7.“யாதும் ஊரே யாவரும் கேளிர்” தமிழர்கள்
இதை சொல்ல முடியுமா?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
– இது தமிழில் மிகவும்
அருமையான,
அழகான வாக்கியம். இதை பலரும் பயன்படுத்தியிருக்கிறார்கள். நம் பிரதமர் யுனைட்டெட் நேஷன்ஸ் மாநாட்டில்
தன்னுடைய உரையில் மேற்கோள் காட்டினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ஐரோப்பிய பார்லிமெண்ட்டில்
பேசியிருக்கிறார். இது தமிழ் சங்க
இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்று தொகுப்பில் “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும்
பிறர் தர வாரா”
என பாடலாக இடம்பெற்றுள்ளது. கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல்
இது.
வாழ்வது பெரிதல்ல. வாழ்வதில் வெறுப்பும் தேவையில்லை. நதி நீரில் ஓடும் படகு போல, உயிர் விதியை நோக்கி ஓடுவதைப் பார்த்ததால், நாங்கள் யாருக்கும் அதிக முக்கியத்துவம்
தரவும் மாட்டோம். யாரும் சரியில்லை
என்பதற்க்காக அவமானப்படுத்தவும் மாட்டோம். ஏனென்றால் ”யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..” இதற்கு என்ன பொருளென்றால் ”எல்லா ஊரும் நம்ம ஊருதான். எல்லாருமே நம்ம சொந்தக்காரங்கதான்”. சரி.. ஒரு தமிழன் இதை எதுக்காக அந்த காலத்தில்
சொல்லி வைத்தான்? தேவையில்லாமல்
இதை சொல்லியிருக்க மாட்டான். அதாவது கடற்கரையில் இருப்பவன் தனக்கு படகை கட்டுவான். இமயமலையில் இருப்பவன் படகை கட்டி என்ன
செய்யப்போகிறான்? அந்த கண்டுப்பிடிப்பு
அவனுக்கு தேவையேயில்லை. அவனுடைய தேவை வேறு. அவனுக்கு படகு தேவையில்லை. அதுபோல் அந்த பிரபல வரியை சொல்வதற்கான
தேவை இருந்திருக்க வேண்டும்.
நான் எப்படி யோசிக்கிறேன் என்றால், அந்த வாக்கியம் சொல்லப்பட்ட காலகட்டமானது
கி.பி. 1 ஆம் நூற்றாண்டு. அதாவது சங்ககாலம் என்பது தமிழர்களுடைய
முதல் பொற்காலம். அப்படிப்பட்ட பொற்காலத்தில்
இங்கேதான் நிறைய பிற தேசத்தவர் வந்தார்கள். தமிழர்கள் வெளியே போய் இருந்ததில்லை. ”திரை கடலோடியும் திரவியம் தேடு” என்று சொன்னார்களே தவிர, போகிற இடத்தில் செட்டில் ஆகிவிடுங்கள்
என்று சொல்லவில்லை. தமிழர்கள் பயணித்தார்கள், வணிகம் செய்தார்கள், போர் செய்தார்கள். நாம் எந்த அந்நிய சக்திகள் நிலத்திலும்
அடிமைப்படவில்லை. நம்மைத்தேடி வருபவர்களை
அவமரியாதை செய்துவிடக்கூடாதென சொல்லப்பட்ட வாக்கியம்தான்
அது. இதே வாக்கியத்தை தமிழர்கள் இந்த காலகட்டத்தில்
சொல்ல முடியுமா?
என்றால், நிச்சயம் சொல்ல முடியாது. ஏன்? நம்மைத் தேடி சிலர் வருகிறார்கள். ஆனால் நாம் நிறையபேரைத் தேடி வெளிநாடு
செல்கிறோம்.
மேற்கு ஆசியாவில் நம்மவர்கள் பெரும்
எண்ணிக்கையில் வேலை செய்கிறார்கள். மும்பை, கொல்கத்தாவில் மட்டுமில்லை. அமெரிக்காவிற்குச் சென்று வேலைபார்க்க, சென்னை மவுண்ட் ரோட்டில் மணிக்கணக்காக
கால்கடுக்க க்யூவில் நிற்கிறார்கள். அந்த நாட்டு க்ரீன் கார்டுக்காக கெஞ்சுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க இப்போது நாம்
அந்த வாக்கியத்தை சொல்ல முடியுமா..? என்றால் சொல்ல முடியாது. நாம் யாரை நாடிச் செல்கிறோமோ அவர்கள்தான் ”யாதும் ஊரே யாவரும் யாவரும் கேளிர்” சொல்ல வேண்டும்.
நாம் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தால் அதைச் சொல்லலாம். அப்படி இல்லாமல் இன்னொரு நாட்டிற்குச்
சென்று நாம்”யாதும் ஊரே.. யாவரும் கேளிர்” என்று சொன்னால் அவர்கள் கேட்க மாட்டார்கள். ஆக, யார் எதைச் சொல்ல வேண்டும்? எப்போது சொல்ல வேண்டும்? என்பதை தெளிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் மீண்டும் ஜெயித்தாலொழிய அந்த
வாக்கியத்தை இனி பயன்படுத்த முடியாது.
இன்றைய நடிகர்கள் உலக ஞானத்தில் குறைவாக இருப்பார்களென நாம்
நினைக்கலாம்.
ஆனால்.. நடிகர் விஜய்சேதுபதி ஒரு எம்.பி.ஏ. கல்லூரி விழாவிற்கு வந்திருந்தார். அவர் மிக அழகாக”பணம் என்றால் பேப்பருங்க” என்று கூறினார். உடனே எல்லாரும் கைதட்டுனார்கள். மேலும் அவர், “பணம் என்றால் பேப்பர்தான். ஆனால், அதை சொல்வதற்கு நீங்கள் பணக்காரனாக
இருக்க வேண்டும்” என்றார். அவர் சொன்னது உண்மைதான். ஏழையாக இருந்துகொண்டு அவர் சொன்னதைப்போல்
வெளியில் சொன்னால் நம்மைப்பார்த்து சிரித்துவிட்டுப்
போயிக்கொண்டே
இருப்பார்கள்.
இதேபோல்தான் “யாதும் ஊரே.. யாவரும் கேளிர்”என்பதும். உங்களை எல்லோரும் தேடி வரும்போது “யாதும் ஊரே.. யாவரும் கேளிர்”என்று சொன்னால் இந்த உலகம் மதிக்கும்.
நீங்கள் துபாய்க்கோ அல்லது வேறு எங்கேவோ போய் வேலைக்கு காத்திருந்து, க்ரீன் கார்டு கேட்டுக்கொண்டே அதே வாக்கியத்தை சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆக, கணியன் பூங்குன்றனார் சொன்னது தமிழர்களுக்குத்தான். ஆனால்.. ஜெயித்ததற்குப்பிறகு பேச வேண்டிய விஷயம். உள்ளூரில் வலுவாக இருந்துகொண்டு பேசும் வாக்கியம். இன்றைக்கு இருக்கும் சார்பு வாழ்வியலில் (Dependence) பேச முடியாத வாக்கியம். அதனால் நாம் ஜெயிக்கலாம். ”யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..” எனும் இந்த வாக்கியத்தை ஐக்கிய நாடுகள் சபையில் பொறித்திருக்கிறார்கள். அங்கே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொறித்தல் இருக்கிறது. தமிழ் மொழியின் சார்பில் இந்த வாக்கியம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்கியத்தை மெய்யாக்குவோம்.
No comments:
Post a Comment