Students should have general idea about
all subject
for civil service exam
கேள்வி: பள்ளியில், கல்லூரியில் பயின்றபோது படிப்பில் மிகவும் சாதாரணமாக விளங்கிய மாணவ, மாணவியர்கூட சிவில் சர்வீஸ் தேர்வில் உச்சபட்ச வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். இதேபோல் பள்ளி, கல்லூரிப்படிப்பில் சிறந்து விளங்கியவர்கள்கூட சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போவதையும் கண்டு வருகிறோம். ஆகவே, யுபிஎஸ்ஸி தேர்விற்கு ஒருவர் எப்படி தயாராக வேண்டும்? அல்லது யுபிஎஸ்ஸி மாணவ, மாணவியரிடத்தில் எத்தகைய எதிர்பார்ப்பு கொண்டுள்ளது? இது குறித்து விளக்குங்களேன்.
பதில்: நீங்கள் கேட்டதுபோல் யுபிஎஸ்ஸி நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது?
என்பதை ஒருவர் புரிந்து கொண்டாலே, அதில் எளிதாக வெற்றி பெற முடியும். நேர்முகத்தேர்வில்
ஒருவரை என்ன எதிர்பார்க்கிறது? அதாவது எல்லா பாடப்பிரிவுகளிலும் ஒரு அடிப்படையான அம்சம் உண்டு. எந்த ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போதும், தன் திறனால் தரவுப் பகுப்பாய்வு செய்வதை எதிர்பார்க்கிறது. ஏனென்றால், அங்கே தனிநபர், தனி ஒரு விஷயத்தை ஆய்வதில்லை. அங்கே அனைவருமே பொதுவாதிதான்.
ஒருவர் ஊட்டியில் மாவட்ட கலெக்டராக பணிபுரியலாம்.
பின் அவரே இராமநாதபுரத்தின் கலெக்டராக செல்ல வேண்டியிருக்கலாம். ஒரே மாநிலத்திற்குள் இருக்கின்றன என்பதைத்தவிர ஊட்டிக்கும் இராமநாதபுரத்திற்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? ஊட்டி விவசாயிக்கும்,
இராமநாதபுர விவசாயிக்கும் தீர்வு தந்தாக வேண்டும். ஆனால், இருவரின் பிரச்சினைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. இரண்டிற்கும் ஒரே மாதிரியான தீர்வையும் தரமுடியாது.
அடுத்து, அரசியல் ரீதியாக கருத்து மாறுபாடற்ற தன்மையுடன் (Politically non-Controversial) சமநோக்குடன் இருக்க வேண்டும். அரசியல் சார்புடன் இருக்கக்கூடாது.
ஏனென்றால், இந்த யுபிஎஸ்ஸி தேர்வில் வெற்றிபெற்று உயர்பதவியில் அமரும் போது, எல்லாவிதமான சித்தாந்தங்களில்
திகழும் பலதரப்பட்ட அரசியல்வாதிகளுடன் பணியாற்ற வேண்டியிருக்கும். கட்சிபாகுபாடுகளை
கருத்தில் கொண்டு ஒருபோதும் பணியாற்ற முடியாது. அவ்வாறு செய்ய முற்பட்டால் நிர்வாக இயந்திரம் சீர்கெடும். ஆகவே, நேர்முகத்தேர்வின்போது இதுவும் எதிர்பார்க்கப் படுகிறது. இதுமட்டுமின்றி இன்னும் சில பண்புநலன்களும் பரிசீலனைக்குட்படுத்தப்படுகிறது. அவற்றை முறையாக, சிறப்புற எதிர்கொண்டால் நேர்முகத்தேர்வில்
வெற்றிபெற முடியும். ’மெயின்ஸ்’ தேர்வைப்பொறுத்தவரை, முக்கியமான பெரும் விஷயங்களை எந்த அளவு புரிதலுடன் உள்வாங்கிக்கொள்கிறோம்? என்பது அவசியம். உதாரணத்திற்கு ரஷ்யா- உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான
போரை நாம் எப்படி கிரகித்துக்கொள்கிறோம்? அந்த போருக்கான காரணங்கள் எவை? அதன் விளைவுகள் யாவை? உலகளாவிய அரசியல் எப்படி நகர்கிறது? இவற்றைப் பற்றியெல்லாம்
600 வார்த்தைகளுக்குள் தெள்ளத்தெளிவாக புரிந்துணர்ந்து எழுதக்கூடிய அளவிற்கு திறமை உள்ளதா? அதையே சுருக்கி 100 வார்த்தைகளுக்குள்
வெளிப்படுத்த முடிகிறதா? 10 வார்த்தைகளுக்குள் அந்த கருத்தை எழுத முடிகிறதா? இது மெயின்ஸ் தேர்வில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் பொருந்தும். பிரிலிம்ஸ் தேர்வைப்பொறுத்தவரை
தெளிந்த சிந்தனையுடன் அணுகுவது மிக அவசியம். ஒரு பிரிலிம்ஸ் தேர்வில் ரஷ்யா- உக்ரைன் போரைப்பற்றி ஒரு கேள்வி. அதில் அரிசி, கோதுமை, நிலக்கரி மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலையிலில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் ரஷ்ய- உக்ரைன் போருடன் எந்தளவிற்கு நெருங்கிய சம்பந்தம் கொண்டுள்ளது? என்று கேட்கப்படலாம். பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 1;1 என்கிற வகையில் பதில் கோரப்படுவதில்லை. 1;2, 2;3,1;4 என்கிற ரீதியில் கேட்கப்படும்.
