Wednesday, July 22, 2026

29.சர்தார் வல்லபாய் பட்டேல் செய்த "மகத்தான புரட்சி" ??

 

                                   சர்தார் வல்லபாய் பட்டேல் செய்த

                                             "மகத்தான புரட்சி" ??


கேள்வி:

            இந்தியாவின் ஒற்றுமை தினம்என்று சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அளவிற்கு மிகவும் உயர்ந்த மனிதராக போற்றப்படுவதற்கான காரணங்கள் எவை?

பதில்:

            உண்மையிலேயே அவர் உருவத்தாலும் மிக உயர்ந்த மனிதர்தான். அவருடைய திருவுருவச்சிலையை நம் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் திறந்து வைத்தார். பிரிட்டிஷாரின் நிர்வாகத்தின் கீழ் புதுக்கோட்டை, திருவிதாங்கூர் போன்று 560 சிறு சமஸ்தானங்கள் இந்தியாவிற்குள் தனித்துவத்துடன் இயங்கி வந்தன. இந்தியா சுதந்திரத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது, ’இந்தியா- பாகிஸ்தான்என பிரிவினை ஏற்படுத்த சூழல் உருவாகிக்கொண்டிருந்ததால், அந்த 560 சமஸ்தானங்களும் (Princely states) அவரவர் விருப்பப்படி இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ கூட இயங்கிக்கொள்ளலாம் என்கிற கருத்தை வெளியிட்டனர். இந்நிலையில் 1947 – இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்போது அந்த சமஸ்தானங்கள் அரசர்கள் அனைவரையும் இந்திய நிலப்பரப்பில் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இருந்தது. இதற்காக சாம, பேத, தான, தண்டம்  ஆகியவற்றையும் பிரயோகம் செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய பொறுப்பை மிகவும் நுட்பமாகக் கையாண்டு, பிரச்சினைகளை ஆளுமையோடு தீர்த்து அனைத்தையும் ஒரே இந்தியாவாக ஒருங்கிணைத்த பெருமை ’சர்தார் வல்லபாய் படேல் அவர்களையேச் சாரும்’. வல்லபாய் படேல் அவர்களால் ஒருங்கிணைப்பட்டதன் பின்னணிகள் அனைத்தும் தனித்தனி நாவலாக எழுதும் அளவிற்கு செய்திகள் பொதிந்த களஞ்சியம். ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போதே தங்களுக்கென தனித்துவத்தோடு கோலோச்சிக் கொண்டிருந்த எந்த ஒரு சமஸ்தானத்தின் அரசரும் அவ்வளவு எளிதாக தங்கள் பாரம்பரியமான ஆட்சி அதிகாரத்தை விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். என்னதான் ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் பின்னணியைக்கொண்டிருந்தாலும், சமஸ்தான அரசர்களை தன் ஆளுமைத்திறனால் இந்திய ஆளுகைக்குள் ஒருங்கிணைத்த முதன்மையான நபர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்தான். மேலும், குறிப்பாக ஜூனாகத், ஐதராபாத் சமஸ்தானம் ஆகிய சமஸ்தானங்கள் இஸ்லாமிய பெரும்பான்மை கொண்டவை. அவை தாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளவோ அல்லது தனித்துவமாக இயங்கவோ முடிவெடுக்க எண்ணியிருந்தன. ஆனால்,  அவற்றையும் பல்வேறு இடர்பாடுகளைக்கடந்து, அதாவது உட்சபட்சமாக இராணுவ நடவடிக்கைகளையும் எடுத்து அந்த சமஸ்தான்ங்களை இந்திய தேசத்துடன் ஒருங்கிணைத்த செயலானது அவரது புகழுக்கு மணிமகுடம் சூட்டியது என்றால் மிகையில்லை. ஏனென்றால், பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் நடுவே ஆங்காங்கு சிறு சமஸ்தானங்கள் தனியே செயல்பட்டால் அது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை உருவாகியிருக்கக்கூடும். உதாரணமாக இப்போதும் கூட வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் போன்ற மாநிலத்தில் பயணிக்கும்போது அவ்வப்போது பங்களாதேஷின் எல்லைகளையும் கடக்க வேண்டியிருக்கும். பின் மீண்டும் நம் அஸ்ஸாம் மாநில எல்லை வரும். இது பல இடங்களில் இன்றும் உள்ளது. நம் தமிழகத்தில் கூட திருநெல்வேலி மாவட்டத்தில் பயணப்பட்டால் அவ்வப்போது இடையிடையே தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஊர்களையும் கடந்து மீண்டும்  திருநெல்வேலிக்குள் பயணிக்க வேண்டியிருக்கும்.

