்கத்தில் வந்துவிடும்.
‘மனம் ஒருமுகப்பட்டவன், புத்தி விழிப்புற்றவன், நிலைத்த புத்தியுடையவன்” ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்ததா? அல்லது வேறு வேறாக இருக்குமா?
ஒருவனின் புத்தி விழிப்புற்றால் அது நிலைத்திருக்குமா?
நிலைத்த புத்தியிருந்தால்தான் அவன் விழிப்புடன் இருப்பானா? இதுபோல் இருந்தால்தான் மனம் ஒருமுகப்படுமா?
மனம் ஒருமுகப்படுவதால்தான் நிலைத்த புத்தியும், விழிப்புணர்வும்
வாய்க்குமா?
இது ”முட்டையிலிருந்து
கோழி வந்ததா? அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?” என்பது போன்ற கேள்விதான். ஆகவே அந்த மூன்றையும் பெற்றுள்ளவன் பற்றி அர்ஜுனர் சுருக்கமாகக் கூறுகிறார்.
புத்தியோகம் என்பதே இம்மூன்றும் சேர்ந்ததுதான். இதனை மூன்றுவிதமான கோணங்களில் காண முடியும் என்பதே எனது பார்வையாக உள்ளது. எடுத்துக்காட்டாக சைவசமயப்பிரிவில்
அப்பர், திருஞானசம்பந்தர்
ஆகிய இருவரையும் எடுத்துக்கொள்ளலாம்.
”திருஞானசம்பந்தர்”
தனது 10 ஆவது வயதிலேயே ஞானம் பெற்றவர். பார்வதியாம் உமையாளிடம் ஞானப்பால் பருகியவர் என்பது வரலாறு. அதேபோல் தனது இளம் வயதிலேயே இவ்வுலக வாழ்வை உதிர்த்து முக்திபெற்று இறைவனடி சேர்ந்தார். தனது மிகக்குறுகிய வாழ்நாளுக்குள் இசைநயத்துடன் பக்தி சொட்டச்சொட்ட இறைவனைத் துதித்து அவர் பாடிய பாடல்கள் ஏராளமாகும்.
”அப்பர்” சற்று அதிகமான பின்னர் ஞானம் பெற்றதாக அறியப்படுகிறது.
ஆனால், அவர் தனது எண்பதாவது வயதுவரை வாழ்ந்து, பல்வேறு சிவத்திருதலங்களுக்கு நடந்தே சென்று தரிசித்து, முடிவில் கயிலை மலைக்கும் நடந்தே சென்று முக்திபெற்றதாக அவருடைய வரலாறு அறியப்படுகிறது.
சரி.. மேற்கூறப்பட்டுள்ளவர்கள் பற்றி என்னுடைய கருத்து என்ன?
அதாவது, திருஞானசம்பந்தர் தனது பிறப்பிலேயே நிலைத்த புத்தியுடன், விழிப்புற்ற புத்தியுடன் பிறந்திருக்கிறார். அதனால் அவர் இயல்பாகவே மனம் ஒருமுகப்பட்டு,
இறையுணர்வில் திளைத்து பயணித்திருக்கிறார் என்று கூறலாம்.
ஆனால் அப்பர் பெருமானோ தன் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து கடுமையாக பயணித்து, தன்னுடைய நாற்பது வயதிற்கும்மேல் நிலைத்த புத்தி வாய்க்கப்பெற்று, புத்தி விழிப்புணர்வு கொண்டு ஞானம் கைகூடி, அந்நிலையிலேயே அவர் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்திருக்கிறார்
என கூறலாம்.
சரி.. அர்ஜுனர் இதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அவருடைய அப்போதைய தேவை என்பது போர் மட்டுமே! புத்தியோகத்தை எடுத்துவிட்டல் வேறு பாதையில் பயணிக்கலாம். அர்ஜுனர் இதைக் கேட்கக்கூடிய காரனம் என்னவாக இருந்திருக்கும்
என்றால், அப்படி யாராவது இருந்துவிட்டால்
அவரை தான் கொன்றுவிட்டால் என்ன ஆவது? என்பதாகவும் இருந்திருக்கலாம்.
ஒருமுறை ரோம் நாட்டின் படைகள் கிரேக்க நாட்டிற்குள் புகுகின்றது. அப்போது ரோம் நாட்டின் படைத்தளபதி ஒரு குறிப்பிட்ட நபரான “ஆர்கிமிடிஸ்” என்பவரை மட்டும் கொன்றுவிடாதீர்கள்” என்று தன் படைகளுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் அந்த படையெடுப்பின் இறுதியில் ”ஆர்கிமிடிஸ்” இறந்துபோகிறார். ஏனென்றால் போர்வீரனுக்கு ‘யார் ஆர்கிமிடிஸ்?” என்பதில் குழப்பம்.
”நூறுபேரைக் கூட கொல்லலாம். ஆனால் ஆர்கிமிடிஸ் போன்றார்களைக் கொன்றால் புதியதாக உருவாகக் கூடிய நூறு விஷயங்கள் உருவாகாமலே போய்விடக்கூடும்.”என்று அந்த தளபதி கருதினான். இது போன்று எதுவும் குருஷேத்திரப்போரில்
தன்னால் நிகழ்ந்துவிடக்கூடாது என அர்ஜுனர் கேட்டிருக்கலாம்.
பொதுவாக சட்டம், மதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் Form
and Substance (வடிவம் மற்றும் பொருள்) என்று குறிப்பிடுவது உண்டு. அப்படி என்றால் “இப்படி” ஒரு மனிதன் இருந்தால் அவனுக்குள் “இப்படிப்பட்ட” விஷயங்கள் இருக்கும் என்பது. அத்தகைய நிலையை ஒருவர் அடைந்துவிட்டால்
அந்த பொருள் (Substance)
கைகூடும் என்பது ஒருவகையான முறை.
இதை எளியமுறையில் விளக்கலாம். நாம் மிகவும் சோகமாக இருக்கிறோமென்றால், அப்போது புத்தெழுச்சி தரக்கூடிய ஒரு பாடலைக் கேட்டு உற்சாகமான மனநிலைக்கு மாறுகிறோம். நல்ல மனநிலையில் இருந்தோமென்றால்,
அதற்கேற்ற பாடலை நாமே முணுமுணுப்போம்.
ஆக, நல்ல மனநிலையில் இருந்தால்தான் நல்ல பாடலை நாம் பாடமுடியும். நல்ல மனநிலையில் இருந்தால் பாடல் வருகிறது! நல்ல பாடல் கேட்டால் நல்ல மனநிலைக்கு வருகிறோம்!
அந்த நிலைவடிவத்திற்கு வந்துவிட்டால்,
பொருள் (Substance) தானாகவே வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் Form - மிற்கு நாம் தானாகவேச் சென்றுவிடுவோம்.
இது கொஞ்சம் குழப்பமாக இருப்பதுபோல தோன்றும். தத்துவம் என்பதே குழப்பித்தெளிய வைப்பதுதானே!
எனவே அர்ஜுனரின் கேள்வியானது இத்தனை விஷயங்கலையும் உள்ளடக்கி இருக்கின்றதாக நாம் உணர முடிகிறது.
அர்ஜுனரின் இந்த கேள்விக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன பதிலளித்துள்ளார்
என்பதை தொடர்ந்து நாம் காண்போம்.
-----------------------------------------
No comments:
Post a Comment