அடங்க மறுத்து அத்துமீறலாமா?
(குறளின் குரல் – 23)
மனித குலமானது நாகரீகத்தில்,
கலாச்சாரத்தில் விஸ்வரூபமெடுக்கும்போது ‘அடக்கம் (தன்னடக்கம்)’ என்பது அவசியமான ஒன்றாகும். திருக்குறள் நூலின் 13- ஆவது அதிகாரம் ‘அடக்கமுடமை’ ஆகும். அதிகமான பணம், பலம் (உடல் வலிமை), அறிவு ஆகிய அனைத்தும் உலகில் வெகுசிலர் மட்டும் கிடைக்கப் பெறுகிறார்கள்.
அப்படி கிடைக்கப்பெற்றவற்றைப் பயன்படுத்தி, அவற்றை வெளிப்படுத்தி,
ஆணவத்துடன் பிறரைத் துன்புறுத்தும் செயலைச் செய்வார்களேயானால், அதன் பெயர்தான் ‘அடக்கமில்லாமை’.
தனக்கு மரியாதை கிடைக்கவில்லையென்பதை அதிகாரத்தின் பேரில் மற்றவர்களுக்கு காட்ட முயற்சிப்பது ஆகும். இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் இம்மூன்று கொடைகளையும், தன்னுடைய மேம்பாட்டிற்குப் பயன்படுத்தாமல்,
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், சொந்தப் பெருமைக்காகவும் பயன்படுத்தினால்,
அதுவே, ‘அடக்கமில்லாததாக’
மாறிவிடுகிறது. வன்முறையாகவோ,
உடலியலாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ இன்னொரு உயிரை பாதிக்கத்தான் செய்யும். இது ஒருவிதமான எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். இத்தகைய விஷயங்கள் யாவற்றையும் நன்குணர்ந்து தான் வள்ளுவர் முன்கூட்டியே தெளிவுபடுத்திவிட்டார்.
அதிகாரம் 13- இல் முதல் குறள்;
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (குறள்: 21)
அடக்கமாக இருந்தால் என்னவிதமான பயன்கள் கிட்டும்?
’அடக்கமாக இருப்பதனால், தேவர்களுக்கு,
அதாவது இறைவனுக்கு நிகரான நிலையை அடையலாம். அவ்வாறு இல்லாமல், ‘அடக்கமில்லா தன்மையுடன்’ இருந்தால், ‘ஆரிருள்’ அதாவது, என்றென்றும் விலகாத இருளுக்கும் வைத்துவிடும்’
என்கிறார் வள்ளுவர்.
அதிகாரம் 13- இல் இரண்டாவது குறள்:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. (குறள் - 122)
’அடக்கமுடமை’ என்பதை வள்ளுவப்பெருந்தகை ‘பொருள்’ என்பதாகக் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலத்தில் ‘Quantitive and Qualitytive’
என ஆங்கிலத்தில் இருவிதமாகக்குறிப்பிடுவோம். Qualitytive என்பதை
Quantitive ஆக செய்துவிட முடியாது. ’புகழ், இரக்கம், பாசம், காதல்’ என்பதெல்லாம்
Qualitytive. ’பணம், அதிகாரம்’ என்பது Quantitive. இப்படி
Quantitive ஆக காணமுடியாதவற்றை
Qualitytive ஆகப் பார்ப்போம். சிறந்தவை, மோசமானவை, நல்லவை, கெட்டவை என்று வேண்டுமானால் வகைப்படுத்தலாம். ஆனால், அவற்றை எண்ணிக்கையின் கீழ் வரிசைப்படுத்த முடியாது. அடக்கம் என்பது Qualitytive. ஆனால், இதையே வள்ளுவர் ஒரு பொருளாக மாற்றுகிறார். ஏன் அப்படிச் செய்தார்?
Qualitytive என்பதை விளக்குவது மிகவும் கடினமாகும். மக்களுக்கு எளிதில் புரியவைக்கும் பாங்கு என்றும் கூடச் சொல்லலாம். ’காதல்’ என்பதன் ஆழத்தைப் புரிய வைப்பதற்காக ‘கடலளவுக் காதல், மலையளவுக்காதல்’
என்றெல்லாம் சொல்வதுகூட,
Qualitytive ஆன விஷயத்தை
Quantitive என மாற்றும் முயற்சிதான்! அந்தவகையில் அடக்கத்தையுமே ஒரு பொருளாகக் கருதி காக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. மனித உடலுக்கு உயிரைத்தாண்டிய ஆத்மா போன்ற உயிரைக்காக்கும் விஷயமாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
ஆத்மா, மறுபிறவி போன்ற விஷயங்களை மனிதர்கள் தங்களை நல்வழிப் படுத்திக் கொள்வதற்கான ஒரு மிரட்டலாகவே காட்டுவதன் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.
அதிகாரம் 13- இல் மூன்றாவது குறள்:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
(குறள் - 123)
’செறிவு அறிந்து’ என்னன்னவெல்லாம்
அழிய வேண்டுமோ, அவற்றை அறிந்து, ’சீர்மை பயக்கும் அறிவு அறிந்து’ நல்வழி என்று சொல்லப்படக்கூடிய அறத்தின் வழி எவை என அறிந்துகொண்டு,
அவற்றில் எதன் வழியில் பயணித்தால் நல்லதோ அதன் வழியே நடப்பதுடன், அதனோடு அடக்கமும் இருந்தால் அதுவே உச்சமான நிலை என்கிறார். அறிவுடன் இருப்பதோ, அதிலும் செறிந்து இருப்பதோ மட்டும் முக்கியமல்ல. அந்த செறிந்த அறிவினைக்கொண்டு, சிறந்த வழியில் செல்லவேண்டிய அணுகுமுறையுடன் திகழ வேண்டும். அதனுடன் அடக்கமாகவும் இருக்க வேண்டும் என வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
அதிகாரம் 13- இல் நான்காவது குறள்:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
(குறள்- 124)
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய திரைப்படப்
பாடல் ஒன்றில்
‘பதவி வரும்போது
பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும்
தோழா..’
என எழுதியதைப்போல் ’நிலையின் திரியாது’ எந்த ஒரு நிலையிலும், தருணத்திலும் மாறாமல் இருக்கக்கூடிய
தன்மையானது மலையைவிட மிக உயர்ந்ததாகும்’ என்கிற ஒப்புமையைக் காட்டுகிறார். இது நிலையின் திரியாது வாழும் மனிதர்களைக்
காணும்போது,
அவரைக் காணும் பிறருடைய மனதில் தோன்றும்
பிம்பமே அந்த ஒப்புமையாகும்.
அதிகாரம் 13- இல் ஐந்தாவது குறள்:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. (குறள் - 125)
மிகுந்த சுவையான, அதிகம் பிரபலமாகாத குறள் இது.
’அடக்கம்’
என்பதை ‘பணிதல், பணிவு’ என்று பொருள் கொள்கிறோம். இந்தப் பணிவுடன் இருப்பது ஆண்;பெண் ஏழை;பணக்காரர், வீரன்;கோழை ஆகிய எந்த்த் தரப்பினராக இருந்தாலும் ‘அடக்கம்’ மிக நல்லதாகும். அதிலும் ’செல்வர்க்கே செல்வம் தகைத்து’ அதாவது செல்வந்தர்களாக விளங்குவோருக்கு
பணிவு என்பது மிகவும் அவசியமானது என்கிறார் வள்ளுவர். ஏனெனில், பல்வேறு செல்வச் செழிப்புடன் வாழ்வோர்க்கு
அடக்கமும் ஒரு வகை செல்வம் என்பதுடன், மற்ற எல்லா வகை செல்வங்களையும்விட அடக்கம் அதிகம் மதிப்புடைய
செல்வமாக விளங்கும்’ என்று விளக்குகிறார்.
அதிகாரம் 13- இல் ஆறாவது குறள்:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. (குறள்- 126)
ஆமையானது, தனக்கு பாதுகாப்பற்ற, இக்கட்டான தருணங்களில் தன் தன் தலையையும், நான்கு கால்களையும் தன் முதுகில் அமைந்திருக்கும் மிகுந்த கனமான ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ளும். அதுபோல் நமது ஐந்து புலன்களையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்து விட்டால், ’எழுநம்யும் ஏமாப் புடைத்து’ அதாவது அடுத்து வரவிருக்கும் ஏழு பிறவிகளுக்குமே பாதுகாவலாகவும், செல்வமாகவும் விளக்கும் என்கிறார் வள்ளுவர். ஐம்புலன்களின் அடக்கத்திற்கு உவமையாக ஏன் ஆமை சொல்லப்படுகிறது என்றால், அடக்கமில்லாத தன்மை வருவதே நம் ஐம்புலன்களும் அடக்கமில்லாமல் இருப்பதனால்தான்! (கண்களால் தவறாகப் பார்க்கும்போது ஆணவம் வந்துவிடும். தவறான விஷயங்களை காதால் கேட்டுக் கொண்டிருந்தால் ஆணவம் வந்துவிடும்) ஆமையைப் போல் நம்மால் ஐந்து புலன்களையும் உள்ளே இழுத்துக்கொண்டுவிட
முடியாது. ஆனால், ஐம்புலன்களால் விளையும் தாக்கங்களை உள்ளிழுத்துக்கொண்டாலே பாதிப்புகளிலிருந்து
விடுபட முடியும். அடக்கமும் இயல்பாகவே வந்துவிடும். இதற்காகவே ஆமையானது உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
அதிகாரம் 13- இல் அடுத்து வரும் குறட்பாக்களில்
‘சொல்’ என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். மனிதர்களின் ஐந்து புலன்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்படும் புலன் ‘வாய்’ மட்டுமே. ’வாய் தேவையற்றவற்றினை
பேசுவதால்’ விளையும் தீமைகள், ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். உலகில் நடக்கும் பிரச்சினைகளில் 90% பிரச்சினைகள் வாயினால் ஏற்படும் பிரச்சினைகளே. தற்போது நடந்து வரும் அமெரிக்கா-ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான
பிரச்சினைகளுக்கு மூலகாரணம் கூட ’வாய்’தான்!