இதற்கு பலளிக்க நிறைய படிப்பதனால் வந்துவிடாது. நல்ல ஆழமான சிந்தனைத் தெளிவு இருந்தால் மட்டுமே இதற்கு சரியான பதிலை அளிக்க முடியும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறர்கள். சிவில் சர்வீஸ் தேர்விற்காக ஒருவர் தினம்தோறும் 10 மணி நேரத்திற்கு குறையாமல் படிக்க வேண்டும். அதன் மூலம் பொருள் பொதிந்த விஷயங்களை எடுத்தாக வேண்டும். இதனை வெறுமனே மனப் பாடம் செய்துகொள்ளவும்
கூடாது. அவ்வளவு விஷயங்களையும் ஒரு மாலைபோல கோர்க்கவும், பொருள் விளக்கம் அளிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் மிகச் சிறந்ததாகவும் இருக்க வேண்டும். A + B என்றால் C என்று சொல்லலாம். ஆனால், ஏன் D-யாக இருக்க கூடாது? ஏன் E-யாக இருக்கக் கூடாது? A + B= 0 என்றும் கூறலாம். எதுவாயினும் அங்கு அளிக்கப்படும் பதிலகளிலேயே அவரது பதில் மிகச்சிறந்ததாக இருக்க வேண்டும். இதற்காக கடுமையாக உழைக்கக்கூடியவரே முதல் தேவை. மதிப்பெண்களின் வெளிப்பாடு என்பது எவை? முதலில் கடும் உழைப்பு, இரண்டாவதாக அறிவு, மூன்றாவதாக புத்திசாலித்தனம்,
நான்காவது அதிர்ஷ்டம். அதுவரை படித்து தயாரானது அப்படியே தேர்வில் வினாக்களாக வந்துவிட்டால்? நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஒருவேளை நன்கு படித்து வைத்திருந்தது வரவில்லை என்றால்?… அதிர்ஷ்டம்? அது நம் கையில் இல்லை. கடவுளின் கையில் உள்ளது. ஒரு சிலருக்கு கல்லூரிப் பருவத்தில் புத்திசாலித் தனம் மிகுதியாய் இருந்திருக்கும். ஆனால், படிப்பறிவை மேம்படுத்த தவறியிருப்பார். கடினமாக உழைத்திருக்கவும் மாட்டார். மதிப்பெண்களும் அதிகம் எடுத்திருக்க மாட்டார். இன்னொருவருக்கு புத்திசாலித்தனம்
நடுத்தரமாகவும், கடுமையான உழைப்பும், அருமையான படிப்பறிவை மேம்படுத்தி வைத்திருப்பார். அவர் படித்த பட்டப்படிப்பில்
அபாரமான அறிவில் சிறந்து விளங்குவார். சிவில் சர்வீஸ் தேர்வில், அவருடைய புத்திசாலித்
தனத்தில் அறிவை ஈட்ட முடியாமற்போனால்,
அல்லது சற்றே பின் வாங்கிவிட்டாலோ அவர் தோல்வி அடைந்துவிடுவார்.
