கலாச்சாரங்களின் பரிமாணமும் பரிணாமும்
மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய கலாச்சார
ரீதியிலான நல்ல விஷயங்களைப்பின்பற்றினால் ஒரு நல்ல பிணைப்பு ஏற்படும். அவை ஒவ்வொன்றும் ஏதாவது காரண காரியங்களுடனே ஏற்படுத்தப்பட்டன.
உதாரணமாக, ரக்ஷா பந்தன் கொண்டாட்டமானது வட இந்தியாவில் பெண்கள் ஒரு
ஆணை தன் சகோதரனாகக் கருதி அவர்கள் கையில் ‘ராக்கி’ எனும் கயிறு கட்டுவதாகும். அந்த
கலாச்சாரம் இப்போது இங்கேயும் பரவியுள்ளது.
வட இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகிச் சென்றுவிட்டால், அவளுக்கும் பிறந்த வீட்டிற்குமான பந்தம் அத்துடன் முடியும்.
ஆனால்,
நம் மாநிலத்தில் அப்படியல்ல. இங்கே அண்ணந் தங்கை
உறவுமுறையானது, ஆத்மார்த்தமான
பிணைப்பு கொண்டது. உயிரோடும், உணர்வோடும்
கலந்தது. வாழ்நாளின் இருதிவரையிலும் அண்ணன் - தங்கை உறவு நீடித்திருக்கும்.
சீர்செய்முறை எல்லாம் உண்டு. அதனாலேயே நம்மூரில் நாத்தனார் சண்டை வருகிறது.
இத்தகைய சூழலில் நம்மூரில் ரக்ஷா பந்தன் தினக்கொண்டாட்டத்தின்போது கல்லூரியில்
யாரை அண்ணன், தம்பியாக ஏற்பது? என்கிற பஞ்சாயத்தை (காதல் கனவுகளை) முடிவுக்குக் கொண்டுவருவதற்காக
மட்டுமே பயன்படுகிறது!
ஒரு
காலத்தில் நம் உறவுமுறைகள் அதிகமாகவும், நெருக்கமாகவும் இருந்ததால் இதுபோன்ற விஷயங்கள்
தேவைப்பட்டதேயில்லை. ஆக, இந்த வட
இந்தியக்கலாச்சாரமானது தற்போது கல்லூரிகளில் தொடங்கி, மெல்ல பணிபுரியும் அலுவலகங்களில் நுழைந்துள்ளது. இன்னும்
குடும்பங்களுக்குள் ஊடுருவவில்லை. வெளிநாடுகளில் தாத்தா;பாட்டி, அம்மா;அப்பா ஆகியோரின் சந்திப்புக்காக ஒரு நாள் உண்டு. அதேபொல்
இந்தியாவின் வடபகுதியில் அண்ண;தங்கை, அக்காள்;தம்பி
ஆகியோரின் சந்திப்பிற்காகவே ஒரு நாள் இருக்கிறது. அவரவர் வீடுகளுக்கு நேரில்
சென்று இனிப்பு பரிமாறிக் கொள்வதுண்டு. நம் தமிழர்த் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்
கொண்டாட்டத்தின் இறுதி நாளில் ‘காணும் பொங்கல்’ விசேடமாகக் கருதி
கொண்டாடப்படுகிறது. உறவுகளின் சந்திப்பும் கொண்டாட்டமுமாகவும் இது அமைகிறது.
காரணம்,
இன்றைய வாழ்வியலில் அது அவசியத்தேவையாகிறது. இதேபோல் தான்
வட இந்தியாவின் ஹோலிப்பண்டிகையும். அங்கு வசந்த காலப் பருவத்தின் தொடக்கத்தைக்
கொண்டாடுவதற்காக கடைபிடித்து வருகிறார்கள். அந்தப்பண்டிகையும் இப்போது நம் கல்லூரிகளில் அமர்க்களமாக பலவண்ணங்களில் நீர்
பீய்ச்சியும், பொட்களைத் தூவியும்
கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப்பண்டிகையின் போது
எல்லோரும் கோலாகலமாக்க் கொண்டாடும்போதூ, ஒரு பெண்ணை மட்டுமே வெகுநேரம் சுற்றிச் சுற்றி
ஒரு இளைஞன் ஓடுகிறான் என்றால், அவன் அவளைக் காதலிப்பதாக பொருள் கொள்ளப்படும்.
நம் தமிழகத்திலும்
இது போன்ற ஒரு கொண்டாட்டம் உண்டு. ஏற்கனவே அத்தைப்பெண், மாமன் மகன் போன்றவர்களின் மீது மஞ்சள் நீர் தெளிக்கும்
கொண்டாட்டம் இருக்கிறது. இது விவசாயத்தை மையமாகக் கொண்டது.
அவ்விழாவானது பொதுவான ஒரு நிலத்தில் நடைபெறும். அதாவது, ஒவ்வொரு தமிழ்ப்புத்தாண்டு பிறப்பன்றும்
பலரும் ஏர் பூட்டிய இரட்டைக் காளைகளுடன் பொதுவான நிலத்திற்குச் செல்வர். அங்கே குடும்பத்தின்
பெரியவர்கள் பூஜை நடத்தி அந்த நிலத்தை வட்டமாகச் சுற்றியபடியே மூன்றுமுறை நிலத்தை உழுது
முடிப்பர். இவ்வாறு செய்வது அந்த ஆண்டு முழுமையும் தங்கள் விவசாயத்தால் வாழ்வு செழிக்கும்
என்கிர நம்பிக்கையே. அதன்பின் அந்த காளைகளுடன் ஏரினை தங்கள் குடும்ப வாரிசுகளிடம் ஒப்படைப்பர். அவர்கள் உற்சாகம் பீறிட அந்தக் காளைகளை நுகத்தடியுடன்
வேகமாக விரட்டிக்கொண்டே ஓடுவர். அந்தக்காளைகள் மின்னல் வேகப்பாய்ச்சலில் ஓடத்தொடங்கும்.
சில சமயங்களில் ஒரே நுகத்தடியில் பூட்டிய இரட்டைக் காளைகளின் வேகத்தில் கூடுதல் குறைச்சலும்
இருக்கும். அப்படி ஓடும்போது, அந்த வாரிசு இளைஞர்களின் மீது கணநேரத்தில் உறவுக்காரப்
பருவப்பெண்கள் மஞ்சள் கலந்த நீரை வீசி அவனை நனைய வைப்பதுண்டு. இதன் மூலம் அந்த இளைஞனை
அவளுக்குப் பிடித்திருப்பதாக்க் கருதி அடுத்த கட்டமாக அவர்களுக்கு திருமணம் பேசி முடிப்பதுண்டு.
இப்படி நம்
இந்தியாவின் பன்முகத்தன்மையிலும் கலாச்சார ரீதியில் கண்ணியமான, கோலாகலமான, நாட்டிற்கு
கெளரவம் சேர்க்கும் வகையில் எண்ணற்றவை உண்டு. இவை நம் ஜீவநாடி. இதுபோன்ற கலாச்சார மேன்மைகளை,
அதன் காரண காரியங்களை நன்கு புரிந்து கொண்டு பரிவர்த்தனை செய்யும்போது நம் இந்தியா
மென்மேலும் புகழ் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
------------------------------------------------
No comments:
Post a Comment