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள் - 127)
அதிகாரம் 13- இல்
ஏழாவது
குறள் இது.
ஒருவர் எதை அடக்குகிறாரோ… இல்லையோ… அவருடைய நாவினை (நாக்கு) அடக்கினாலே போதும். இல்லாவிட்டால் அதனால் விளையும் சொற்குற்றமே
பெரிய விளைவுகளைத் தந்துவிடும் என்கிறார். திருவிளையாடல் திரைப்படத்தில் இறையனாருக்கும் (சிவன்) – பெரும்புலவர் நக்கீரருக்கும் இடையே
நடைபெறும் உரையாடலில் ’எதில் குற்றம்
கண்டீர்?
சொற்குற்றமா? பொருட்குற்றமா?’ என்று சிவன் கேட்க, அதற்கு நக்கீரர், ‘சொற்குற்றமாய் இருந்தாலும் பரவயில்லை. பொருட் குற்றம்’ என்பார். இறைவனுக்கு சொல்லில் குற்றமாயிருந்தாலும்
பொருளில் குற்றம் இருக்கக்கூடாது. ஆனால், மனிதர்களுக்கு சொல்லே குற்றமாகி விடக்கூடாது. இன்றைய அதிவேகமான உலகியல் வாழ்வில்
ஒவ்வொரு சொல்லிற்கும் பின்னால் இருக்கும் எண்ணத்தினைப் புரிந்து கொள்ள மனிதர்களுக்கு
நேரமில்லை.
குடும்பங்களாக இருக்கட்டும், நட்பு வட்டாரமாக இருக்கட்டும், ஒருவர் உதிர்த்த சொல்லிற்கான எண்ணத்தினை
வைத்து சண்டையோ சச்சரவுகளோ வருவதில்லை. அந்த சொல்லைமடுமே மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டிக்கொண்டேயிருப்பர். ஆகவே மனிதர்களுக்கு சொற்குற்றம் என்பது
பெரிய குற்றம் என மனதில் கொள்ள வேண்டும்.
அதிகாரம் 13- இல் எட்டாவது குறளும்
(குறள் 128) ‘சொற்குற்றம்’ சம்பந்தமானதே ஆகும்.
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
(குறள் - 128)
ஒருவர் தன் வார்த்தைகளால் இன்னொருவரைக் காயப்படுத்துகிறார் என்றால், அவரால், காயப்படுத்தப்படும்
நபருக்கு செய்யக்கூடிய நல்ல காரியம் கூட கெடுபலன்களையே தரும். 2026 தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அதில் அப்போதைய மந்திரிகள் பலரும் தோல்வியடைந்தனர். அவ்வாறு தோல்வி அடைந்த ஒரு முன்னாள் மந்திரியைப்பற்றி ஒருவர், ‘அவர் (முன்னாள் மந்திரி) எல்லாருக்கும் நல்ல உதவி செய்வார். ஆனால், உதவி செய்வதற்கு முன்னும் பின்னும் மிக மிக்க் கேவலமாக திட்டிவிடுவார்.
இந்த காரணத்தாலேயே அவருக்கு வாக்குகள் கிட்டவில்லை’ என்றார். ஆக, ஒருவருக்கு எவ்வளவுதான் உதவி செய்திருந்தாலும் அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டால், உதவியால் வரும் பயனானது, அதைச் செய்தவருக்கும்,
அதைப்பெற்றவருக்கும் ஒருபோதும் பலனளிக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்குற்றம் பற்றி இரண்டு குறட்பாக்களில் கூறிய வள்ளுவர்
அதிகாரம் 13- இல் ஒன்பதாவது குறளாக,
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (குறள் - 129) என்று மேலும் ஒரு படி மேலேச் சென்று வலியுறுத்துகிறார்.
