தமிழ்ப்பெண்களுக்கு
இழைக்கப்படும் கொடுமை
நான் பேசும்போதும், எழுதும்போதும் பல சந்தர்ப்பங்களில்
கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். அந்த முக்கியத்துவ அம்சங்களில், நம் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய சமூக அளவீடாக மதம் சார்ந்த நம்பிக்கையும்,
அதனால் விளையக்கூடிய பயன்கள், வேதங்களினால் கிட்டும் பயன்கள் மற்றும் பகுத்தறிவினால் பெறப்படும் நன்மைகள் ஆகியவற்றை மட்டும்தான் அலசிப்பார்க்கிறேன். என்னை ஒரு ஞானியாகவோ, கடவுளின் அவதாரமாகவோ கருதிக்கொண்டு நான் ஒருபோதும் எதையும் சொல்வதில்லை. இருந்தாலும் இதுபற்றி நிறைய நண்பர்களின் கேள்வி, ”இந்து கலாச்சாரத்தில் பெண்களின் நிலை மோசமாகத்தானே இருக்கிறது?”.
பொதுவாக உலகின் பிற நாட்டுப்பெண்களை விடவும் இந்தியப் பெண்மணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்களாக விளங்குகின்றனர்.
இதில் தமிழ்ப்பெண்களும்
விதிவிலக்கானவர்கள் இல்லை. அதாவது, ஒரு பெண்ணின் வயிற்றில் குழந்தை கருவாகி, உருவாகும் பத்துமாதங்கள் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கிட்டுகிறது ஆணுக்கு ஆதிக்கம் மேலோங்குவதாகவும், ஆனால், அந்த பெண்ணுக்கு அது இல்லை என்று நான் முன்பெல்லாம் யோசித்ததுண்டு.
அமெரிக்காவைச் சேர்ந்த பண்பாட்டு/ கலாச்சார மானுடவியலாளரும் எழுத்தாளருமான மார்க்ரெட் மீட்
(Margaret Mead) என்கிற அம்மையார் ஒரு ஆய்வு நடத்தியிருந்தார். அவரின் முதல் ஆய்வுக்களமானது பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் மூன்று தீவுகள். உலகளாவிய திறந்தவெளி கலாச்சாரத்தினால் பாதிக்கப்படாத,
அந்த மூன்று தீவுகளை தன் ஆய்விற்கு உட்படுத்தியிருப்பார். அதில் மிக ஆச்சரியமான விஷயம் எதுவென்றால், அங்கே ஒரு தீவில் பெண்கள் தங்கள் சமூகவாழ்க்கையில்
சக்தி வாய்ந்தவர்களாக இருப்பர். அங்கே உள்ள ஆண்கள் அந்த பெண்களுக்கு இணங்கிப்போகிற, பணிவான, மிகவும் அடக்கமானவர்களாக
(Submissive) இருந்திருக்கின்றனர். ஒரு சில இடங்களில் பெண்கள் அதிகம் ஆதிக்கம் மேற்கொள்ளும் தாய்வழிச் சமூகமாகவும்
(Matriarchal) வேறு சில இடங்களில் ஆண்கள் மேலாதிக்கம் செலுத்தும்
(Patriarchal) கலாச்சாரமும் நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தார்.
இவை மட்டுமில்லாமல்,
ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருமே கூடுமானவரை சமத்துவமாகவும் வாழ்கின்றனர். இத்தகைய நிலை உயிரியல்
(Biological) ரீதியாக வரவில்லை. ஆனால்.. இது சமூக கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் வருகிறது என்பதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆக, இந்துமத கலாச்சாரத்தில் பெண்களுக்கென நிறைய பொறுப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ”கணவனே கண்கண்ட தெய்வம்” என்றெல்லாம் கடைபிடிக்க வேண்டிய வேண்டிய நியதிகள் உள்ளன. ”தனக்கென ஆண்குழந்தை இல்லாவிட்டால் அந்த ஆண் (குடும்பத் தலைவன்) நரகத்திற்குத் தான் போவான்” என்கிற ஒரு கூற்று இந்து மதத்தில் உண்டு. சமஸ்கிருதத்தில் ”பித்” என்னும் சொல்லுக்கு “நரகம்” என்று பொருள். அந்த குடும்பத்தலைவன் இயற்கையெய்திய பிறகு அவனுடைய ஆண்குழந்தை தான் செய்யக்கூடிய “தர்ப்பணம் (அல்லது) சிரார்த்தம்” என்கிற கடமையின் மூலம், அந்த நரகத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றுபவனாக கருதப்படுகிறான்.
