Friday, September 4, 2026

102.யார் அந்தணர்? (குறளின் குரல்-2) நீத்தார் பெருமை - குறள்: 30

 

யார் அந்தணர்? (குறளின் குரல்-2)

நீத்தார் பெருமை - குறள்: 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.  

”அந்தணர்” என்றால் ”அறம் சார்ந்தவர்”என்று பொருள். மேலும் “பிராமணர்” சமூகத்தையும் குறிப்பிடப்படுகிறது. இக்குறளின் பொருளாக, “அந்தணர்கள் அறம் சார்ந்தவர்கள் மேலும் வேறு எந்த உயிர்களுக்கும் துன்பம் தராதவர்கள்” என்று திருவள்ளுவர் விளக்குகிறார்.

உணவுப்பழக்கத்தில் ”அசைவம்” உண்பவர்களை நாம் அவ்வாறு சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு உயிரை அழித்துதான் அசைவத்தை சாப்பிட முடியும். ஆகவே, பிற உயிர்களுக்கு துன்பம் தரக்கூடாது எனில், நிச்சயமாக ஒருவர் “சைவம்” உண்பவராக மட்டுமே இருக்க முடியும்.

நாம் சிலரின் வாக்குமூலங்களைக் கேட்டிருப்போம். 

 “காளைக்காக” ஏன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடினீர்களே!? என்று கேட்டால், “அது எங்கள் உரிமை!”என்பார்கள்.

“சரி.. அதே காளையை ஏன் சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டால், ”அதுவும் எங்கள் உரிமை!” என்று பதில் வரும்.

”அந்த உணவு எனக்கு பிடித்தமானது, அதனால் அசைவத்தைச் சாப்பிடுவேன்!”என்போர்களுக்கு திருவள்ளுவரின் கூற்று ஒவ்வாது.

”சரியா? தவறா?”என்றால், நம் தமிழ்க்கலாச்சாரத்தில் “சைவம், அசைவம்” என்கிற பாகுபாடு ஒருபோதும் இருந்ததில்லை. சைவம் சாப்பிட்டால்தான் உயர்ந்தவர்கள் என்பது நிச்சயமாக இல்லை.

பிற உயிர்களுக்கு தேவையேயில்லாமல் தீங்கு செய்யக்கூடாது” என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ”ஒருவர் தனக்கு பசியில்லாதபோது பிற உயிர்களைக் கொல்லக்கூடாது”என்றும் கூறப்பட்டுள்ளது.

”சைவம்” என்பது உலகத்தில் எங்குமே இருந்ததில்லை. நம் இந்தியாவில்தான் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த உணவுப்பாகுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதையே டாக்டர். அம்பேத்கர் அவர்கள், தனது ”Revolution and counter Revolution in India” எனும் தன் நூலில் எழுத்தியுள்ளார். புத்தரும் அணுகியுள்ளார்.

வேதகாலத்தின் இறுதியிலிருந்துதான் நாம் சைவத்தைக்காண முடிகிறது. யாரெல்லாம் சைவத்தைப்பின்பற்றுகிறார்களோ, அவர்களெல்லாம் அந்தணர் என்று கருதப்படுவதாலும், இங்கிருக்கக்கூடிய பிராமணர்கள் சைவர்களாக விளங்குவதாலும், அவர்களுக்கு “அந்தணர்” என்னும் தர்க்கம் (Logic) வந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

“மற்ற எந்த உயிர்களுக்கும் தொல்லை தரக்கூடாது என்றால்.. தேவையில்லாமல் தொந்தரவு தரக்கூடாது” என்று நான் புரிதல் கொள்கிறேன். ”ஒரு உயிரை வேட்டையாடிக் கொல்கிறோம். அதை சாப்பிடப்போவதில்லை என்றால் அது தேவையற்றது. ஒருவேளை நாம் அதை சாப்பிடுவதைப்பற்றி மதுரைப்பகுதியில் “கொன்றால் பாவம்.. தின்றால் போச்சு!” என்பார்கள். இதன் மூலம் ’சாப்பிடுவதற்காக கொல்லலாம்’ என்னும் பொருள் வருகிறது.

இவ்விஷயத்தில் சீனத்தைப்பற்றி அவசியம் குறிப்பிட வேண்டும். அதில் ”இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் சாப்பிடுவதற்குத்தான்! என்கிற மிக சுவாரஸியமான ஒரு கருத்து உண்டு. அதிர்ஷ்டவசமாக அந்தப்பட்டியலில் மனிதர்களை விலக்கிவைத்துவிட்டனர். அதாவது மனிதர்களைத்தவிர வேறு எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று வரையறுத்து விட்டனர். அதனால்தான் அங்கே தேள், பூரான், பாம்பு மற்றும் அனைத்து விதமான மீன்கள் என எவையும் விடுதல் இல்லாமல் இடம் பெற்றுள்ளன. இப்படிப்பட்ட பஞ்சாயத்திலிருந்துதான் அங்கே கூகானில் ஒரு மிருகத்திடமிருந்து புறப்பட்ட ஒரு வைரஸ் கோவிட் (Covid) என்கிற பெயரால் உலகின் எல்லா இடங்களுக்கும் பரவி அனைத்தையும் ஆட்டம் காணவைத்தது.

ஆக, ”காரண, காரியங்கள் இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை!” என்னும் கருத்து பொதுவாக வழக்கத்தில் உள்ளது. ஆகையால் அறத்தை வளர்ப்போம். 

                                    ---------------------------

No comments:

Post a Comment

134.நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா?

  நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா? வருமான வரி கட்டும் தன் நண்பரின் எண்ண ஓட்டத்தைக்குறித்து ட்விட்டர் வலைதளத்தில் ஒருவர் சமீப...