இத்தகையச் சூழலில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நிச்சயம் எதிர்வினை வந்திருக்கும். ஆனால், அவற்றையெல்லாம் சமாளித்து இந்தியாவை முழுமையான நிலப்பரப்பு கொண்ட ஒரேதேசமாக கட்டமைத்தவர் வல்லபாய் படேல் அவர்கள். இதுவே அவரை ஒற்றுமையின் சின்னமாக நாம் கொண்டாடுவதற்கான முதற்காரணம். இரண்டாவதாக, நம் ஆட்சியமைப்பு “ஸ்டீல் ஃப்ரேம்” அதாவது Bureaucracy (அதிகாரத்துவம்) என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒருங்கிணைப்பைக் கட்டமைத்தவரும் படேல் அவர்களே. இதை விளக்குவதற்காக ஒரு முக்கியமான அம்சத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அக்காலத்தில், ஒரு மாநிலத்தில்  (மாகாணத்தில்) சிவில் சர்வீஸ் பணியிடங்கள் 4 நிரப்பப்பட வேண்டியிருந்தால், அந்த மாகாணத்திலிருந்து அதற்கான தேர்வில் 4 பேர் வெற்றி பெற்றிருந்தால்கூட, இருவருக்கு மட்டுமே அங்கு பணியில் அமர்த்தப்படுவர். எஞ்சிய 2 பேரை வேற்று மாகாணங்களில் பணி அமர்த்தினர். மீதி இரண்டு பணியிடங்களுக்கு வேற்று மாகாணங்களிலிருந்து வெற்றி பெற்று வருபவர்களை இங்கே பணியமர்த்துவர். இதுதான் ‘கேடர்’ என்பது. அதாவது அந்தந்த மாகாணங்களில் தேர்வெழுதி அவர்களின் சொந்த ஊர்களிலேயே பணியமர்த்தினால் ’இந்தியர், இந்திய ஆட்சிப்பணி’ என்கிற உணர்வு எப்படி வரும்? ஆகவே, இந்த கேடர் முறையில் பணியமர்த்தப்படும்போது, அந்த அதிகாரி வேற்று மாகாணத்திற்குச் செல்லும்போது அவர் தன்னுடைய மாகாண உணர்வுடன் சென்று பணியாற்ற மாட்டார். ஒரு இந்தியராகத்தான் பணிசெய்வார். இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னரும், இன்றும் கூட இதே முறையில்தான் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இப்படிப்பட்ட ’ஒருமித்த இந்தியச் சிந்தனையை’ மிகவும் தொலைநோக்குப்பார்வையுடன் உருவாக்கித்தந்தவர் ‘சர்தார் வல்லபாய் படேல்’ அவர்கள். இவ்வாறு வேற்று மாநிலங்களில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு செளகர்யமாக இருக்குமா? என்றால் நிச்சயமாக இருக்காதுதான். அவரவர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குள்ளேயே பணி செய்வது சிரமமில்லாமல் இருக்கும். ஆனால், அது தேசிய கட்டமைப்பிற்கு செளகர்யப்படாது. ஆகவே, தங்களுக்கு உத்தரவிடப்படும் பணியிடத்திற்குச் சென்றுதான் பணியாற்ற வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தேசிய ஒற்றுமை தினத்தின் சின்னமாக போற்றப்படுவதற்கான மற்றுமொரு காரணம், இத்தகைய வலுவான கட்டமைப்பை ஆக்கித் தந்தவர் என்பதால். அரசலமைப்புக்கான கட்டமைப்பிற்கு இது மிகப்பெரிய அடித்தளமாகும். நம் அரசியலமைப்பானது தனி நபரால் ஏற்படுத்தப்பட்டதல்ல. சுமாராக 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், அரசியல் சிந்தனையாளர்கள் பங்கு கொண்டு இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைத்தனர். அவ்வாறு வடிவமைக்க நிறைய என்ணிக்கையிலான பல்வேறூ குழுக்கள் செயல்பட்டன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை சீர்தூக்கிப்பார்த்து, அனைவருக்கும் ஏதுவான அம்சங்களை இந்திய அரசியலமைப்பில் இடம்பெறச் செய்ய விவாதித்து முடிவு செய்து அளித்தனர். அவ்வாறு செயல்பட்ட குழுக்களை ஒருங்கிணைத்த கமிட்டியின்  தலைவராக செயல்பட்டவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள குக்கிராமத்தின் ஒரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு போன்று ஒவ்வொரு விஷயங்களையும் சட்டப்பிரிவுகளில் இணைத்ததுடன், ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது, அவனுக்கெதிராக சட்ட மீறல்கள் பிரயோகம் செய்யப்படும்போது, நேரிடையாக உச்சநீதி மன்றத்தினை (பிரிவு 32), உயர் நீதிமன்றத்தை (பிரிவு 226) அணுகி, தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வமான ரிட் மனுவினை (Writ Petition) தாக்கல் செய்யுமளவிற்கு பூரணமான உரிமையை வழங்கியிருக்கிறது. இந்த வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால் எந்த ஒரு பாமரனுக்கும் அரசியலமைப்பு பலனளித்திருக்காது!