அவர் படித்த அதே பல்கலைக்கழகத்தில்
படித்த இன்னொரு நபர் அதீத புத்தி சாலியாகவும், குறுகிய காலத்தில் அறிவை விசாலப்படுத்திக் கொண்டவராகவும்,
கடுமையாக உழைக்கக் கூடியவராகவும் இருக்கக்கூடியவர்
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று விடுகிறார். யார் எந்தளவிற்கு புத்திசாலி என்பதை அவரவர்களுக்குத்தான் தெரியும். ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வு வட்டத்திற்குள் வந்து தன்னை பரிட்சித்த பின்னரே அவர் எந்தளவு புத்திசாலி, கடும் உழைப்பாளி, அறிவு மேம்பட்டவர் என்பதெல்லாம் அவருக்கே புரியும்! யாராவது ஒருசில மாணவர்கள் மூன்று அல்லது நான்காண்டுகள் கழித்து வந்து, “இரண்டு, மூன்று தடவை முயன்றும் வெற்றி பெற முடியவில்லை. ஆகவே நான் சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் முயற்சியை கைவிட்டுவிடலாமா
சார்?” என்று கேட்பதுண்டு. என்னைப் பொறுத்தவரையில், திறமையான ஒரு நபர் வெளியேறி விடக்கூடாது. அதுவே வேறொருவர் இன்னும் மூன்று ஆண்டுகள் கடுமையாக முயற்சித்தாலும்கூட
அவர் வெற்றி பெறமாட்டார் என்கிற நிலையில் இருந்தால், அப்படிப்பட்டவர் இனியும் காலத்தை விரையம் செய்யாமல் வேறு ஏதாவது ஒரு பணிக்காக முயற்சிக்கலாம்.
அது போன்ற எண்ண ஓட்டத்துடன் வரும் ஒருவரிடம் தமிழ்ச்சமூகத்தின் ”காலவரிசை
(chronology)”, அல்லது அடுத்த கட்டமாக ”இந்திய தேசிய இயக்கத்தின்” 1857 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான ”காலவரிசையை (chronology)” கூறுமாறு கேட்பேன். இன்னும் சற்று கடினமாக என்றால் டெல்லி சுல்தான்கள் பற்றி கேட்பேன். தொடர்ந்து நான்காண்டுகள் படித்துவிட்டு இதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றால், அவர் தேர்வில் வெற்றி பெறுவாரா? என்கிற சந்தேகம் வந்துவிடும். அந்த சமயத்தில், “சரி.. நன்ராக யோசித்துக்கொள்ளுங்கள். சூழ்நிலைகள் ஒத்துவந்தால் நல்ல தொழிலை ஆரம்பியுங்கள்.”
என்று கூறுவேன். ஆனால், அவர் தன் முடிவை தானே தான் எடுக்க வேண்டும். ஒருவேளை நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் சொல்லிவிட்டால்,
” அதிர்ஷ்டம் கைகூடவில்லை போல. ஆகவே தொடர்ந்து முயற்சியுங்கள்”
என்று கூறுவேன். இது ஒரு ஆரம்பநிலைதான். அடுத்து போகப்போக அவர் எவ்வளவு தூரம் அறிவை மேம்படுத்தியுள்ளார்? கடின உழைப்பு கொண்டிருக்கிறாரா?
என்றெல்லாம் தெரிந்துவிடும்.
இன்றைய இளைய தலைமுறைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால் எதுவென்றால் அவர்களுக்கு பலவிதமான”திசைதிருப்பல்கள்”
இருப்பதுதான். எங்கள் காலத்திலும் இதுபோன்று இருந்ததுண்டு. அன்றைக்கு திசைதிருப்பக்கூடிய விஷயங்கள் மூன்றுதான் இருந்திருக்கும்.
ஆனால், இன்றைக்கு 15 க்கும் மேற்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து அவர்கள் விடுபட்டு எப்படி பலப்படுத்திக்கொள்கிறார்கள்? என்பதை கண்டறிந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படிப்பவர்களை எப்படி ஊக்கப்படுத்துவது? என்பதை செய்ய வேண்டும். அதில் இதுபோன்ற திசைதிருப்பல்களை தற்காலிகமாக, நிரந்தரமாக எப்படி கட்டுப்படுத்துவது? ஆக, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான வட்டத்திற்குள் வந்தபின்தான் தெரியும். அதற்காக உள்நுழைபவர் அடிப்படை புத்திசாலித்தனம்,
அறிவாற்றல், கடின உழைப்பு கொண்டவராக இருக்க வேண்டும் வேண்டுமென்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது.சுமார் 1 ½ ஆண்டு காலத்திற்குள் அறிவை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய அளவிற்கு அவர் தகுதி படைத்தவராக இருக்க வேண்டும். இத்துடன் இறைவன் அருள். அது இறுதியில்தான் தெரியும்.
-----------------------------------------------------------
No comments:
Post a Comment