ஆகவே அவனை “புத்ரா” என்றழைக்கப்படுகிறான். (புத்ரா= புத்திரன் = மகன்). இதனால் பித்ருக்கான காரியங்கள் செய்ய மகன் இல்லாமல் போய்விட்டால், ஒரு ஆணோ, பெண்ணோ நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்பர். ஆனால், பெண்குழந்தைக்கு அப்படிப்பட்ட வரையறை ஏதும் இல்லை. நடைமுறை வாழ்வில் ஆண்களின் ஆதிக்கம் இருக்கிறது. இந்தநிலை இந்துமதத்தில் இருக்கிறதா? என்றால், அதற்கு விடை “இல்லை” என்றும், கலாச்சாரத்தில் இருக்கிறதா? என்றால், அதற்கான விடையோ “ஆம்” என்றுதான் சொல்வேன். இந்துமதத்தின் வேதத்தில்
(Scripture) எண்ணத்தில் கிடையாது. சட்டமும் இப்படித்தானே..
அரசியல் அமைப்பானது பல விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், அவையெல்லாம் அப்படியே சட்டமாகவா இருக்கின்றன? தேவையான திருத்தங்களுடந்தான்
அவை நடைமுறைக்கு வருகின்றன. அதேபோல் நம் கலாச்சாரத்தில் நிறைய திருத்தங்களும் தேவைப்படுகின்றன. இது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்பு இரண்டு விஷயங்கள். அவற்றில் முதலாவது, பொதுவாக தமிழ்ப்பெண்களுக்குத்தான் அதிகப்படியான துன்பங்கள் நேருகின்றன என்று கருதுவதுடன் பல இடங்களில் பதிவும் செய்து வருகிறேன். ஏனென்றால் இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாடு, கேரளாவில்தான் ”கருப்பு நிறமுள்ள பெண்கள்”அதிகம் உள்ளனர். டில்லி, மும்பையில் உள்ள
நண்பர்கள் பலரிடம் பேசும்போது, ‘அடடே.. தமிழ்நாடு, கேரளா
போன்ற மாநிலங்களில் கருப்புநிறப்பெண்கள் அதிகமாக இருப்பவர்களாயிற்றே..” என்று கூறுவர். வட இந்தியாவிலும் கருப்பு நிறத்தில் பெண்கள் காணப்படுவதுண்டு. ஆனால், அது மிகவும் குறைந்த சதவீதத்தில்தான்
இருப்பார்கள். கருப்பு என்கிற நிறத்திற்கு பின்னணியில் ஒரு எதிர்மறையான
(Negative) பிம்பத்தைக் கட்டமைத்துள்ளனர்.
