இல்லறத்தின்
அச்சாணி கணவனா? மனைவியா? (குறளின் குரல் - 12)
மனைமாட்சி
இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்
தாயினும் இல்.
திருக்குறளில் ஆறாவது அத்தியாயத்தில்
இடம்பெற்றுள்ள குறள்வரிசையில் என் மனம் கவர்ந்த சில குறள்களைப் பற்றி குறிப்பிட இருக்கிறேன். துறவறத்தை நோக்கியும், துறவறம் ஒன்றே உலகியலில் உயரிய இன்பம், இறைவனை அடைவதே மிகப்பெரிய லட்சியம், அதுவே மெய்யான ஞானம் என்றெல்லாம் நிறைய
நூல்கள் வலியுறுத்தியபோது, இல் + அறம் எனப்படும் இல்வாழ்க்கை அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது
என்னும் கருத்தினை தமிழின் நீதி இலக்கியங்கியங்களில் முதன்முதலாக வலியுறுத்தியது திருக்குறள்.
பொதுவாகவே ’உலகப்பொதுமறை’ என்று திருக்குறளை குறிப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
’வாழ்க்கைத் துணைநலம் (மனைவி)’ என்பவளே இல்வாழ்க்கையின் மிகப்பெரிய
அச்சாணி.
இங்கு இல்வாழ்க்கையின் அச்சாணி ‘கணவன்’ என்று குறிப்பிடாமல், திருவள்ளுவர் மனைவி என்கிற ஸ்தானத்திற்கு
அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறார். மனைவியே ஒரு குடும்பத்தை உருவாக்குபவள் அல்லது கட்டிக்காப்பவள்
அல்லது அவளே அக்குடும்பத்தை வழி நடத்துபவள் என்பதாலேயே மனைவி என்னும் ஸ்தானத்திற்கு
இப்படிப்பட்ட அதீத முக்கியத்துவம்! (‘கணவன்’ என்பவர் குடும்பத்தில் அவரும் ஒரு கதாபாத்திரம் என்கிற ரீதியில்தான்
பங்களிப்பு செய்கிறார். அவ்வளவே!)
இல்வாழ்க்கையில் ஒரு ஆண் பொருள், அதிகாரம், செல்வாக்கு ஆகியன நிறைந்திருக்கலாம். ஆனாலும், அவன் மனைவியானவள் குடும்பத்தின் மீது
அதீத அக்கறை செலுத்துதல், கற்புநிலையில் வழுவாது வாழுதல், விருப்பு, வெறுப்பற்ற விருந்தோம்பல் செய்தல், கலாச்சார ரீதியிலான பாரம்பரியத்தை பேணுதல்
போன்ற நற்பண்புகளோடு விளங்கவில்லையென்றால், அந்த கணவன் சிறந்து விளங்குவது இயலாது. இதனால்தான் திருவள்ளுவர் ‘மனைவி ஸ்தானத்தை’ ஆணித்தரமாக அறுதியிட்டு கூறுகிறார். நிகழ்காலத்திலும்கூட இது உண்மைதான். உதாரணத்திற்கு, ஒரு விஷயத்தைப் பற்றி பார்க்கலாம். ஐம்பது வயதைக்கடந்த ஒரு பிரபலமான திரைப்பட
இசையமைப்பாளர் ஒருவர். அவருக்கும் அவரது
மனைவிக்குமிடையே இல்லற வாழ்வில் கசப்பும், பிணக்கும் ஏற்பட்டு ‘விவாகரத்து’ செய்யப்போவதாக செய்தி பரவியது. அந்த செய்தியை அறிந்தவுடனே அவர்களது
நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட அவர்கள் மீது ‘பச்சாதாபம்’ கொண்டனர். அவர்கள் மீண்டும் இல்லறத்தில் இணைந்தே
பயணிக்கவேண்டும் என்கிற தங்களின் அக்கறையை பிரதிபலித்தனர். மக்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, அந்த இசையமைப்பாளரும், அவரது மனைவியும் விவாகரத்து செய்யும்
எண்ணைத்தைக் கைவிட்டு இணைந்து வாழப்போவதாக அறிவித்து விட்டனர். பொதுமக்களைப் பொறுத்தவரை ’விவாகரத்து’ என்கிற ஒற்றைச் சொல் அவரது பிரபலத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுவிடுமே.. இது நடக்கக்கூடாது (விவாகரத்து) என்றெல்லாம் வெகுவாக பதைபதைத்தனர். அந்த அளவிற்கு ’கணவன் – மனைவி’ என்போர், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்கூட, அவர்களின் இறுதிகாலம் வரையிலும் பிரியாமல்
வாழ வேண்டும் என்பதில் இந்த சமூகம் கவனம் கொள்கிறது.
இதுவே ஏதோ சில காரணங்களால் அந்த இசையமைப்பாளரை
பிடிக்காதவர்களின் கருத்து எப்படி இருந்தது? ’அவருக்கு நல்லா வேணும், எவ்வளவு இருந்தென்ன?’ என்று பலவாறாக வார்த்தைகளை கருக்கி
வெளியிட்டனர்.
மக்களின் இந்த இருவேறுவிதமான கருத்துகள்
ஒரே விஷயத்தினை தான் மறைமுகமாக குறிப்பிடுகின்றன. அதாவது, ஒரு ஆண் எவ்வகையில் சிறந்தும் ஓங்கியிருந்தாலும், தன் மனைவியுடன் அவன் நடத்தும் ’இல்லறம் என்னும் நல்லறமே’ அவனுக்குச் சிறப்பு சேர்க்கும் என்பதைத்தான்.
-----------------------------------------------------
No comments:
Post a Comment