Wednesday, June 17, 2026

20.யோகாவும் ஜிம்மும் - 1

 

யோகாவும் ஜிம்மும் - 1

            இன்றைய அன்றாட வாழ்வில் யோகா- ஜிம் ஆகிய இரண்டும் நமக்கு நன்கு பரிச்சயமானவை. இவற்றை பற்றி சர்ச்சையான சில விஷயங்கள் உண்டு. ”யோகா என்பது இந்துமதம் சார்ந்த ஒன்று. இந்துவாக இருப்பவர்கள்தான் அதனை செய்து பழகவேண்டும். மற்ற மதத்தவர்களுக்கு யோகா கிடையாதுஎன்கிற கூற்று உண்டு. யோகா இந்துமதத்தின் வெளியீடு (Output) என்று அறுதியிட்டு கூறலாம். ஏனென்றால், பதஞ்சலி யோக சாஸ்திரம், அதன்தர்ஷனாஆகியவை இந்துமதத்தில் ஒரு அங்கம்தான். இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், அவற்றிற்குள் (பதஞ்சலி யோக சாஸ்திரம் & தர்ஷனா) இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறமுடியும்.

யோகாஎன்பது எந்த ஒரு கடவுளையோ, அல்லது வேறெந்த விஷயத்தையுமோ பிரதானமாக கொண்டு செய்யப்படுவதல்ல. யோகாவின் கருத்தியல் என்னவென்றால், “அத்வைதம்கோட்பாட்டின்படி, ”ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் கடவுள் இருக்கிறார்என்பதை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாகும். ”உண்மையில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்கிற கோட்பாட்டினையொட்டி செயல்படுவதில்லை. இந்துமதத்தின் வெளியீடாக இருந்தால்கூட யோகப்பயிற்சியைப் பொறுத்தவரை, எந்தவொரு மதத்தினரும் அதை நிச்சயம் மேற்கொள்ளலாம். உலகளாவிய அளவில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு வெளியீடுகளைத் தந்துள்ளன. கராத்தே, குங்ஃபூ, ஜென் தியானமுறை போன்றவை கிழக்கத்திய தத்துவங்கள் மற்றும் கலைகள் வந்துள்ளன. அந்த வரிசையில் நம் இந்தியநாடு இவ்வுலகிற்கு தந்த ஒரு கொடையாகயோகாவைச் சொல்லலாம். இந்த யோகாவானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணை செய்கிறது என்பதை மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளில் சில மந்திரங்களை இணைத்துள்ளனர். ஆனால், அந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால், மந்திரத்தை உச்சரித்துக்கொண்டொ அல்லது உச்சரிக்காமலோ செய்யலாம். அதிலும் கூட சூரியபகவானைப் பற்றிய மந்திரங்களே. சூரியனை ஒரு கடவுளாக ஏற்றுக்கொண்டு உச்சரிப்பது, அல்லது ஒரு நட்சத்திரமாக ஏற்றுக்கொண்டு உச்சரிப்பது என எதுவயினும் இருக்கலாம். நான் மேற்கூறிய இரண்டையுமே செய்யமாட்டேன் என்பவர் எவ்விதமான மந்திர உச்சாடனங்கள் செய்யாமலும் யோகப்பயிற்சியை மேற்கொள்ளலாம். முடிவாக, அனைத்து மதத்தவருக்கும் யோகா நன்மை தரக்கூடிய பொதுவானது என்று கூறமுடியும்.

யோகாவில் பலவகை அதாவதுபவர் யோகா (Power yoga)” என்கிற கருத்தியல் உண்டு. ஆனால், யோகா செய்வதெல்லாம் போரடிக்கும். ஜிம்மிறிற்குப் போவதே சிறந்தது என்று கூறுவோரும் இருக்கின்றனர்.