தமிழ்த்திரைப்படங்களில் உள்ள ஹீரோயின்கள் எவரும் கருப்பு நிறத்தில் இருப்பதில்லை. எல்லோருமே மாநிறம் மற்றும் அதற்கும் மேல்தான். ஆனால்.. ஹீரோக்களில் கருப்பு நிறமுள்ளவர்கள் உள்ளனர். ஆணின் கருப்பு நிறத்தைவிட பெண்ணின் கருப்பு நிறத்திற்கு மதிப்பு குறைவுதான். இது இனவெறியும், பாலினமும்
(Racism and Gender) கலந்த படிநிலை (Hierarchy). அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட எந்த நாட்டில் என்றாலும், ஒரு குழந்தை பிறந்தவுடன் எல்லோரும் கேட்கக்கூடிய முதல்விஷயமே, “குழந்தையின் எடை என்ன?” என்று கேட்பர். அடுத்தபடியாகத்தான்
அந்த குழந்தை “ஆணா? பெண்ணா?” என்று விசாரிப்பர். ஆனால், இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் முதல் கேள்வியே, “ஆணா? பெண்ணா?” என்றுதான். (இத்தனைக்கும் நம் மாநிலத்தில் கூட்டுக்குடும்ப
கலாச்சாரத்தில் ஆண்குழந்தைக்கும்,
பெண்குழந்தைக்குமான சமன்பாட்டில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன.) என்ன குழந்தை என்று கேட்டவுடன், “பெண் குழந்தை” என்று பதிலளித்தால், அடுத்த கேள்வியே “நிறமா இருக்காளா? எப்படி இருக்கா?” என்று கேட்பர். மேலும், அப்பாவைப் போலவா? அம்மாவைப் போலவா? பாட்டியைப் போலவா? தாத்தாவைப் போலவா? என்றெல்லாம் கேள்விகள் நாசூக்காக வந்தவண்ணமிருக்கும். இதுபோன்று குழந்தையின் நிறத்தை தெரிந்துகொள்ளவேண்டும்.. ஆனால், நயமாக கேட்டுத்தெரிந்துகொள்ளும் மனப்பாங்கு. ”வெள்ளையா இருக்கு”ன்னு சொன்னா.. ”காது எப்படி இருக்கு?”ன்னுல்லாம் கேட்பார்கள். இதெல்லாம் ஆண்குழந்தைக்கு கேட்கமாட்டார்கள்.
அடுத்து எடையைப்பற்றிக் கேட்பார்கள். அதற்குப்பின்,
நார்மல் டெலிவரியா? சிசேரியனான்னு கேட்பார்கள். உலகத்திலேயே தமிழ்ப்பெண்குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த சோகநிலை. ஆப்பிரிக்காவில் எல்லா குழந்தையும் கருப்பாகவே பிறக்கின்றன. அமெரிக்காவில் வெள்ளையர்களின் குழந்தை எல்லாமே வெள்ளையாகவே பிறக்கின்றன. சினாவில் எல்லா குழந்தைகளும் மஞ்சள் நிறமாகவே பிறக்கின்றன. வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் எல்லா குழந்தைகளும் வெள்ளையாகவே பிறக்கின்றன. இவற்றிலெல்லாம் ஏதும் பிரச்சினை இல்லை. வடைந்தியாவில் பிற சமூகங்களில் கருப்பு, வெள்ளை என இரண்டு நிறங்களிலுமே பிறக்கின்றன. அங்கும் ஏதும் பிரச்சினையில்லை.
குஜராத்தில் கருமைநிறம் என்பது வெகுஅரிது. அங்கும் இந்த பிரச்சினை இல்லை. ஆனால்.. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி! கிளியோபாட்ரா என்கிற கருப்பழகியை வைத்துக்கொண்டு இவ்வளவு நாள் இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
உண்மையில் கருப்புக்கு என்று ஒரு அழகு உண்டு. அதே கருப்புக்கு என்று தனித்துவமான மேன்மை உண்டு. எனக்குத்தெரிந்தவரை நம் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட, பெண்களின் அழகைப்பற்றி குறிப்பிடும்போது
அவர்களின் நிறத்தைப்பற்றி குறிப்பிடப்படவேயில்லை. ஆக, பெண்களைப்பற்றிய வர்ணனைகளில் வெள்ளை, ரோஸ், கோதுமை போன்று எந்த ஒரு குறிப்பும் இல்லை. பெண்களின் அழகைப்பற்றி அகப்பாடல்கள் நிறைய இடங்களில் வர்ணிக்கின்றன.
ஆனாலும், ஒரு இடத்தில் கூட நிறத்தை மையப்பொருளாகக் கொண்டு வர்ணிக்கவேயில்லை.
தமிழகத்திற்குள் பிற சமுதாயங்கள் வராதபோது, தமிழர்கள் கருப்பு நிறத்தில் இருந்தபோது, கருப்பு நிறத்தை ஆராதித்த தமிழர்கள், காலப்போக்கில் ”வெள்ளை நிறம்தான் உயர்ந்தது”, “வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்”, ”வெள்ளையா இருக்குறவன் அறிவாளி” என்கிற அந்த வரிசையில் ”வெள்ளையா இருக்குற பொண்ணுங்கதான் அழகு” என்னும் முடிவிற்கு வந்துவிட்டனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
No comments:
Post a Comment