ஒருவர் தீ விபத்தில் சிக்கினால், அதனால் ஏற்படும் காயத்தின் பாதிப்பு 30% அல்லது 40% வரையிலும் இருந்தால்கூட அவரை காப்பாற்ற முடிகிறது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தோல் பகுதி இன்றைய பைஃபர் தொழில் நுட்பத்தின் மூலம், மீண்டும் வளருவதற்கான வாய்ப்புள்ளது. 50% சதவீதத்திற்கும்
மேற்பட்டு விட்டால், பிளாஸ்டிக் தோல் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். 80% -ற்கும் மேற்பட்டால் உயிரைக்காப்பாற்றுவதே கடினமாகிவிடும்.
ஆனால், வெகுகாலத்திற்கும்
முன்னர் (திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில்) சுமார் 10% முதல் 15% வரை தீ பாதிப்பு ஏற்பட்டாலே அந்த நபரைக் காப்பது கடினமான விஷயமாக இருந்திருக்கிறது.
‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்’ தீ விபத்தில் 15% காயம் ஏற்பட்ட ஒருவரைக் காப்பாற்றவே முடியாது. அப்படியே இருந்தாலும் அந்த வடு (தழும்பு) மாறுவதில்லை. (இன்றைக்கு இருக்கும் அதிநவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம்கூட அது மாறுவதில்லை!) அப்படிப்பட்ட தீயினால் ஏற்பட்ட காயமும் வடுவும் கூட ஆறிவிடும். ஆனால், நாவினால் சுட்ட வடு ஆறாதே என்கிறார். நாவினால் சுட்ட வடு எங்கேயிருக்கும்? பாதிக்கப்பட்டவரின்
மனதில், அவர்தம் வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நீடித்து இருக்கும். இந்து தர்ம வாழ்வியலின்படி அவரவர் மனதில் இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்று நம்புகிறோம். அப்படியானால்,
அந்தப்புண்ணைத் தாங்கக் கூடியவர் இறைவனே என்றாகி விடுகிறார். அப்படியானால், இறைவனையே சுடுவது போலாகி விடும். இதுவே இந்தக்குறளின் சாராம்சமாகும்.
ஒருவர் பேசும் வார்த்தை ஏன் சுடுகிறது? கோபத்தினால் சுடுகிறது. அப்ப்டியென்றால்
கோபத்தை அடக்கினால், வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி விடலாம். ஆக, நல்ல கோபமோ அல்லது கெட்ட கோபமோ எதுவாயினும் அதை அடக்க வேண்டியடு அவசியமாகும். இவ்வுலகில் கோபத்தை முழுமையாக அடக்கியாண்டவர்கள்
எவருமே இல்லை எனலாம். ஒருவேளை புத்தரோ இயேசுவோ இருந்திருக்கலாம். இக்காலத்தில் அதாற்கான வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனாலும், நாம் எவ்வளவிற்கு எவ்வளவு அடக்குகிறோமோ அவ்வளவிற்கு நல்லது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய தத்துவமாகும்.
அவ்வாறு அடக்கிவிட்டால்,
தகாத வார்த்தைகளை வெளியிட வேஎண்டிய அவசியமிருக்காது என திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
’அடக்கமுடைமை’ என்றால் என்னவென கூறத் தொடங்கி, அதை யாரெல்லாம் பின்பற்ற வேண்டுமென தெரிவித்து, அதற்காக புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டிய விதத்தைக்கூறி, அந்த ஐம்புலன்களிலும் நாக்கினை கட்டுப்படுத்தும் அவசியத்தை எடுத்துரைத்து, அப்படிப்பட்ட நாக்கினைக் கட்டுபடுத்த மனதில் எழும் கோபத்தை அடக்கவேண்டும் என்று வலியுறுத்தி 13 ஆவது அதிகாரத்தில் முடிக்கிறார்.
அதிகாரம் 13- இல் பத்தாவது குறளாக,
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (குறள் - 130)
கோபத்தை அடக்கி அதை ஒரு கல்வியாகக் கற்று, அடக்கத்துடன் இருக்கக் கூடிய சிறப்பைப் பெற்றவனை அவன் இல்லம்தேடிச் செல்வதுடன் அவர் எந்தத்திசைகளிலெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அதுவும் சென்று அமர்ந்திருக்கும்.
அதாவது, அறம் அவருக்காக காத்துக்கொண்டிருக்கும். இதுவே அடக்கத்த்ஹின் நற்பயனாகும் என்று கூறுகிறார்.
திருவள்ளுவர் இவ்வாறு கூறுவதால் ‘அடங்க மறு.. அத்து மீறு’ என்னும் அரசியல் கொள்கையோடு ஒப்பிட்டு நம்மை நாமே குழப்பிக்கொள்ளக்கூடாது!
-----------------------------------------