யோகாவிற்கும் ஜிம்மிற்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தோமானால், ஒருவர்சிக்ஸ் பேக், செவன் பேக்என்றெல்லாம் தன் உடலை கட்டமைத்துக்கொள்வதற்கு யோகாவின் மூலம்வாய்ப்பில்லை ராஜாஎன்றுதான் சொல்ல முடியும். ஏனென்றால், யோகாவானது உடலின் மேற்புற தசைகளுக்கான பயிற்சியல்ல. அது முற்றிலும் உடலின் உள் உறுப்புகளுக்கான ஆரோக்கிய பயிற்சியாகும். இன்னும் கூர்ந்து பார்த்தோமானால் யோகப்பயிற்சி செய்வோருக்கு சிறிதான அளவில் தொப்பை கூட இருக்கும். யோகாவின் கவனமானது பல நிலைகளில் பிரிகின்றது. தொடர்ந்து அதைப் பற்றி பார்க்கலாம்.

ஆயுர்வேதம் போன்றவற்றில் மனித உடலை ஐந்து விதமாக பிரிப்பர். ”அன்னமய கோசா, பிராணமய கோசா, மனோமய கோசா, விஞ்ஞான மய கோசா, ஆனந்தமய கோசாஎன்று வகைப்படுத்துகின்றனர்.

அன்னமய கோசாஎன்பது பொருள் மயமானதாக உள்ள உடல்.

பிராணமய கோசாஎன்பது காற்று.

மனோமய கோசாஎன்பது மனதின் ஒருவிதமான சக்தி.

இதற்கும் மேம்பட்ட அடுத்த இருநிலைகளுக்கும் (விஞ்ஞானமய கோசா, ஆனந்த மய கோசா) பெரிய அளவிலான விளக்கங்கள் ஏதுமில்லை. ஆனால், நுட்ப ரீதியில்ஆனந்த மய கோசாஎன்பது கடவுள் சார்ந்த நிலை என்று கூறலாம். ஆக, உடல் என்பது 5 வகையான இருக்கையுள்ள நிலைகளைக் கொண்டது. யோகாவானது இந்த ஐந்து நிலைகளுக்கும் சமத்துவமான முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய செயல்பாடு கொண்டது. ஆனால், “ஜிம்என்பதுஅன்னமய கோசாவுடன் தன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் தன்மையுடையது.

யோகாவில்அன்னமய கோசாஎன்பது உடலில் இருந்து தொடங்குவது. ஒரு சிலர்மனோமய கோசாவில் இருந்து தொடங்குபவர்களும் இருக்கிறார்கள். மனதின் வெளியீடாக அதாவது மனதிலிருந்து இருந்து தொடங்குவது. யோகாவில் மேலே சொல்லப்பட்ட 5 நிலைகளிலும் கவனம் செலுத்துவதால், அன்னமய கோசாவில் உடலை கட்டமைப்பது, தசைகளை கட்டமைப்பது மற்றும் அழகு என்பதையெல்லாம் தாண்டிய விஷயமாகத்தான் யோகாவைப்பார்க்கிறேன். ஏனெனில் அதன் 5 நிலைகளையும் சமநிலையில் வைப்பதற்காக செயல்படுகிறது என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.

பதஞ்சலி யோகாவில் உள்ள 8 நிலைகளில் நான் இப்போது குறிப்பிடும் யோகா என்பது ஆரம்பநிலையே. இதற்கடுத்து தியானம், தாரணம் போன்றவற்றையிம் சேர்த்து மொத்தம் 8 நிலைகள் உள்ளன. ஆக, இது ஆரம்பநிலை தயாரிப்பிற்கானது. ஏமம், நியமம், ஆசனம் உள்ளன. இவற்றில்ஏமம் நியமம் ஆகிய இரண்டும் நம் உடல் என்னவெலாம் செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?  மூன்றாவதாக ஆசனம் இடம்பெறுகிறது. இதற்கு பிறகுதாரணாபோன்றவை வந்து விடும். இப்படியான 8 விதமான படிநிலைகளில் யோகா என்பது ஆரம்பநிலை. இதிலிருந்து படிப்படியாக முன்னேறி ஏற்கனவே கூறிய 5 நிலைகளையும் சமநிலைப்படுத்துவதற்கான காரணியாகவும், தியானத்தின் மேம்பட்டட நிலைக்கும் செல்வதற்காக பயன்படும். தியானத்தைப்பற்றிய தெளிவு கிடைக்கும். இப்படிச் சொல்வதால் ஞானம் (Enlightenment) பற்றி கூறுவதாக பொருள் கொள்ளக்கூடாது. இங்கே நான் குறிப்பிடுவதுசிந்தனைத் தெளிவுபற்றி மட்டுமே.

பொதுவாக யோகாவை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்? அது 5 நிலைகளிலும் பெரும்பாலும் மனிதர்களுக்கும், பின் உடலுக்குமாக தன் பணியைச் செய்கிறது. எனக்குத்தெரிந்தவரை ஜிம் என்பது உடல் சார்ந்தவற்றில் தசைகளை சிறந்த முறையில் கட்டமைக்க நன்கு உதவுகிறது. உடல் இயக்கம் சார்ந்த எதுவுமே செய்யாதவர்களுக்கு ஜிம் நிச்சயம் தேவைதான். ஆரோக்கியம் சார்ந்தவற்றிற்கு யோகாவே சிறந்தது என்பேன். ”எவ்வளவு நேரம் யோகா செய்தாலும் வியர்வை வெளியேறுவதில்லையேஎன்கிற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. யோகா செய்வதால் வியர்வை வெளியேறக்கூடாது. வேண்டுமானால் சிறிதளவு கசகசப்பு போன்று இருக்கலாம். இதுவே உண்மை. காரணம் அது நம் உடலின் சக்தியை பாதுகாக்கக்கூடியது. சக்தியை விரிவுபடுத்தினால்தான் வியர்வை வெளியேற்றம் இருக்கும். ஆக, இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், யோகாவில் வியர்வை சுரந்து வெளியேறக்கூடாது. ஜிம் செய்யும்போது வெளியேறலாம்.

இப்போதெல்லாம் சிலர் சூரிய நமஸ்காரத்தையே மிகவும் வேகமாக செய்கிறார்கள். அதற்குபவர் யோகா ( Power yoga)” பெயர் சூட்டியுள்ளனர். இத்தகைய செயல்பாடானது யோகா என்பதை கடந்துபோய்விடும் நிலையாகிறது. சரி.. இதனால் என்ன? ஏன் இதை தவறு என்று ஏன் சொல்ல வேண்டும்? சரியோ.. தவறோ.. நன் அதைப்பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை.

யோகத்தின் ஆரம்பம்பதஞ்சலி”. அவரே யோகாவின் குரு. அவர்தான் முதன்முதலில் யோகாவை அறிமுகப்படுத்துகிறார். அதனின் அடுத்தடுத்தஆசனம்போன்றவற்றை அடுத்தடுத்து வந்த குருநாதர்கள் பலரும் வரிசைபடுத்தி செம்மையாக்குகின்றனர். இவை நிகழ்ந்த காலகட்டமானது, கிறிஸ்துவிற்குப் பின் வந்த 400 ஆண்டுகளுக்குள் என்று அறியப்படுகிறது. அதற்குப்பின் அது சார்ந்த ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. ஆக, ஆராய்ச்சிகளே இல்லாத நிலையில் ஏதாவது மாற்றங்களை மேற்கொண்டால், அதனால் உடலுக்கு ஏதேனும் பிரச்சினை வருமானால், சம்பந்தப்பட்டவர்களே பாதிக்கப்படுகிறார்கள். அக்காலத்தில் யாரெல்லாம் யோகப்பயிற்சி மேற்கொண்டார்கள்? 

