வள்ளுவன் வழிகாட்டும் கற்பு (குறளின்
குரல்- 12)
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின் (குறள் 54)
’கற்புநெறி மிகுந்த ஒரு பெண்ணை மனைவியாக அமையப்பெற்றதைக்காட்டிலும் ஒரு ஆணுக்கு சிறந்த பெருமை வேறெதுவும் இல்லை’ என்கிறார் வள்ளுவர். இல்லறத்தில் ‘வாழ்க்கை துணைநலம்’ என்பது ஒரு குடும்பத்தின் அச்சாரம் மனைவிதான் என்று கூறுவதுடன், அத்தகைய மனைவி எப்படிப்பட்டவளாக
இருந்தால் வாழ்க்கை எப்படி விளங்கும்? மேலும் அவள் கணவன் எப்படி இருப்பான்? என்பதையும் இந்த 54 ஆவது குறள் விவரிக்கிறது.
நம் தமிழ் கலாச்சாரத்தில்
’கற்பு’ என்பது அதிகளவில் கலந்தாலோசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட,
சர்ச்சைக்குட்பட்ட ஒரு விஷயமாகும். ஒருமுறை பிரபலமான நடிகை ஒருவர் “கற்பு”பற்றி விளக்கம் கொடுத்தார். உடனே அவருக்கெதிராக மிகப்பெரிய போராட்டமெல்லாம்
நடந்தன. கற்பு பெண்களுக்கு மட்டுமானதா? என்றால், அது ஆண்களுக்குமானதுதான் என்று கலாச்சார பார்வையாளர்கள் கூறுவதுண்டு. ஆனால், எதார்த்த நடைமுறை வாழ்வில் ’கற்பு’ என்பது குறிப்பாக பெண்களுக்கானது என்றுதான் இந்திய சமுதாயம் கருத்தாக்கம் கொண்டுள்ளது. ஆண்களைப்பொறுத்த வரையில் வெறும் பெயரளவிற்குதான்
இருக்கிறது. எனக்குத் தெரிந்து எவரோடும் ஒப்பிடப்பட முடியாத உயர் நிலையில் இருப்பவர் இராமாயண நாயகன் “ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி” மட்டுமே! என் பார்வையில் அவருக்குப்பிறகு
அவருக்கு ஒப்பீடாக எவரைப்பற்றியும் பேசக்கூட முடியாத அமைப்புதான் உள்ளது!
கற்பு என்பது வெறும் உடல் சார்ந்ததா? என்றால், நம் சமூகம் அப்படித்தான் வரையறுத்து வைத்துள்ளது. ஆனால், அது ’மனம்’ சார்ந்தது என்பதே கருத்தியல் (ideology)
ரீதியான பார்வை ஆகும். உடல் சார்ந்தது என்றால் ஒரு பெண் பலவந்தப்படும்போது ‘கற்பழிக்கப்பட்டாள்’ என்று செய்திகளில் குறிப்பிடுகிறார்கள். அந்த பெண்ணுக்கு அதில் விருப்பம் இல்லாவிட்டாலும்,
’கற்பழிக்கப்பட்டாள்’ என்று குறிப்பிடுவதாலேயே அது உடல் சார்ந்தது என்றாகிவிடுகிறது. ஆனால், நம் இதிகாசங்கள், புராணங்கள், வாழ்க்கை தத்துவங்கள் மற்றும் இன்றைக்கும் வெளிவரக்கூடிய நாவல்கள், இன்னும் பல கதைகள் போன்றவை அனைத்துமே கற்பு என்பது ‘மனம்’ சார்ந்தது என்றுதான் கூறுகின்றன. ஒரு பெண் பலவந்தப்படுவதாலேயே அவள் கற்பழிக்கப்பட்டாள் என்று அர்த்தமில்லை. மகாத்மா காந்தியடிகளின் கருத்தும் அதுதான்.
மனித சமுதாயம் கணவன் –மனைவி என்கிற பந்தமானது உலகம் முழுமையுமே அதாவது, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா போன்று எல்லா சமுதாயங்களின் மத்தியிலும் நிலவிவரும் ஒற்றுமையான விஷயமாகும். பத்தயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வெகு கலங்களுக்கும் முன்னரே மனித சமுதாயம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தபோதும்,
அந்தந்த நிலப்பரப்பினை சேர்ந்தவர்கள் பிற நிலப்பரப்பினைச் சேர்ந்தவர்களை சந்தித்துக்கொள்ள வாய்ப்பு இல்லாத காலத்திலேயே இப்படித்தான் இருந்திருக்கின்றது! மாலை வேளைகளில் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் தங்களுக்குள் உறவை உருவாக்கிக்கொள்வது, அடுத்தடுத்த நாள்களும் அவர்கள் அதேபோல் உறவினைத் தொடர்வது மட்டுமல்லாமல் வேறு எவருடனும் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் அசலான திருமண பந்தத்தின் மிக முக்கிய அம்சங்களாகும்.
அந்த அமைப்பிற்கு (Marriage System) ’நம்பிக்கை’தான் அடிப்படை.
ஒரு பெண் தன்னுடைய சுகங்களைத் துறப்பதற்கு முக்கிய காரணம், ஒரு
ஆணை கலாசாரத்திற்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் கட்டுப்பாட்டுடன்
வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு ஆணின் மனம் பெண்ணின் மனதைவிட அதிகமாக அலைபாயக் கூடிய இயல்பாகவே இருக்கிறது. ஆகவே தன்னுடைய சின்னச்சின்ன ஆசை, எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறாள். ‘இப்படிப்பட்ட தியாகங்களை நான் உனக்காக செய்கிறேன். ஆகவே குடும்ப பந்தத்திற்குள் நீயும் கட்டுப்பாட்டோடு
இருக்க வேண்டும்’ என்று அவனுக்கு நயமாக தெரிவிக்கிறாள்.
கற்பு என்பது ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான நம்பிக்கை என்பதகாவே நான் பார்க்கிறேன்.
நம்பிக்கை என்பது முழுக்க முழுக்க ‘மனம்’ சார்ந்தது. அது உடல் சார்ந்ததல்ல. ஆகவே, திருவள்ளுவர் கூறும் ’கற்பு’எனும் கூற்றையும் மனம் சார்ந்த நம்பிக்கையாகவே பார்க்க வேண்டும். ஒரு மனைவியானவள் அவள் கணவனின் மிகசிறந்த நலம் விரும்பியாக இருக்கிறாள் என்பதே திருவள்ளுவரின் கருத்தாக எடுத்துக்கொள்கிறோம். கற்பு உடல் சார்ந்தது என்றால், ஒருவேளை பெண்ணின் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொண்டுவிட்டால் ‘கற்பிழந்துவிட்டாளா?’ என்கிற கேள்வி! திருமணத்திற்குப்பின் அந்த பந்தத்தைத் தாண்டிய வேறு ஒரு உறவு வந்தால், அதனால் ‘கற்பிழந்தாளா?’
என்கிற கேள்விகளெல்லாம்
’கற்பு உடல் சார்ந்தது’ என்று பார்ப்பதால் வருகின்ற பிரச்சினை. நம் சமுதாயம் நிச்சயம் உடல் சார்ந்தது என்றுதான் பார்க்கிறது. பெண்கள் இதையும் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், ’கற்பு மனம் சார்ந்தது’ என்கிற கோணத்தில்தான் பார்க்க பழக வேண்டும் என்பதைத்தான் வள்ளுவர் இக்குறளில் கூறியிருக்கிறார் என்று நான் பார்க்கிறேன்.
------------------------------------------------------------------
No comments:
Post a Comment