1. சிற்றின்பம் -
பேரின்பம் தமிழர் வாழ்வியல் சொல்வது என்ன ?
நம் தினசரி வாழ்வில் செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல ஊடகங்களில் “சிற்றின்பம்” என்கிற பெயரில் விளம்பரங்களைக் கண்டு வருகிறோம். இந்த விளம்பரங்களின் தாக்கத்தால் தற்காலத்தில் இந்த வார்த்தைக்கு
“சுய இன்பம்
(Self sex)” பொருள் கொள்ளப்படுகிறது.
ஆனால், தமிழ்க்கலாச்சாரத்தில் இந்த வார்த்தைக்கான உண்மையான பொருள் தான் என்ன? மனித வாழ்வில் அடையக்கூடிய இன்பத்தினை “சிற்றின்பம்- பேரின்பம்” என இரண்டு வகையான நம் தமிழ் முன்னோர் வகைப்படுத்தியிருந்தனர். இது தமிழ்க் கலாச்சாரத்தில் மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பம்சமாகும்.
”பேரின்பம்” என்பது மூன்றுவகையான பயன்பாடுகளை குறிக்கும் சொல்லாகும். முதலாவதாக, அந்த தருணத்தில் கிடைக்கப்பெறும் மகிழ்ச்சி. இரண்டாவது, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கிடைக்கப்பெறும்
மகிழ்ச்சி. அப்படிப்பட்ட தருணத்தை அடுத்து வரும் சந்ததியினரும் எண்ணிப்பார்த்து அடையக்கூடிய மகிழ்ச்சி. உதாரணமாக, மிகுந்த வறட்சியான காலகட்டத்தில், ஒருவர் அன்னதானம் வழங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அன்னதானம் வழங்கும் நல்லவாய்ப்பினை இறைவன் அளித்ததால் அன்னதானம் வழங்கியவருக்கு மகிழ்ச்சி. அந்த தானத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மகிழ்ச்சி. இந்த அன்னதான நிகழ்ச்சியானது,
கல்வெட்டாக வரலாற்றில் இடம் பெறும்போது, அதனை வருங்கால சந்ததியினர் அறிந்து அவர்கள் அடையப் போவது ஒருவித மகிழ்ச்சி. ஆக, ஒரு நற்செயலால் மூன்றுவித மகிழ்ச்சி ஏற்படுகிறது.
சோழவம்சத்தில் முதற் குலோத்துங்க சோழன் (1070-1120) என்பவனே “சுங்கம் தவிர்த்த சோழன்” என்கிற சிறப்புப் பெயருடையவன்
ஆவான். வணிகர்கள் மீதான சுங்கவரி என்பதை அறவே நீக்கியதால் இந்த பட்டப்பெயர் அவனது புகழுக்கு
மேலும் சிறப்பு சேர்த்தது. அவ்வாறு சுங்கவரியை நீக்கியதால், அக்கால வணிகர்கள் மற்றும் மக்களுக்கு
மகிழ்ச்சி கிட்டியிருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததனால் மன்னன் குலோத்துங்கன் மகிழ்ச்சி
அடைந்திருக்கிறான். இந்த வரலாற்றுச்
சம்பவத்தை
900 ஆண்டுகளுக்குப்
பின்னரும் நினைவு கூர்ந்து இப்போது நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கு நேர்மாறான வரலாற்றுப்பதிவிலிருந்து
உதாரணம் ஒன்றை கூறமுடியும். ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடல்ஃப் ஹிட்லர். அவரது உச்சகட்ட செயல்பாடுகள் உலகத்தையே
உலுக்கியது.
ஆனால், அவர் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்போது
அவர் மகிழ்ச்சியாக இருந்தாரா? என்றால், மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவரைச் சுற்றியிருந்த பெரும்கூட்டமும்
மகிழ்ச்சியாகவே இருந்தது. அதனால், ஹிட்லர் செய்ததெல்லாம் “சரிதான்” என்று ஹிட்லரின் உடனேயே இருந்துகொண்டு
மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் 1945 ஏப்ரல் 30 ஆம் தேதியன்று ஜெர்மனியின் பெர்லின் நகரில் தற்கொலை செய்துகொண்டதாக
கூறப்படுகிறது.
இதுநடந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய ஆட்சியில் ஒரு இனத்தையே (யூதர்கள்) கொடூரமாக திட்டமிட்டு படுகொலை செய்தவர்தானே
என அறிந்து கொண்டதால் இன்றைய தலைமுறை மகிழ்ச்சியாக இல்லை.
ஆக, தானும் மகிழ்ச்சியாக இருந்து, பிறரையும் மகிழ்வித்து, எதிர்காலத் தலைமுறைக்கும் இன்பம் பயக்கும்
செயல்கள் யாவும் “பேரின்பம்”
என்று
கொள்ளப்படும்.
இரண்டாவது வகை “சிற்றின்பம்” ஆகும். மதரீதியாக அணுகினால், பொதுவாக ”இன்பமே துன்பத்திற்கு காரணம்” என்கிற பதில் கிடைக்கும். புத்தமதத்தில், ”ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்”என்பர். ஆகவே ஆசையைப் பின்தொடரவே வேண்டாம் என்று
கூறுவர்.