பொதுவாக மதம் சார்ந்த வாழ்வியலில் ஈடுபட்டிருந்த துறவிகள், ரிஷிகள், சாதுக்கள், தவம் செய்தவர்கள் போன்றோரே யோகப்பயிற்சியை மேற்கொண்டோர் ஆவர்.  பயணித்தில் இருந்தோர், விவசாயம் செய்தோர், போரில் ஈடுபட்டோர் என வேறு எவரும் யோகப்பயிற்சியை மேற் கொள்ளவில்லை. இன்றைய காலத்தில் பெரும்பாலும் உடலியல் இயக்கம் சார்ந்த பணிகள் பெரும்பாலும் இல்லையென்ற நிலையில் எல்லோரும் யோகாவை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். தங்கள் வாழ்வியலில் உடலுழைப்பை கடுமையாக செய்தாக வேண்டியவர்களுக்கு ப்யோகாவும், பிராணாயமும் எதற்கு?  அவர்களுக்கு தேவையேயில்லை. இயற்கையான, இயல்பான வாழ்வியலில் இருந்தாலே எல்லாவிதமான ஆசனங்களும் கைவரப் பெற்றுவிடும்.  ஏனென்றால் எல்லாமே உடலின் பல்வேறு தோற்றநிலைகளே. குறிப்பிட்ட சமச்சீரான நிலையில் எல்லாவற்றையும் செய்கிறார்கள். தங்கள் வேலைகளை இயற்கையின் இயல்பிற்கேற்றவாறு அமைத்துக் கொண்டவர்களுக்கு முறையான ஆசனங்கள் இருக்கும். உணவு எடுத்துக்கொள்வது, கலோரிகளை எரித்தல், எல்லா தசைகளும் இலகுவான தன்மையுடன் இருத்தல், உடலியக்கம் சரிவர இருத்தல் ஆகிய அனைத்தும் சரிவர இருப்பதால் அவர்களுக்கு யோகா, ஜிம் போன்ற விஷயங்கள் தேவையேயில்லை. முந்தைய காலத்தில் எல்லோரும் மதம் சார்ந்தவர்களாக இருந்ததனால், அவர்களுக்கு அசைவப்பழக்கமோ, மதுப்பழக்கமோ இருந்தது இல்லை. தொன்று தொட்ட காலம் முதலே இப்படித்தான் தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால், இன்றைய காலத்தில் அப்படி இருக்க முடியுமா? என்றால். அந்த கடுமையான நிலையை எடுக்க முடியுமா? என்றால் முடியாதென்றே சொல்ல வேண்டும். அசைவத்தை சாப்பிடவைத்து, சுமார் 10000 பேரை யோகா செய்ய வைத்து, அவர்களை 30 ஆண்டுகள் இடைவிடாமல் கண்காணித்து, யோகாவிற்கும் அசைவம், மதுநுகர்வு ஆகியவற்றிற்கிடையே சம்பந்தம் உண்டு என்றோ.. இல்லையென்றோ..  எவ்வித ஆய்வுகளையும் எந்த யோகப்பயிற்சி இன்ஸ்டிட்யூகளும் ஆய்வினை மேற்கொண்டதாக எனக்குத்தெரியவில்லை. ஆகவே அது சார்ந்த எல்லைக்குள் நாம் நுழையத்தேவையில்லை. ஒவ்வொரு வகை உணவிற்கும் அது ஜீரணிக்கக்கூடிய நேர அளவில் சில மறுபாடுகள் உண்டு, சைவ உணவு சாப்பிட்டதும் எளிதில் ஜீரணிக்கும். அசைவ உணவு சாப்பிட்டபின் அது ஜீரணமாக 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதனுடைய சாறு, மூலக்கூறுகள் உடலுக்குள் இருக்கும் வரைக்கும், அதேபோல் அருந்திய மதுவானது இரத்த்த்தில் இருக்கும் வரைக்கும் குறிப்பிட்ட நேரம் வரை யோகாவை சற்று தள்ளி வைப்பது நல்லதே.  ஏற்கனவே குறிப்பிட்ட ஐந்துவிதமான கோசாவில் வேலை செய்வதால், ஏன் தேவையேயில்லாமல் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும்? என்பதே என் கேள்வி. இது எதிர்மறையானது என்று நிரூபிக்க நம்மிடம் ஆதாரங்களும் இல்லை. ஒரு விஷயம் முன்பு எப்படி முன்னெடுக்கப்ப்பட்டதோ அதன்படியேதான் நாமும் செய்ய முடியும். புதிதாக ஒரு முன்னெடுப்பை எடுக்கத்தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

சாதாரண யோகா என்பதும், யோகா தெரஃபி என்பதும் வேறு வேறாகும். 

