Wednesday, September 2, 2026

96.கிருஷ்ண தரிசனம் – 13 (பகவத்கீதை)

 

கிருஷ்ண தரிசனம் – 13 (பகவத்கீதை)

         

அர்ஜுனனின் கேள்விக்கு பதில் கூறும் வகையில், பகவத்கீதை அத்தியாயம் 2- இல், ஸ்லோகம் 59 ஆவது ஸ்லோகத்தில், ‘தன்னுடைய புலன்கள் பொருட்களை நாடாமல் தடுப்பவனுக்கு அனுபவங்கள் இல்லை. ஆனாலும் வசீகரம் விலகுவதில்லை. ஆன்மாவைக்கண்ட பிறகே அந்த வசீகரம் விலகுகிறது.”

          வசீகரம் என்பது”ரஸம்”. ரஸம் என்பது நவரஸங்களைக் குறிக்கும். மனிதர்களின் ஒன்பது வகையான உணர்வுகள், ஒன்பது வகையான சுவைகள், ஒன்பது வகையான எண்ணங்கள் ஆகியவை நவரஸங்களாகும். இது கருத்தியல் ரீதியாக (conceptually) வலுவான ஸ்லோகமாகும். ஏனெனில் ஆமையைப்போல் புலன்களை ஒருவர் அடக்கி, பொருட்களை நாடாவிட்டால் அவருக்கு அனுபவம் என்பதே இருக்காது. அனுபவம் என்றால், கிரிக்கெட் மேட்சை பார்க்கச்  சென்றதால் பள்ளித்தேர்வில் தோல்வியுற்ற அனுபவம் என்று எளிமையாக கூறலாம். ஆனால் கிரிக்கெட் மேட்சைப் பார்க்க வேண்டுமென அவனுக்குள் ஆசை இருக்கிறதல்லவா? அது மரபணு சேர்க்கையாக அவனுக்குள் இருக்கும். இதைத்தான் வசீகரம் என்கிறார். நம் எல்லோருக்கும் உள்ள மூன்று குணங்களான ஸத்வ, ரஜ, தமஸ என்பவை ஓடிக்கொண்டேயிருக்கின்றன. இந்த கூட்டணியில் எல்லாவிதமான பண்புகளும் இருக்கும். இப்படி மரபணுவுடன் ஆங்காங்கு சேமிப்பில் இருக்கையில் அதனுடைய சாய்வு ஒருபோதும் போகாது. சரி. எப்போது போகும்? ஆத்ம தரிசனத்தின் போது போகும் என்கிறார். இந்த “ஆத்ம தரிசனம்” என்கிற வார்த்தையை நாம் நினைவில் வைத்திருப்போம். பிறகு இது குறித்து விரிவாக பேசலாம்.

          புத்தி நிலைபெற்றதற்கும், ஆத்ம தரிசனத்திற்கும் இடைவெளி இருக்கிறதா? என்றால் இருக்கிறது என்றே சொல்வேன். (இப்போதைக்கு ”புத்தி நிலைபெற்ற” என்கிற இடத்தில் இருக்கிறோம்.) அதன்பின் அதுவும் போய்விடும் என்கிறார் கிருஷ்ணர். நாம் என்னதான் கட்டுப்பாடக இருந்தாலும் சாய்வு (inclination) என்பது இருந்துகொண்டேதான் இருக்கும். மிகவும் பலவீனமான நேரங்களில் அது வெளிப்பட்டுவிடும்.

”சரி. அது வெளிப்பட்டால் என்ன? அனுபவம் வந்துவிடுமே”என்றால் ”வரட்டும்”. ஆனால் நம்முடைய ஆத்ம பாதையில் வேலையே இருக்காது. இந்த அனுபவம் நம்மை வேறுபாதைக்கு இட்டுச்செல்லும். ஏற்கனவே கூறப்பட்ட உதாரணம் போல் தேர்வில் வெற்றிபெற மாட்டோம். ஆனால், வேறு எதையோ ஒன்றை செய்து கொண்டிருப்போம். அதனால் நாம் முடங்கிவிடவா போகிறோம்? வேறு ஏதோ ஒரு பாதையில் பயணிக்கப்போகிறோம். இந்த விஷயமானது நம் ஆத்ம பாதையில், அதாவது பகவத்கீதை கூறுகிற யோகத்தில் அடக்க முயற்சிக்கும்போது, நாம் எப்படியாயினும் ஒரு inclination – ஐத் தாண்ட வேண்டியிருக்கும்.

அது எப்போது நிகழும்?

”இந்த இடத்தில்தான் அது நிகழும்!” என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. இது அவர் அர்ஜுனருக்குத் தரும் காரணமாகத்தான் பார்க்க வேண்டும். தற்காலிகமாக ஒருவர் முனிவர்போல் இருப்பார். ஆனால், திடீரென ஓரிடத்தில் கைவிடும் நிலைக்கு ஆளாகும் நிலைவரலாம். ”அதனால் அதை அடையாளம் காணும்போது அதற்கும் நீ தயாராக இருக்க வேண்டும்” என்கிறார் கிருஷ்ணர். 

 

---------------------------------------------------

 

 

 

No comments:

Post a Comment

134.நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா?

  நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா? வருமான வரி கட்டும் தன் நண்பரின் எண்ண ஓட்டத்தைக்குறித்து ட்விட்டர் வலைதளத்தில் ஒருவர் சமீப...