ஜைன மதத்தில் விரதம் போன்றவற்றால் தன்னைத்தானே
வருத்திக்கொள்ளுதல் போன்ற கடுமையான அணுகுமுறையெல்லாம் இருக்கும். இந்துமதத்தில் கூட, பகவான் கிருஷ்ணரின் போதனைகளில், “இரவு;பகல், குளிர்;சூடு” இப்படி இரு வேறு முரண்பாட்டு அம்சங்கள்
இருக்கும்.
இதுபோன்ற இருமை வேறுபாடுகளை சமாளித்தால்தான்
வாழ்வில்
“இன்பம்;துன்பம்” ஆகிய இருமைகளை எதிர்கொண்டு வாழமுடியும். இன்பங்களிலிருந்து விலகி இருந்து துன்பங்களிலிருந்து
விடுபட முடியும் என்றெல்லாம் வரும். இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் துன்பத்தில் வாடி வரும்
ஒருவரை வழிநடத்தும் பரிசோதனையாகக் கொள்ளலாம். அதாவது, “நீ எப்படியெல்லாம் இன்பத்தை அனுபவித்தாய். இன்னன்ன மாதிரி நடந்துகொண்டிருந்தால்
இப்போது வந்துள்ள துன்பத்தைக் களைந்திருக்கலாமே” என்று கூறுவது போல. ஆக, மதங்களில் துன்பம் வந்தால் அதை எதிர்கொள்ள, ஒரு இன்பத்தை துறப்பது என்கிற பயிற்சியை
வழங்குவதுபோலத்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவு சம்பந்தமான விரதம், இன்ன பிற விரதங்கள், பதயாத்திரையாகவே கோவிலுக்குப் போவது
போன்ற நியமங்கள். உடல்வலிக்க, மனம் வலிக்க நாம் செய்யக்கூடியவற்றின்
பின்னணியில் இருக்கக்கூடிய விஷயம் தவறான பாதைகளுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதாலும், அந்த இன்பத்தை அதீதமாக நுகர்வதாலும், துன்பத்திற்கு ஆட்பட்டு துயரத்தை அனுபவிப்பதிலிருந்து
தடுத்தாட்கொள்ளும் முறைகள்தான் அவை. ஆனால்.. ஆச்சரியப்படுத்தும் வகையில் தமிழர் கலாச்சாரத்தில் தத்துவார்த்த
விலகலாக நான் இந்த விஷயத்தைப் பார்க்கிறேன். ஏனென்றால், ”இன்பத்தை ஒதுக்க வேண்டும்” என தமிழர்கள் ஒருபோதும் சொன்னதே இல்லை.
அதற்கு
மாறாக இன்பத்தை இரண்டு பிரிவாக (சிற்றின்பம்; பேரின்பம்) பிரித்தனர். அவற்றில் பேரின்பம் என்றால் ஏற்றுக் கொள். சிற்றின்பம் என்றால் விட்டு விலகிவிடு. ஏனென்றால் இறுதிநிலையில் அது துன்பத்தில்தான்
ஆழ்த்தும் என்ரனர். இந்திய கலாச்சாரம், இந்தியாவின் தத்துவார்த்தங்கள், இன்னும் பல்வேறு மதங்கள் ஆகியவற்றில்
உள்ள கருத்தியலை ஆராய்ந்தோமானால், தமிழர் கலாச்சாரத்தில்தான் மட்டும்தான் சிற்றின்பமானது துன்பம்
தரக்கூடியது என்றும், துன்பம் தராத நல்லியல்புகளைக்
கொண்டது பேரின்பம் மட்டுமே என்கிற சித்தாந்தம் இருக்கிறது. சாதனைகளாக மிளிர்கின்ற எல்லாமே பேரின்பம்
சார்ந்தவையே.
உதாரணத்திற்கு இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தில்
அறிவியல் ரீதியான மலர்ச்சிகள் யாவும் சாதனைகள். அதன் சாதனைகளுக்குப் பின்னால் நிறைந்திருப்பவை
அனைத்தும் ஒட்டுமொத்த உலகத்தின் மனிதகுலத்திற்கு வழங்கும் பேரின்பமே. ஐ.ஏ.எஸ் தேர்வில் முதன்மையாளராக வருவது, மருத்துவத்துறையில் முன்னிலை பெறுவது, இவையெல்லாம் அந்த சாதனையாளருக்கு மகிழ்ச்சி. அவர்களின் குடும்பத்தார்க்கு மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் சேவையை சரிவர ஆற்றும்பொழுது
மக்களுக்கு மகிழ்ச்சி. இவை எல்லாம் பேரின்பம்
என்னும் பட்டியலில் இடம்பெறுபவையே.
மதங்கள் கூறுபவையெல்லாம், இன்பத்தை பாதுகாப்பாக அணுகி அனுபவித்தால், துன்பத்தையும் பாதுகாப்பாக அணுக முடியும்
என்பதே.
தமிழர் கலாச்சாரம் சொல்வது யாதெனில், பேரின்பத்தை இனம் கண்டு, வெற்றி கொள்வதுடன், சிற்றின்பத்தையும் இனம் கண்டு புறந்தள்ளிவிடத்
தெரிந்தால்,
துன்பத்தை எண்ணி ஒருபோதும் கவலைகொள்ளத்
தேவையில்லை என்பதே. பேரினத்தையே தேடுவோம்.
No comments:
Post a Comment