Wednesday, September 2, 2026

95.கிருஷ்ண தரிசனம் -12 (பகவத்கீதை)

 

கிருஷ்ண தரிசனம் -12 (பகவத்கீதை)

         

அத்தியாயம் 2- இல் 58- ஆவது ஸ்லோகத்தில் அர்ஜுனர் கேட்ட நான்காவது கேள்விக்கான பதிலாகஆமை தன் அவயங்களை எப்படி உள்ளே இழுத்துக்கொள்வது போல எல்லா பொருட்களிலிருந்தும் விலகி தன் புலன்களை இழுத்துக்கொள்ளும் திறமை வாய்க்குமோ அப்போது அவன் புத்தி நிலைபெறுகிறதுஎன்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

இறைவனின் படைப்பில் நீண்ட ஆயுள் கொண்ட உயிரினங்களும் உண்டு. மிகக்குறைந்த ஆயுளையுடைய உயிர்களும் உண்டு. நம்மை மிகவும் இம்சைக்கு ஆளாக்கும் கொசுவின் ஆயுள் ஒரே ஒருநாள் மட்டுமே. அதிகபட்சமாக 48 மணி நேரமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த குறுகிய ஆயுட் காலத்திலேயே ஒரு ஊருக்கே டெங்குக் காய்ச்சலை தந்து செல்கிறது.

ஆமையோ நீண்ட ஆயுள் கொண்டது! சரி.. ஆமை ஏன் உருவகமாக எடுத்துக் கொள்ளப்பட்டது? காரணம், அது உயிர்வாழும் கால அளவிற்கும், அதன் திறனுக்கும் அல்லது தரத்திற்கும் சம்பந்தமிருக்கிறதா? இல்லையா? என்று கூற இயலாது.

ஆமை தன் தலையையும், கால்களையும் தன் முதுகு ஓட்டுக்குக்குள்ளே இழுத்துக் கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் வாய்ந்தது. அது ஒரு கிணற்று நீரில் நீந்திக் கொண்டிருக்கும் போது, மிகச்சிறிய ஒரு கல்லை அந்த நீரில் போட்டால் போதும். அதனால் ஏற்பட்டும் அதிர்வை உணர்ந்து உஷாராகி தன் ஓட்டுக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும். பின் மிகுந்த கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வுடன் மீண்டும் மெல்ல நீந்தத் தொடங்கும்.

ஆமையைப்போல் மனிதர்கள் தங்களின் ஒன்பது வாயில்கள், ஐம்புலன்கள் மற்றும் ஆறாவது அறிவான மனம் ஆகியவற்றை தேவைப்படும்போது இயக்கியும், பிற நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

கண்கள் திறந்தநிலையில் இருக்கும்போது அனைத்தையும் பார்க்கும். அவற்றை மூடிக்கொண்டால் எதையும் பார்க்க இயலாது. இதனால் மனசஞ்சலத்திற்கு ஆட்படுவதில்லை.

செவிகளைக் கட்டுப்படுத்தினால் தேவையற்றவற்றைக் கேட்பதில்லை.  அதனால் தேவையற்ற சிந்தனைகள், குழப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன.

பலவற்றையும் ருசிக்க நாக்கு ஆசைப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்தினால் உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க முடிகிறது.  

தோல் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதனை தொடர்புபடுத்தும் உணரி (Sensor) தன்னைக் கட்டுப்படுத்தி உள்ளிழுத்துக் கொள்கின்றது.

ஆனால் பொதுவாக நமக்கு இவையெல்லாம் நேர்மாறாகத்தான் செயல்படுகின்றன!

மாணவர்கள் தங்களது தேர்வு காலத்தில் படிக்கவேண்டும் என்கிற பதட்டத்துடன் இருப்பார்கள்.  அப்போதுதான் கிரிக்கெட் போட்டி கவர்ந்திழுக்கிறது. அதை நேரில் சென்று பார்க்க மனம் தவிக்கிறது. ஸ்கோரைக் கேட்க செவிக்கு ஆசை. போட்டியைப் பார்க்க கண்களுக்கு ஆசை. போட்டி நடக்கும் ஸ்டேடியத்தில் இருக்க வேண்டிய உடல் தொலைக்காட்சிக்கு முன் பரிதவிக்கிறது. இப்படி புலன்கள் அனைத்தும் வெளியேவந்து அல்லல்படுத்துகின்றன. புலன்களை கட்டுப்படுத்த முடியவேயில்லை. இத்தனைக்கும் நாளை மறுநாள் முக்கியத்தேர்வு காத்திருக்கிறது!

இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் ஸ்டேடியம் வரை சென்றுவிட்டு, தேர்வில் ஃபெயிலாவதும் உண்டு! ஒரு சிலர் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு பாஸாவதும் உண்டு!

வேறு சிலரோ இவையெல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு, அதிகபட்ச மதிப்பெண்கள் எடுத்து, வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு முன்னேறுகிறார்கள். இந்த இலகுத்தன்மையானது (Flexibility) Indication of the strength of mind புத்தி நிலை பெறுதலுக்கான குறியீடுஆகும்.  

 

-----------------------------------------------       

         

No comments:

Post a Comment

99.கிருஷ்ண தரிசனம் -16 (பகவத்கீதை)

  கிருஷ்ண தரிசனம் -16 ( பகவத்கீதை )           ” பொருட்களை நினைப்பதால் அவற்றின் மீது பற்று ஏற்படுகிறது . பற்று ஆசையாக உருவெடுக்கிறது...