Friday, September 4, 2026

114.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14)

 

புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14)

அதிகாரம் 8 -அன்புடைமை -குறள் 71

            திருக்குறள்  உரை வரிசையில் இப்போது நாம் காண இருப்பது 8 ஆவது அதிகாரம் அன்புடமை.

            திருக்குறளின் முந்தைய அதிகாரங்களில் இல்வாழ்க்கை, மனைவி, குழந்தைகள் வந்துவிடுவர். இதன் மூலம் திருவள்ளுவர் மேற்கூறிய மூன்று அம்சங்களும் ஒரு குடும்பம் சார்ந்தது. அதற்கடுத்து குடும்ப உறவுகளைத்தாண்டி வெளியுலகில் அனைவருடனும் எப்படி உறவைப்பேணுவது என்பதை தன் 8 ஆவது அதிகாரமானஅன்புடைமைஅதிகாரத்தில் கூறுகிறார். அடிப்படையில் பொருளுடைமை, அறனுடைமை ஆகியவற்றிற்கும் முன்னரேஅன்புடைமைஎப்படி அமைய வேண்டும் என்பதை வள்ளுவர் கூறிவிடுகிறார். அவர் குறள் அதிகாரங்களை வரிசைப்படுத்திய விதத்தில் மிகச்சிறந்த நுட்பத்தைக் கையாண்டிருக்கிறார் என்பதை எண்ணி அடிக்கடி நான் வியப்பதுண்டு. உலகின் அனைத்து விஷயங்களுக்கும், திருக்குறளில் கூறப்படும் அனைத்து அதிகாரங்களுக்கும் அடிப்படையாக அமைவதுஅன்புடைமைஆகும். ’அன்புஎன்பதுகண்டிப்பில்லாத நேசம் (Unconditional affection)’! ஏழை பணக்காரன், நிறம், ஜாதி, ஏதாவது காரணங்களை (எதிர்பார்ப்பு) முன்னிட்டோ, அதிகாரம் அல்லது செல்வாக்கு என்பதற்காக, புகழ், பிரபலம் போன்ற எதற்காகவும் இல்லாமலோ, மற்றவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் பலனை எதிர்பாராமல் சென்று உதவக்கூடிய, மற்றவரிடத்தில் அதீத அக்கறை செலுத்தக்கூடிய இயல்பேஅன்புஆகும்.  இந்த நல்லியல்புகளை அன்புடைமை என்கிற அதிகாரத்தில் வள்ளுவப்பெருந்தகை வரிசைப்படுத்துகிறார்.

 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும். (குறள் 71)

 

            அன்பு என்பதை அடைத்து வைக்கக்கூடிய தாழ்ப்பாள் ஏதேனும் இருக்கிறதா? உண்மையான அன்புகொண்டோருடைய கண்ணீரின் சிறுதுளி அவரது அன்பை வெளிப்படுத்திவிடும் என்பதே இதன் பொருள்.

           

தங்கம், வெள்ளி உள்ளிட்ட எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதனை பாதுகாப்பாக வைக்க அல்லது மறைத்து வைப்பதற்கு நிச்சயமாக ஒரு பூட்டு தேவைப்படுகிறது. இதுவே கோபம் போன்ற உணர்ச்சிகளாக இருந்தால் மனதிற்குள் பூட்டி விடலாம். ஆனால்அன்புஎன்பதை எதனாலும் பூட்டிவிட முடியாது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் வெளிப்பட்டுவிடும்! அது எப்படி வெளிப்படுத்தும்? சிறு கண்ணீர்த் துளிகூட அந்த அன்பை காண்பித்துக்கொடுத்துவிடும். ’எப்போதுமே நமக்கு முரணானவர் இவர்என்று யாரையாவது எண்ணிக்கொண்டிருப்போம். ஒரு இக்கட்டான தருணத்தில் நாம் எதிர்பாராத விதத்தில் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பானது சட்டென வெளிப்பட்டு நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். இதற்கு உதாரணமாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தை கூறினால் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.  சிவில் சர்வீஸ் தேர்வினை நான் எழுதுவதற்கும் முன் ஒரு நிறுவனத்தில் நான் பணி செய்துகொண்டிருந்தேன். நான் தங்கியிருந்த இடத்திலிருந்து நிறுவனத்திற்கு ஒரு வேனில் அழைத்துச் சென்று மீண்டும் வந்து இறக்கிவிடும் பணியில் ஒரு டிரைவர் நியமிக்கப்பட்டிருந்தார். நான் அந்த வேனில் அவருடன் பயணித்த காலம் முழுமையுமே அவர்மீது எனக்கு ஈர்ப்பிருந்ததில்லை. அதைவிட அவர் பேசி, பழகும் விதம் எல்லாம் எனக்கு முரண்பட்டவர், எதிர்மரையானவர் என்கிற எண்ன ஓட்டம் எனக்கிருந்ததென்னவோ உண்மை. நான் சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்வதற்காக, அந்நிறுவனத்தில் செய்துவரும் பணியிலிருந்து விலகுவதாக தீர்மானித்திருந்த நாள் அது. வழக்கம்போல் நான் வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், அவரிடம் அதை பேச்சுவாக்கில் தெரிவித்தேன். அதைக்கேட்ட மாத்திரத்தில் சட்டென வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்திவிட்டார். எனக்கோ மிகுந்த ஆச்சரியம்! அவர்என்ன சார் சொல்றீங்க?’ என அதிர்ச்சியுடன் கேட்டார். அவருடைய அந்த செய்கையும், அதிர்ச்சியும் எனக்கு புதுமையாக இருந்த்து. என் மீது இத்தனைநாள் இவ்வளவு பாசமாக அவர் இருந்திருக்கிறார் என்பதை என்னால் அனுமானம் செய்யாமலேயே இருந்திருக்கிறேன் என்று உணர்ந்தேன்! அதுநாள்வரை அவருடைய அணுகுமுறை எனக்கு நெருடலாகவே இருந்தது. ஆனால், அவர் சட்டென்று போட்ட பிரேக்அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?” என்பதை எனக்கு நினைவூட்டியது. எங்களுக்கிடையில் பனமோ, வேறெந்த விஷயப்பிணைப்போ இருந்ததில்லை. இருப்பினும், அவருடைய அன்பு, அக்கறை, உணர்வின் வெளிப்பாட்டை 25 ஆண்டுகள் கழித்தும் என்னால் நினைவுகூர முடிகிறது! இதுவே மனித வாழ்க்கைக்கு அடிப்படையானது.

உண்மையான ஆனந்தமோ, சோகமோ எதுவாயினும் கண்ணீரை வெளிப்படுத்தி விடும். திருவள்ளுவர் காலத்தில் கண்ணீருக்கு வேறெந்த வர்ணனைகளும் இருந்ததில்லை. ஆனால், காலப்போக்கில்நீலிக்கண்ணீர்போன்று எத்தனையோ விதமான கண்ணீரில் பலவகை வந்துவிட்டன. ’மகாநடிகைதிரைப்படத்தில் நாயகி ஒற்றைக்கண்ணில் மட்டும் நீர் வருவதுபோல் நடித்திருப்பார். இதை வைத்துப்பார்க்கும்போது கண்ணீரை வைத்து அன்பை அளவிட முடியுமா? என்றால், அங்கே ஒரு கேள்விக்குறி எழும்பி நிற்கிறது! கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் மனிதர்கள் நிறைய நடித்துப்பழகிவிட்டாலும், ஒரு சில விஷயங்களில் இன்னும் செய்ய முடிவதில்லை!  உதாரணத்திற்கு, ‘உடல் புலரிக்கிறது.. மயிர்க்கூச்செரிகிறதுஎன்று நாம் கூறுவதுண்டு. நடிகர்களில் சிவாஜி கணேசனோ, ரஜினியோ, கமலோ புல்லரிப்பதுபோல் நடித்ததில்லை. அப்படி நடிக்கவும் முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்த உணர்வு வெளிப்பாடு மட்டும் இன்னும் நடிப்புக்கலைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது! ’புல்லரித்தல்என்பது பக்தியில் இருக்கும் அத்துடன் பெரும்மகிழ்ச்சியில் இருக்கும்.  பயத்தில் கூட கூச்செரியலாம். ஆனால், அது இன்றளவும் மனிதர்களால் நடித்துக்காட்ட முடியாத அல்லது நடித்து உருவாக்க முடியாத உள்ளார்ந்த உணர்ச்சியாக (intrinsic emotion) அது விளங்குகிறது.

 

திருவள்ளுவர்அன்புடைமைஎன்று தொடங்கும் போதே, ‘அன்பு உண்மையாக இருந்தால் அது நிச்சயம் வெளிப்பட்டுவிடும்என்கிறார். அவ்வாறு வெளிப்பாடு நடைபெறவில்லையென்றால் அவ்விட்த்தில் உண்மையிலேயே அன்பு இல்லை என்றுதான் பொருள். மனிதர்களிடையே அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதாகத்தான் அன்புடைமை எனத்தொடங்கும் குறளில் பதிவு செய்திருக்கிறார். அன்பு என்கிற ஒன்று இல்லையென்றால் மனிதர்களை இணைத்துப்பிணைக்கும் வேறெந்த விஷய்மும் இல்லை. வயது வரம்புகளின்றி, பாலின பேதமின்றி, தகுதி, அந்தஸ்து  கடந்தும், திருமணபந்தம், தாய்தந்தையர் தங்கள் குழந்தைகள் மீது பாசம் காட்டுவது, பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் மீது குழந்தைகள் காட்டும் பாசம் ஆகிய அனைத்துமே அன்பு என்கிற வட்டத்தில் அடங்கிவிடும். இந்த அன்பு என்னும் அச்சில்தான் இவ்வுலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பது உண்மையான விஷயம்.

-------------------------------------------------------------

 

No comments:

Post a Comment

114.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14)

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...