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவில் Article (ஆர்ட்டிகல்) 370 என்கிற விஷயமானது, (மத்திய அரசால் நீக்கப்பட்டது வரை) மிகப்பெரிய விவாதங்களுட்பட்டதாக இருந்து வந்தது. உணமையில் இது சட்டப்பிரிவு வரைவில் (Draft) 306 A – இல் இருந்து விவாதிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் தனித்துவமான சலுகைகளை வழங்கிய இந்த சட்டப்பிரிவை கடுமையாக எதிர்த்தவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், இஸ்லாமியர்கள் பெரும்பன்மையாக வசித்த ஜம்மு-காஷ்மீர் நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் ‘ஹரிசிங்’ என்கிற ஒரு இந்து மன்னர்! அவர் தான் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையாமல், இரு பெரும் தேசங்களுக்கிடையே இருக்கும் ஒரு தனிப்பிரதேசமாக இருந்து கொள்ளும் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் இராணுவ உடையணிந்து கொண்டு ’பைதூன்’ பழங் குடியினர் நாட்டைப் பிடிக்க உள்ளே வந்துவிட்டனர் என்றும், இல்லை பாகிஸ்தான் இராணுவமே உள்நுழைந்தது என வரலாற்றாசிரியர்களால் கூறப்பட்ட கடும் சூழல் நிகழ்ந்தது. நிலைமை விபரீதமாக சென்றுகொண்டிருந்தபோது, ’அவர்கள் என் நாட்டைப் பிடித்து விடுவார்கள் போல’ என மன்னர் ஹரிசிங் அபயம் கேட்டு ஓடிவந்தார். ஆனால்,  மென்மையான அணுகுமுறை கொண்ட இந்தியாவானது, காஷ்மீர் மன்னருடன் பேச்சு வார்த்தை மட்டுமே நடத்திக்கொண்டிருந்தது. ஆனால், பாகிஸ்தானோ ஜம்மு-காஷ்மீரைப் பிடிக்க ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அப்போதுதான் இந்திய இராணுவம் ஜம்மு –காஷ்மீருக்குள் நுழைந்தது. தனது இராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் இராணுவத்தை மேலும் முன்னேற விடாமல் பின்னுக்குத் தள்ளுகிறது. அந்த சமயத்தில் எந்தெந்த படைகள் எங்கெங்கு நிலை கொண்டிருந்தனவோ அங்கேயே இருக்க வேண்டும் என்றும், ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்தது. அவ்வகையில், அந்த நேரத்தில் பாகிஸ்தான் நிலைகொண்டிருந்த பகுதிதான் இன்றுவரை பாகிச்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK – Pakistan occupied Kashmir) என்றழைக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் மன்னர் ஹரிசிங் அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக இருந்தவர்’கோபால்சாமி ஐயங்கார்’ என்கிற தமிழ்நாட்டுக்காரர் ஆவார். அப்போதுதான் Article(ஆர்ட்டிகல்) 370– ஐ அமல்படுத்தினர். சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் கடுமையாக எதிர்த்தபோதிலும், அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் ஆதரித்தார். இந்த வகையில்தான் காஷ்மீருக்கு தனித்துவமான அந்தஸ்து வழங்கப்பட்டு, இந்தியாவுடன் ஒன்றிணைந்தது. இதன் பிறகு சிக்கிம் போன்ற பிரதேசங்களுக்கு  Article(ஆர்ட்டிகல்) 370 யில் ஏ,பி,சி என பல பிரிவுகளில் அளிக்கப்பட்டது. ஆனால், Article(ஆர்ட்டிகல்) 370 –யின் மூலம் முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதாவது, அமெரிக்க தேசத்தில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்துவமான அரசியல் அமைப்பு உண்டு. அவற்றிற்கு தனியாக கொடி உண்டு. அமெரிக்க அதிபர் என்பவர் வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, இராணுவம், அணு ஆயுதம் கையாளுதல் போன்ற சிற்சில விஷயங்களில் மட்டுமே முழு அதிகாரத்தைக்கொண்டிருப்பார். மற்ற அனைத்திலும் அந்தந்த மாகாணங்கள் சுதந்திரமான அதிகாரத்துடன் விளங்குவர். இதனாலேயே, அமெரிக்காவானது யு.எஸ்.ஏ. (United States of America) என்றழைக்கப்படுகிறது. இதுபோன்ற சுதந்திரத்தினை, முழு அதிகாரத்தினைதான் இந்தியா காஷ்மீர் மாகாணத்திற்கு வழங்கி வந்தது. அந்த சிறப்பிஉ அந்தஸ்தின்படி ஜம்மு – காஷ்மீர் மாகாணத்தில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் நிலம் வாங்க முடியாது போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அத்தகைய கட்டமைப்பை அவர்கள் கொண்டு வந்துவிட்டனர். அப்போதுதான் சர்தார் படேல் அவர்கள், ‘இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அப்படியிருக்க, அவற்றிற்கெல்லாம் வழங்கப்படாத சிரப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு மட்டும் ஏன் தரப்பட வேண்டும்?’ கடுமையாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

----------------------------------------------------------   

    

No comments:

Post a Comment

30. வல்லபாய் பட்டேல் Vs நேரு இருவருக்கும் மோதல் ஏன்?

                                  வல்லபாய் பட்டேல் Vs நேரு                                                    இருவருக்கும் மோதல் ஏன் ?  ...