9. The Truth About Pre-Wedding Shoots A Logical Analysis
Pre wedding shoot (திருமணத்திற்கு முந்தைய புகைப்பட, காணொலிப் பதிவு) என்கிற பெயரால், பலவிதமான விஷயங்களை இன்றைய சமுதாயத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது எந்தளவிற்கு சரி அல்லது தவறு என்பது அது சார்ந்த “தலைவன் - தலைவி” ஆகியோர் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி என்னுடைய பொதுவான பார்வை என்னவென்றால், மிகவும் அரும்பாடுபட்டு, பலவிதமான கோணங்கள், பலவிதமான உடைகள் தோற்றநிலை (Pose), பலவிதமான லொகேஷன்ஸ் என்றெல்லாம் தீர்மானித்து படம்பிடிக்கிறார்கள் என்று பார்த்தால், பலவிதமான காரணங்கள் இருக்கலாம். அவற்றில் மிக முக்கியமானது எதுவென்று பார்த்தால், அவர்களின் (மணமக்கள்) ”எங்கள் காதல் எவ்வளவு புனிதமானது தெரியுமா? எவ்வளவு சூப்பரான காதல் தெரியுமா? எங்கள் காதல் எவ்வளவு ஆழமானது தெரியுமா? எங்கள் காதல் எவ்வளவு உண்மையானது தெரியுமா? எந்தளவிற்கு எமோஷனலானது (Emotional) தெரியுமா?” என்றெல்லாம் தங்கள் காதலின் மகத்துவம் பற்றி மக்களிடம் கொண்டுசேர்க்க ஆசைப்படுவதன் விளைவுதான் இது! இதுமட்டுமில்லாமல் திருமணத்திற்குப் பின்கூட கணவன் – மனைவி இணைந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் வீடியோக்களை பார்க்கிறோம். இதெல்லாம் “எங்களைப்போன்ற (தம்பதி) சிறந்த கணவன் – மனைவி இல்லை. அந்தளவிற்கு நாங்கள் மனமொத்தவர்கள்” என்று பொதுவெளியில் சந்தைப்படுத்துகிறார்கள். முற்காலத்தில் அரசர்கள் – அரசியர் (ராஜ தம்பதியினர்) செய்துகொண்டிருந்தார்கள். அதற்குப்பின் என்னதான் அவர்களுக்குள் சண்டை நடந்தாலும் சினிமா நடிகர் – நடிகையர் செய்துவருகிறார்கள். (அவர்களுக்குள் என்ன சண்டை என்பது போலீஸ் துறைக்கும், வருமான வரித்துறைக்கும் நிச்சயம் தெரியும்!). ஆனாலும், பொதுவெளியில் சினிமா சார்ந்த விழாக்கள், பார்ட்டிகள் என்று வர வேண்டியிருப்பின் அங்கே அவர்கள் தங்களுக்குள் முத்தமிட்டுக் கொள்வதும், மிகச்சிறந்த தாம்பத்ய வாழ்வில் தாங்கள் இன்புற்று வாழ்ந்து வருவது போலவும் காண்பித்துக்கொள்வது சர்வசாதாரணம்! பிரபலங்கள் அவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணங்கள் பல இருக்கக்கூடும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் உள்ள மிகவும் எளிய குடும்பத்தினர்கூட இதை பின்பற்றுகிறார்கள். இது சரியா என்றால்.. அதற்கு ஒரு உதாரணத்துடன் விளக்க முற்படுகிறேன். இதற்கு நாம் தமிழர் நாகரீகத்தின் சங்க காலத்திற்குச் செல்ல வேண்டும். சங்க்கால இலக்கியங்களில் ”அகநானூறு – புறநானூறு ” என வகைப்படுத்தப்பட்ட பாடல்கள் உள்ளன.
அகநானூறுப்பாடல்கள்
எப்படி வகைபடுத்தப்படுகின்றன? என்றால், இது அகத்திணை. தலைவன் – தலைவி (காதலன் - காதலி) ஆகியோர் தங்கள் உள்ளத்தின் கனவுகளை, உணர்வுகளை பிறருக்குப் புரியவைக்க இயலாமலும், அது அகம் (உள்ளம்) சார்ந்து மட்டுமே இருப்பதால் இது அகத்திணை.
”அகம்” என்பதைத்தாண்டி”புறம்” (வெளியுலகு) என்பது குறித்து பாடப்பட்டவை “புறநானூறு” ஆகும். சரி.. புறத்தில் மிக முக்கியமானது என்ன? என்ற கேள்விக்கு “வீரம்” என்பதே பதில். இந்த புறம் சார்ந்த பாடல்கள் எதுவாயினும், பலரின் பெயர்கள் வெளிப்படையாக குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், அகம் சார்ந்த பாடல்களில், சேர, சோழ, பாண்டியர் மற்றும் எந்த அரசராக இருந்தாலும் ”தலைவன் – தலைவி” என்றே குறிப்பிருக்கும்!