ஒரு நபர் தன் ஆரோக்கியத்திற்காக சூரிய நமஸ்காரத்தில் தொடங்கி, அடுத்து பத்து ஆசனங்களை மேற்கொள்வது சாதாரண யோகாவாகும்.

 யோகா தெரஃபிகுறிப்பிட்ட யோகப்பயிற்சியை குறிப்பிட்டு செய்ய வேண்டியிருக்கும். இதற்கு இந்தியாவில்கிருஷ்ணமாச்சாரி யோக மந்திரப் பள்ளிகள்உள்ளன. அவர்களிடம் சென்றால், அவர்கள் நம் பிரச்சினைக்கு ஏற்றவாறு தீர்வை வழங்குவர். ஆனால், என்னதான் செய்தாலும் எல்லாமே உடனே சரியாகி விடாது. உடல் என்பது ஒரு இயந்திரம், ஒரு வண்டிபோல்,  ஒரு ஆட்டோமொபைல் போலத்தானே?

ஆக, பொதுவாக செய்யப்படும் யோகப்பயிற்சிகள் எல்லாம் சாதாரண யோகப்பயிற்சியிலும், குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காக செய்யப்படும் யோகப்பயிற்சிகள் எல்லாம் யோக தெரஃபியில் வந்துவிடும்.

வணிக நோக்கம் மட்டுமே இல்லாமல், குழுவாக அல்லாமல், தனிப்பட்ட முறையில், நேரம் ஒதுக்கி நம் மீது அக்கறை செலுத்தக்கூடிய ஒரு பொதுவான ஆசிரியர் அல்லது குரு அமைந்தால் அதனால் விளையக்கூடிய நன்மைகள் அளப்பரியதாகும்.

யோகா 5 கோசாக்களுக்குரியது.

ஜிம் உடலுக்குரியது.

விமான ஓட்டிகளுக்கான (pilot) தேர்வு முறைகளில் ஜிம் மிற்கு அனுமதி கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு சுறுசுறுப்பு (Agility) போய் விடும். அதாவது Power to react, Flexibility இல்லாமல் போய்விடும் என்பதே. மனதளிலும், உடலளவிலும் அவர்களுக்கு இலகுத்தன்மை அவசியம் வேண்டும்.

ஜிம்மைப் பொறுத்தவரை, உடலில் ஒரு எச்சரிக்கை இருப்பதில்லை. உடலின் அசைவுகளும் அவ்வளவு இலகுவாக இருப்பதில்லை. ஆகவே, நமக்கு எது தேவை என்பதை நாம்தான் கவனமாக முடிவு செய்ய வேண்டும்.

யோகா கொழுப்பு, கலோரி பற்றி எல்லாம் கவலைப்பட்டுக்கொள்வதில்லை. அது உடல் உறுப்புகள் சார்ந்தது. அந்தந்த உடல் உறுப்புகள் சரிவர வேலையை செய்கிறதென்றால், எல்லாம் சரியாகவே நடக்கும். உட்கொள்ளும் உணவிற்கான ஜீரணம், சத்துக்களை உள்ளிழுத்தல் போன்றவை சரிவர இயங்கும். சக்தியோடு இருக்கிறோமா? என்பது முக்கியம். யோகா செய்துவிட்டு சக்தியற்று இருப்பது போல் உணர்ந்தால், அப்போது சமநிலையற்ற கலோரி என்று பொருள்.  ஆனால், ஜிம்மைப் பொறுத்தவரை கலோரி முக்கியப் பங்காற்றுகிறது.

----------------------------------------------------------- 

No comments:

Post a Comment

125.ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சர்ச்சையாகிறது?

    ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சர்ச்சையாகிறது?             விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகி...