மறைமொழியே சாசனம் (குறளின் குரல் -3)
(நீத்தார் பெருமை )
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.” (குறள் 28)
”நிறைமொழி மாந்தர்” என்றால் ஒரு நிறைவான மொழியையுடைய மனிதர்
என்று பொருள் கொள்ளலாம். நிறைவான மொழி யாருக்கு நிறைவு? அதைக்கேட்பவர்களுக்கு என்று கூறலாம். அப்படி என்றால், ’நல்ல பயன் தரக்கூடிய வார்த்தைகள், தேவையான மற்றும் முழுமையான வார்த்தைகள்
ஆகியவற்றைப் பேசுதல்’என்று பொருளாகும். ”நாவினால் சுட்டவடு ஆறாது”என்று வள்ளுவர் இன்னொரு இடத்தில் கூறியுள்ளார். மற்றவற்றால் ஏற்படும் காயத்திற்கு ’தழும்பு’ ஏற்படலாம். காலப்போக்கில் அது மறைந்தும் போகலாம். ஆனால் நாவினால் சொல்லப்படும் சொல்லுக்கு
சக்தி அதிகம்.
ஆகவே, அப்படி காயங்களை ஏற்படுத்தாத வார்த்தைகளை
பேசக்கூடிய மாந்தரே நிறைமொழி மாந்தர் எனப்படுவர். அப்படி ஒருவர் இருக்கிறாரென்றல் அவருக்கு என்ன பெருமை? அவர் காலத்திற்குப் பிந்தைய நூல்கள், அவர் பெயரைச் சொல்லக்கூடிய நூல்களாக
இருத்தல் வேண்டும். அவ்வகையில் ’திருவள்ளுவர்கூட ஒரு நிறைமொழி மாந்தரே’ என்ற முடிவிற்கு தோன்றும்.
நிறைமொழி மாந்தர்களின் பெயரில் விளங்கக்கூடிய
மறைமொழி அதாவது சமஸ்கிருதத்தில் வேதம்
அல்லது இறைவனின் நேரிடையான ஆணை எனலாம். எந்த ஒரு மொழி பல ஆண்டுகாலமாக அழியாமல் வாழ்கிறதோ அந்த மொழி
’மறைமொழி’ எனப்படும். எவையெல்லாம் காலப்போக்கில் மறைந்து
விடுகின்றனவோ அவையெல்லாம் மறைமொழி அல்ல. அதுபோல் சரித்திரப் பூர்வமாக நிறைமொழி மாந்தர் ஒருவர் தன் காலம் முடிந்து சென்றபின்னரும்
அவர்தம் புகழ் இப்பூமியில் நிலைத்து நிற்கும் என்பதை இக்குறளின் மூலம் நாம் தெரிந்து
கொள்கிறோம்.
-------------
No comments:
Post a Comment