13 WHAT
IS ”வந்தட்டி?” Don't miss the roots
மதுரைப்பகுதியில்
அதிகம் பயன்படுத்தும் வார்த்தை”வந்தட்டி”. அந்த காலத்தில் மதுரையின் கிராமப்புறங்களுக்கு
சென்றால், யாராவது ஒருவரை திட்ட வேண்டுமென்றால், பல்வேறு கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டுவார்கள்.
அவற்றில் ஒன்றுதான் “வந்தட்டி பயலே” என்னும் ஒரு வார்த்தை. எனக்கு வெகுநாட்களாக ”வந்தட்டிப்பயல்”
என்றால் என்ன என்கிற ஒரு சந்தேகம் எனக்கு இருந்தது. இது குறித்து ஒரு நாள் என் தாத்தாவிடம் கேட்டேன். அவர் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவரைத்திட்டும்போது அந்த வார்த்தையை பயன்படுத்தினார்.
அதைக்கேட்ட நான் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அப்படிச் சொல்கிறாரோ? என்று கருதினேன். ஆனால், ஒருநாள் எங்கள் தூரத்துச் சொந்தக்காரர் ஒருவரையும் அந்த வார்த்தையால் குறிப்பிட்டார்.
அதனால், இந்த”வந்தட்டிப்பயல்” என்னும் வார்த்தைக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறதோ?!” என்று எண்ணிக்கொண்டேன். ஆனால், இரண்டு மூன்று தலைமுறைகளாக பெண் கொடுத்து பெண் எடுத்திருந்த வகையில் எங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு சொந்தக்காரரைப் குறிப்பிடும்போதும் “அதே வார்த்தையைப்” பயன்படுத்தினார்.
அப்போது எனக்கு சந்தேகம் வலுத்தது.
”வந்தட்டி” என்பதற்கு தனி வரி உண்டு. இன்றைக்கும் கிராமப்புற கோவில்களில் ”கரை வரி” என்கிற பெயரில் வரி போடுவார்கள். இதேபோல் “வந்தட்டி வரி” என்றும் உண்டு. கரை வரிக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்றால், வந்தட்டி வரிக்கு நிர்ணயிக்கப்படும்
தொகை ரூ.50 மட்டுமே! அந்த காலகட்டத்தில் எதற்கோ? எப்படியோ? என இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒரு சமன்பாடு இல்லாததுபோல் பொருள் கொள்ளப்படக்கூடும். கிராமங்களில் அப்படித்தான். இதுபற்றி விரிவாக அலசிப்பார்த்தபோது
பொருள் பொதிந்த ஒரு விடை கிடைத்தது. அதாவது, ஒரு ஊருக்கு வந்து குடியேறியவர்களை
(அங்கேயே செட்டிலானவர்களை)
குறிப்பிட பயன்படுத்தப்படும்
வார்த்தை அது. புதிதாக அந்த நிலத்திற்கு வந்து குடியேறி அதைச் சார்ந்து வாழத்தொடங்கியவர் (வந்து- வருதல், அடி- அந்த நிலத்தைச் சார்ந்து வாழ குடியேறுவது) என்று பொருள்படும். அவர்கள் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களாக, மிகவும் நெருங்கிய சொந்தக்காரராக இருக்கக்கூடும்.
அந்த ஊரின் மிகப்பெரிய குடும்பத்துடன் பெண்கொடுத்து, பெண் எடுத்திருப்பார்கள். இவர்கள் மதுரையைச் சேர்ந்த கிராமங்களில் (18 பட்டி) ஏதோ ஒன்றைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். மேலும் அந்த ஊருக்கு வந்து சுமார் 100 அல்லது 200 வருடங்களோ கூட ஆகியிருக்கலாம். உதாரணத்திற்கு ஒருவர் பாறைப்பட்டியைச்
சேர்ந்தவராக இருப்பார். அவர் நத்தம்பட்டிக்கு
வந்து செட்டிலாகியிருப்பார். ஆனால், அவர் ”வந்தட்டி” என்றே கருதப்படுவார்.
இதேபோல் பாறைப்பட்டியைச்
சேர்ந்த ஒருவர் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நத்தம்பட்டிக்கு
சென்று செட்டிலாகியிருந்தால் அந்த “பாறைப்பட்டிக்காரர்” எப்போதும் “வந்தட்டி” என்றே கருதப்படுவார். இந்த ரெக்கார்ட் இப்படித்தான் போகிறது. 200 வருடங்கள் என்பது மட்டுமே ஒருவரை அந்தந்த மண்ணுக்கு உடமையாளனாக ஆக்கிவிடுவதில்லை.
இதுதான் மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள ஒரு பிரச்சினை. அவர்கள்”நான் இந்த ஊரின் ஸ்தாபன காலத்திலிருந்து
இருக்கிறேன். நான்தான் பூர்வகுடி (aboriginal). நான் தான் ஒரிஜினல் உள்ளூர்வாசி (inhabitant). நீ என் சொந்த ஜாதிக்காரனாயிருந்தாலும், சொந்தக்காரனாயிருந்தாலும் கூட உன்னை தள்ளிதான், அதாவது வந்தட்டின்னுதான்
வச்சிருப்பேன்.” என்பார்கள். இன்றைக்குவரையிலும் பல ஊர்களில் பல பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கின்றன. “இது எங்க ஏரியா உள்ளே வராதேன்னு..”நகர்புறத்தில் கூறுவார்கள். இந்த ஏரியா எப்போ உருவாகியது? 50 ஆண்டுகள் கூட ஆகியிருக்காது. அதேதான். அவர்கள் மண்ணுக்கு மக்கள் ஒன்றிவிடுகிறார்கள். ஆனால்.. அந்த மண்ணுக்குச் சொந்தக்காரன்னு சொல்லிக்கொள்பவர்கள் அந்த ஒன்றிணைவை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நான் டெல்லிக்குச்சென்று பத்து வருடம் இருந்தாலே டெல்லி என் ஊராகி விடுகிறது.
அந்த மண்ணும், அந்த ஊரும் எனக்கு பிடித்துவிடுகிறது. ஆனா.. டெல்லிக்காரன்”நீ என்னடா.. தமிழ் நாட்டுக்காரன்?” என கூறிவிடுவான்.”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதும் இப்படித்தான். அவ்வளவு சீக்கிரம் மக்கள் ஒத்துக்கொள்வதில்லை. எங்கள் கிராமத்தில் எங்கள் சொந்தத்தில் 200 வருஷத்துக்கும் முன்னால் வந்தவர்களையே இன்னும் ”வெளியாளாக” (வேற்று நபராக) பார்க்கும் நிலை இருக்கும்போது, இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையில் எவ்வளவு பெரிய பிரச்சினை இருக்குமென்று யோசியுங்கள்.
பாலஸ்தீனர்கள் இஸ்ரேல்காரங்களைப் பார்த்து என்ன சொல்கிறார்கள்?
”1947 –இல் தான் இங்கே வந்தீங்க. அதுக்கும் முன்னால இந்த நிலம் உங்களுடையதில்லை. பைபிளில் இருப்பதை ஆதாரமாக வைத்துக்கொண்டு இப்ப நீங்க சொல்லக்கூடாது”
என்று வாதிடுகிறார்கள்.
இஸ்ரேல் யூதர்கள் என்ன சொல்றாங்க? ”நாங்க 2000
வருஷத்துக்கும் முன்னால இங்கேதான் இருந்தோம். அதுக்கப்புறம் உலகமெல்லாம் சுத்திட்டு மீண்டும் 1947
–இல் இங்கேயே வந்துட்டோம். இதுதான் எங்கள் பூர்வீக பூமி(நிலம்)” என்கிறார்கள். அந்த நிலம் யாருக்கு பூர்வீகம்? உண்மையில் அவர்கள் இரண்டு தரப்பும் அமைதியா பேசி, சமாதானமாகி ஆளுக்கொரு பக்கமாக வாழலாம். ஆனால்.. அதைத் தடுப்பது Emotion. இதுதான் மனிதர்களுக்கும் நிலத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய தொடர்பு. அந்த பிரச்சினைகளை நாம்
தீர்க்க வேண்டியதில்லை.
அது மேற்கு ஆசியாவில் அவர்களின் ஊர்ப்பிரச்சினை. எங்கள் ஊரில் கூடத்தான் நிலம் யாருக்கு சொந்தம் என்று இரண்டு, மூன்று பஞ்சாயத்துகள் இருக்கின்றன. ”வந்தட்டியா? அவனா.. இவனா..” என்றெல்லாம் தொடர்கிறது. இப்போது நாம் அந்த பிரச்சினைக்குள் போகவில்லை. ஆனால்.. நாம் என்ன புரிந்துகொள்கிறோம் என்றால்
இந்த நிலத்துக்கும் மனிதனுக்கும் உள்ள சொந்தம் எப்போதும் விட்டுப்போகாது. உங்கள் நிலத்தை நீங்க இழந்துவிட்டால்.. நீங்கள் அந்த நிலத்திலிருந்து அந்நியப்பட்டு
விட்டால் உங்களால் மீண்டும் உங்கள் நிலத்திற்குள் வரவே முடியாது. இதனால்தான் நான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்
இருக்கும் என்னோட வெளிநாட்டு நண்பர்களிடம், “உங்களோட பூர்வீக ஊரில் இருக்கும் ஒரு
நிலம் அல்லது ஒரு வீட்டையாவது தக்க வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கான
வேர் உயிர்ப்புடன் அங்கே இருக்கட்டும்” என்று சொல்வேன். பூர்வீகம் என்பதை நீங்களே கூட மறந்துபோகலாம். ஆனால், இந்த உலகம் ஒருபோதும் மறப்பதில்லை. காரணம், பிற்காலத்தில் அந்த பூர்வீகத்திற்கு
நாமே கூட ”வந்தட்டி” ஆகிவிடக் கூடும்.
இந்தியாவின் நிலத்தைக்காப்பாற்ற வேண்டியது இந்தியர்களின் பொறுப்பு.
தமிழர்களின் நிலத்தைக் காப்பாற்ற வேண்டியது தமிழர்களின் பொறுப்பு.
ஆக, அந்தந்த மக்கள் அந்தந்த இடத்தை காப்பாற்ற முடியவில்லை எனில்
ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் நிலத்தை இழந்தாலும், நாளைய வந்தட்டிகள் லிஸ்ட்டில் அவர்களும் இருப்பார்கள்.
No comments:
Post a Comment