அகம் (அகத்திணை) சார்ந்த இலக்கியங்கள் முழுவதிலும், ஏன் தலைவன் – தலைவியரின் பெயர்கள் வெளிப்படையாக குறிக்கப்படவில்லை? என்றால், ஒருவேளை பெயர் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த காதல் சம்பந்தமான உணர்வு வெளிப்பாடானது வெறும் இரண்டு நபர்களுக்கும் இடையிலான விஷயமாக பதிவாகியிருக்கும். இதனால் பெயர்கொடுக்கப்படாத பாடலின் காட்சியையும், அதன் சுவையையும் படித்து ரசித்து, அவற்றுடன் தங்களை பொருத்திப்பார்த்து
அதன் நயத்தை தங்கள் கற்பனையிலேயே ருசிக்கலாம்.
இரண்டாவதாக யாரும் தங்கள் காதலின் ஆழத்தை, மேன்மையை ரூபிக்கவும் தேவையில்லை. அது இயலாத காரியமுமாகும்.
ஆக, காதலன் – காதலி, தலைவன் - தலைவி, கணவன் - மனைவி ஆகிய இருவருக்குமிடையே அவர்கள் தங்கள் உள்ளுக்குள் (உள்ளத்திற்குள்) மட்டுமே உணர்ந்து ரசித்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை, உலகம் முழுக்க பரவவிட்டு, தெரியப்படுத்துவதற்கு ஆர்வப்படுகிறார்கள்.
ஆனால்.. இதையெல்லாம் கடந்த, ஒரு மேம்பட்ட சமூக நாகரீகமானது பழந்தமிழர் நாகரீகமாகும்.
அவர்கள் அகத்துள் அனுபவிக்க வேண்டிய காதல் குறித்து வெளியே காண்பிக்கத் தேவையில்லை என்று கருதியவர்கள். ஆகையால், தங்கள் அத்தனை உணர்வுகளையும், உணர்வுகளையும்
”தலைவன் – தலைவி” என்கிற கோட்பாட்டிற்குள்
மட்டுமே வைத்து வெளிப்படுத்தியிருப்பார்கள். மிகவும் அரிதாக ஓரிரு பாடல்கள் மட்டுமே தலைவன் – தலைவியின் உணர்வுகளை வெளியுலகம் அறியும் வண்ணம் வெளிப்படுத்தியதாயிருக்கும். உதாரணத்திற்கு, சிவபெருமானாக சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த ”திருவிளையாடல்” திரைப்படத்தில் இடம்பெற்ற ”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி”
என்று தொடங்கும் அகநானூற்றுப் பாடல். ”இறையனார்’ என்கிற புலவர் எழுதியதாக குறிப்பிடப்படும்
அந்த பாடலில், “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டா? அல்லது செயற்கையானதா?” என பாண்டிய மன்னனுக்கு தோன்றிய வித்தியாசமான சந்தேகம்! அது அந்த பாண்டிய மன்னன் தன் தலைவியின் மீது கொண்டிருந்த ஆழமான காதலின் வெளிப்பாடு.
தற்காலத்தில்
Pre wedding shoot மற்றும் திருமணத்திற்குப் பிறகும் கணவன் – மனைவி இணைந்து, வீடியோக்களை எவ்வளவுதான் வெளியிட்டாலும், உங்கள் காதலை உங்களால் சந்தைப்படுத்த (Market) முடியாது. நீங்கள் இருவரும் மிகவும் அந்நியோன்யமாக இருப்பது என்பது உங்கள் இருவருக்குமான விஷயம் மட்டுமே. உங்கள் காதலை யாரும் புரிந்து கொள்ளவோ, அதீத ஆர்வம் காட்டவோ, கண்டுகொள்ளவோ போவதில்லை.
உங்கள் ”அகம்” சார்ந்த சுகமான அனுபவங்களை உங்களுக்குள் ரசித்துக் கொள்ளுங்கள். ”புறம்” சார்ந்த விஷயங்களான சேவைகள், வீரம், தொழில் அல்லது பணிகளில் கிட்டிய சாதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை மட்டும் வெளியுலகிற்கு வெளிப்படுத்துங்கள். மனித குலத்திற்கு பயன்படக்கூடிய அனைத்துமே புறத்தில் இருக்கின்றன. மனிதகுத்தின் நடுநாயகமாக இருக்கக்கூடிய காதல் உங்களுக்குள் மட்டுமே இருக்கும். அது வெளியே வராது. வரவும் கூடாது. ஆகவே, இதுபோன்ற செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியமாகும் என்பதை தீர்க்கமாக கூறிக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment