Friday, September 25, 2026

128.உண்மையான சமூகநீதி நிறுவப்படுமா?

 

உண்மையான சமூகநீதி நிறுவப்படுமா?

 

அகில இந்திய அளவில் சமூகங்களுக்கிடையே நீதியை நிலைநாட்டுவதற்காக ‘இட ஒதுக்கீடு’ என்பது OBC, MBC, SC-ST, OC என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழக அளவில் பார்த்தோமானால் BC, MBC, SC-ST, ஆகியோரை உள்ளடக்கிய 69% இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது. மீதியுள்ள 31% அனைவருக்கும் உரித்தான பொது இடங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் BC, MBC, SC-ST மக்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், சுமார் 90% என்கிற அளவில் இருக்கக்கூடும். முற்பட்ட வகுப்பினர் என்று சொல்லப்படக் கூடியவர்களுக்கு மொத்தம் 10% கூட இருக்காது. ஆக, முன்னாளில் 50% இட ஒதுக்கீட்டிற்கு போட்டியிட்டவர்கள் 69% இடஒதுக்கீட்டிற்கு போட்டியிடுகின்றனர். இந்தியா முழுக்க 50% இட ஒதுக்கீடு இருப்பினும் 9 – ஆவது ஷெட்யூல்படி சிறப்புவசதியாக தமிழ்நாட்டிற்கு மட்டும் 69% இட ஒதுக்கீடு இருந்து வருகிறது. நாட்டில் 50% -த்திற்கும் மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரையறுத்திருப்பதால் தமிழகத்தைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் 69% இட ஒதுக்கீடு இல்லை. அங்கெல்லாம் SC-ST பிரிவினர் சதவீதமும், பிறர் 27 சதவீதமும் இருப்பர். அந்த  OBC உடைந்துதான்  BC, MBC –யாக தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. மத்திய அரசில் மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டபோது, க்ரீமி லேயர் (Creamy Layer) என்னும் கருத்தியல் வடிவமைக்கப்பட்டது. இதன்படி OBC, MBC – யாக இருந்தாலும், அவர்களில் பொருளாதாரம் மேம்பட்டவர்களை வசதி மேம்பட்டவர்கள் என (Creamy Layer)  கருதும்படியான விஷயத்தை இணைத்தனர். இந்த கருத்தியலானது மேம்போக்காக நல்லதுபோல் தோன்றினாலும், இது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இதேபோல் SC-ST பிரிவினரில் வசதி மேம்பட்டவர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களை Creamy Layer என்று கருத்தில் கொள்வதில்லை. இது சற்று முரண்பாடானது என்பதாலும், பணம் மட்டுமே ஒருவரின் வாய்ப்புகளை முடிவு செய்வதில்லை என்பதாலும் தனிப்பட்ட முறையில் நான் இதற்கு உடன்படுவதில்லை. காரணம், கிராமப்புறங்களில் அதிக பணம் வைத்திருப்பதற்கும், நகர்புறம், பெருமாநகரங்கள் போன்ற இடங்களில் பணம் வைத்திருப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. அதிர்ஷ்டவசமாக இதில் நிலங்கள், அரசு ஊழியர்களின் ஊதியம் ஆகியவை விதிவிலக்காக உள்ளன. இருந்தாலும் அவர்களிடம் பணம் அதிகமிருப்பதால் தங்கள் வீட்டுக்குழந்தைகளை வெளியூரில் படிக்க வைக்க எண்ண மாட்டார்கள். நகர்புறத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய வசதி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். எனவே OBC என்று பார்த்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டை மொத்தமாகக் கொடுத்து விடுவதே நல்லது. அடுத்து வருமான வரம்பு என்று 5 இலட்சம் முதல் 6 இலட்சம் என வைப்பார்கள். அப்படிப் பார்த்தால் OBC யாரும் தகுதி பெற்றிருக்க மாட்டார்கள். ஒருவேளை ஒரு OBC 10 இலட்சங்களுக்கு மேல் வைத்திருந்தால் அவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், அது எவ்வளவு விபரீதமான யோசனையாகும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அரசியல் அமைப்பு ரீதியாக SC-ST பிரிவினருக்கும் இந்த க்ரீமி லேயர் வரையறையைச் செயல்படுத்த வேண்டுமென உச்சநீதி மன்றத்தின் சில நீதிபதிகள் கூட கருதினார்கள். சமநீதி என்று பார்த்தால் OBC மற்றும் SC-ST என இருதரப்பிற்குமே பிரிவினர் க்ரீமி லேயர் வரையறை ஏற்படுத்த வேண்டும் அல்லது இரண்டு தரப்பிற்குமே அது இருக்கக்கூடாது.  என்னுடைய தனிப்பட்ட பார்வை என்னவெனில், இரு தரப்பிற்குமே க்ரீமி லேயர் விஷயம் கூடாதென்று சொல்கிறேன்.  இட ஒதுக்கீட்டின் நற்பயன்கள் சென்று சேரவேண்டிய பயன்களை வேறுவிதமாகச் செய்ய முயற்சி எடுக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்தும் ஆலோசனையும் என்னவென்றால், உதாரணத்திற்கு ஒரு மாணவருக்கு அவர் +2 முடித்து, பொறியியற் கல்லூரியில் இணைகிறார் என்றால் அப்போது இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கலாம். ஆனால் அதன் பின் வேலை வாய்ப்பில் அது முன்னிறுத்தப்படக்கூடாது. படிப்பிற்காக இடஒதுக்கீட்டுப் பயனை அனுபவிக்கவில்லையென்றால், அதை வேலை வாய்ப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி இருக்கும்போது ஒரூ ஆரோக்கியமான போட்டியும், எல்லோருக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். உச்சநீதிமன்றத்தில் OBC Creamy layer சம்பந்தமாக சுமார் 900 –த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையிலுள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. என்னைப்பொறுத்தவரையில் இட ஒதுக்கீட்டை உண்மையாக செயல்படுமாறு செய்யவேண்டும். போட்டியிடும் மனப்பான்மையை உருவாக்க வேண்டும். அதற்காக கிரீமி லேயர் என்கிற கோட்பாடு இரண்டு தரப்பிற்குமே நீக்கப்பட வேண்டும். இப்போதிருக்கும் நடைமுறையினைத் நீக்கி விட்ட்டு ஒரு கமிட்டி அமைத்து மொத்தமாக ஒரு இடஒதுக்கீட்டை புதியதாகக் கொண்டு வந்து, அதன் பரிந்துரைகளை எப்படி செயலாக்கம் செய்வது? என  பார்க்க வேண்டும். ஏனெனில் தற்போதிருக்கும் இடஒதுக்கீட்டில் ஒரு சில ஜாதியினர் மட்டுமே இடஒதுக்கீட்டின் பயனை, அதன் சலுகைகளை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பல ஜாதியினர் அதனால் பலனடைவதில்லை. இதேபோல் ஒரு சில குடும்பங்கள் மட்டும் அதிகமானப் பயனைப்பெறுகிறார்கள். பல குடும்பங்கள் அந்த வட்டத்திற்குள் வரவேயில்லை. இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்யப்போகிறோம்? என்பதே நம் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதி நிறுவப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

----------------------------------------------

No comments:

Post a Comment

128.உண்மையான சமூகநீதி நிறுவப்படுமா?

  உண்மையான சமூகநீதி நிறுவப்படுமா?   அகில இந்திய அளவில் சமூகங்களுக்கிடையே நீதியை நிலைநாட்டுவதற்காக ‘ இட ஒதுக்கீடு ’ என்பது OBC, M...